பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

பட்டினப்பாலை

பாடியவர்:- கடியலூர் உருத்திரங்கண்ணனார்
பாடப்பட்டவன்:- திருமாவளவன் (கரிகாற் பெருவளத்தான்)
திணை:- பாலை
துறை:- செலவழுங்குதல்
பாவகை:- வஞ்சிப்பா
மொத்த அடிகள்:- 301

சங்கத்தமிழ்ச் செயலியைத் தரவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும்

சங்கத்தமிழ்

பட்டினப்பாலை

பாடியவர்:- கடியலூர் உருத்திரங்கண்ணனார்
பாடப்பட்டவன்:- திருமாவளவன் (கரிகாற் பெருவளத்தான்)
திணை:- பாலை
துறை:- செலவழுங்குதல்
பாவகை:- வஞ்சிப்பா
மொத்த அடிகள்:- 301

பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணையைப் பற்றிய பாடல் என்னும் பொருளில் பட்டினப்பாலை எனப் பெயர் பெற்றது. பட்டினம் என்பது காவிரிப் பூம்பட்டினத்தைக் குறிக்கிறது.

தன் மனைவியை விட்டுப் பிரிந்து பொருள் தேடுவதற்காக வேற்று நாட்டுக்குச் செல்லக் கருதும் தலைவன் தன் நெஞ்சை நோக்கிக் கூறியதாகச் செலவழுங்குதல் துறையில் இப்பாடல் அமைந்துள்ளது.

காவிரியின் பெருமை (1-7)
வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்,
தற்பாடிய தளி உணவின்
புள் தேம்பப் புயல் மாறி
வான் பொய்ப்பினும், தான் பொய்யா, (5)

மலைத் தலைய கடல் காவிரி;
புனல் பரந்து பொன் கொழிக்கும்; (1-7)

பொருளுரை:

குற்றம் இல்லாத, புகழையுடைய, விளங்குகின்ற வெள்ளி என்ற கோள், திசை மாறி, தான் நிற்க வேண்டிய வட திசையில் நிற்காமல் தென் திசைக்கண் போனாலும், நீர்த்துளிகளை உணவாகக் கொண்ட வானம்பாடி வருந்துமாறு, மழை பெய்தலைத் தவிர்த்து, வானம் பொய்த்தாலும், தான் பொய்யாது, குடகு மலையின்கண் துவங்கி, கடலில் புகும் காவிரி ஆறு. அது தன்னுடைய நீரைப் பரந்து நிலத்திற்கு வளமையைச் சேர்க்கும்.

சொற்பொருள்:

வசை இல் - குற்றம் இல்லாத, புகழ் - புகழ், வயங்கு வெண்மீன் - விளங்கும் வெள்ளி என்ற விண்மீன், திசை திரிந்து - திசை மாறி, தெற்கு ஏகினும் - தான் நிற்க வேண்டிய வட திசையில் நிற்காமல் தென் திசைக்கண் போனாலும், தற்பாடிய - வானம்பாடி (வானை நோக்கிப் பாடுவது வானம்பாடி, ஆதலின் தற்பாடி என்றனர்), தளி உணவின் - மழைத் துளியாகிய உணவையுடைய, புள் - பறவை, தேம்ப - வருந்த, புயல் மாறி - மழை பெய்தலைத் தவிர்த்து, வான் பொய்ப்பினும் - வானம் பொய்த்தாலும், தான் பொய்யா - தான் பொய்யாது, மலைத் தலைய - குடகு மலையின்கண் துவங்கி, கடல் காவிரி - கடலில் புகும் காவிரி, புனல் பரந்து - நீர் பரந்து, பொன் கொழிக்கும் - பொன்னைச் சேர்க்கும், வளமையைச் சேர்க்கும் மருத நிலத்தின் வளமை

குறிப்பு:

புறநானூறு 35 - இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும் அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட. வானம்பாடி: கலித்தொகை 46 - துளி நசை வேட்கையான் மிசை பாடும் புள்ளின், அகநானூறு 67 - வானம் வாழ்த்தி பாடவும் அருளாது உறை துறந்து எழிலி, ஐங்குறுநூறு 418 - வானம்பாடி வறம் களைந்து ஆனாது அழி துளி தலைஇய, புறநானூறு 198 - துளி நசைப் புள்ளின். வெள்ளி திசை மாறினும்: புறநானூறு 35 - இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும், புறநானூறு 117 - தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும், புறநானூறு 388 - வெள்ளி தென் புலத்து உறைய, புறநானூறு 389 - வெண்பொன் போகுறு காலை, மதுரைக்காஞ்சி 108 - வரும் வைகல் மீன் பிறழினும், பட்டினப்பாலை 1 - வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும். மலையில் பிறந்த காவிரி: பட்டினப்பாலை 6-7 - மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும், மலைபடுகடாம் 327-328 - குடமலைப் பிறந்த தண் பெருங் காவிரி கடல் மண்டு அழுவத்துக் கயவாய் கடுப்ப.

மருத நிலத்தின் வளமை (8-19)
விளைவு அறா வியன் கழனி
கார்க் கரும்பின் கமழ் ஆலைத்
தீத் தெறுவின் கவின் வாடி, (10)

நீர்ச் செறுவின் நீள் நெய்தல்
பூச்சாம்பும் புலத்து ஆங்கண்,
காய்ச் செந்நெல் கதிர் அருந்து
மோட்டு எருமை முழுக் குழவி
கூட்டு நிழல் துயில் வதியும், (15)

கோள் தெங்கின், குலை வாழை,
காய்க் கமுகின், கமழ் மஞ்சள்,
இன மாவின், இணர்ப் பெண்ணை,
முதல் சேம்பின், முளை இஞ்சி, (8-19)

பொருளுரை:

விளைச்சல் நீங்காத அகன்ற வயல்களில் கருமை நிறமான முதிர்ந்த கரும்பின் மணமுள்ள பாகைக் காய்ச்சும் ஆலைகளின் நெருப்பின் புகைச் சுடுவதால், அழகு கெட்டு, நீரையுடைய வயல்களில் உள்ள நீண்ட நெய்தல் மலர்கள் வாடும் அந்த இடத்தில், காய்ந்த செந்நெல்லின் கதிரைத் தின்ற வயிற்றையுடைய எருமையின் முதிர்ந்த கன்றுகள் நெற்குதிர்களின் நிழலில் உறங்கும். குலைகளையுடைய தென்னையினையும், குலைகளை உடைய வாழையினையும், காயையுடைய கமுகினையும், மணங் கமழும் மஞ்சளையும், பல இனமான மாமரங்களையும், குலைகளையுடைய பனையையும், கிழங்கையுடைய சேம்பையும், முளையையுடைய இஞ்சியையும் உடையன மருத நிலங்கள்.

சொற்பொருள்:

விளைவு அறா - விளைச்சல் நீங்காத, வியன் கழனி - அகன்ற வயல், கார்க் கரும்பின் கமழ் ஆலைத் தீத் தெறுவின் - கருமை நிறமான முதிர்ந்த கரும்பின் மணமுள்ள பாகை காய்ச்சும் ஆலைகளின் நெருப்பின் புகைச் சுடுவதால், கவின் வாடி - அழகு கெட்டு, நீர்ச் செறுவின் நீள் நெய்தல் - நீரையுடைய வயல்களில் உள்ள நீண்ட நெய்தல் மலர்கள், பூச்சாம்பும் புலத்து ஆங்கண் - மலர்கள் வாடும் அந்த இடத்தில், காய்ச் செந்நெல் கதிர் அருந்து மோட்டு எருமை முழுக் குழவி கூட்டு நிழல் துயில் வதியும் - காய்ந்த செந்நெல்லின் கதிரைத் தின்ற வயிற்றையுடைய எருமையின் முதிர்ந்த கன்றுகள் நெற்குதிர்களின் நிழலில் உறங்கும், கோள் தெங்கின் - குலைகளையுடைய தென்னையினையும், குலை வாழை - குலைகளையுடைய வாழையினையும், காய்க் கமுகின் - காயையுடைய கமுகினையும், கமழ் மஞ்சள் - மணங் கமழும் மஞ்சள், இன மாவின் - பல இனமான மாமரங்களையும், இணர்ப் பெண்ணை - குலைகளையுடைய பனை, முதல் சேம்பின் - கிழங்கையுடைய சேம்பும், முளை இஞ்சி - முளையையுடைய இஞ்சி

குறிப்பு:

குழவி (14) - யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய. எருமையும் மரையும் வரையார் ஆண்டே. கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே. ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும். குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை. ஆவும் எருமையும் அது சொலப்படுமே (தொல்காப்பியம், மரபியல் 15-20).

காவிரிப்பூம்பட்டினத்தின் செல்வச் செழிப்பு(20-27)
அகல் நகர் வியன் முற்றத்துச்
சுடர் நுதல் மட நோக்கின்
நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும்
கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை,
பொற்கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்
முக்கால் சிறு தேர் முன் வழி விலக்கும், (25)

விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா,
கொழும் பல் குடிச் செழும் பாக்கத்துக் (20-27)

பொருளுரை:

பெரிய இல்லத்தின் முற்றத்தில், ஒளியுடைய நெற்றியையும் மடப்பமுடைய நோக்கினையும் உடைய, பொருந்திய அணிகளை அணிந்த பெண்கள், காய வைத்த உணவை உண்ண வரும் கோழி மீது எறிந்த அவர்களுடைய வளைந்த கீழ்ப்பகுதியுடைய கனமான காதணிகள், பொன்னினால் செய்த சிலம்பினைக் காலில் அணிந்த சிறுவர்கள் குதிரை இல்லாமல் ஓட்டும் மூன்று உருளைகளையுடைய சிறிய தேரின் வழியைத் தடுக்கும். இவ்வாறு தடுக்கும் பகை மட்டுமே அன்றி வேறு மனம் கலங்கும் பகையை அறியாத பெரிய பல குடிகளையுடைய செழிப்புடைய கடற்கரை ஊர்களையும்.

சொற்பொருள்:

அகல் நகர் வியன் முற்றத்து - பெரிய இல்லத்தின் முற்றத்தில், சுடர் நுதல் மட நோக்கின் நேர் இழை மகளிர் - ஒளியுடைய நெற்றியையும் மடப்பமுடைய நோக்கினையும் உடைய பொருந்திய அணிகளை அணிந்த பெண்கள், உணங்கு உணாக் கவரும் கோழி எறிந்த - காய வைத்த உணவை உண்ண வரும் கோழி மீது எறிந்த, கொடுங்கால் கனங்குழை - வளைந்த கீழ்ப்பகுதியுடைய கனமான காதணிகள், பொற்கால் புதல்வர் புரவி இன்று உருட்டும் - பொன்னினால் செய்த சிலம்பினை காலில் அணிந்த சிறுவர்கள் குதிரை இல்லாமல் ஓட்டும், முக்கால் சிறு தேர் - மூன்று உருளைகளையுடைய சிறிய தேர், முன் வழி விலக்கும் - வழியைத் தடுக்கும், விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா - தடுக்கும் பகை மட்டுமே அன்றி வேறு மனம் கலங்கும் பகையை அறியாத, கொழும் பல் குடிச் செழும் பாக்கத்துக் - பெரிய பல குடிகளையுடைய செழிப்புடைய கடற்கரை ஊர்களையும்

குறிப்பு:

கனங்குழை (23)- பொ. வே. சோமசுந்தரனார் உரை - வளைந்த சுற்றுக்களையுடைய கனத்த குழை, நச்சினார்க்கினியர் உரை - வளைந்த இடத்தையுடைய பொன்னாற் செய்த மகரக்குழை.

காவிரிப்பூம்பட்டினத்துத் தோட்டங்கள், தோப்புகள், பூஞ்சோலைகள் (28-33)
குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு
வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி,
நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி, (30)

பணை நிலைப் புரவியின் அணை முதல் பிணிக்கும்,
கழி சூழ் படப்பை கலியாணர்ப்
பொழில் புறவின் பூந்தண்டலை, (28-33)

பொருளுரை:

சிறிய பல ஊர்களையுடைய பெரிய சோழ நாட்டில், உப்பங்கழியின் கரையில் வெள்ளை உப்பின் விலையைக் கூறி பண்டமாற்றாகப் பெற்ற நெல்லுடன் வந்த வலிய படகுகள், பந்தியில் நிற்கும் குதிரைகள் கட்டப்பட்டிருப்பது போல் கட்டப்பட்டிருக்கும் உப்பங்கழியைச் சூழ்ந்த தோட்டங்களையும், செழிப்பையுடைய தோப்புக்களையும், அவற்றிற்குப் புறமாக உள்ள பூஞ்சோலைகளையும்,

சொற்பொருள்:

குறும்பல்லூர் - சிறிய பல ஊர்கள், அருகில் உள்ள பல ஊர்கள், நெடுஞ்சோணாட்டு - பெரிய சோழ நாட்டில், வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி - வெள்ளை உப்பின் விலையைக் கூறி, நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி - நெல்லைக் கொண்டு வந்த வலிய படகுகள், பணை நிலைப் புரவியின் அணை முதல் பிணிக்கும் - பந்தியில் நிற்கும் குதிரைகளைக் கட்டுவதைப் போல் கட்டியிருக்கும், கழி சூழ் படப்பை - உப்பங்கழி சூழ்ந்த தோட்டங்களும், கலியாணர்ப் பொழில் புறவின் பூந்தண்டலை - செழிப்பையுடைய தோப்புக்களும் அவற்றிற்கு புறமாக உள்ள பூஞ்சோலைகள்

குறிப்பு:

பொ. வே. சோமசுந்தரனார் உரை - ஈண்டு உப்பிற்கு பண்ட மாற்றாகக் கொண்ட நெல் என்க. அகநானூறு 140 - நெல்லின் நேரே வெண் கல் உப்பு, அகநானூறு 390 - நெல்லும் உப்பும் நேரே ஊரீர் கொள்ளீரோ, குறுந்தொகை 269 - உப்பை மாறி வெண்ணெல் தரீஇய. பண்டமாற்று குறிக்கப்பட்ட பாடல்கள்- அகநானூறு 60, 61, 126, 245, 296, 390, நற்றிணை 183, குறுந்தொகை 221, 269, ஐங்குறுநூறு 47, பொருநராற்றுப்படை 214-215, 216-7, பட்டினப்பாலை 28-30, and மலைபடுகடாம் மலைபடுகடாம் 413-414. யாணர் - புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

பொய்கையும் ஏரியும்(34-39)
மழை நீங்கிய மா விசும்பில்,
மதி சேர்ந்த மக வெண்மீன், (35)

உருகெழு திறல் உயர் கோட்டத்து,
முருகு அமர் பூ முரண் கிடக்கை,
வரி அணி சுடர் வான் பொய்கை,
இரு காமத்து இணை ஏரி, (34-39)

பொருளுரை:

மேகம் இல்லாத அகன்ற வானில் நிலவைச் சேர்ந்த மகம் என்ற விண்மீனைப் போன்று, பெரிய வடிவுடைய உயர்ந்த கரைகளையுடைய, அருகில் மணம் பொருந்திய மாறுப்பட்ட மலர்கள் நிறைந்து ஓவியத்தின் அழகுடன் இருக்க, அழகாக விளங்கும் ஒளியுடைய பொய்கைகளும், இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் தருகின்ற இணை ஏரிகளையும் உடையது.

