நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

நெடுநல்வாடை - பத்துப்பாட்டு

பாடியவர் :- மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்
பாடப்பட்டவன் :- தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
திணை :- வாகை திணை
துறை :- கூதிர்ப்பாசறை
பாவகை :- அகவல்பா (ஆசிரியப்பா)
மொத்த அடிகள் :- 188

நெடுநல்வாடை - பத்துப்பாட்டு

பாடியவர் :- மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்
பாடப்பட்டவன் :- தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
திணை :- வாகை திணை
துறை :- கூதிர்ப்பாசறை
பாவகை :- அகவல்பா (ஆசிரியப்பா)
மொத்த அடிகள் :- 188
பாண்டிய மன்னன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மதுரையைச் சேர்ந்த நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டதே நெடுநல்வாடை என்னும் நூல். இது சங்கத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும். நூலுள் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட (நெடு) வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற தலைவனுக்கு இது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.

இது ஒரு புறப்பொருள் நூலாகக் கொள்ளப்படினும் இதில் பெருமளவு அகப்பொருள் அம்சங்கள் பொதிந்துள்ளன. இந் நூல் அகப் பொருளையே பேசினாலும் புறப்பொருள் நூல்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக தமிழ்ப் புலவர்(கள்) தம் அகப் பாடல்களில் தலைவன் தலைவி ஆகியோரின் அடையாளத்தை வெளிப்படுத்தாத கண்ணியத்தைக் காத்து வந்தனர். புறவாழ்வை அனைவருக்கும் கூறலாம். அகவாழ்வை அகிலமே அறியச்செய்வது அறிவுடைமை அன்று என்பது அவர்தம் அறிவுமுடிவாய் இருந்திருக்கிறது. ஆனால் நெடுநல்வாடையில் பாண்டியனின் அடையாளச் சின்னமாகிய வேம்பு நக்கீரரால் சுட்டப்பட்டுள்ளது. ஆகவே தான் தலைவன் பாண்டிய மன்னனாய்க் கொள்ளப்பட்டான். இந்நூலும் புறப் பொருள் நூலாயிற்று.

மழை பொழிதல் (1-2)
வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ,
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென . . . .[1 - 2]

பொருளுரை:

உலகம் குளிரும்படி வலது புறமாக எழுந்து வளைந்துத் தவறாதுப் பொழியும் மேகம் புது மழையைப் பொழிந்தது.

குறிப்பு:

வலன் (1) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - வலப்பக்கம். மழையும் காற்றும் வலஞ்சூழுமாயின் அவை மிகும் என்ப. வலன் ஏர்பு - அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1, மதுரைக்காஞ்சி 5 - வல மாதிரத்தான் வளி கொட்ப.

சொற்பொருள்:

வையகம் பனிப்ப - உலகம் குளிருமாறு, வலன் ஏர்பு - வலதுப் புறமாக எழுந்து, வளைஇ - வளைந்து (சொல்லிசை அளபெடை), பொய்யா வானம் - பொய்யக்காத மேகம், புதுப்பெயல் பொழிந்தென - புது மழையைப் பொழிந்தது

இடையர் நிலை (3-8)
ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்,
ஏறுடை இன நிரை வேறு புலம் பரப்பிப்
புலம் பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல் . . . .[5]

நீடு இதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ,
மெய்க்கொள் பெரும் பனி நலியப் பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க . . . .[3 - 8]

பொருளுரை:

வெள்ளத்தை வெறுத்த கொடிய கோலையுடைய இடையர்கள் ஏற்றையுடைய நிரைகளை (பசு, எருமை, ஆடு) வேறு நிலங்களில் மேய விட்டு, நிலத்தைவிட்டு நீங்கிய தனிமையால் கலங்கி, நீண்ட இதழ்களையுடைய வெண்காந்தள் மலர்க் கண்ணிகளிலிருந்து நீர் அலைத்ததால் உடம்பில் கொண்ட பெரும் குளிர்ச்சிக்கு வருந்தி, பலருடன் சேர்ந்து கையை நெருப்பிலே காய்த்தவர்கள் தங்கள் கையால் தங்களுடைய கன்னத்தைத் தட்டி நடுங்க,

குறிப்பு:

கொடுங்கோல் - பொ. வே. சோமசுந்தரனார் உரை - அகநானூறு 17, அகநானூறு 74, அகநானூறு 195 - வளைந்த கோல், நெடுநல்வாடை 3, முல்லைப்பாட்டு 15 - கொடிய கோல், வேங்கடசாமி நாட்டார் உரை - அகநானூறு 74, அகநானூறு 195 - வளைந்த கோல், அகநானூறு 17 - கொடிய கோல், நச்சினார்க்கினியர் உரை - முல்லைப்பாட்டு 15 - கொடிய கோல். கொடுங்கோல் (3) - பொ. வே. சோமசுந்தரனார் உரை- ஆ முதலியவற்றை அலைந்து அச்சுறுத்தும் கோலாகலான் கொடுங்கோல். இனி வளைந்த கோல் எனினுமாம். கோவன் நிரைகட்கு உணவாகிய தழைகளை வளைத்து முறித்தல் பொருட்டு தலை வளைந்த கோல். கைக்கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க (8) - நச்சினார்க்கினியர் உரை - கையை நெருப்பிலே காய்த்து அதிற்கொண்ட வெம்மையை கவுளிலே அடுத்தலிற் கைக்கொள் கொள்ளியர் என்றார், கையிடத்தே கொண்ட நெருப்பினை உடையவராய் பற்பறை கொட்டி நடுங்கி நிற்ப.

சொற்பொருள்:

ஆர்கலி முனைஇய - வெள்ளத்தை வெறுத்த (முனைஇய - சொல்லிசை அளபெடை), கொடுங்கோல் கோவலர் - கொடிய கோலையுடைய கோவலர், வளைந்த கோலையுடைய இடையர்கள், ஏறுடை (ஏறு = ஆண்) இன நிரை வேறு புலம் பரப்பி - ஏற்றையுடைய நிரைகளை (பசு, எருமை, ஆடு) வேறு நிலங்களில் பரப்பி, புலம் பெயர் புலம்பொடு - நிலத்தைவிட்டு நீங்கிய தனிமையால், நிலத்தைவிட்டு நீங்கிய வருத்தத்தால், கலங்கி - கலங்கி, கோடல் நீடு இதழ்க் கண்ணி - நீண்ட இதழ்களையுடைய வெண்காந்தள் மலர்க் கண்ணி, நீரலைக் கலாவ - நீர் அலைத்ததால், மெய்க்கொள் பெரும் பனி நலிய - உடம்பில் கொண்ட பெரும் குளிர்ச்சிக்கு வருந்தி, பலருடன் - பலருடன், கைக்கொள் கொள்ளியர் - கையை நெருப்பிலே காய்த்தவர்கள், கவுள் புடையூஉ நடுங்க - கன்னம் புடைத்து நடுங்க (புடையூஉ - இன்னிசை அளபெடை), பற்பறை கொட்டி நடுங்க

கூதிர்க்காலத்தின் தன்மை (9-12)
மா மேயல் மறப்ப, மந்தி கூர,
பறவை படிவன வீழக் கறவை . . . .[10]

கன்று கோள் ஒழியக் கடிய வீசி,
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள் . . . .[9 - 12]

பொருளுரை:

விலங்குகள் மேய்தலை மறந்தன. பெண் குரங்குகள் மிகுந்த குளிர்ச்சியை அடைந்தன. பறவைகள் மரங்களிலிருந்து விழுந்தன. பாலுண்ணலை விடும்படி சினத்தால் பசுக்கள் தங்கள் கன்றுகளை உதைத்து தவிர்த்தன. மலையைக் குளிர்ப்பதுப் போல் குளிர்ச்சியாக இருந்தது நடு இரவு.