சொற்பொருள்:

மழை நீங்கிய மா விசும்பின் - மேகம் இல்லாத அகன்ற வானில், மதி சேர்ந்த - நிலாவிற்கு அருகில் உள்ள, மக வெண்மீன் - மகம் என்ற விண்மீன், உருகெழு திறல் உயர் கோட்டத்து - பெரிய வடிவுடைய உயர்ந்த கரைகளையுடைய, பெரிய வடிவுடைய உயர்ந்த கோயிலையுடைய, முருகு அமர் பூ முரண் கிடக்கை - மணம் பொருந்திய மாறுப்பட்ட மலர்கள் நிறைந்த இடம், வரி அணி சுடர் வான் பொய்கை - ஓவியத்தில் அழகாக விளங்கும் ஒளியுடைய பொய்கைகளும், இரு காமத்து - இரு இன்பத்தையுடைய, இணை ஏரி - இணைந்த ஏரிகளையும்

குறிப்பு:

உயர் கோட்டத்து (வரி 36) - பொ. வே. சோமசுந்தரனார் - ‘உயர்ந்த கரைகளையுடைய’, நச்சினார்க்கினியர் - ‘இனி உயர் கோட்டத்தை எல்லாரும் மதியைச் சேர்ந்த மகவெண்மீனைப் பார்க்கைக்கு இடமாகிய கோயிலாக்கிக் கோயிலும் பொய்கையும் என எண்ணுதலுமாம்; இனிப் பொய்கைக் கரையிலே கோயிலாக்கி கோயிலும் பொய்கையும் மதி சேர்ந்த மகவெண்மீன் போன்ற வென்றுமாம்’.

காவிரிப்பூம்பட்டினத்து அட்டில் சாலைகள்(40-50)
புலிப் பொறி போர் கதவின், (40)
திருத்துஞ்சும் திண் காப்பின்,
புகழ் நிலைஇய, மொழி வளர,
அறம் நிலைஇய, அகன் அட்டில்
சோறு வாக்கிய கொழுங் கஞ்சி,
யாறு போலப் பரந்து ஒழுகி, (45)

ஏறு பொரச் சேறு ஆகி,
தேர் ஓடத் துகள் கெழுமி
நீறு ஆடிய களிறு போல,
வேறுபட்ட வினை ஓவத்து
வெண் கோயில் மாசு ஊட்டு.(40 - 50)

பொருளுரை:

புலிச் சின்னத்தையுடைய இணைக்கப்பட்ட கதவுகளையுடைய, செல்வம் தங்கும் திண்மையான மதிலை உடையவாக, புகழ் நிலைபெற்ற சொற்கள் பரவ, அறம் நிலைபெற்ற, பெரிய சமையல் அறைகளில் சோற்றிலிருந்து வடித்த கொழுமையான கஞ்சி, ஆற்றினைப் போலப் பரந்து தெருவில் ஓடி, அங்கு காளைகள் போரிடுவதால் சேறு ஆகிற்று. தேர் ஓடிக் கிளப்பிய தூசியில் விளையாடிய ஆண் யானையைப் போன்று, ஓவியம் வரையப்பட்ட அரண்மனையில் தூசிப் படிந்தது.

சொற்பொருள்:

புலிப் பொறி போர் கதவின் - புலிச் சின்னத்தையுடைய இணைக்கப்பட்ட கதவுகளையுடைய, திருத்துஞ்சும் திண் காப்பின் - செல்வம் தங்கும் திண்மையான மதிலை உடையவாக, புகழ் நிலைஇய மொழி வளர - புகழ் நிலைபெற்ற சொற்கள் பரவ, அறம் நிலைஇய - அறம் நிலைபெற்ற, அகன் அட்டில் சோறு வாக்கிய கொழுங் கஞ்சி - பெரிய சமையல் அறைகளில் சோற்றிலிருந்து வடித்த கொழுமையான கஞ்சி, யாறு போலப் பரந்து ஒழுகி - ஆற்றினைப் போல பரந்து ஓடி, ஏறு பொரச் சேறு ஆகி - காளைகள் போரிடுவதால் சேறு ஆகிற்று, தேர் ஓடத் துகள் கெழுமி நீறு ஆடிய களிறு போல - தேர் ஓடி கிளப்பிய தூசியில் விளையாடிய ஆண் யானையைப் போன்று, வேறுபட்ட வினை ஓவத்து வெண் கோயில் மாசு ஊட்டு - ஓவியம் வரையப்பட்ட அரண்மனையில் தூசி படிந்தது

மாட்டுக் கொட்டில் (51-52)
தண் கேணி தகை முற்றத்துப்
பகட்டு எருத்தின் பல சாலை (51-52)

பொருளுரை:

குளிர்ந்த குளங்களையுடைய முற்றத்தையுடைய, பெரிய எருதினையுடைய பல கொட்டில்களையும்,

சொற்பொருள்:

தண் கேணி தகை முற்றத்து - குளிர்ந்த குளங்களையுடைய முற்றத்தையுடைய, பகட்டு எருத்தின் பல சாலை - பெரிய எருதினையுடைய பல கொட்டில்கள், வலிமையான எருதினையுடைய பல கொட்டில்கள்

காவிரிப்பூம்பட்டினத்துத் தவப்பள்ளியும் வேள்விச்சாலையும் (53-58)
தவப் பள்ளித் தாழ் காவின்
அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும் புகை முனைஇ, குயில் தம் (55)

மா இரும் பெடையோடு இரியல் போகிப்
பூதம் காக்கும் புகல் அரும் கடி நகர்த்
தூதுணம் புறவொடு துச்சில் சேக்கும் (53-58)

பொருளுரை:

தவம் செய்பவர்கள் இருக்கும் இடங்களையுடைய, மரங்கள் தழைத்துத் தாழ்ந்த சோலைகளில், விளங்குகின்ற சடையையுடைய முனிவர்கள், தீயுடன் வேள்விகள் செய்யும் நறுமண புகையை வெறுத்து, ஆண் குயில்கள் தங்களுடைய பெண் குயில்களுடன் விலகிப் போய், பூதங்கள் காக்கும் புகுவதற்கு அரிய காவல் காக்கப்பட்ட ஊரில், கற்களை உண்ணும் அழகிய புறாக்களோடு, ஒதுங்கி இருக்கும் இடத்தில் சேரும்.

சொற்பொருள்:

தவப் பள்ளி - தவம் செய்பவர்கள் தங்குமிடம், தாழ் காவின் - தழைத்து தாழ்ந்த சோலைகளில், அவிர் சடை முனிவர் - விளங்குகின்ற சடையுடைய முனிவர்கள், அங்கி வேட்கும் ஆவுதி நறும் புகை - தீயில் வேள்விகள் செய்யும் நறுமணமான புகை, முனைஇ - வெறுத்து, குயில் தம் மா இரும் பெடையோடு - குயில்கள் தங்களுடைய கருமையான பெண் குயில்களுடன், இரியல் போகி - விலகிப் போய், பூதம் காக்கும் புகல் அரும் கடி நகர் - பூதங்கள் காக்கும் புகுவதற்கு அரிய காவல் காக்கப்பட்ட ஊர், தூது உண் அம் புறவொடு - கற்களை உண்ணும் அழகிய புறாக்களோடு, துச்சில் சேக்கும் - ஒதுங்கி இருக்கும் இடத்தில் சேரும்

குறிப்பு:

தவப்பள்ளி (வரி 53) - நச்சினார்க்கினியர் உரை - தவஞ் செய்யும் அமண் பள்ளி பௌத்த பள்ளி.

விளையாட்டுக் களத்தில் மறவர்களின் போர் (59-74)
முது மரத்த முரண் களரி
வரி மணல் அகன் திட்டை (60)

இருங்கிளை இனன் ஒக்கல்
கருந்தொழில் கலி மாக்கள்
கடல் இறவின் சூடு தின்றும்,
வயல் ஆமை புழுக்கு உண்டும்,
வறள் அடும்பின் மலர் மலைந்தும், (65)

புனல் ஆம்பல் பூச் சூடியும்,
நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரு
நாள்மீன் விராய கோள்மீன் போல
மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇ,
கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டி, (70)

பெருஞ் சினத்தான் புறங் கொடாது
இருஞ் செருவின் இகல் மொய்ம்பினோர்
கல் எறியும் கவண் வெரீஇப்
புள் இரியும் புகர்ப் போந்தை (59-74)

பொருளுரை:

பழைய மரங்களையுடைய போரிடும் களத்தில், மணல் வரிகளாக உள்ள மேடுகளில், பெரிய உறவினர் மற்றும் சுற்றத்தார் கூட்டத்துள், வலிமையான தொழிலையுடைய செருக்கான மறவர்கள், கடலில் உள்ள இறால் மீனின் தசையை சுட்டுத் தின்றும், வயலில் உள்ள ஆமையின் தசையை வேக வைத்து தின்றும், மணலில் உள்ள அடும்பின் மலர்களை அணிந்தும், நீரில் உள்ள வெள்ளை ஆம்பல் மலர்களைச் சூடியும், நீல நிறத்தை உடைய வானத்தில் வலது புறமாக எழுந்து திரியும் நாள் மீன்களுடன் கலந்த கோள் மீன்கள் போல, அகன்ற இடத்தையுடைய மன்றத்தில் பலரோடு கூடி, கையாலும் ஆயுதங்களாலும் உடலில் படுமாறு தீண்டி, பெருஞ்சினத்தால் ஒருவர்க்கு ஒருவர் புற முதுகு காட்டி ஓடாத பெரிய போர்க்களத்தில், பகைமை உடைய வலிமையானவர்களுடைய கற்களை வீசும் கவணுக்கு அஞ்சி, பறவைகள் அங்கிருந்து நீங்கி, புள்ளிகளையுடைய பனை மரங்களை அடையும்.

சொற்பொருள்:

முது மரத்த முரண் களரி - பழைய மரங்களையுடைய போரிடும் களம், வரி மணல் அகன் திட்டை - மணல் வரிகளாக உள்ள மேடுகள் (ஆற்று நீரினால் வரிகள் ஏற்படும்), இருங்கிளை - பெரிய உறவினர் கூட்டம், இனன் ஒக்கல் - சுற்றத்தார் கூட்டம், கருந்தொழில் கலி மாக்கள் - வலிமையான தொழிலையுடைய செருக்கான மறவர்கள், கடல் இறவின் சூடு தின்றும் - கடலில் உள்ள இறால் மீனின் தசையை சுட்டுத் தின்றும், வயல் ஆமை புழுக்கு உண்டும் - வயலில் உள்ள ஆமையின் தசையை வேக வைத்து தின்றும், வறள் அடும்பின் மலர் மலைந்தும் - மணலில் உள்ள அடும்பின் மலர்களை அணிந்தும், புனல் ஆம்பல் பூச் சூடியும் - நீரில் உள்ள வெள்ளை ஆம்பல் மலர்களின் மலர்களைச் சூடியும், நீல் நிற விசும்பின் - நீல நிறத்தை உடைய வானத்தில், வலன் ஏர்பு - வலது புறமாக எழுந்து, வலிமையுடன் எழுந்து, திரிதரு நாள்மீன் விராய கோள்மீன் போல - திரியும் நாள் மீன்களுடன் கலந்த கோள் மீன்கள் போல, மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇ - அகன்ற இடத்தையுடைய மன்றத்தில் பலரோடு கூடி, கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டி - கையாலும் ஆயுதங்களாலும் உடலில் படுமாறு தீண்டி, பெருஞ் சினத்தான் புறங் கொடாது - பெருஞ்சினத்தால் ஒருவர்க்கு ஒருவர் புற முதுகு காட்டி ஓடாது, இருஞ் செருவின் - பெரிய போர்க்களத்தில், இகல் மொய்ம்பினோர்- பகைமை உடைய வலிமையானவர்கள், கல் எறியும் கவண் வெரீஇ - கற்களை வீசும் கவணுக்கு அஞ்சி, புள் இரியும் புகர்ப் போந்தை - பறவைகள் நீங்கி புள்ளிகளையுடைய பனை மரங்களை அடையும்

குறிப்பு:

வலன் (67) - பொ. வே. சோமசுந்தரனார் உரை, நெடுநல்வாடை (1) - வலப் பக்கம், வலன் ஏர்பு - அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1, மதுரைக்காஞ்சி 5 - வல மாதிரத்தான் வளி கொட்ப. கல் எறியும் கவண் வெரீஇ (73) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - பனை மரத்து உச்சியில் இலக்கு வைத்து எறிதலின் ஆண்டு வாழும் பறவைகள் ஓடின என்க. இங்கனம் இலக்குக் கொண்டு கல்லால் எறிதல் உண்மையால் ஆண்டு நிற்கும் பனைகள் கல்லேற்றின் வடுவுடையன என்பார், புகார்ப் போந்தை என்றார்.

காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள ஒரு குடியிருப்பு (75-77)
பறழ்ப் பன்றி, பல் கோழி, (75)
உறைக் கிணற்றுப் புறச்சேரி,
ஏழகத் தகரொடு சிவல் விளையாட (75-77)

பொருளுரை:

உறைகிணற்றை உடைய குடியிருப்பில், குட்டிகளையுடைய பன்றிகளும், பல வகையான கோழிகளும், ஆட்டின் கிடாய்களும் கவுதாரிகளும் விளையாடுகின்றன.

சொற்பொருள்:

பறழ்ப் பன்றி - குட்டிகளையுடைய பன்றிகள், பல் கோழி - பல வகையான கோழிகள், உறைக் கிணற்றுப் புறச்சேரி - உறைகிணற்றை உடைய குடியிருப்பு, ஏழகத் தகரொடு - ஆட்டின் கிடாய்களுடன், சிவல் விளையாட - கவுதாரிகளுடன் விளையாட

குறிப்பு:

பொ. வே. சோமசுந்தரனார் உரை - சேரிப்புறம் என்பது புறஞ்சேரி என்று முன் பின்னாக மாறி நின்றது.

பரதவர்களின் இருப்பிடம்(78-83)
கிடுகு நிரைத்து, எஃகு ஊன்றி,
நடுகல்லின் அரண் போல,
நெடும் தூண்டிலில் காழ் (80)

சேர்த்திய குறுங்கூரை குடி நாப்பண்,
நிலவு அடைந்த இருள் போல,
வலை உணங்கும் மணல் முன்றில் (78-83)

பொருளுரை:

கேடயங்களை வரிசையாக வைத்து வேலை நட்டி செய்த நடுகல்லின் அரணைப் போல, நீண்ட தூண்டில் கோலைச் சாற்றி வைத்த குறுகிய கூரையை உடைய இல்லங்களுடைய குடியிருப்பு இருந்தது. அதன் நடுவில், நிலவில் உள்ள இருளைப் போல மீன் பிடிக்கும் வலை காயும் மணல் நிறைந்த முற்றங்கள் உள்ளன.

சொற்பொருள்:

கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி - கேடயங்களை வரிசையாக வைத்து வேலை நட்டி, நடுகல்லின் அரண் போல - நடுகல்லின் அரணைப் போல, நெடும் தூண்டிலில் காழ் சேர்த்திய குறுங்கூரை குடி - நீண்ட தூண்டில் கோலைச் சாற்றி வைத்த குறுகியக் கூரையை உடையக் குடியிருப்பு, நாப்பண் - நடுவே, நிலவு அடைந்த இருள் போல - நிலவில் சேர்ந்த இருளைப் போல, வலை உணங்கும் மணல் முன்றில் - வலை காயும் மணல் நிறைந்த முற்றங்கள்

குறிப்பு:

பட்டினப்பாலை 167 - பசு மெழுக்கில் காழ் ஊன்றிய கவி கிடுகின் மேல். முல்லைப்பாட்டு 41 - பூந்தலைக் குந்தம் குத்தி கிடுகு நிரைத்து, பெரும்பாணாற்றுப்படை 119-120 - எஃகம் வடிமணிப் பலகையொடு நிரைஇ. நிலவு அடைந்த இருள் போல வலை உணங்கும் மணல் (82-83) - அகநானூறு 20 - நிலவு மணல், அகநானூறு 200 - நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில், நற்றிணை 3 - நிலவு மணல், நற்றிணை 159 - நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல், நற்றிணை 183 - நிலவு மணல், குறுந்தொகை 123 - நிலவுக் குவித்தன்ன வெண் மணல்.

பரதவர்களின் வழிபாடும் விளையாட்டும் (84-93)
வீழ்த் தாழைத் தாள் தாழ்ந்த
வெண் கூதாளத்துத் தண் பூங்கோதையர், (85)

சினைச் சுறவின் கோடு நட்டு
மனை சேர்த்திய வல் அணங்கினான்,
மடல் தாழை மலர் மலைந்தும்,
பிணர்ப் பெண்ணைப் பிழி மாந்தியும்,
புன் தலை இரும் பரதவர் (90)

பைந்தழை மா மகளிரொடு
பாய் இரும் பனிக்கடல் வேட்டம் செல்லாது,
உவவு மடிந்து உண்டு ஆடியும் (84-93)

பொருளுரை:

விழுதையுடைய தாழையின் அடியில் உள்ள வெண்கூதாளத்தின் குளிர்ச்சியான மலர்களை அணிந்து, சினையை உடைய சுறா மீனின் கொம்பை நட்டி, மனையில் இருந்த வலிமையான கடவுளுக்குப் படைத்த, மடலையுடைய தாழையின் மலர்களை அணிந்தும் பனை மரத்தின் கள்ளைக் குடித்தும், உலர்ந்த தலையையுடைய கருமையான பரதவர்கள், பரந்த கருமையை உடைய குளிர்ந்த கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல், தழை ஆடையை அணிந்த தங்களுடைய கருமையான பெண்களோடு தாங்கள் விரும்பும் உணவை உண்டும் விளையாடியும்,

சொற்பொருள்:

வீழ்த் தாழைத் தாள் தாழ்ந்த வெண் கூதாளத்துத் தண் பூங்கோதையர் - விழுதையுடைய தாழையின் அடியில் உள்ள வெண்கூதாளத்தின் குளிர்ச்சியான மலர்களை அணிந்தவர்கள், சினைச் சுறவின் கோடு நட்டு - சினையை உடைய சுறா மீனின் கொம்பை நட்டி, மனை சேர்த்திய வல் அணங்கினான் - மனையில் சேர்த்த வலிமையான கடவுளின் பொருட்டு, மடல் தாழை மலர் மலைந்தும் பிணர்ப் பெண்ணைப் பிழி மாந்தியும் - மடலையுடைய தாழையின் மலர்களை அணிந்தும் பனை மரத்தின் கள்ளைக் குடித்தும், புன் தலை இரும் பரதவர் - உலர்ந்த தலையையுடைய கருமையான பரதவர், உலர்ந்த தலையையுடைய பெரிய பரதவர், பைந்தழை மா மகளிரொடு - தழை ஆடையை அணிந்த தங்களுடைய கருமையான பெண்களோடு, பாய் இரும் பனிக்கடல் வேட்டம் செல்லாது - பரந்த கருமையை உடைய குளிர்ந்த கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல், உவவு - முழு நிலவுடைய நாள், மடிந்து உண்டு ஆடியும் - விரும்பும் உணவை உண்டும் விளையாடியும்

குறிப்பு:

சுறா சுறவு என வந்தது. ‘குறியதன் இறுதிச் சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே’ (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 32).

சங்கமுக நீராடலும், பகல் விளையாட்டும் (94-105)
புலவு மணல் பூங்கானல்
மா மலை அணைந்த கொண்மூ போலவும், (95)

தாய் முலை தழுவிய குழவி போலவும்,
தேறு நீர்ப் புணரியோடு யாறு தலைமணக்கும்
மலி ஓதத்து ஒலி கூடல்
தீது நீங்க கடலால் ஆடியும்,
மாசு போக புனல் படிந்தும், (100)

அலவன் ஆட்டியும் உரவுத் திரை உழக்கியும்,
பாவை சூழ்ந்தும், பல் பொறி மருண்டும்,
அகலாக் காதலொடு பகல் விளையாடிப்
பெறற்கு அரும் தொல் சீர்த் துறக்கம் ஏய்க்கும்,
பொய்யா மரபின் பூ மலி பெருந்துறை (94-105)

பொருளுரை:

புலால் நாற்றமுடைய மணலை உடைய, மலர்களைக் கொண்ட சோலைகளையுடைய கடற்கரையில், பெரிய மலையை அணைத்த முகிலைப் போலவும், தாயின் முலையைத் தழுவிய குழந்தையைப் போலவும், தெளிந்த கடல் நீருடன் காவிரி ஆறு கலக்கும் ஒலியையுடைய புகார்முகத்தில், தீமை நீங்க கடலில் விளையாடியும், கடலில் விளையாடியதால் உடலில் பட்ட உப்பை நீக்க ஆற்று நீரில் குளித்தும், நண்டுகளை விரட்டி விளையாடியும், வலிமையான அலைகளில் விளையாடியும், மணல் பொம்மைகளைச் செய்தும், ஐம்பொறிகளை நுகர்ந்தும், நீங்காத விருப்பத்துடன் பகல் முழுக்க விளையாடினார்கள் மக்கள். அவர்களுடைய மகிழ்ச்சி, பெறுவதற்கு அரிய தொன்மையான சிறப்பையுடைய மேல் உலகத்தில் உள்ள மகிழ்ச்சியைப் போன்றது. காவிரியின் மலர்கள் நிறைந்த பெரிய துறை, பொய்த்தல் இல்லாத மரபையுடையதாக இருந்தது.

சொற்பொருள்:

புலவு மணல் - புலால் நாற்றமுடைய மணல், பூங்கானல் - மலர்களைக் கொண்ட கடற்கரைச் சோலை, மா மலை அணைந்த கொண்மூ போலவும் - பெரிய மலையை அணைத்த முகிலைப் போலவும், தாய் முலை தழுவிய குழவி போலவும் - தாயின் முலையைத் தழுவிய குழந்தையைப் போலவும், தேறு நீர்ப் புணரியோடு யாறு தலைமணக்கும் - தெளிந்த கடல் நீருடன் காவிரி ஆறு கலக்கும், மலி ஓதத்து ஒலி கூடல் - ஒலியையுடைய புகார்முகம், தீது நீங்க கடலால் ஆடியும் - தீமை நீங்க கடலில் விளையாடியும், மாசு போக புனல் படிந்தும் - உப்பை நீக்க ஆற்று நீரில் குளித்தும், அலவன் ஆட்டியும் - நண்டுகளை விரட்டி விளையாடியும், உரவுத் திரை உழக்கியும் - வலிமையான அலைகளில் விளையாடியும், பாவை சூழ்ந்தும் - மணல் பொம்மைகளை செய்தும், பல் பொறி மருண்டும் - ஐம்பொறிகளை நுகர்ந்தும், அகலாக் காதலொடு பகல் விளையாடி - நீங்காத விருப்பத்துடன் பகல் முழுக்க விளையாடி, பெறற்கு அரும் தொல் சீர்த் துறக்கம் - பெறுவதற்கு அரிய தொன்மையான சிறப்பையுடைய மேல் உலகம், ஏய்க்கும் - போன்று, பொய்யா மரபின் பூ மலி பெருந்துறை - பொய்த்தல் இல்லாத மரபையுடைய மலர்கள் நிறைந்த காவிரியின் பெரிய துறை

குறிப்பு:

அகநானூறு 280 -அலவன் ஆட்டி, நற்றிணை 363 - அலவன் ஆட்டுவோள், குறுந்தொகை 303 - பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே, ஐங்குறுநூறு 197 - இலங்கு வளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி.

காவிரிப் பூம்பட்டினத்து இரவு நேர நிகழ்வுகள் (106-115)
துணைப் புணர்ந்த மட மங்கையர்
பட்டு நீக்கித் துகில் உடுத்தும்,
மட்டு நீக்கி மது மகிழ்ந்தும்,
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்,
மகளிர் கோதை மைந்தர் மலையவும், (110)

நெடுங்கால் மாடத்து ஒள் எரி நோக்கிக்
கொடுந்திமில் பரதவர் குரூஉச்சுடர் எண்ணவும்,
பாடல் ஓர்ந்தும், நாடகம் நயந்தும்,
வெண் நிலவின் பயன் துய்த்தும்,
கண் அடைஇய கடைக் கங்குலான் (106- 115)

பொருளுரை:

தங்கள் கணவருடன் கூடிய மடப்பத்தை உடைய பெண்கள், தாங்கள் அணிந்திருந்த பட்டு ஆடையை நீக்கி, வெள்ளை ஆடையை உடுத்தி, கள்ளை நீக்கி மதுவைக் குடித்தும், கணவர்கள் சூட வேண்டிய மலர்க் கண்ணியை மகளிர் சூடவும், பெண்களின் மாலையை ஆண்கள் அணியவும், வளைந்த படகுகளையுடைய மீன் பிடிக்கும் பரதவர்கள் உயர்ந்த தூண்கள் உடைய மாடங்களில் உள்ள ஒளியுடைய விளக்குகளை எண்ணவும், மக்கள் பாடல்களை கேட்டும், நாடகங்களை விரும்பியும், வெண்ணிலாவின் பயனை அனுபவித்தும், கண் உறங்குவதற்கு காரணமான இரவில்,

சொற்பொருள்:

துணைப் புணர்ந்த - தங்கள் கணவருடன் கூடிய, மட மங்கையர் - மடப்பத்தை பெண்கள், இளம் பெண்கள், பட்டு நீக்கி - பட்டு ஆடையை நீக்கி, துகில் உடுத்து - வெள்ளை ஆடையை உடுத்தி, துகிலை உடுத்தி, மட்டு நீக்கி - கள்ளை நீக்கி, மது மகிழ்ந்து - மதுவைக் குடித்தும், மைந்தர் கண்ணி மகளிர் சூடவும் - கணவர்கள் சூட வேண்டிய மலர்க் கண்ணியை மகளிர் சூடவும், மகளிர் கோதை மைந்தர் மலையவும் - பெண்களின் மாலையை ஆண்கள் அணியவும், நெடுங்கால் - உயர்ந்த தூண்கள், மாடத்து ஒள் எரி நோக்கி - மாடங்களில் உள்ள விளக்குகளை நோக்கி, கொடுந்திமில் பரதவர் - வளைந்த படகுகளையுடைய பரதவர், குரூஉச்சுடர் எண்ணவும் - ஒளியுடைய விளக்குகளை எண்ணவும், பாடல் ஓர்ந்தும் - பாடல்களை கேட்டும், நாடகம் நயந்தும் - நாடகங்களை விரும்பியும், வெண் நிலவின் பயன் துய்த்தும் - வெண்ணிலாவின் பயனை அனுபவித்தும், கண் அடைஇய கடைக் கங்குலான் - கண் உறங்குவதற்கு காரணமான இரவில்

குறிப்பு:

பட்டு நீக்கித் துகில் உடுத்தும் (வரிகள் 107-108) - நச்சினார்க்கினியர் உரை - பட்டுடுத்தவற்றை நீக்கிப் புணர்ச்சி காலத்திற்கு நொய்யவாகிய வெள்ளியவற்றை உடுத்தும், கள்ளுண்டலைக் கைவிட்டு காமபானத்தை உண்டு மகிழ்ந்தும். பரிபாடல் 20-21 - மகளிர் கோதை மைந்தர் புனையவும் மைந்தர் தண் தார் மகளிர் பெய்யவும்.