குறிப்பு:

மந்தி கூர (9) - நச்சினார்க்கினியர் உரை - குரங்கு குளிர்ச்சி மிக. குரங்கு குன்னாக்க (குனிய) என்பாரும் உளர்.

சொற்பொருள்:

மா மேயல் மறப்ப - விலங்குகள் மேய்தலை மறக்க, மந்தி கூர - பெண் குரங்குகள் மிகுந்த குளிர்ச்சி அடைய, பெண் குரங்குகள் கூன, பறவை படிவன வீழ - பறவைகள் மரங்களிலிருந்து விழ, கறவை கன்று கோள் ஒழியக் கடிய வீசி - பாலுண்ணலை விடும்படி சினத்தால் பசுக்கள் தங்கள் கன்றுகளை உதைத்து தவிர்க்க, குன்று குளிர்ப்பன்ன - மலையைக் குளிர்ப்பது போல், கூதிர்ப் பானாள் - குளிர்ந்த நடு இரவு

மழைக்காலச் செழிப்பு (13-28)
புன் கொடி முசுண்டைப் பொதிப்புற வான்பூப்
பொன் போல் பீரமொடு புதல் புதல் மலரப்
பைங்கால் கொக்கின் மென்பறைத் தொழுதி . . . .[15]

இருங்களி பரந்த ஈர வெண்மணல்
செவ்வரி நாரையொடு எவ்வாயும் கவரக்
கயல் அறல் எதிரக் கடும் புனல் சாஅய்ப்
பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை
அகல் இரு விசும்பில் துவலை கற்ப, . . . .[20]

அங்கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த
வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க,
முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின்
கொழு மடல் அவிழ்ந்த குழூஉக்கொள் பெருங்குலை
நுண் நீர் தெவிள வீங்கிப் புடை திரண்டு . . . .[25]

தெண் நீர் பசுங்காய் சேறு கொள முற்ற,
நளி கொள் சிமைய விரவு மலர் வியன் காக்
குளிர் கொள் சினைய குரூஉத் துளி தூங்க . . . .[13 - 28]

பொருளுரை:

மென்மையான கொடியையுடைய முசுண்டையின் திரண்ட புறத்தையுடைய வெள்ளை மலர்கள் பொன்னைப் போன்ற பீர்க்கை மலர்களுடன் புதர்கள்தோறும் மலர, பச்சைக் கால்களையுடைய கொக்கின் மென்மையான இறகுகளையுடைய கூட்டம் கரிய சேறு பரந்த ஈர வெள்ளை மணலில் சிகப்பு வரியினையுடைய நாரையுடன் எவ்விடத்திலும் நீரின் ஓட்டத்திற்கு எதிராக நீந்தும் கயல் மீன்களைப் பிடித்துத் தின்பதற்காகக் காத்து நிற்க, மிக்க நீரைப் பொழிந்து தங்களுடைய மழை பெய்யும் தன்மை கெட்டதால் எழுந்து பொங்கும் வெள்ளை மேகங்கள் அகன்ற பெரிய வானில் துளிகள் தூவுதற்குப் புதிதாக கற்க, அங்கே அகன்ற வயலில் மிகுந்த மழையினால் வளப்பமான இலைகளையுடைய நெல்லின் முதிர்ந்த கதிர் முற்றி வளைய, பெரிய அடியையுடைய கமுக மரங்களின் நீலமணியை ஒத்தக் கழுத்தில் பருத்த பாளை விரிந்து திரட்சியைக் கொண்ட பெரிய குலைகள் நுண் நீருடன் திரண்டு விளங்கி பக்கங்கள் திரண்டு தெளிந்த நீரினைக் கொண்ட பசுமையான காய்கள் இனிமை கொள்ளும்படி முற்ற, அடர்ந்த மலை உச்சியில் கலந்த மலர்களையுடைய பெரிய சோலையின் குளிர்ந்த மரக்கிளைகளில் நிறத்தையுடைய நீர்த் துளிகள் தொங்க,

குறிப்பு:

துவலை கற்ப (20) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - முகில்கள் தம்பால் மிக்குள்ள நீரைப் போற்றாமல் மிக்குப் பெய்து விட்டுப் பின்னர் பின்னர் நீர் வறண்ட வெண் மேகமாகி இன்னும் மிக்குப் பெய்தல் தவறு என்று அறிந்தனவாய் இனியேனும் சிறிதாகப் பெய்து பழகுவோம் எனக் கருதி அங்ஙனம் பெய்ததற்குப் பயிலுமாறுப் போலத் தூவ என்று ஒரு பொருள் தோன்றக் கற்ப என்றார். ஐங்குறுநூறு 461 - வான் பிசிர்க் கருவியின் பிடவு முகை தகையக் கான் பிசிர் கற்பக் கார் தொடங்கின்றே. மதுரைக்காஞ்சி 400 - தகை செய் தீம் சேற்று இன் நீர்ப் பசுங்காய். நாரை, குரூஉ (28) - நிறம், ‘குருவும் கெழுவும் நிறமாகும்மே’ (தொல்காப்பியம், உரியியல் 5).

சொற்பொருள்:

புன் கொடி முசுண்டை - மென்மையான கொடியையுடைய முசுண்டை, பொதிப்புற வான் பூ - திரண்ட புறத்தையுடைய வெள்ளை மலர்கள், பொன் போல் பீரமொடு - பொன்னைப் போன்ற பீர்க்கை மலர்களுடன், புதல் புதல் மலர - புதர்கள்தோறும் மலர, பைங்கால் கொக்கின் - பச்சைக் கால்களையுடைய கொக்கின், மென் பறைத் தொழுதி - மென்மையான இறகுகளையுடைய கூட்டம், இருங்களி - கரிய சேறு, பரந்த - பரந்த, ஈர வெண்மணல் - ஈர வெள்ளை மணல், செவ்வரி நாரையொடு - சிகப்பு வரியினையுடைய நாரையுடன், எவ்வாயும் கவர - எவ்விடத்திலும் கவர, கயல் அறல் எதிர - கயல் மீன்கள் நீரோட்டத்திற்கு எதிராக நீந்த, கடும் புனல் சாஅய் - மிக்க நீரைப் பொழிந்து குறைய (சாஅய் - இசை நிறை அளபெடை), பெயல் உலர்ந்து - மழை பெய்யும் தன்மைக் கெட்டு, எழுந்த - எழுந்த, பொங்கல் வெண் மழை - பொங்கும் வெள்ளை மேகங்கள், அகல் இரு விசும்பில் - அகன்ற பெரிய வானில், துவலை - துளிகள், கற்ப - கற்க, அங்கண் - அங்கே, அகன் வயல் - அகன்ற வயல், ஆர் பெயல் - மிகுந்த மழை, கலித்து - மிகுந்து, தழைத்து, எழுந்து, வண் தோட்டு நெல்லின் - வளப்பமான இலைகளையுடைய நெல்லின், வரு கதிர் வணங்க - வளர்ந்த கதிர் முற்றி வளைய, முழு முதற் கமுகின் - பெரிய அடியையுடைய கமுக மரங்களின், மணி உறழ் - நீலமணியை ஒத்த, எருத்தின் - கழுத்தில், கொழு மடல் - பருத்த இலைகள், அவிழ்ந்த - பாளை அவிழ்ந்த, குழூஉக் கொள் பெருங்குலை - திரட்சியைக் கொண்ட பெரிய குலைகள், நுண் நீர் - நுண் நீர், தெவிள வீங்கி - திரண்டு விளங்கி, புடை திரண்டு - பக்கங்கள் திரண்டு, தெண் நீர் - தெளிந்த நீர், பசுங்காய் - பசுமையான காய்கள், சேறு கொள முற்ற - இனிமைக் கொள்ளும்படி முற்ற, நளி கொள் - அடர்ந்த, சிமைய - மலை உச்சியில், விரவு மலர் - கலந்த மலர்கள், வியன் கா- பெரிய சோலை, குளிர் கொள் சினைய - குளிர்ந்த மரக்கிளைகளில், குரூஉத் துளி - நிறத்தையுடைய துளிகள், தூங்க - தொங்க