வரி வசூலிப்போர் தன்மை (116-125)
மாஅ காவிரி மணம் கூட்டும்
தூஉ எக்கர்த் துயில் மடிந்து,
வால் இணர் மடல் தாழை
வேலாழி வியன் தெருவில்
நல் இறைவன் பொருள் காக்கும் (120)

தொல் இசைத் தொழில் மாக்கள்,
காய் சினத்த கதிர்ச் செல்வன்
தேர் பூண்ட மாஅபோல,
வைகல் தொறும் அசைவு இன்றி
உல்கு செயக் குறைபடாது (116-125)

பொருளுரை:

பெரிய காவிரி ஆறு மலர்களின் மணங்களைக் கொண்டு வந்து கூட்டும் கரையில் உள்ள தூய மணலில் துயின்று, வெள்ளை மலர்க் கொத்துக்களையும் மடலையும் உடைய தாழையுடைய கடற்கரையின்கண் உள்ள அகன்ற தெருவில், நல்ல மன்னனின் பொருட்களைக் காக்கும், பழைய புகழையுடைய சுங்கத் தொழிலைச் செய்பவர்கள், சுடும் சினத்தை உடைய கதிர்களையுடைய கதிரவனின் தேரில் கட்டப்பட்ட குதிரைகளைப் போல, நாள்தோறும், சோம்பல் இல்லாது சுங்க வரியை குறையாமல் கொள்வார்கள்.

சொற்பொருள்:

மாஅ காவிரி - பெரிய காவிரி ஆறு, மணம் கூட்டும் - மலர்களின் மணங்களைக் கூட்டும், தூஉ எக்கர் - கரையில் உள்ள தூய மணலில், துயில் மடிந்து -துயில் கொண்டு, வால் இணர் - வெள்ளை மலர்க் கொத்துக்கள், மடல் தாழை - மடலையும் உடைய தாழை, வேலா - கரை, ஆழி - கடல், வியன் தெருவில் - அகன்ற தெருவில், நல் இறைவன் பொருள் காக்கும் - நல்ல மன்னனின் பொருட்களைக் காக்கும், தொல் இசை - பழைய புகழ், தொழில் மாக்கள் - சுங்கத் தொழிலைச் செய்பவர்கள், காய் சினத்த கதிர்ச் செல்வன் - சுடும் சினத்தை உடைய கதிர்களையுடைய கதிரவன், தேர் பூண்ட மாஅ போல - தேரில் கட்டப்பட்ட குதிரைகளைப் போல, வைகல் தொறும் - நாள்தோறும், அசைவு இன்றி - மடிந்திராது, சோம்பல் இல்லாது, உல்கு செய - சுங்க வரியை கொள்ள, குறைபடாது - குறையாமல்

குறிப்பு:

வேலாழி (119) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - வேலா - கரை, ஆழி - கடல். ஆழிவேலா என, மாறிக் கடற்கரையின் தெரு என்க, வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை - வேலை ஆழி என்ற சொற்கள் விகாரத்தால் ஐ கேட்டு, வேலாழி என வந்தன. இனி, வேலா ஆழி என்ற இரண்டு சொற்கள் வடமொழித் தீர்க்கசந்திபோல வந்தன என்பாரும், ‘ஆழி’என்ற சொல்லின் முதல் எழுத்தோ ‘வேலா’ என்ற சொல்லின் ஈற்றெழுத்தோ தொக்கு வந்த என்பாருமுளர், வேலா - கடற்கரையென்ற பொருளுள்ள வடசொல்.

பண்டகசாலை முன்றில் (126-141)
வான் முகந்த நீர் மலைப் பொழியவும்,
மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்
மாரி பெய்யும் பருவம் போல,
நீரினின்றும் நிலத்து ஏற்றவும்,
நிலத்தினின்று நீர்ப் பரப்பவும், (130)

அளந்து அறியா பல பண்டம்
வரம்பு அறியாமை வந்து ஈண்டி
அருங்கடி பெருங்காப்பின்
வலிவுடை வல் அணங்கினோன்
புலி பொறித்து புறம் போக்கி, (135)

மதி நிறைந்த மலி பண்டம்
பொதி மூடைப் போர் ஏறி,
மழை ஆடு சிமைய மால் வரைக் கவாஅன்
வரை ஆடு வருடைத் தோற்றம் போலக்
கூர் உகிர் ஞமலிக் கொடுந் தாள் ஏற்றை (140)
ஏழகத் தகரோடு உகளும் முன்றில் (126-141)

பொருளுரை:

முகில் கடலிலிருந்து முகந்த நீரை மலை மேல் பொழியவும் மலையில் விழுந்த மழை நீரை ஆறுகள் மூலம் கடலில் சேர்க்கவும், மழை பெய்யும் பருவம் போல, கடலிலிருந்து நிலத்திற்கு ஏற்றவும், நிலத்திலிருந்து கடலுக்கு பரப்பவும், அளந்து அறிய முடியாத பல பொருட்கள் எல்லை இல்லாது வந்து குவிந்து கிடக்க, பெறுவதற்கு அரிய பெருங்காவலையுடைய வலிமையுடன் மிகுந்த அதிகாரமுடைய அதிகாரி ஒருவன், சோழ மன்னனுக்குரிய புலிச் சின்னத்தைப் பொறித்து புறத்தில் வைத்த விலை நிறைந்த பல்வேறு பண்டங்களைக் கட்டி வைத்த மூடைக் குவியலின் மீது ஏறி, முகில் உலவும் உச்சியையுடைய உயர்ந்த மலையின் பக்க மலையில் விளையாடும் வருடை மானின் தோற்றம் போல, கூர்மையான நகங்களையும் வளைந்த கால்களையுமுடைய ஆண் நாய்களும் ஆட்டுக் கிடாய்களுடன் தாவிக் குதிக்கும், பண்டகசாலையின் முற்றத்தில்.

சொற்பொருள்:

வான் முகந்த நீர் - முகில் முகந்த நீர், மலை பொழியவும் - மலை மேல் பொழியவும், மலை பொழிந்த நீர் - மலையில் விழுந்த மழை நீர், கடல் பரப்பவும் - ஆறுகள் மூலம் கடலில் சேரவும், மாரி பெய்யும் பருவம் போல - மழை பெய்யும் பருவம் போல, நீரினின்றும் நிலத்து ஏற்றவும் - கடலிலிருந்து நிலத்திற்கு ஏற்றவும் (இறக்குமதி), நிலத்தினின்று நீர்ப் பரப்பவும் - நிலத்திலிருந்து கடலுக்கு பரப்பவும் (ஏற்றுமதி), அளந்து அறியா - அளந்து அறிய முடியாத, பல் பண்டம் - பல பொருட்கள், வரம்பு அறியாமை - எல்லை இல்லாது, வந்து ஈண்டி - வந்து குவிந்து கிடக்க, அருங்கடி பெருங்காப்பின் - பெறுவதற்கு அரிய பெருங்காவலையுடைய, வலியுடை வல் அணங்கினோன் - வலிமையுடைய பெரிய அதிகாரமுடையவன், புலிப் பொறித்து - சோழ மன்னனுக்குரிய புலிச் சின்னத்தைப் பொறித்து, புறம் போக்கி - புறத்தில் வைத்து, மதி நிறைந்த - விலை நிறைந்த, மலி பண்டம் - பல்வேறு பண்டங்கள், பொதி மூடை போர் ஏறி - கட்டிய மூடைக் குவியலின் மீது ஏறி, மழை ஆடு சிமய - முகில் உலவும் உச்சியையுடைய, மால் வரை - உயர்ந்த மலை, மூங்கில் நிறைந்த மலை, கவாஅன் - பக்க மலை, வரை ஆடு வருடை தோற்றம் போல - மலையில் விளையாடும் வருடை மானின் தோற்றம் போல, கூர் உகிர் ஞமலி - கூர்மையான நகங்களையுடைய நாய்கள், கொடும் தாள் ஏற்றை - வளைந்த காலையுடைய ஆண்கள், ஏழகத் தகரோடு - ஆட்டுக் கிடாய்களுடன், உகளும் - தாவிக் குதிக்கும், முன்றில் - பண்டகசாலையின் முற்றத்தில்

மாளிகை அமைப்பு (142-145)
குறுந்தொடை நெடும் படிக்கால்,
கொடும் திண்ணைப் பல் தகைப்பின்,
புழை வாயில் போகு இடை கழி,
மழை தோயும் உயர் மாடத்துச் (142-145)

பொருளுரை:

அணுகிய படிகளையுடைய உயரமான படிக்கட்டுக்களையுடைய வளைந்த திண்ணைகளையும், பல அறைகளையும், சிறிய வாயில்களையும், பெரிய வாயில்களையும், இடைவழிகளையும் உடைய, முகிலைத் தொடும் உயர்ந்த மாடத்தில்,

சொற்பொருள்:

குறுந்தொடை - அணுகிய படிகளையுடைய, நெடும் படிக்கால் - உயரமாகச் செல்லும் படிகள், கொடுந்திண்ணை - வளைந்த திண்ணை, பல் தகைப்பின் - பல அறைகயுடைய, புழை - சிறிய வாயில், வாயில் - பெரிய வாயில், போகு இடை கழி - போகும் இடைவழிகளையுடைய, மழை தோயும் உயர் மாடத்து - முகிலை உரசும் உயர்ந்த மாடத்தில்

குறிப்பு:

பஃறகைப்பு (143) - வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை - பல் தகைப்பு, தனிக்குறிலைச் சேர்ந்த லகரம் தகரம் வர ஆய்தமாகவும், லகரத்துப் பின் தகரம் றகரமாகவும் திரிந்தன.

விழா நீங்காத கடை வீதி(146-158)
சேவடிச் செறி குறங்கின்
பாசிழைப் பகட்டு அல்குல்,
தூசு உடைத் துகிர் மேனி,
மயில் இயல், மான் நோக்கின்,
கிளி மழலை, மென் சாயலோர், (150)

வளி நுழையும் வாய் பொருந்தி,
ஓங்கு வரை மருங்கின் நுண் தாது உறைக்கும்
காந்தள் அம் துடுப்பின் கவி குலை அன்ன,
செறி தொடி முன் கை கூப்பிச் செவ்வேள்
வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க் (155)

குழல் அகவ, யாழ் முரல,
முழவு அதிர, முரசு இயம்ப,
விழவு அறா வியல் ஆவணத்து (146- 158)

பொருளுரை:

சிவந்த அடியையும், நெருங்கிய தொடையையும், புதிய அணிகலன்களையும், அகன்ற அல்குலையும், தூய்மையான உடையையும், பவளம் போன்ற உடலையும், மயிலின் இயல்பையும், மானின் பார்வையும், கிளியின் மழலையும், மென் சாயலையும் கொண்ட பெண்கள், காற்று வரும் சாளரம் வழியாக நோக்கி, உயர்ந்த மலை அருகில் நுண்மையான தாதுக்களை உதிர்க்கும் காந்தள் மலர்களின் அழகிய இதழ்களைப் போன்று உள்ள தங்களுடைய நிறைய வளையல் அணிந்த கைகளைக் கூப்பி வணங்கினார்கள். முருகனுக்காக வெறியாட்டம் ஆடிய பெண்களின் பாடலில் இணைந்து புல்லாங்குழல் ஒலிக்க, யாழ் இசைக்க, முழவு முழங்க, முரசு முழங்க எடுத்த நீங்காத விழாக்களைக் கொண்ட அகன்ற கடைவீதியில்,

சொற்பொருள்:

சேவடி - சிவந்த அடி, செறி குறங்கின் - நெருங்கிய தொடையுடன், பாசிழை - புதிய அணிகள், பகட்டு அல்குல் - அகன்ற அல்குல் (இடைக்கு கீழ் உள்ள பகுதி), தூசு உடை - தூய்மையான உடை, பஞ்சு ஆடை, துகிர் மேனி - பவளம் போன்ற உடல், மயில் இயல் - மயிலின் இயல்பு, மான் நோக்கு - மானின் பார்வை, கிளி மழலை - கிளியின் மழலை, மென் சாயலோர் - மென்மையான சாயலையுடைய பெண்கள், வளி நுழையும் வாய் - காற்று வரும் வழி, பொருந்தி - சேர்ந்து, ஓங்கு வரை - உயர்ந்த மலை, மருங்கின் - அருகில், நுண் தாது உறைக்கும் - நுண்மையான தாதுக்களை உதிர்க்கும், நுண்மையான தேனை உதிர்க்கும், காந்தள் - காந்தள் மலர்கள், அம் துடுப்பின் - அழகிய இதழ்களைப் போன்று, கவி - கவிழ்ந்த, குலை அன்ன - குலைகளைப் போல், செறி தொடி - அடர்ந்த வளையல்கள், முன் கை கூப்பி - கைகளைக் கூப்பி வணங்கி, செவ்வேள் வெறியாடல் மகளிரொடு செறிய - முருகனுக்காக வெறியாட்டம் ஆடிய பெண்களுடன் பாடலில் இணைந்து, தாஅய்க் குழல் அகவ - பரந்து புல்லாங்குழல் ஒலிக்க, யாழ் முரல - யாழ் இசைக்க, முழவு அதிர - முழவு முழங்க, முரசு இயம்ப - முரசு முழங்க , விழவு அறா - நீங்காத விழாக்கள், வியல் ஆவணத்து - அகன்ற கடைவீதியில்

கொடிகள் - தெய்வக்கொடி (159-160)
மையறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய,
மலர் அணி வாயில் பலர் தொழு, கொடியும் (159-160)

பொருளுரை:

குற்றம் இல்லாத சிறப்புடைய தெய்வம் இருந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாசலில் பலரால் தொழப்படும் கொடியும்,

சொற்பொருள்:

மை அறு சிறப்பின் - குற்றம் இல்லாத சிறப்புடைய, தெய்வம் சேர்த்திய - தெய்வம் சேர்ந்த, மலர் அணி வாயில் - மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாசல், பலர் தொழு கொடியும் - பலர் தொழும் இடத்தில் உள்ள கொடியும்