தெருக்களில் திரியும் மக்கள் (29-35)
மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்
ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருவில், . . . .[30]

படலைக் கண்ணி பரு ஏர் எறுழ் திணி தோள்
முடலை யாக்கை முழு வலி மாக்கள்
வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து
துவலைத் தண் துளி பேணார், பகல் இறந்து
இரு கோட்டு அறுவையர் வேண்டுவயின் திரிதர, . . . .[29 - 35]

பொருளுரை:

உயர்ந்த மாடங்களையுடைய வளப்பமான பழைய ஊரில் உள்ள ஆறு கிடந்தாற்போல் இருந்த அகன்ற நீண்ட தெருவில், தழைக் கலந்த மாலையை அணிந்த பருமனான அழகான தோள்களையும் இறுக்கமான உடலையும் உடைய வலிமையான ஆண்கள், வண்டுகள் மொய்க்கும் கள்ளைக் குடித்து, மிகவும் மகிழ்ந்து, நீர்த் துவலையின் குளிர்ந்த துளியைப் பொருட்படுத்தாது பகல் கழிந்த பொழுதிலும், முன்னும் பின்னுமாகத் தொங்கும் ஆடையை அணிந்த அவர்கள், தங்களுக்கு வேண்டிய இடத்தில் திரிய,

குறிப்பு:

இரு கோட்டு அறுவையர் (35) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - முன்னும் பின்னும் தொங்கலாக நாலவிட்ட துகிலினை உடையராய். இரண்டு விளிம்பிலும் கரையமைந்த ஆடை எனினுமாம்.

சொற்பொருள்:

மாடம் ஓங்கிய மல்லல் மூதூர் - உயர்ந்த மாடங்களையுடைய வளப்பமான பழைய ஊர், ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருவில் - ஆறு கிடந்தாற்போல் இருந்த அகன்ற நீண்ட தெருவில், படலைக் கண்ணி - தழை மாலை, பரு - பருத்த, ஏர் - அழகிய, எறுழ் - வலிமை, திணி தோள் - உறுதியான தோள், முடலை யாக்கை - இறுக்கமான உடல், முழு வலி மாக்கள் - மிகுந்த வலிமையுடைய மக்கள், வண்டு மூசு தேறல் மாந்தி - வண்டுகள் மொய்க்கும் கள்ளைக் குடித்து, மகிழ் சிறந்து - மிகவும் மகிழ்ந்து, துவலைத் தண் துளி - நீர்த் துவலையின் குளிர்ந்த துளிகள், பேணார் - பொருட்படுத்தாதவர்கள், பகல் இறந்து - பகல் கழிந்து, இரு கோட்டு அறுவையர் - முன்னும் பின்னுமாகத் தொங்கும் ஆடையை அணிந்தவர்கள், வேண்டுவயின் இடம் திரிதர - வேண்டிய இடத்தில் திரிய

கடவுளை வழிபடும் பெண்கள் (36-44)
வெள்ளி வள்ளி வீங்கு இறைப் பணைத்தோள்,
மெத்தென் சாயல் முத்து உறழ் முறுவல்,
பூங்குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழைக்கண்
மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து . . . .[40]

அவ்விதழ் அவிழ் பதம் கமழப் பொழுது அறிந்து
இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ,
நெல்லும் மலரும் தூஉய், கைதொழுது,
மல்லல் ஆவணம் மாலை அயர . . . .[36 - 44]

பொருளுரை:

வெள்ளைச் சங்கு வளையல்களையும், இறுகின முன்கையையும், மூங்கில் போலும் தோளையும், மென்மையான சாயலையும், முத்தைப் போன்ற பற்களையும், அழகிய காதணிக்கு ஒப்ப உயர்ந்த அழகிய ஈரக்கண்களையும் மடப்பத்தையும் உடைய பெண்கள், பூந்தட்டிலே இட்டு வைத்த மலரும் பருவம் அமைந்த பச்சைக் காம்பைக் கொண்ட பிச்சி மலர்களின் அழகிய இதழ்கள் மலர்ந்து நறுமணம் கமழ, நேரத்தை அறிந்து, இரும்பினால் செய்த விளக்கின் எண்ணையைக் கொண்ட திரியைக் கொளுத்தி, நெல்லும் மலரும் தூவி, கையால் தொழுது, வளப்பமான கடைவீதியில், மாலை நேரத்தில் கொண்டாட,

குறிப்பு:

நெல்லும் மலரும்: நெடுநல்வாடை 43 - நெல்லும் மலரும் தூஉய்க்கை தொழுது, முல்லைப்பாட்டு 8-10 - நெல்லொடு நாழி கொண்ட நறு வீ முல்லை அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது, புறநானூறு 280 - நெல் நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும் செம்முது பெண்டின் சொல்லும். முத்தைப் போன்ற பற்கள்: அகநானூறு 27 - முத்தின் அன்ன நகைப் பொலிந்து இலங்கும் எயிறு, ஐங்குறுநூறு 185 - இலங்கு முத்து உறைக்கும் எயிறு, ஐங்குறுநூறு 380 - முத்து ஏர் வெண் பல், கலித்தொகை 64 - முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 93 - முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 97 - முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 97 - முத்து ஏய்க்கும் வெண் பல், கலித்தொகை 131 - முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய், பரிபாடல் 8 - எழில் முத்து ஏய்க்கும் வெண்பல், பரிபாடல் திரட்டு 2 - முத்த முறுவல், பொருநராற்றுப்படை 27 - துவர் வாய்ப் பல உறு முத்தின் பழி தீர் வெண்பல், சிறுபாணாற்றுப்படை 57 - நகாஅர் அன்ன நளி நீர் முத்தம், நெடுநல்வாடை 37 - முத்து உறழ் முறுவல்.