கொடிகள் - வீரர்களை வணங்குமிடத்தில் ஏற்றியுள்ள கொடி (161-168)
வரு புனல் தந்த வெண்மணல் கான் யாற்று
உருகெழு கரும்பின் ஒண்பூப் போலக்
கூழுடை கொழு மஞ்சிகை
தாழுடைத் தண் பணியத்து
வால் அரிசிப் பலி சிதறிப் 165

பாகு உகுத்த பசு மெழுக்கின்,
காழ் ஊன்றிய கவி கிடுகின்
மேல் ஊன்றிய துகில் கொடியும் (161- 168)

பொருளுரை:

சந்தனக் குழம்பை பூசி புதிதாக மெழுகிய இடத்தில், சோற்றினை உடைய பெரிய கூடைகள் மீதும் தாழ விரித்த துணியின் மீது உள்ள குளிர்ச்சியுடையப் பண்டங்களின் மீதும் வெள்ளை அரிசியைப் பலியாகத் தூவி இருந்தனர். அங்கு ஊன்றிய வேலின் மீது உள்ள கவிழ்த்தப்பட்ட கேடயங்களுக்கு மேலே இருந்த, காட்டு ஆறு கொண்டு வந்த வெள்ளை மணலில் உள்ள அழகான கரும்பின் ஒளியுடைய பூவைப் போல உள்ள துணியால் செய்யப்பட்ட கொடிகளும்,

சொற்பொருள்:

வரு புனல் தந்த வெண் மணல் - வருகின்ற ஆற்று மணல் கொண்டு வந்த வெள்ளை மணல், கான் யாற்று - காட்டு ஆறு, உருகெழு கரும்பின் ஒண் பூப் போல - அழகான கரும்பின் ஒளியுடைய பூவைப் போல, கூழுடை கொழு மஞ்சிகை - சோற்றினை உடைய பெரிய கூடைகள், தாழ் உடை - தாழ விரித்த துணி, தண் பணியத்து - குளிர்ச்சியுடையப் பண்டங்களையும், வால் அரிசி - வெள்ளை அரிசி, பலி சிதறி - பலியைத் தூவி, பாகு உகுத்த - சேற்றினாலே அப்பி, சந்தனக்குழம்பினால் அப்பி, பசு மெழுக்கின் - புதிதாக மெழுகிய இடத்தில், பசுவின் சாணி மெழுக்கில், காழ் ஊன்றிய - வேல் ஊன்றிய, கவி கிடுகின் - கவிழ்த்தப்பட்ட கேடயத்தின், மேலூன்றிய - மேலே நாட்டப்பட்ட, துகிற் கொடியும் - துணியால் செய்யப்பட்ட கொடியும்

குறிப்பு:

பாகு உகுத்த பசு மெழுக்கின் (166) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - சந்தனக் குழம்பினைக் கொட்டி மெழுகிய பசிய மெழுக்கு நிலத்தின் மேல், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை - பாகு போலக் காய்ச்சி வார்த்த பசிய மெழுக்கைப் பூசிய, நச்சினார்க்கினியர் உரை - உகுத்த பாகு என்பது கண்டு சர்க்கரைக் கட்டுப்பாகினை, இதனை பசு மெழுக்கென்பதனோடு கூட்டி ஆப்பி (பசுவின் சாணி) என்பாருமுளர். பட்டினப்பாலை 78 - கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி நடுகல்லின் அரண் போல, பட்டினப்பாலை 167 - காழ் ஊன்றிய கவி கிடுகின், முல்லைப்பாட்டு 41 - பூந்தலைக் குந்தம் குத்தி கிடுகு நிரைத்து, பெரும்பாணாற்றுப்படை 119-120 - எஃகம் வடிமணிப் பலகையொடு நிரைஇ.

கொடிகள் - பல் துறை சான்றோர் வாதிடும் இடத்திலுள்ள கொடி (169-171)
பல் கேள்வி துறை போகிய
தொல் ஆணை நல்லாசிரியர், 170
உறழ் குறித்து எடுத்த உருகெழு கொடியும் (169-171)

பொருளுரை:

பல கேட்டல் துறைகளில் அறிவு பெற்ற பழைய ஆணையையுடைய நல்ல ஆசிரியர்கள், வாதம் செய்வதற்கு உயர்த்திய அஞ்சுவதற்கு காரணமான கொடிகளும்,

சொற்பொருள்:

பல் கேள்வி துறை போகிய - பல கேட்டல் துறைகளில் அறிவு பெற்ற, தொல் - பழைய, ஆணை - ஆணை, நல் ஆசிரியர் - நல்ல ஆசிரியர்கள், உறழ் குறித்து - வாதம் செய்வதற்கு, எடுத்த - உயர்த்திய, உருகெழு கொடியும் - அச்சம் பொருந்திய கொடிகளும், அழகிய கொடிகளும்,

குறிப்பு:

உருகெழு (171) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - கல்வி கேள்விகளில் வல்லுநர் அல்லாதார்க்கு இக்கொடி அச்சம் விளைத்தலின் ‘உருகெழு கொடி’ என்றார். உரு - அச்சம். உரு உட்கு ஆகும் புரை உயர்பு ஆகும். (தொல்காப்பியம், உரியியல் 4).

கொடிகள் - கப்பலின் மேலேற்றப்பட்டுள்ள கொடிகள் (172-175)
வெளில் இளக்கும் களிறு போலத்
தீம் புகார்த் திரை முன் துறைத்
தூங்கு நாவாய் துவன்று இருக்கை
மிசைக் கூம்பின் நசைக் கொடியும் (172-175)

பொருளுரை:

கட்டப்பட்டிருக்கும் தறியை அசைக்கும் களிற்று யானைகளைப் போன்று, இனிய பூம்புகாரின் அலைகளையுடைய கரையின் முன், அசையும் கப்பல்கள் நெருங்கி இருந்தன. அவற்றின் கூம்புகளின் மேல் வணிகர்களால் விரும்பப்படும் கொடிகளும்,

சொற்பொருள்:

வெளில் இளக்கும் களிறு போல - தறியை அசைக்கும் களிற்று யானைகளைப் போன்று, தீம் புகார் - இனிய பூம்புகார், திரை முன் துறை - அலைகளையுடைய கரையின் முன், தூங்கு நாவாய் - அசையும் கப்பல்கள், துவன்று இருக்கை - நெருங்கி இருத்தல், மிசை கூம்பின் - கூம்பின் மேலே, நசைக் கொடி - விரும்பப்படும் கொடிகள்

கொடிகள் - கள் விற்கும் முன்றிலிலுள்ள கொடி (176-180)
மீன் தடிந்து, விடக்கு அறுத்து,
ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்,
மணல் குவைஇ மலர் சிதறிப்
பலர் புகு மனைப் பலிப் புதவின்
நறவு நொடைக் கொடியோடு (176-180)

பொருளுரை:

மீனை வெட்டி, இறைச்சியை அறுத்து, அந்த தசையைப் பொரிக்கும் ஒலியையுடைய, பலர் புகும் கள் கடையின் முற்றத்தில், மணலைக் குவித்து மலர்களைச் சிதறி பலியைக் கொடுக்கும் கதவுகள் அருகே உள்ள கொடிகளுடன்,

சொற்பொருள்:

மீன் தடிந்து - மீனை வெட்டி, விடக்கு அறுத்து - இறைச்சியை அறுத்து, ஊன் பொரிக்கும் - தசையைப் பொரிக்கும், ஒலி - ஒலி, முன்றில் - முற்றத்தில், மணல் குவைஇ - மணலைக் குவித்து, மலர் சிதறி - மலர்களைச் சிதறி, பலர் புகு மனை - பலர் புகும் இல்லம், பலிப் புதவின் - பலியைக் கொடுக்கும் கதவு, நறவு நொடை - கள் விற்கும், கொடியோடு - கொடிகளுடன்

கொடிகள் - பல் கொடி விளங்கும் பட்டினம் (181-183)
பிற பிறவும், நனி விரைஇ,
பல் வேறு உருவின் பதாகை நீழல்,
செல் கதிர் நுழையாச் செழு நகர் (181-183)

பொருளுரை:

வேறு பிற கொடிகளும், மிகவும் நெருங்கி, பல்வேறு உருவங்களில் இருந்தன. அந்தக் கொடிகளினால், கதிரவனின் கதிர் நுழைய முடியாதபடி இருந்தது அந்தச் செழிப்பான நகர்.

சொற்பொருள்:

வேறு பிற கொடிகளும் - பிறவும், நனி விரைஇ - மிகவும் நெருங்கி, பல் வேறு உருவின் - பல்வேறு உருவங்களில், பதாகை நீழல் - கொடிகளின் நிழல், செல் கதிர் நுழையா - கதிரவனின் கதிர் நுழைய முடியாத, செழு நகர் - செழிப்பான நகர்

குறிப்பு:

நச்சினார்க்கினியர் உரை - கள்ளின் விலைக்குக் கட்டின கொடியோடே ஏனையவற்றிற்குக் கட்டின கொடிகளும் மிகக் கலக்கையினாலே செல்கதிர் நுழையா என்க.

பூம்புகாரின் செல்வ வளம் நிறைந்த வீதிகள் (184-193)
….வரைப்பின்
செல்லா நல்லிசை அமரர் காப்பின்,
நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும், (185)

காலின் வந்த கருங்கறி மூடையும்,
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்,
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்,
தென்கடல் முத்தும், குணகடல் துகிரும்,
கங்கை வாரியும், காவிரிப் பயனும், (190)

ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்,
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி,
வளம் தலை மயங்கிய நனந்தலை மறுகின் (184-193)

பொருளுரை:

அதன் எல்லையில் கெடாத புகழையுடைய தேவர்கள் பாதுகாத்தனர். கடலில் வந்த நிமிர்ந்த நடையையுடைய குதிரைகளும், வண்டிகளில் வந்த கரிய மிளகு மூடைகளும், வட மலையில் பிறந்த பொன்னும், குடகு மலையில் தோன்றிய சந்தனமும் அகிலும், கங்கை ஆற்றினால் உண்டான பொருட்களும், காவிரி ஆற்றினால் உண்டான பொருட்களும், ஈழத்து உணவும், மியன்மாரின் பொருட்களும், அரிய பொருட்களும் பெரிய பொருட்களும், நிலத்தை நெளிக்கும்படி திரண்டு ஒன்றோடொன்று கலந்து இருந்தன அகன்ற தெருவில்.

சொற்பொருள்:

வரைப்பின் - எல்லையில், செல்லா நல் இசை - கெடாத புகழ், அமரர் காப்பின் - தேவர்களின் பாதுகாப்பால், நீரின் வந்த நிமிர் பரி புரவியும் - கடலில் வந்த நிமிர்ந்த நடையையுடைய குதிரைகள், காலின் வந்த கருங்கறி மூடையும் - வண்டிகளில் வந்த கரிய மிளகு மூடைகளும், வட மலைப் பிறந்த பொன்னும் - வட மலையில் பிறந்த பொன்னும், குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் - குடகு மலையில் தோன்றிய சந்தனமும் அகிலும், கங்கை வாரியும் - கங்கை ஆற்றின் பொருட்களும், காவிரிப் பயனும் - காவிரி ஆற்றினால் உண்டான பொருட்களும், ஈழத்து உணவும் - ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும் - மியன்மாரின் பொருட்களும், அரியனவும் பெரியவும் - அரிய பொருட்களும் பெரிய பொருட்களும், நெரிய ஈண்டி - அடர்ந்து திரண்டு, வளம் தலை மயங்கிய - செல்வம் நிறைந்துக் கலந்த, நனந்தலை மறுகின் - அகன்ற தெருவில்

குறிப்பு:

ஈழத்து உணவும் (191) - பொ. வே. சோமசுந்தரனார் உரை: ஈழத்துணவும் என்பது ஈழத்துளவும் என்றே இருத்தல் வேண்டும். ஈழத்துணவும் என்னுந் தொடர்க்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரையும் இல்லாததால் பிற்காலத்தார் அங்ஙனம் பிறழக்கொண்டமைக்குக் காரணமாகலாம். காலின் வந்த கருங்கறி மூடையும் (186) - நச்சினார்க்கினியர் உரை - கடலிலே காற்றால் வந்த கரிய மிளகுப் பொதிகளும், பொ. வே. சோமசுந்தரனார் உரை - நிலத்தின்கண் சகடங்களிலே வந்த கரிய மிளகு பொதிகளும், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை - வண்டியின் மூலமாக வந்த கரு நிற மிளகு மூட்டையும். வை. மு. கோ மேலும் விளக்குகின்றார் - கால் என்பது உருளையையுடைய வண்டிக்கு ஆகுபெயர்.