சொற்பொருள்:

வெள்ளி வள்ளி - வெள்ளை வளையல்கள், வீங்கு இறை - இறுகின முன்கை, பணைத்தோள் - மூங்கில் போலும் தோள், மெத்தென் சாயல் - மென்மையான சாயல், முத்து உறழ் முறுவல் - முத்தைப் போன்ற பற்கள் (உறழ் - உவம உருபு), பூங்குழைக்கு அமர்ந்த - சிறப்பான காதணிக்கு ஒப்ப, ஏந்து எழில் மழைக்கண் - உயர்ந்த அழகிய ஈரக்கண்கள், மடவரல் மகளிர் - மடப்பத்தை உடைய பெண்கள், பிடகைப் பெய்த - பூந்தட்டிலே இட்டு வைத்த, செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து - மலரும் பருவம் அமைந்த பச்சைக் காம்பைக் கொண்ட பிச்சி மலர்களின், அவ்விதழ் அவிழ் பதம் - அழகிய இதழ்கள் மலரும் பதம், கமழ - நறுமணம் கமழ, பொழுது அறிந்து - நேரத்தை அறிந்து, இரும்பு செய் விளக்கின் ஈந்திரி கொளீஇ - இரும்பினால் செய்த விளக்கின் எண்ணையைக் கொண்ட திரியைக் கொளுத்தி (கொளீஇ - சொல்லிசை அளபெடை), நெல்லும் மலரும் தூஉய் - நெல்லும் மலரும் தூவி (தூஉய் - இன்னிசை அளபெடை), கைதொழுது - கையால் தொழுது, மல்லல் ஆவணம் - வளப்பமான கடைவீதி, மாலை - மாலை நேரம், அயர - கொண்டாட

புறாவின் நிலை (45-52)
மனை உறை புறவின் செங்கால் சேவல் . . . .[45]

இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது,
இரவும் பகலும் மயங்கி கையற்று,
மதலைப் பள்ளி மாறுவன இருப்ப,
கடியுடை வியல் நகர்ச் சிறு குறுந் தொழுவர்
கொள் உறழ் நறுங்கல் பலகூட்டு மறுக, . . . .[50]

வடவர் தந்த வான் கேழ் வட்டம்
தென் புல மருங்கில் சாந்தொடு துறப்பக் . . . .[45 - 52]

பொருளுரை:

இல்லத்தில் வாழும் புறாவின் சிவப்புக் காலையுடைய ஆண் புறா தன்னுடைய இன்பம் நுகரும் பெண் புறாவுடன் ஊர் மன்றத்திற்குச் சென்று இரையைத் தேடித் தின்னாமல் இரவையும் பகலையும் அறியாமல் மயங்கி, செயலற்று, வீட்டின் வெளிப்பகுதியில் உள்ள கூரையின் அடியில் உள்ள பலகையில் கால்களை மாற்றி மாற்றி வைத்து இருக்க, காவலுடைய பெரிய மனைகளில் சிறு பணிகளைச் செய்யும் பணியாளர்கள் கொள்ளின் நிறத்தை ஒத்த நறுமணப்பொருட்கள் அரைக்கும் கல்லில் சந்தனம், கத்தூரி போன்ற நறுமணமான பொருட்களை அரைக்க, வடநாட்டினர் தந்த வெள்ளை நிறத்தையுடைய வட்டக் கல் தென்திசையின் சந்தனத்துடன் பயன்படாமல் கிடக்க,

குறிப்பு:

அகநானூறு 340 - வடவர் தந்த வான் கேழ் வட்டம் குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய வண்டு இமிர் நறும் சாந்து. மதலைப் பள்ளி மாறுவன இருப்ப (47) - நச்சினார்க்கினியர் உரை - கொடுங்கையைத் தாங்குதலுடைய பலகைகளிலே பறவாதிருந்து கடுத்த கால் ஆறும்படி மாறி மாறி இருக்க. (கொடுங்கை = வீட்டின் வெளிப்புறத்தில் கூரைக்கு அடியில் உள்ள நீண்டு உறுப்புகள்).

சொற்பொருள்:

மனை உறை புறவின் செங்கால் சேவல் - இல்லத்தில் வாழும் புறாவின் சிவப்புக் காலையுடைய ஆண் புறா, இன்புறு பெடையொடு - தன்னுடைய இன்பம் நுகரும் பெண் புறாவுடன், மன்று தேர்ந்து உண்ணாது - ஊர் மன்றத்திற்குச் சென்று இரையைத் தேடித் தின்னாமல், இரவும் பகலும் மயங்கி - இரவையும் பகலையும் அறியாமல் மயங்கி, கையற்று - செயலற்று, மதலைப் பள்ளி - வீட்டின் வெளிப்பகுதியில் உள்ள கூரையின் அடியில் உள்ள பலகை, மாறுவன இருப்ப - கால்களை மாற்றி மாற்றி வைத்து இருக்க, கடியுடை வியல் நகர் - காவலுடைய பெரிய மனைகள், சிறு குறுந்தொழுவர்- சிறு பணிகளைச் செய்யும் பணியாளர்கள், கொள் உறழ் நறுங்கல் - கொள்ளின் நிறத்தை ஒத்த நறுமணப்பொருட்கள் அரைக்கும் கல், பல் கூட்டு மறுக - நறுமணமான பொருட்களை அரைக்க, வடவர் தந்த வான் கேழ் வட்டம் - வடநாட்டினர் தந்த, தென் புல மருங்கில் - தென்திசையில் இருந்த, சாந்தொடு துறப்ப - சந்தனத்துடன் பயன்படாமல் கிடக்க

மகளிர் நிலை (53-56)
கூந்தல் மகளிர் கோதை புனையார்,
பல் இருங் கூந்தல் சில் மலர் பெய்ம்மார்,
தண் நறுந் தகர முளரி நெருப்பு அமைத்து . . . .[55]

இருங்காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்பக் . . . .[53 - 56]

பொருளுரை:

பெண்கள் தங்கள் கூந்தலில் மலர்ச்சரங்களை அணியவில்லை. அடர்ந்த கருமையானக் கூந்தலில் ஒரு சில மலர்களை மட்டுமே அணிந்தனர். தகர மரத்தின் நறுமணமான துண்டுகளை நெருப்பில் எரித்து அதில் கரிய அடர்ந்த (வைரம் பாய்ந்த) அகில் மரத்துண்டுகளுடன் வெள்ளை கண்ட சருக்கரையைச் சேர்த்துப் புகைத்தனர்.

சொற்பொருள்:

கூந்தல் மகளிர் கோதை புனையார் - பெண்கள் தங்கள் கூந்தலில் மலர்ச்சரங்களை அணியவில்லை, பல் இருங் கூந்தல் சில் மலர் பெய்ம்மார் - அடர்ந்த கருமையான கூந்தலில் ஒரு சில மலர்களை மட்டுமே அணிந்தனர், தண் நறும் தகர முளரி நெருப்பு அமைத்து - தகரம் என்ற மரத்தின் நறுமணமான துண்டுகளை நெருப்பில் எரித்து, நறுமண மரவகை, இருங்காழ் அகிலொடு - கரிய அடர்ந்த (வைரம் பாய்ந்த) அகிலுடன், வெள் அயிர் புகைப்ப - வெள்ளை கண்ட சருக்கரையைப் புகைப்ப

விசிறியும் சாளரமும் (57-63)
கை வல் கம்மியன் கவின் பெறப் புனைந்த
செங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந் தறிச்
சிலம்பி வான் நூல் வலந்தன தூங்க,
வான் உற நிவந்த மேனிலை மருங்கின் . . . .[60]

வேனில் பள்ளித் தென் வளி தரூஉம்
நேர் வாய்க் கட்டளை திரியாது, திண் நிலைப்
போர் வாய் கதவம் தாழொடு துறப்பக் . . . .[57 - 63]

பொருளுரை:

கைத்தொழிலில் வல்லவன் அழகாக உருவாக்கிய சிவப்பு நிற ஆலவட்டம் (சுருக்கு விசிறி) சுருக்கி வளைந்த மரத்தறியில் தொங்கியது. அதில் சிலந்தி வெள்ளை நூலால் கட்டிய வலை தொங்கியது. வானத்தைத் தீண்டும் உயர்ந்த மேலான இடத்தில் உள்ள வேனிற்காலத்துப் படுக்கை அறைக்குத் தென்றலைக் கொண்டு வரும் திண்மையான நிலையையுடைய நேரான சன்னலின் நன்கு பொருந்திய கதவுகள், காற்று நுழைய முடியாதபடி திறமையாக மூடப்பட்டுத் தாழிட்டுக் கிடந்தன.