காவிரிப்பூம்பட்டினத்து உழவர்களின் நல் இயல்புகள் (194-205)
நீர் நாப்பண்ணும், நிலத்தின் மேலும்,
ஏமாப்ப இனிது துஞ்சிக் (195)

கிளை கலித்துப் பகை பேணாது,
வலைஞர் முன்றில் மீன் பிறழவும்,
விலைஞர் குரம்பை மா ஈண்டவும்,
கொலை கடிந்தும், களவு நீக்கியும்,
அமரர் பேணியும், ஆவுதி அருத்தியும், (200)

நல் ஆனொடு பகடு ஓம்பியும்,
நான்மறையோர் புகழ் பரப்பியும்,
பண்ணியம் அட்டியும், பசும் பதம் கொடுத்தும்,
புண்ணியம் முட்டா தண்ணிழல் வாழ்க்கைக்
கொடும் மேழி நசை உழவர் (194- 205)

பொருளுரை:

நீரின் நடுவிலும் நிலத்தின் மேலும் மகிழ்ந்து இனிமையாகத் துயின்று, சுற்றம் தழைத்து, பகைமையைக் கருதாமல் மீன் பிடிப்பவர்களின் முற்றத்தில் மீன்கள் பாயவும், ஊன் விற்பவர்கள் குடிசைகளின் முன் விலங்குகள் திரண்டு இருக்கவும், கொலையையும் களவையும் நீக்கியும், தேவரைப் போற்றியும், வேள்விகள் செய்து படைக்கப்பட்ட உணவை உண்டும், நல்ல பசுக்களுடன் எருதுகளைப் பாதுகாத்தும், நான்மறை ஓதுபவர்களின் புகழைப் பரப்பியும், பண்டங்களைச் செய்து வருவோர்க்குக் கொடுத்ததும், சமைக்காத அரிசி போன்ற உணவைக் கொடுத்ததும், அறம் குறையாது, குளிர்ந்த நிழல் போன்ற வாழ்க்கையையுடைய, வளைந்த கலப்பையை விரும்பும் உழவர்களும்,

சொற்பொருள்:

நீர் நாப்பண்ணும் - நீரின் நடுவிலும், நிலத்தின் மேலும் - நிலத்தின் மேலும், ஏமாப்ப - மகிழ்ந்து, இனிது துஞ்சி - இனிமையாகத் துயின்று, கிளை கலித்து - சுற்றம் தழைத்து, பகை பேணாது - பகைமையை கருதாமல், வலைஞர் முன்றில் மீன் பிறழவும் - மீன் பிடிப்பவர்களின் முற்றத்தில் மீன்கள் பாயவும், விலைஞர் குரம்பை மா ஈண்டவும் - ஊன் விற்பவர்கள் குடிசைகளின் முன் விலங்குகள் திரண்டு இருக்கவும், கொலை கடிந்தும் - கொலையை நீக்கியும், களவு நீக்கியும் - களவை நீக்கியும், அமரர் பேணியும் - தேவரைப் போற்றியும், ஆவுதி அருத்தியும் - வேள்விகள் செய்து படைக்கப்பட்ட உணவை உண்டும், நல் ஆனொடு பகடு ஓம்பியும் - நல்ல பசுக்களுடன் எருதுகளைப் பாதுகாத்தும், நான்மறையோர் புகழ் பரப்பியும் - நான்மறை ஓதுபவர்களின் புகழைப் பரப்பியும், பண்ணியம் அட்டியும் - பண்டங்களைச் செய்தும், பசும் பதம் கொடுத்தும் - சமைக்காத உணவைக் கொடுத்ததும், புண்ணியம் முட்டா - அறம் குறையாது, தண் நிழல் வாழ்க்கை - குளிர்ந்த நிழல் போன்ற வாழ்க்கையையுடைய, கொடும் மேழி - வளைந்த கலப்பை, நசை உழவர் - விரும்பும் உழவர்கள்

வணிகர் குடிச்சிறப்பு (206-212)
நெடு நுகத்துப் பகல் போல
நடுவு நின்ற நல் நெஞ்சினோர்,
வடு அஞ்சி வாய்மொழிந்து,
தமவும் பிறவும் ஒப்ப நாடிக்
கொள்வதூஉம் மிகை கொடாது, கொடுப்பதூஉங் குறைகொடாது, (210)

பல் பண்டம் பகர்ந்து வீசும்,
தொல் கொண்டி துவன்று இருக்கை (206 - 212)

பொருளுரை:

கலப்பையின் நீண்டத் தடியின் நடுவிடம் போல, நடுநிலைமையுடைய நல்ல நெஞ்சினோர், பழிக்கு அஞ்சி உண்மையைக் கூறி, தம்முடையதையும் பிறருடையதையும் ஒப்பாக எண்ணி, தாம் கொள்ளும் பொருட்களை மிகுதியாகக் கொள்ளாது, தாம் விற்கும் பொருட்களையும் குறைவாகக் கொடுக்காது, பல பொருட்களின் விலையைக் கூறி விற்கும், தொன்றுத் தொட்டு செல்வம் ஈட்டிய வணிகர்களும்,

சொற்பொருள்:

நெடு நுகத்து பகல் போல - கலப்பையின் எருதுகளைப் பிணிக்கும் நீண்டத் தடியின் நடுவிடம் போல, நடுவு நின்ற நல் நெஞ்சினோர் - நடுநிலைமையுடைய நல்ல நெஞ்சினோர், வடு அஞ்சி - பழிக்கு அஞ்சி, வாய்மொழிந்து - உண்மையைக் கூறி, தமவும் பிறவும் - தம்முடையதையும் பிறருடையதையும், ஒப்ப நாடி - ஒப்பாக எண்ணி, கொள்வதூஉம் மிகை கொளாது - தாம் கொள்ளும் பொருட்களை மிகுதியாக கொள்ளாது, கொடுப்பதூஉம் குறை கொடாது - தாம் விற்கும் பொருட்களையும் குறைவாக கொடுக்காது, பல் பண்டம் பகர்ந்து வீசும் - பல பொருட்களின் விலையைக் கூறி விற்கும், தொல் கொண்டி - தொன்றுத் தொட்டு ஈட்டிய, துவன்று இருக்கை - நிறைந்த இடங்கள்

குறிப்பு:

நெடுநுகம் (206) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - கலப்பையில் எருதுகளைப் பிணைக்கும் நீண்ட தடி. இதனை நுகத்தடி எனவும் கூறுப. இத் தடியின் நடுவிடம் தெரிதற் பொருட்டு ஓர் ஆணி தைத்திருப்பர். சின் - மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை - ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).

பன்னாட்டினரும் இனிது உறையும் புகார்(213-218)
பல் ஆயமொடு பதி பழகி,
வேறு வேறு உயர்ந்த முதுவாய் ஒக்கல்
சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு, (215)

மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்
புலம் பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்,
முட்டாச் சிறப்பின் பட்டினம் (213-218)

பொருளுரை:

பல மக்கள் கூட்டங்களுடனும் பல்வேறு நாடுகளிலும் சென்று பழகி, வெவ்வேறு உயர்ந்த அறிவுடைய சான்றோராகிய சுற்றத்தார் விழாக்கள் நடத��தும் தொன்மையான ஊருக்குச் சென்று கூடினாற்போல், பழி இல்லாத நாடுகளில் மொழிகள் பலவற்றை அறிந்த, தம்முடைய நாட்டிலிருந்து புலம் பெயர்ந்த மக்கள், ஒன்றாக இனிமையாக வாழும், குறையாத சிறப்பினையுடைய காவிரிப்பூம்பட்டினத்தை

சொற்பொருள்:

பல் ஆயமொடு - பல மக்கள் கூட்டங்களுடன், பதி பழகி - நாடுகளில் பழகி, வேறு வேறு உயர்ந்த முதுவாய் ஒக்கல் - வெவ்வேறு உயர்ந்த அறிவுடைய சான்றோராகிய சுற்றத்தார், சாறு அயர் - விழாக்கள் நடத்தும், மூதூர் - தொன்மையான ஊர், சென்று தொக்காங்கு - சென்று கூடினாற்போல், பழி தீர் தேஎத்து - பழி இல்லாத நாடுகளில், மொழி பல பெருகிய - மொழிகள் பலவற்றை அறிந்த, புலம் பெயர் மாக்கள் - தம்முடைய நாட்டிலிருந்து புலம் பெயர்ந்த மக்கள், கலந்து இனிது உறையும் - ஒன்றாக இனிமையாக வாழும், முட்டாச் சிறப்பின் பட்டினம் - குறையாத சிறப்பினையுடைய காவிரிப்பூம்பட்டினம்

குறிப்பு:

புலம் பெயர் மாக்கள் (217) - நச்சினார்க்கினியர் உரை - சோனகர், சீனர் முதலியோர்.

வாரேன் வாழிய நெஞ்சே! (218-220)
…………………………பெறினும்,
வார் இருங் கூந்தல் வயங்கு இழை ஒழிய
வாரேன், வாழிய நெஞ்சே (218- 220)

பொருளுரை:

நான் பெற்றாலும், நீண்ட கரிய கூந்தலையுடைய, ஒளியுடைய அணிகலன்களையுடைய என் தலைவியை விட்டு விலகி நான் வர மாட்டேன். நீடு வாழ்வாயாக என் நெஞ்சே!.

சொற்பொருள்:

பெறினும் - காவிரிப்பூம்பட்டினத்தை நான் பெற்றாலும், வார் இருங் கூந்தல் - நீண்ட கரிய கூந்தல், வயங்கு இழை - ஒளியுடைய அணிகலன்களையுடையவள், ஒழிய - பிரிந்திருக்க, வாழிய நெஞ்சே - நீடு வாழ்வாயாக என் நெஞ்சே, வாரேன் - நான் வரமாட்டேன்

திருமாவளவனின் பெருமைகள், திருமாவளவன் அரசுரிமை பெறல் (220-227)
…………………….கூர் உகிர்
கொடுவரிக் குருளைக் கூட்டுள் வளர்ந்தாங்குப்
பிறர் பிணியகத்து இருந்து பீடு காழ் முற்றி,
அருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று
பெருங்கை யானை பிடிப் புக்காங்கு,
நுண்ணிதின் உணர நாடி நண்ணார் (225)

செறிவுடைத் திண் காப்பு ஏறி, வாள் கழித்து,
உருகெழு தாயம் ஊழின் எய்தி (220-227)

பொருளுரை:

கூர்மையான நகங்களையுடைய வளைந்த வரிகளையுடைய புலிக்குட்டி, கூட்டுக்குள் அடைபட்டு வளர்ந்தாற்போல் அடைக்கப்பட்டு மன வலிமையுடன் முதிர்ந்து, ஏறுதற்கு அரிய கரையினை இடித்துத் தந்தத்தினால் குத்திக் குழியைப் பாழ்படுத்தி, பெரிய தும்பிக்கையையுடைய களிற்று யானையானது தன்னுடைய பிடியிடம் சென்றாற்போல், தன்னுடைய உணர்வு கூர்மையாக உணரும்படி ஆராய்ந்து, பகைவருடைய மிகுந்த காவலுடைய சிறையின் மதிலின் மீது ஏறி, தன்னுடைய வாளை உறையிலிருந்து நீக்கி முறைப்படி அச்சம் பொருந்திய அரசுரிமையை அடைந்தான்.

சொற்பொருள்:

கூர் உகிர் கொடுவரி - கூர்மையான நகங்களையுடைய வளைந்த வரிகளையுடைய புலி, குருளை - குட்டி, கூட்டுள் வளர்ந்தாங்கு - கூட்டுக்குள் அடைபட்டு வளர்ந்தாற்போல், பிறர் பிணி அகத்து இருந்து - பகைவருடைய காவலிலிருந்து, பீடு காழ் முற்றி - பெருமை வைரமாக முதிர்ந்து, அருங்கரை - ஏறுதற்கு அரிய கரை, கவிய - இடிய, குத்தி - தந்தத்தினால் குத்தி, குழி கொன்று - குழியைப் பாழ்படுத்தி, பெருங்கை யானை - பெரிய தும்பிக்கையையுடைய களிற்றுயானை, பிடி புக்காங்கு - தன்னுடைய பிடியிடம் சென்றாற்போல், நுண்ணிதின் உணர - தன்னுடைய உணர்வு கூர்மையாக உணர, நாடி - ஆராய்ந்து, நண்ணார் செறிவுடை திண் காப்பு ஏறி - பகைவருடைய மிகுந்த காவலுடைய சிறையின் மதிலின் மீது ஏறி, வாள் கழித்து உருகெழு - தன்னுடைய வாளை உறையிலிருந்து நீக்கி அச்சம் பொருந்திய, தாயம் - அரசுரிமை, ஊழின் எய்தி - முறைப்படி அடைந்து

திருமாவளவனது போர்த்திறன் (228-239)
பெற்றவை மகிழ்தல் செய்யான், செற்றோர்
கடி அரண் தொலைத்த கதவு கொல் மருப்பின்
முடி உடைக் கருந்தலை புரட்டும் முன் தாள் (230)

உகிர் உடை அடிய ஓங்கு எழில் யானை,
வடி மணிப் புரவியொடு, வயவர் வீழப்
பெரு நல் வானத்துப் பருந்து உலாய் நடப்ப,
தூறு இவர் துறுகல் போலப் போர் வேட்டு
வேறு பல் பூளையொடு உழிஞை சூடிப் (235)

பேய்க் கண் அன்ன பிளிறு கடி முரசம்
மாக் கண் அகல் அறை அதிர்வன முழங்க,
முனை கெடச் சென்று முன் சமம் முருக்கித்
தலை தவச் சென்று தண் பணை எடுப்பி (228- 239 )

பொருளுரை:

தன்னுடைய அரசுரிமையைப் பெற்றதற்காக அவன் மகிழ்ச்சி அடையவில்லை. பகைவரின் காவலுடைய கோட்டைகளை அழித்த, கதவுகளை உடைக்கும் தந்தங்களையுடைய, பகை மன்னர்களின் முடியையுடைய கரிய தலைகளை உருட்டும் முன் கால் நகங்களைக் கொண்ட அடிகளையுடைய உயரமான அழகிய யானைகளுடனும், அழகிய மணிகளையுடைய குதிரைகளுடனும், பகை மறவர்கள் விழ, பெரிய நல்ல வானத்தில் பருந்துகள் பறக்க, சிறிய செடிகள் படர்ந்த பெரிய பாறைகளைப் போலத் தோன்றியப் போரை விரும்பிய மறவர்களுடன், பூளையொடு, உழிஞை மலரையும் சூடி, பேயின் கண்களைப் போல் உள்ள பெரிய கண்ணையுடைய முழங்கும் காவலுடைய முரசு பெரிய பாசறை அதிரும்படி முழங்க, போர் முனைக் கெடச் சென்று, பகைவரை அழித்து அப்பகைவரின் அரணிற்கு மேலும் சென்று, பகைவரின் குளிர்ச்சியுடைய மருத நிலத்தின் குடிகளை விரட்டி விட்டான்.

சொற்பொருள்:

பெற்றவை மகிழ்தல் செய்யான் - தன்னுடைய அரசுரிமையைப் பெற்றதற்காக மகிழ்ச்சி அடையவில்லை, செற்றோர் கடி அரண் தொலைத்த - பகைவரின் காவலுடைய கோட்டைகளை அழித்த, கதவு கொல் மருப்பின் - கதவுகளை உடைக்கும் தந்தங்களையுடைய, முடி உடைக் கருந்தலை - முடியையுடைய கரிய தலைகள், புரட்டும் - உருட்டும், முன் தாள் - முன் கால், உகிர் உடை அடிய - நகங்களையுடைய காலடிகள், ஓங்கு எழில் யானை - உயரமான அழகிய யானைகள், வடி மணிப் புரவியொடு - அழகிய/வடிக்கப்பட்ட மணிகளையுடைய குதிரைகளுடன், வயவர் வீழ - பகை மறவர்கள் விழ, பெரு நல் வானத்துப் பருந்து உலாய் நடப்ப - பெரிய நல்ல வானத்தில் பருந்துகள் பறக்க, தூறு இவர் துறுகல் போல - சிறிய செடிகள் படர்ந்த பெரிய பாறைகளைப் போல, போர் வேட்டு - போரை விரும்பி, வேறு பல பூளையொடு - வேறு பல பூளையொடு, உழிஞை சூடி - உழிஞை மலர்களையும் சூடி, பேய்க் கண் அன்ன - பேயின் கண்களைப் போல, பிளிறு கடி முரசம் - பெரிய கண்ணையுடைய முழங்கும் காவலுடைய முரசு, மாக் கண் அகல் அறை அதிர்வன முழங்க - பெரிய பாசறை அதிரும்படி முழங்கி, முனை கெட - போர் முனை கெட, சென்று - சென்று, முன் சமம் முருக்கி - பகைவரை அழித்து, தலை தவச் சென்று - அப்பகைவரின் அரணிற்கு மேலும் சென்று, தண் பணை எடுப்பி - குளிர்ச்சியுடைய மருத நிலத்தின் குடிகளை விரட்டி விட்டு,

குறிப்பு:

புரட்டும் (230) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - உதைத்து உருட்டும்.

திருமாவளவன் உடற்றிய போரினால் மருத நில வளம் அழிதல்(240-245)
வெண்பூக் கரும்பொடு செந்நெல் நீடி, (240)

மா இதழ்க் குவளையொடு நெய்தலும் மயங்கி,
கராஅம் கலித்த கண் அகன் பொய்கை,
கொழுங்கால் புதவமொடு செருந்தி நீடிச்
செறுவும் வாவியும் மயங்கி, நீர் அற்று,
அறு கோட்டு இரலையொடு மான் பிணை உகளவும் (240-245)

பொருளுரை:

முன்பு வெள்ளை மலர்களையுடைய கரும்புடன் சிவப்பு நெல் வளர்ந்து, பெரிய இதழ்களையுடைய குவளை மலர்களுடன் நெய்தல் மலர்களும் கலந்து, முதலைகள் நிறைந்த பெரிய பொய்கைகளில், இப்பொழுது பருத்த தண்டையுடைய அறுகம் புல்லுடன் கோரையும் அடர்ந்து, வயலும் குளமும் கலங்கி நீர் இல்லாதுப் போய் விட்டது. அங்கு வரியுடைய கொம்புகளைக் கொண்ட ஆண் மான்களுடன் பெண் மான்கள் துள்ளி விளையாடுகின்றன.

சொற்பொருள்:

வெண்பூக் கரும்பொடு - வெள்ளை மலர்களையுடைய கரும்புடன், செந்நெல் - சிவப்பு நெல், நீடி - உயர்ந்து வளர்ந்து, மா இதழ்க் குவளையொடு - பெரிய இதழ்களையுடைய குவளை மலர்களுடன், நெய்தலும் மயங்கி - நெய்தல் மலர்களும் கலந்து, கராஅம் - முதலை, கலித்த - நிறைந்த, கண் அகன் பொய்கை - பெரிய குளம், கொழுங் கால் புதவமொடு - பருத்த தண்டையுடைய அறுகம் புல்லுடன், செருந்தி நீடி - கோரையும் அடர்ந்து, செறுவும் வாவியும் - வயலும் குளமும், மயங்கி - கலங்கி, நீர் அற்று - நீர் இன்றி, அறு கோட்டு இரலை - வரிகளையுடைய கொம்புகளையுடைய ஆண் மான்கள், அறுபட்ட கொம்புகளையுடைய ஆண் மான்கள், மான் பிணை உகளவும் - பெண் மான்கள் துள்ளி விளையாடும்

குறிப்பு:

அறு கோட்டு (245) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - அறுப்புடைய (வரியுடைய) கொம்பு, நற்றிணை 265 - H.வேங்கடராமன் உரை - உதிர்ந்த கொம்பினையுடைய, அகநானூறு 147, வேங்கடசாமி நாட்டார் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை - அறல்பட்ட கொம்பினையுடைய, அகநானூறு 353 - பொ. வே. சோமசுந்தரனார் உரை - அறுத்தாற்போன்ற கொம்பினையுடைய, வேங்கடசாமி நாட்டார் உரை - அறல்பட்ட கொம்பினையுடைய.

கந்துடைப் பொதியிலின் நிலை (246-251)
கொண்டி மகளிர் உண் துறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்,
மலர் அணி மெழுக்கம் ஏறிப் பலர் தொழ,
வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில்,
பரு நிலை நெடுந்தூண் ஒல்கத் தீண்டிப் (250)

பெரு நல் யானையொடு பிடி புணர்ந்து உறையவும் (246-251)

பொருளுரை:

பகைவர் நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட பெண்கள் நீர் உண்ணும் துறையில் மூழ்கி அந்தி நேரத்தில் கொளுத்திய அணையாத விளக்கையுடைய மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மெழுகின இடத்தில் ஏறி பலர் தொழ, புதியவர்கள் வந்து தங்கும், கடவுள் இருக்கும் கம்பங்களையுடைய மன்றங்களில், பருத்த நிலையையுடைய உயரமான தூண்கள் சாயும்படி உரசி, பெரிய நல்ல களிற்று யானைகளுடன் பெண் யானைகள் கூடித் தங்கவும்,

சொற்பொருள்:

கொண்டி மகளிர் - பகைவர் நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட பெண்கள், உண் துறை மூழ்கி - நீர் உண்ணும் துறையில் மூழ்கி, அந்தி மாட்டிய நந்தா விளக்கின் - அந்தி நேரத்தில் கொளுத்திய அணையாத விளக்கையுடைய, மலர் அணி மெழுக்கம் ஏறி - மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மெழுகின இடத்தில ஏறி, பலர் தொழ - பலர் தொழ, வம்பலர் சேக்கும் - புதியவர்கள் வந்து தங்கும், கந்துடைப் பொதியில் - கடவுள் இருக்கும் கம்பங்களையுடைய மன்றங்களில், பரு நிலை நெடுந்தூண் - பருத்த நிலையையுடைய உயரமான தூண், ஒல்க - சாய, தீண்டி - உரசி, பெரு நல் யானையொடு - பெரிய நல்ல களிற்று யானைகளுடன், பிடி புணர்ந்து உறையவும் - பெண் யானைகள் கூடித் தங்கவும்

குறிப்பு:

கொண்டி மகளிர் (246) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - பிறர் நாட்டிலிருந்து கொள்ளையிட்டுக் கொணர்ந்த பெண்டிர்.

விழா இன்றிக் கிடந்த பொது மன்றம் (252-260)
அரு விலை நறும் பூத் தூஉய்த் தெருவின்,
முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த
திரி புரி நரம்பின் தீந்தொடை ஓர்க்கும்
பெரு விழாக் கழிந்த பேஎம்முதிர் மன்றத்துச் (255)

சிறு பூ நெருஞ்சியோடு அறுகை பம்பி,
அழல்வாய் ஓரி அஞ்சு வரக் கதிப்பவும்,
அழு குரல் கூகையோடு ஆண்டலை விளப்பவும்,
கணங்கொள் கூளியொடு கதுப்பு இகுத்து அசைஇப்
பிணம் தின் யாக்கைப் பேய் மகள் துவன்றவும் (252- 260)

பொருளுரை:

அரிய விலையுடைய நறுமணமான மலர்களைத் தூவிய தெருவில் அறிவு வாய்ந்த கூத்தர்களின் முழவோடு இணைந்த முறுக்கப்பட்ட நரம்பை இனிமையாகக் கட்டிய யாழின் இசையைக் கேட்கும் பெரிய விழாக்கள் இல்லாது ஆகிய அச்சம் முதிர்ந்த மன்றத்தில், சிறிய மலர்களையுடைய நெருஞ்சிச் செடிகளுடன் அறுகம்புல் பரவியுள்ளது. கொடிய வாயையுடைய நரிகள் அச்சம் தோன்றும்படி ஊளையிடவும், குரலையுடைய கூகையுடன் ஆண்டலை என்ற ஆந்தையுடன் கூப்பிடவும், கூட்டமாக உள்ள ஆண் பேய்களுடன் கூந்தலை தொங்கவிட்டு ஆடும் பிணத்தை உண்ணும் யாக்கையை உடைய பெண் பேய்கள் நெருங்கவும்,

சொற்பொருள்:

அரு விலை நறும் பூ தூஉய் - அரிய விலையுடைய நறுமணமான மலர்களைத் தூவி, தெருவின் - தெருவில், முதுவாய் கோடியர் - அறிவு வாய்ந்த கூத்தர்கள், முழவொடு புணர்ந்த - முழவோடு இணைந்த, திரிபுரி நரம்பின் தீந்தொடை - முறுக்கப்பட்ட நரம்பை இனிமையாக கட்டிய யாழின் இசை, ஓர்க்கும் - கேட்கும், பெரு விழா - பெரிய விழா, கழிந்த - இல்லாது ஆகிய, பேஎம்முதிர் மன்றத்து - அச்சம் முதிர்ந்த மன்றத்தில், சிறு பூ நெருஞ்சியோடு - சிறிய மலர்களையுடைய நெருஞ்சிச் செடிகளுடன், அறுகை பம்பி - அறுகம்புல் பரவியுள்ளது, அழல்வாய் ஓரி - கொடிய வாயையுடைய நரிகள், அஞ்சுவர கதிர்ப்பவும் - அச்சம் தோன்றும்படி ஊளையிடவும், அழு குரல் கூகையோடு - அழுகின்ற குரலையுடைய கூகையுடன், ஆண்டலை விளிப்பவும் - ஆண்டலை என்ற ஆந்தை கூப்பிடவும், கணம் கொள் கூளியொடு - கூட்டமாக உள்ள ஆண் பேய்களுடன், கதுப்பு இகுத்து அசைஇ - கூந்தலை தொங்கவிட்டு ஆடி, பிணம் தின் யாக்கை பேய் மகள் - பிணத்தை உண்ணும் யாக்கையை உடைய பெண் பேய்கள், துவன்றவும் - நெருங்கவும்

குறிப்பு:

பதிற்றுப்பத்து 25 - நீ உடன்றோர் மன் எயில் தோட்டி வையா கடுங்கால் ஒற்றலின் சுடர் சிறந்து உருத்துப் பசும் பிசிர் ஒள் அழல் ஆடிய மருங்கின் ஆண்டலை வழங்கும் *கான் உணங்கு கடு நெறி* முனை அகன் பெரும் பாழ் ஆக, அழல்வாய் ஓரி (257) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - கூவிளியுடைய (அழுகின்ற) நரிகள், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை - கொடிய வாய்களையுடைய நரிகள். ஆண்டலை (258) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - கோட்டான், ஆந்தை என மருவி வழங்குவதுமது, நச்சினார்க்கினியர் - ஆண்டலைப்புள், அசைஇ (259) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - ஆடி, வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை - இருந்து.

செழு நகரின் சீர் குலைந்த தன்மை (261-269)
கொடுங்கால் மாடத்து நெடுங்கடை துவன்றி
விருந்து உண்டு ஆனாப் பெருஞ்சோற்று அட்டில்,
ஒண் சுவர் நல் இல் உயர் திணை இருந்து
பைங்கிளி மிழற்றும் பால் ஆர் செழு நகர்த்
தொடுதோல் அடியர் துடி படக் குழீஇக் (265)

கொடு வில் எயினர் கொள்ளை உண்ட
உணவு இல் வறுங்கூட்டு உள் அகத்து இருந்து,
வளைவாய்க் கூகை, நன்பகல் குழறவும்,
அருங்கடி வரைப்பின் ஊர் கவின் அழிய (261 - 269)

பொருளுரை:

வளைந்த தூண்களையுடைய மாடங்களில் விருந்தினர் சென்று நெருங்கி இருந்து விருந்து உண்டு இடைவெளி இல்லாத பெரிய சோற்றைச் சமைக்கும் அடுக்களையையும் ஒளியுடைய சுவரையுடைய நல்ல இல்லங்களின் உயர்ந்த திண்ணையின் மேல் இருந்து பச்சைக் கிளிகள் பேசும் பால் நிறைந்த வளமான ஊர், தோல் செருப்பைக் காலில் அணிந்த, துடி முழங்க திரண்டு வந்த வளைந்த வில்லையுடைய எயினர்கள் கொள்ளை கொண்டு உண்டதால், உணவு இல்லாத நெற்கூடுகளின் உள்ளே இருந்து வளைந்த வாயையுடைய கூகைகள் நன்பகலில் குழறவும், இவ்வாறு அரிய காவலையுடைய ஊர்களின் அழகு அழிய,

சொற்பொருள்:

கொடுங்கால் மாடத்து நெடுங்கடை - வளைந்த தூண்களையுடைய மாடங்களில், உருண்டை தூண்களையுடைய மாடங்களில், துவன்று விருந்துண்டு - நெருங்கி விருந்து உண்டு, ஆனாப் பெருஞ்சோற்று - இடைவெளி இல்லாத பெரிய சோற்றை, அட்டில் - அடுக்களை, ஒண் சுவர் நல் இல் - ஒளியுடைய சுவரையுடைய நல்ல இல்லங்களில், உயர் திணை இருந்து - உயர்ந்த திண்ணையின் மேல் இருந்து, பைங்கிளி மிழற்றும் - பச்சைக் கிளிகள் பேசும், பால் ஆர் செழு நகர் - பால் நிறைந்த வளமான ஊர், தொடுதோல் அடியர் - செருப்பைக் காலில் அணிந்தவர்கள், துடி பட முழங்க - துடி முழங்க, குழீஇ - திரண்டு, கொடு வில் எயினர் - வளைந்த வில்லையுடைய எயினர்கள், கொடிய வில்லையுடைய எயினர்கள், கொள்ளை உண்ட - கொள்ளை கொண்டு உண்ட, உணவு இல் வறுங்கூட்டு - உணவு இல்லாத நெற்கூடுகள், உள்ளகத்து இருந்து - உள்ளே இருந்து, வளைவாய்க் கூகை - வளைந்த வாயையுடைய கூகைகள், நன்பகல் குழறவும் - பகலில் குழறவும், அருங்கடி வரைப்பின் ஊர் கவின் அழிய - அரிய காவலையுடைய ஊர்களின் அழகு அழிய

குறிப்பு:

கொடுங்கால் (261) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - உருண்ட தூண்கள், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை - வளைந்த தூண்கள்.