சொற்பொருள்:

கை வல் கம்மியன் - கைத்தொழிலில் வல்லவன், கவின் பெறப் புனைந்த - அழகாக உருவாக்கிய, செங்கேழ் வட்டம் - சிவப்பு நிற ஆலவட்டம், சுருக்கி - சுருக்கி, கொடும் தறி - வளைந்த மரத்தறி, சிலம்பி - சிலந்தி, எட்டுக்கால் பூச்சி, வான் நூல் வலந்தன - வெள்ளை நூலால் கட்டப்பட்ட, வெள்ளை நூலால் சூழ்ந்த, தூங்க - தொங்க, வான் உற - வானத்தைத் தீண்ட, நிவந்த - உயர்ந்த, மேனிலை மருங்கின் - மேலான இடத்தில், வேனில் - வேனிற்காலத்தில், பள்ளி - படுக்கை அறை, தென் வளி - தென்திசையில் காற்று, தென்றல், தரூஉம் - தரும் (இன்னிசை அளபெடை), நேர் வாய்க் கட்டளை - நேரான சாளரம், நேரான சன்னல், திரியாது - உலவாமல், திண் நிலைப் போர்க் கதவம் - திண்மையான நிலையையுடைய நன்கு பொருந்திய (இறுக்கமான) கதவுகள், தாழொடு துறப்ப - தாழிட்டுக் கிடப்ப

நெருப்பை விரும்புதல் (64-66)
கல்லென் துவலை தூவலின், யாவரும்
தொகு வாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார், . . . .[65]

பகு வாய்த் தடவில் செந்நெருப்பு ஆர . . . .[64 - 66]

பொருளுரை:

ஒலியுடன் மழைத் துளி தூவுவதால் எல்லோரும் குவிந்த வாயையுடைய குடத்தின் தண்ணீரைக் குடிக்கவில்லை. பகுத்தாற்போன்ற வாயையுடைய நெருப்பு வைக்கும் சட்டியின் சிவந்த நெருப்பை அனுபவித்தனர்.

சொற்பொருள்:

கல்லென் துவலை தூவலின் - ஒலியுடன் மழைத் துளி தூவுவதால், யாவரும் - எல்லோரும், தொகு வாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார் - குவிந்த வாயையுடைய குடத்தின் தண்ணீரைக் குடிக்கவில்லை, பகு வாய்த் தடவில் - பகுத்தாற்போன்ற வாயையுடைய நெருப்பு வைக்கும் சட்டி, செந்நெருப்பு - சிவந்த நெருப்பு, ஆர - அனுபவிக்க

ஆடல் மகளிரின் செயல் (67-70)
ஆடல் மகளிர் பாடல் கொளப் புணர்மார்,
தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை
கொம்மை வரு முலை வெம்மையில் தடைஇ,
கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப . . . .[67 - 70]

பொருளுரை:

ஆடும் பெண்கள், குளிரால் தன் நிலைகுலைந்த தங்களுடைய யாழானது பாட்டினைக் கொள்ளும்படி நரம்பைக் கூட்டுவதற்காக, அதன் இனிய ஒலி எழுப்பும் நரம்புகளை, பெரிதாக எழும் தங்களுடைய வெப்பமான முலைகளில் தடவி, கரிய தண்டையுடைய சிறிய யாழில், பண்ணிற்கு ஏற்றாற்போல் சுருதி கூட்டினார்கள்.

சொற்பொருள்:

ஆடல் மகளிர் - ஆடும் பெண்கள், பாடல் கொள புணர்மார் - யாழ் பாட்டினைக் கொள்ளும்படி நரம்பைக் கூட்டுவதற்காக, தண்மையின் திரிந்த - குளிர்ச்சியால் தன் நிலைகுலைந்த, இன் குரல் - இனிய ஒலி, தீம் தொடை - இனிய நரம்புகள், கொம்பை வருமுலை வெம்மையில் - பெரிதாக எழும் தங்களின் முலையின் வெப்பத்தில், தடைஇ - தடவி (சொல்லிசை அளபெடை), கருங்கோட்டுச் சீறியாழ் - கரிய தண்டையுடைய சிறிய யாழ், பண்ணு முறை நிறுப்ப முறைப்படி - பண்ணிற்கு ஏற்றாற்போல் சுருதி கூட்டினார்கள்

காதலர் பிரிந்தோரை வாட்டும் கூதிர் (71-72)
காதலர்ப் பிரிந்தோர் புலம்ப பெயல் கனைந்து
கூதிர் நின்றன்றால் போதே....... . . . .[71 - 72]

பொருளுரை:

தங்களுடைய காதலர்களிடமிருந்து பிரிந்தவர்கள் வருந்துமாறு மழை மிகுந்தது. குளிர் நிலைத்தது.

சொற்பொருள்:

காதலர்ப் பிரிந்தோர் புலம்ப - தங்களுடைய காதலர்களிடமிருந்து பிரிந்தவர்கள் வருந்த, பெயல் கனைந்து - மழை மிகுந்தது, கூதிர் நின்றன்றால் - குளிர் நிலைத்தது (நின்றன்றால் - ஆல் அசைநிலை)

அரண்மனையை உருவாக்கிய முறை (72-78)
............................ மாதிரம்
விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம்
இரு கோல் குறி நிலை வழுக்காது குடக்கு ஏர்பு
ஒரு திறம் சாரா அரை நாள் அமயத்து, . . . .[75]

நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு,
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி,
பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து . . . .[72 - 78]

பொருளுரை:

திசைகளிலே விரிந்த கதிர்களைப் பரப்பிய அகன்ற இடத்தையுடைய கதிரவன், இரண்டு கோல்கள் நடும்பொழுது நிழல் எந்தப் பக்கமும் சாயாத, மேற்குத் திசையில் எழுகின்ற உச்சிப்பொழுதில், சித்திரைத் திங்களின் நடுப்பகல் நேரத்தில், நூலைக் கற்று அறிந்தவர்கள் நுணுக்கத்துடன் கயிற்றினை இட்டு, திசைகளை நோக்கி, கடவுளை வணங்கி, புகழ்பெற்ற மன்னனுக்குப் பொருத்தமாக அரண்மனையைக் கட்டி அறைகளைக் கூறுப்படுத்தி,

சொற்பொருள்:

மாதிரம் - திசைகள், விரி கதிர் பரப்பிய - விரிந்த கதிர்களைப் பரப்பிய, வியல் வாய் மண்டிலம் - அகன்ற இடத்தையுடைய கதிரவன், இரு கோல் குறி நிலை வழுக்காது - இரண்டு கோல்கள் நடும்பொழுது எந்தப் பக்கமும் சாயாது, குடக்கு ஏர்பு - மேற்குத் திசையில் எழுகின்ற, ஒரு திறம் சாரா - எந்தப் பக்கமும் சாயாத சித்திரைத் திங்களின், அரை நாள் அமயத்து - நடுப்பகல் நேரத்தில், நூல் அறி புலவர் - நூலைக் கற்று அறிந்தவர்கள், நுண்ணிதின் - நுணுக்கத்துடன், கயிறு இட்டு - நூலை இட்டு, கயிற்றினை இட்டு, தேஎம் கொண்டு - திசைகளை நோக்கி (தேஎம் - இன்னிசை அளபெடை), தெய்வம் நோக்கி - கடவுளை வணங்கி, பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப - புகழ்பெற்ற மன்னனுக்குப் பொருத்தமாக, மனை வகுத்து - அரண்மனையைக் கட்டி அறைகளைக் கூறுப்படுத்தி

அரண்மனை வாயில் (79-88)
ஒருங்கு உடன் வளைஇ, ஓங்கு நிலை வரைப்பின்
பரு இரும்பு பிணித்து, செவ்வரக்கு உரீஇ, . . . .[80]

துணை மாண் கதவம் பொருத்தி, இணை மாண்டு
நாளொடு பெயரிய கோள் அமை விழு மரத்து
போது அவிழ் குவளைப் புதுப் பிடி கால் அமைத்து,
தாழொடு குயின்ற போர் அமை புணர்ப்பில்
கை வல் கம்மியன் முடுக்கலின் புரை தீர்ந்து . . . .[85]

ஐயவி அப்பிய நெய்யணி நெடு நிலை
வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக,
குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயில் . . . .[78 - 88]

பொருளுரை:

ஒருசேர இடங்களையெல்லாம் வளைத்து, உயர்ந்த நிலையையுடைய மதில் அருகில், பருத்த ஆணியால் கட்டி, சிவப்பு அரக்கைத் தடவி, மாட்சிமைப்பட்ட கதவுகளைச் சேர்த்து, சிறப்பாக இணைத்து, உத்திரம் என்னும் விண்மீனின் பெயர் பெற்ற மரத்தின் பலகையைக் கதவுக்கு மேலே வைத்து (உத்தரக்கட்டை), மலரும் குவளை பூப் போன்ற புதிய கைப்பிடியை அமைத்து, தாழொடு சேர்த்த, பொருந்துவதாய் அமைந்த, கைத்தொழிலில் வல்லமை உடையவன் இணைத்ததால் இடைவெளி இல்லாது இருந்தது கதவு. அதில் வெண்கடுகின் சாந்தும் நெய்யும் தடவப்பட்டது. போரில் வெற்றி பெற்று வரும் உயர்த்திய கொடியுடன் யானைகள் புகுமாறு, மலையில் குடைந்தது போல் உயர்ந்து இருந்தது, அரண்மனையின் வாயில்.

சொற்பொருள்:

ஒருங்கு உடன் வளைஇ - ஒருசேர இடங்களையெல்லாம் வளைத்து (வளைஇ - சொல்லிசை அளபெடை), ஓங்கு நிலை வரைப்பின் - உயர்ந்த நிலையையுடைய மதில் அருகில், பரு இரும்பு பிணித்து - பருத்த ஆணியால் கட்டி, செவ்வரக்கு உரீஇ - சிவப்பு அரக்கைத் தடவி (உரீஇ - சொல்லிசை அளபெடை), துணை மாண் கதவம் பொருத்தி - மாட்சிமைப்பட்ட கதவுகளைச் சேர்த்து, இணை மாண்டு - சிறப்பாக இணைத்து, நாளொடு பெயரிய கோள் - உத்திரம் என்னும் விண்மீனின் பெயர் பெற்ற மரத்தின் பலகை (உத்தரக்கட்டை), அமை - அமைந்த, விழு மரத்து - சிறந்த மரத்து (பொ. வே. சோமசுந்தரனார் உரை - ஆச்சா, கருங்காலி முதலிய மரங்கள்), போது அவிழ் - மலரும் மலர்கள், குவளை - நீல மலர், புதுப்பிடி கால் அமைத்து - புதிய கைப்பிடி அமைத்து, தாழொடு குயின்ற - தாழொடு சேர்த்த, போர் அமை புணர்ப்பில் - பொருந்துவதாய் அமைந்த, கை வல் கம்மியன் - கைத்தொழிலில் வல்லமை உடையவன், முடுக்கலின் - இணைத்ததால், புரை தீர்ந்து - இடைவெளி இல்லாது, ஐயவி அப்பிய - வெண்கடுகு அப்பிய, நெய்யணி - நெய்யைத் தடவி, நெடு நிலை - உயர்ந்த நிலை, வென்று எழு கொடியோடு - போரில் வெற்றி பெற்று வரும் உயர்த்திய கொடியுடன், வேழம் சென்று புக - யானைகள் புகுமாறு, குன்று குயின்றன்ன - மலையில் குடைந்தது போல், ஓங்கு நிலை வாயில் - உயர்ந்த வாயில்

முற்றம் (89-92)
திரு நிலைபெற்ற தீது தீர் சிறப்பின்
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து . . . .[90]

நெடு மயிர் எகினத் தூ நிற ஏற்றை
குறுங்கால் அன்னமொடு உகளும் முன்கடை . . . .[89 - 92]

பொருளுரை:

நிலைபெற்ற, செல்வம் படைத்த அரண்மனை முற்றத்தில், குற்றமற்ற சிறப்புடைய மணல் கொண்டு வந்து பரப்பப்பட்டது. நீண்ட மயிரையுடைய மான் தூய நிறத்தையுடைய குட்டையான கால்களையுடைய ஆண் அன்னத்துடன் தாவித் துள்ளி விளையாடியது.

சொற்பொருள்:

திரு நிலைபெற்ற - திருமகள் நிலைபெற்ற, தீது தீர் சிறப்பின் - குற்றமற்ற சிறப்புடைய, தரு மணல் - கொண்டு வந்த மணல், ஞெமிரிய - பருப்பிய, திரு நகர் - செல்வம் படைத்த அரண்மனை, முற்றத்து - முற்றத்தில், நெடு மயிர் எகின - நீண்ட மயிரையுடைய மான், தூ நிற - தூய நிறம், ஏற்றை - ஆண், குறுங்கால் அன்னமொடு - குறிய காலையுடைய அன்னத்துடன், உகளும் - தாவித் திரியும், முன்கடை - முற்றம்

அரண்மனையின் ஓசைகள் (93-100)
பணை நிலை முனைஇய பல் உளைப் புரவி
புல் உணாத் தெவிட்டும் புலம்பு விடு குரலொடு
நிலவுப் பயன் கொள்ளும் நெடு வெண் முற்றத்து, . . . .[95]

கிம்புரிப் பகுவாய் அம்பணம் நிறைய
கலிழ்ந்து வீழ் அருவிப் பாடு விறந்து அயல,
ஒலி நெடும் பீலி ஒல்க மெல் இயல்
கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை
நளி மலைச் சிலம்பின் சிலம்பும் கோயில் . . . .[93 - 100]