திருமாவளவனின் கருதியது முடிக்கும் திறல் (270-273)
பெரும் பாழ் செய்தும் அமையான், மருங்கு அற (270)
மலை அகழ்க்குவனே, கடல் தூர்க்குவனே,
வான் வீழ்க்குவனே, வளி மாற்றுவன் எனத்
தான் முன்னிய துறை போகலின் (270- 273)

பொருளுரை:

பெரியதாகப் பாழாக்கியும் தணியாத அவன், “முழுவதும் இல்லையாகும்படி மலைகளைத் தோண்டுவான், கடலை மணலால் நிரப்புவான், வானத்தை விழச் செய்வான், காற்றின் திசையை மாற்றுவான்” என்று எல்லோரும் கூறும்படியாக, தான் எண்ணியபடி செய்து முடிப்பான்.

சொற்பொருள்:

பெரும் பாழ் செய்தும் அமையான் - பெரியதாக பாழாக்கியும் தணியாத வன், மருங்கு அற மலை அகழ்க்குவனே - முழுவதும் இல்லையாகும்படி மலைகளைத் தோண்டுவான், கடல் தூர்க்குவனே - கடலை நிரப்புவான் (மணலால்), வான் வீழ்க்குவனே - வானத்தை விழச் செய்வான், வளி மாற்றுவான் - காற்றின் திசையை மாற்றுவான், என - என்று எல்லோரும் கூறும்படியாக, தான் முன்னிய துறை போகலின் - தான் எண்ணியபடி செய்து முடிப்பவன் ஆதலின்

திருமாவளவனின் வெற்றிச் சிறப்பு (274-282)
பல் ஒளியர் பணிபு ஒடுங்க,
தொல் அருவாளர் தொழில் கேட்ப, (275)

வடவர் வாடக் குடவர் கூம்பத்
தென்னவன் திறல் கெடச் சீறி மன்னர்
மன் எயில் கதுவும் மதனுடை நோன் தாள்
மாத்தானை மற மொய்ம்பின்
செங்கண்ணால் செயிர்த்து நோக்கிப் (280)

புன் பொதுவர் வழி பொன்ற,
இருங்கோவேள் மருங்கு சாயக் (274- 282)

பொருளுரை:

ஒளி நாட்டார் பணிந்து ஒடுங்கவும், தொன்மையான அருவாள நாட்டு மன்னர்கள் வந்து பணிந்து அறிவுரைக் கேட்கவும், வடக்கில் உள்ள அரசர்கள் வாடவும், குட நாட்டு மன்னர் மகிழ்ச்சி குறையவும், ஆத்திரம் அடைந்து பகை மன்னர்களின் கோட்டைகளைக் கைப்பற்றவும், பாண்டிய மன்னனின் வலிமை கெடவும், செருக்கினையும் வலிமையையும் உடைய முயற்சி, பெரிய தானை, மறமுடைய வலிமை உடைமையால், சினத்தால் சிவந்த கண்களால் நோக்கி, புல்லிய முல்லை நிலத்தின் மன்னர்களின் வழிமுறை கெடவும், இருங்கோவேள் என்ற மன்னனின் சுற்றத்தார் கெடவும்,

சொற்பொருள்:

பல் ஒளியர் பணிபு ஒடுங்க - ஒளி நாட்டார் பணிந்து ஒடுங்க, தொல் அருவாளர் தொழில் கேட்ப - தொன்மையான அருவாள நாட்டு மன்னர்கள் வந்து அறிவுரைக் கேட்க, வடவர் வாட - வடக்கில் உள்ள அரசர்கள் வாட , குடவர் கூம்ப - குட நாட்டு மன்னர் மகிழ்ச்சி குறைய, சீறி மன்னர் மன் எயில் கதுவும் - ஆத்திரம் அடைந்து பகை மன்னர்களின் கோட்டைகளைக் கைப்பற்றவும், தென்னவன் திறல் கெட - பாண்டிய மன்னனின் வலிமை கெட, மதன் உடை நோன் தாள் - செருக்கினையும் வலிமையையும் உடைய முயற்சி, மாத் தானை - பெரிய தானை, மற - மறம், மொய்ம்பின் - வலிமையுடன், செங்கண்ணால் செயிர்த்து நோக்கி - சினத்தால் சிவந்த கண்களால் நோக்கி, புன் பொதுவர் வழி பொன்ற - புல்லிய முல்லை நிலத்தின் மன்னர்களின் வழிமுறை கெட, இருங்கோவேள் மருங்கு சாய - இருங்கோவேள் என்ற மன்னனின் சுற்றத்தார் கெட,

வளம் பெருக்கிய வளவன் (283-292)
காடு கொன்று நாடாக்கிக்
குளம் தொட்டு வளம் பெருக்கிப்
பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கிக் (285)

கோயிலொடு குடிநிறீஇ,
வாயிலொடு புழையமைத்து,
ஞாயில் தொறும் புதை நிறீஇப்
பொருவேம் எனப் பெயர் கொடுத்து,
ஒருவேம் எனப் புறக்கொடாது, (290)

திரு நிலைஇய பெரு மன் எயில்
மின் ஒளி எறிப்ப (283-292)

பொருளுரை:

காடாகிய இடங்களை அழித்து நாடாக்கி, குளங்களைத் தோண்டி, வளமையைப் பெருக்கி, பெரிய மாடங்களையுடைய உறந்தை நகரை விரிவுபடுத்தி, அரண்மனைகளுடன் குடிகளை நிறுவி, அரண்களில் பெரியதாகவும் சிறியதாகவும் வாயில்கள் அமைத்து, அரண்களின் ஏவல் அறைதோறும் அம்புக் கூட்டை நிறுவி, “போர் செய்வேன் நான்” என்று சூள் உரைத்து, “விட்டு அகலமாட்டேன்” என்று கூறி, புறமுதுகு இடாது இருந்தான் கரிகாலன். வீரத் திருமகள் நிலைத்த பெரிய நிலையான அவனது மதில் மின்னலைப் போன்று ஒளி வீச,

சொற்பொருள்:

காடு கொன்று நாடாக்கி - காடாகிய இடங்களை அழித்து நாடாக்கி, குளம் தொட்டு - குளங்களைத் தோண்டி, வளம் பெருக்கி - வளமையைப் பெருக்கி, பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கி - பெரிய மாடங்களையுடைய உறந்தை நகரை விரிவுபடுத்தி, கோயிலொடு குடிநிறீஇ - அரண்மனைகளுடன் குடிகளை நிறுவி, வாயிலொடு புழையமைத்து - அரண்களில் பெரியதாகவும் சிறியதாகவும் வாயில்கள் அமைத்து, ஞாயில் தொறும் - அரண்களின் ஏவல் அறைதோறும், புதை நிறீஇ - அம்புக் கூட்டை நிறுவி, பொருவேம் என பெயர் கொடுத்து - போர் செய்வேன் என்று சூள் உரைத்து, ஒருவேம் என - விட்டு அகலமாட்டேன் என்று கூறி, புறக்கொடாது - புறமுதுகு இடாது, திரு நிலைஇய - வீரத் திருமகள் நிலைத்த, செல்வம் நிலைத்த, பெரு மன் எயில் மின் ஒளி எறிப்ப - பெரிய நிலையான மதில் மின்னலைப் போன்று ஒளி வீச

குறிப்பு:

பெயர் கொடுத்து (289) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - வஞ்சினத்தால் தனக்கு ஒரு பெயர் பெறுதலின் வஞ்சினத்தைப் பெயர் என்றார்.

திருமாவளவனின் புற வாழ்வும் அக வாழ்வும் (292-299)
………………………..தன் ஒளி மழுங்கி
விசி பிணி முழவின் வேந்தர் சூடிய
பசு மணி பொருத பரு ஏர் எறுழ்க் கழல் கால்,
பொன் தொடிப் புதல்வர் ஓடி ஆடவும், 295

முற்று இழை மகளிர் முகிழ் முலை திளைப்பவும்,
நெஞ்சு சாந்து சிதைந்த மார்பின் ஒண் பூண்
அரிமா அன்ன அணங்கு உடைத் துப்பின்
திருமாவளவன்…………………….(292-299)

பொருளுரை:

தங்களின் மறம் குறைந்த, வார் இறுக்கமாகக் கட்டிய முழவினையுடைய வேந்தர்களின் பச்சை மணியையுடைய முடி, பருத்த அழகிய வீரக் கழலினைக் கட்டிய கரிகாலனின் கால்களைத் தொட, பொன்னால் செய்த தொடிகளை அணிந்த அவனது புதல்வர்கள் ஓடி ஆடி விளையாடவும், அணிகலன்களை அணிந்த அவனது மனைவிமாரின் மொட்டு போன்ற முலைகள் தொடுவதால் அவனது சிவந்த சந்தனம் அழிந்த மார்பில் உள்ள ஒளியுடைய அணிகலன்களுடன் சிங்கத்தைப் போன்ற வலிமையுடன் கூடிய

சொற்பொருள்:

தன் ஒளி மழுங்கி - தங்களின் ஒளி குறைந்து, விசி பிணி முழவின் வேந்தர் - வார் இறுக்கமாக கட்டிய முழவினையுடைய வேந்தர்கள், சூடிய - அணிந்த, பசு மணி பொருத - முடியில் சூடிய பச்சை மணிகள் தொட, பருஏர் எறுழ்க் கழல் கால் - பருத்த அழகிய வீராக கழலினைக் கட்டிய கால்கள், பொன் தொடிப் புதல்வர் - பொன்னால் செய்த தொடிகளை அணிந்த புதல்வர்கள், ஓடி ஆடவும் - ஓடவும் ஆடவும், முற்று இழை மகளிர் முகிழ் முலை திளைப்பவும்- அணிகலன்களை அணிந்த பெண்கள் மொட்டுப் போன்ற முலைகள் தொடவும், செஞ்சாந்து சிதைந்த மார்பின் - சிவந்த சந்தனம் அழிந்த மார்பு, ஒண் பூண் - ஒளியுடைய அணிகலன்கள், அரிமா அன்ன அணங்குடை துப்பின் - சிங்கத்தைப் போன்ற வலிமையுடன்

குறிப்பு:

வேந்தர் சூடிய பசு மணி பொருத (293-294) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - பகை மன்னர் அஞ்சி வந்து அடி வீழ்ந்து வணங்குதலானே அவர் முடியிற்சூடிய பசுமணி உரிஞ்சப்பெற்ற (உராயப்பெற்ற). பொருதல் என்பதற்கு இசைத்தல் சேர்த்தல் எனப் பொருள்கொண்டு பகை வேந்தர் சூடிய முடிமணியால் இயற்றிய கழல் எனவும் மிகப் பொருந்தும்.

தலைவன் தலைவியைப் பிரியாமைக்கான காரணங்கள் (299-301)
திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கிய
வேலினும் வெய்ய கானம், அவன் (300)
கோலினும் தண்ணிய, தட மென் தோளே. (299- 301)

பொருளுரை:

கரிகாலன் பகைவர்மேல் உயர்த்திய வேலைக் காட்டிலும் கொடியது காடு. அவனது செங்கோலைவிட, குளிர்ச்சியானவை என் தலைவியின் பெரிய மெல்லிய தோள்கள்.

சொற்பொருள்:

திருமாவளவன் - கரிகாலன், தெவ்வர்க்கு - பகைவர்களுக்கு, ஓக்கிய வேலினும் - உயர்த்திய வேலைக் காட்டிலும், வெய்ய - கொடிய , கானம் - காடு, அவன் கோலினும் - அவனது செங்கோலைவிட, தண்ணிய - குளிர்ச்சியானவை, தட மென் தோளே - என் தலைவியின் பெரிய மெல்லிய தோள்கள்

முற்றிற்று
தனிப் பாடல்

இது பிற்காலத்தில் பாடிச் சேர்க்கப்பட்ட வெண்பா.

முச் சக்கரமும் அளப்பதற்கு நீட்டிய கால்
இச் சக்கரமே அளந்ததால் - செய்ச் செய்
அரிகால்மேல் தேன் தொடுக்கும் ஆய், புனல் நீர்நாடன்
கரிகாலன் கால் நெருப்பு உற்று

பொருளுரை:

இது பிற்காலத்தில் பாடிச் சேர்க்கப்பட்ட வெண்பா. காவிரியின் தூய புனல்நீர் பாயும் வயல்களில் நெல் அறுவடைக்குப் பின் வளரும் தாளடி நெற்பயிர் தேன் கூடுகட்டும் அளவுக்குச் செழிப்பாக வளரும். கரிகாலன் அந்நாட்டின் அரசன். அந்தக் கரிகாலன் காலில் நெருப்புப் பட்டது. என்றாலும் அவனது ஆட்சிச் சக்கரக் கால் நிலப்பரப்பை யெல்லாம் அளந்தது. ஞாயிறு, திங்கள், தீ என்பன 3 சக்கரங்கள். இவை முறையே சோழனையும், பாண்டியனையும், சேரனையும் குறிப்பன. கரிகாலன் மூவேந்தரையும் வென்று தன் ஆளுகைக்கு உட்படுத்தினான் எனபது இப்பாடலில் நயமாகக் கூறப்பட்டுள்ளது. ஞாயிறு - வெம்மை தரும் தீ. திங்கள் - தண்மை தரும் தீ. இவை விண்ணில் உள்ள தீ தீ - செம்மை தரும் தீ. மண்ணில் உள்ள தீ. இந்த 3 சக்கரங்களையும் அளந்து பார்க்க உதவும் அலகாக (அளவுகோலாக) உதவுவது ‘கால்’ என்னும் காற்று. இந்த அறிவியல் உண்மையைத் தெளிவுபடுத்தும் தொடர்தான் ‘முச்சக்கரமும் அளப்பதற்கு நீட்டிய கால்’ என்பது. திருமால் தன் காலால் 3 தப்படி வைத்து 3 உலகங்களையும் அளந்தான் என்பது இவ்வுண்மையைத் தெளிவுபடுத்தும் தத்துவக் கதை. இவ்வுண்மையை உணர்ந்த அறிவன் ஒருவன் மாவலி மன்னனிடம் மண் கொண்ட கதையை உருவாக்கி ‘மறை’ பொருளாக உரைத்துள்ளான்.