பொருளுரை:

பந்தியில் நிற்பதை வெறுத்து அடர்ந்த பிடரி மயிரையுடைய குதிரை புல்லை உண்டு கனைத்தது, தனிமை தோற்றுவித்த குரலுடன். நிலாவின் பயனை மன்னர் நுகரும்படியாக ஒளியுடைய பெரிய முற்றத்தில் சுறா மீனின் வாயைப் போன்று பகுக்கப்பட்ட நீர்க்குழாயில் நிறைய நீர் கலங்கி அருவியாக மிகுந்த ஒலியுடன் விழுந்தது. அருகில், தழைத்த நீண்ட தோகை ஒதுங்க மென்மையான தன்மையைக் கொண்ட செருக்கான மயில் கூவுகின்றது. மயிலின் குரல் வயிர் என்ற இசைக் கருவியின் இனிமையான ஒலியைப் போன்று உள்ளது. அடர்ந்த மலையின் ஆரவாரம் போல் ஆரவாரித்தது அரண்மனை.

குறிப்பு:

அகநானூறு 254-12 - பணை நிலை முனஇய வினை நவில் புரவி. உணா - உணவு, வு என்ற விகுதி கெட்டு அதற்கு முந்தைய குறில் எழுத்து நீண்டு நெடிலாக மாறியது

சொற்பொருள்:

பணை நிலை முனைஇய - பந்தியில் நிற்க வெறுத்து (முனைஇய - சொல்லிசை அளபெடை), பல் உளை புரவி - அடர்ந்த பிடரி மயிரையுடைய குதிரை, புல் உணாத் தெவிட்டும் - புல்லை உண்டு ஒலிக்கும், புலம்பு விடு குரலொடு - தனிமை தோற்றுவித்த குரலுடன், நிலவுப் பயன் கொள்ளும் நெடு வெண் முற்றத்து - நிலாவின் பயனை நுகரும் பெரிய ஒளியுடைய முற்றத்தில், கிம்புரி பகு வாய் - சுறா மீனின் வாயைப் போன்று பகுக்கப்பட்ட, அம்பணம் - நீர்க்குழாய், நிறைய - நிறைய, கலிழ்ந்து வீழ் அருவி - கலங்கி விழும் அருவி, பாடு விறந்து - ஒலி மிகுந்து, அயல - அருகில், ஒலி நெடும் பீலி ஒல்க - தழைத்த நீண்ட தோகை ஒதுங்க, மெல் இயல் கலி மயில் அகவும் - மென்மையான தன்மையைக் கொண்ட செருக்கான மயில் கூவும், வயிர் மருள் - வயிர் என்ற இசைக் கருவியைப் போன்று, இன் இசை - இனிமையான ஒலி, நளி மலைச் சிலம்பின் - அடர்ந்த மலையின் ஆரவாரம் போல், சிலம்பும் கோயில் - ஆரவாரிக்கும் அரண்மனை

அந்தப்புரத்தின் அமைப்பு (101-107)
யவனர் இயற்றிய வினை மாண் பாவை
கை ஏந்தும் ஐ அகல் நிறைய நெய் சொரிந்து,
பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிர் எரி
அறு அறு காலை தோறு அமைவரப் பண்ணிப்
பல் வேறு பள்ளி தொறும் பாய் இருள் நீங்க, . . . .[105]

பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது
ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின் . . . .[101 - 107]

பொருளுரை:

கிரேக்கர்கள் இயற்றிய தொழில் சிறப்புடைய பாவை விளக்குகளின் கையில் ஏந்தப்பட்ட அழகான எண்ணையை ஊற்றும் அகல் நிறைய எண்ணையை ஊற்றி, பருத்த திரியைக் கொளுத்தி, அதன் நிறத்தையுடைய மேல் பகுதியை நிமிர்த்தி, எண்ணெய் குறையும்பொழுதெல்லாம் எண்ணையை ஊற்றித் திரியைத் தூண்டி, பல அறைகளிலும் உள்ள பரந்த இருளை நீக்கினார்கள். பெருமை பொருந்தியவனும் தலைமை உடையவனுமான பாண்டிய மன்னன் அல்லாது வேறு ஆடவர் எவரும் நெருங்க முடியாத அரிய காவலுடைய எல்லையில்,

குறிப்பு:

நெய் என்ற சொல் பசுவின் நெய்க்கும், எண்ணெய்க்கும் உபயோகிக்கப்பட்டது. நற்றிணை 175-4 - மீன் நெய், நற்றிணை 215-5 - மீன் நிணம் தொகுத்த ஊன் நெய். முல்லைப்பாட்டு 48-49 - நெய் உமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇ கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட.

சொற்பொருள்:

யவனர் இயற்றிய வினை மாண் பாவை கை ஏந்தும் - கிரேக்கர்கள் இயற்றிய தொழில் சிறப்புடைய பாவை தன்னுடைய கைகளில் ஏந்தும், ஐ - வியப்பான, அழகான, அகல் - அகல், நிறைய நெய் சொரிந்து - நிறைய எண்ணையை ஊற்றி, நிறைய நெய்யை ஊற்றி, பரூஉத்திரி கொளீஇய - பருத்த திரியைக் கொளுத்தி (பரூஉ - இன்னிசை அளபெடை, கொளீஇய - சொல்லிசை அளபெடை), குரூஉத்தலை நிமிர் - நிறத்தையுடைய மேல் பகுதியை நிமிர்த்தி, எரி - தீச்சுடர், அறு அறு காலை தொறும் - எண்ணெய் குறையும்பொழுதெல்லாம், அமைவரப் பண்ணி - எண்ணையை ஊற்றித் தூண்டி, பல் வேறு பள்ளி தொறும் - பல அறைகளிலும், பாய் இருள் நீங்க - பரந்த இருள் நீங்க, பீடு கெழு சிறப்பின் பெருந்தகையல்லது - பெருமை பொருந்திய தலைமையுடைய பாண்டிய மன்னன் அல்லாது, ஆடவர் குறுகா - வேறு ஆடவர் நெருங்க முடியாத, அருங்கடி வரைப்பின் - அரிய காவலுடைய எல்லையில்

கருவறை (108-114)
வரை கண்டன்ன தோன்றல, வரை சேர்பு
வில் கிடந்தன்ன கொடிய பல் வயின்,
வெள்ளி அன்ன விளங்கும் சுதை உரீஇ, . . . .[110]

மணி கண்டன்ன மாத்திரள் திண் காழ்
செம்பு இயன்றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்,
உருவப் பல் பூ ஒருகொடி வளைஇ,
கருவொடு பெயரிய, காண்பு இன் நல் இல் . . . .[108 - 114]

பொருளுரை:

மலையைக் கண்டது போன்ற உயர்ந்த தோற்றம். மலையில் உள்ள வானவில்லைப் போன்று பல இடங்களில் கொடிகள் இருந்தன. வெள்ளியைப் போன்ற சாந்தைத் தடவியிருந்தனர். நீலமணியைக் கண்டாற்போல் கருமையும் திரட்சியுமுடைய தூண்கள் அங்கு இருந்தன. செம்பினால் இயற்றியதைப் போல் செய்யப்பட உயர்ந்த சுவர்கள் இருந்தன. வடிவான பல மலர்களையுடைய ஒப்பற்ற வளைந்த கொடிகளை வரைந்திருந்தனர். கருவோடு பெயர்பெற்ற கருவறை இருந்தது, காண்பதற்கு இனிமையான அந்த நல்ல இல்லத்தில்.

குறிப்பு:

கருவொடு பெயரிய நல் இல் (114) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - கருவொடு பெயரிய நல் இல் என்றது கருப்பக்கிருகம் என்றவாறு. செம்புச் சுவர்: புறநானூறு 201 - செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை, அகநானூறு 375, புறநானூறு 37 - செம்பு உறழ் புரிசை, மதுரைக்காஞ்சி 485 - செம்பு இயன்றன்ன செஞ்சுவர், நெடுநல்வாடை112 - செம்பு இயன்றன்ன செய்வுறு நெடுஞ் சுவர்.

சொற்பொருள்:

வரை கண்டன்ன தோன்றல - மலையைக் கண்டதுப் போன்ற தோற்றம், வரை சேர்பு வில் கிடந்தன்ன - மலையில் உள்ள வானவில்லைப் போன்று, கொடிய - கொடிகள் இருந்தன, பல் வயின் - பல இடங்களில், வெள்ளியன்ன சுதை உரீஇ - வெள்ளியைப் போன்ற சாந்தைத் தடவி (உரீஇ - சொல்லிசை அளபெடை), மணி கண்டு அன்ன - நீலமணியைக் கண்டாற்போல், மாத்திரள் திண் காழ் - கருமையும் திரட்சியுமுடைய தூண்கள், செம்பு இயன்றன்ன - செம்பால் இயற்றியதைப் போல், செய்வுறு நெடும் சுவர் - செய்யப்பட உயர்ந்த சுவர், உருவப் பல் பூ - வடிவான பல மலர்கள், ஒரு கொடி வளைஇ - ஒப்பற்ற கொடியை வளைத்து (வளைஇ - சொல்லிசை அளபெடை), கருவொடு பெயரிய - கருவறை என்று பெயர்பெற்ற, கருப்பக்கிருகம், காண்பு இன் நல் இல் - காண்பதற்கு இனிமையாக உள்ள நல்ல இல்லம்

தலைவியின் கட்டில் (115-123)
தச நான்கு எய்திய பணை மருள் நோன் தாள், . . . .[115]

இகல்மீக் கூறும் ஏந்து எழில் வரி நுதல்
பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து,
சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன்
கூர் உளிக் குயின்ற ஈர் இலை இடை இடுபு,
தூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்பப் . . . .[120]

புடை திரண்டிருந்த குடத்த இடை திரண்டு
உள்ளி நோன் முதல் பொருந்தி அடி அமைத்து,
பேர் அளவு எய்திய பெரும் பெயர் பாண்டில் . . . .[115 - 123]

பொருளுரை:

நாற்பது வயதை அடைந்த, பணை முரசைப்போன்று வலிமையான கால்களையும், போரில் புகழடைந்த, உயர்ந்த அழகுடைய, நெற்றியில் வரிகளையுடைய, போரில் வீழ்ந்த யானையின் தானாக விழுந்த தந்தங்களின் பக்கங்களைச் செதுக்கி, சீருடனும் செம்மையாகவும் வல்லவனான தச்சன் கூர்மையான உளியால் செதுக்கிய இரண்டு இலைகளை இடையில் இட்டு, கர்ப்பத்தால் அசைந்து நடக்கும் பெண்களின் வீங்கிய முலைகளைப் போல் பக்கங்கள் திரண்டு இருந்த குடத்தை உடையவாய்க் கட்டிலுக்கும் காலுக்கும் இடையே உள்ள இடத்தில் பொருத்தி, திரண்டு, பூண்டைப் போன்ற உறுப்புகளைப் பொருத்தி, கால்களை அமைத்து, பெரியதாகச் செய்த பெரும் புகழையுடைய வட்டக்கட்டில்.

சொற்பொருள்:

தச நான்கு - நாற்பது, எய்திய - அடைந்த, பணை மருள் - பணை முரசைப்போன்று (மருள் ஓர் உவமவுருபு - தொல். பொ. 286) அல்லது பணை முரசென்று மருளும், நோன் தாள் - வலிமையான கால்கள், இகல்மீக் கூறும் - போரில் மேலே சென்ற, ஏந்து எழில் - உயர்ந்த அழகு, வரி நுதல் - நெற்றியில் வரி, பொருது ஒழி நாகம் - போரில் அழிந்த யானை, ஒழி எயிறு - விழுந்த தந்தங்கள், அருகு எறிந்து - பக்கங்களில் செதுக்கி, சீரும் செம்மையும் ஒப்ப - சீருடனும் செம்மையாகவும், வல்லோன் - வல்லவன், தச்சன் - தச்சன், கூர உளிக் குயின்ற - கூர்மையான உளியால் செதுக்கிய, ஈரிலை - இரண்டு இலைகள், இடை இடுபு - இடையில் இட்டு, தூங்கு இயல் மகளிர் - கர்ப்பத்தால் அசைந்து நடக்கும் பெண்கள், வீங்கு முலை கடுப்ப - வீங்கிய முலைகளைப் போல், புடை திரண்டு இருந்த - பக்கங்கள் திரண்டு இருந்த, குடத்த - குடத்தை உடையவாய், இடை திரண்டு - கட்டிலுக்கும் காலுக்கும் இடையே உள்ள இடம் திரண்டு, உள்ளி நோன் முதல் - பூண்டைப் போன்று, வெங்காயத்தைப் போன்று, பொருத்தி - பொருத்தி, அடி அமைத்து - கால்களை அமைத்து, பேரளவு எய்திய பெரும் பெயர் பாண்டில் - பெரியதாகச் செய்த பெரும் புகழையுடைய வட்டக்கட்டில்

கட்டிலின் ஒப்பனை (124-135)
மடை மாண் நுண் இழை பொலிய தொடை மாண்டு
முத்துடைச் சாலேகம் நாற்றி குத்துறுத்து, . . . .[125]

புலிப் பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத்
தகடு கண் புதையக் கொளீஇத் துகள் தீர்ந்து
ஊட்டுறு பல் மயிர் விரைஇ, வய மான்
வேட்டம் பொறித்து, வியன் கண் கானத்து
முல்லைப் பல் போது உறழப் பூ நிரைத்து, . . . .[130]

மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத்
துணை புணர் அன்னத் தூ நிறத் தூவி
இணை அணை மேம்படப் பாய் அணை இட்டு,
காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
தோடு அமை தூ மடி விரிந்த சேக்கை . . . .[124 - 135]

பொருளுரை:

மூட்டுவாய்ச் சிறப்பாகப் பொருந்திய நுண்ணிய நூல் பொலியத் தொடுத்த சிறந்த முத்துக்களையுடைய பலகணிகள் போன்ற தொடர்மாலைகளைக் கட்டிலின் மேல் பகுதியைச் சுற்றித் தொங்கவிட்டு, புலியின் பொறிகளைப் பொறித்த அழகிய நிறத்தையுடைய தட்டம் போன்ற தகடுகளைக் கட்டிலின் கூரையில் இடம் மறையும்படி பொருத்தி, குற்றமற்ற, பல நிறங்களும் ஊட்டப்பட்ட மயிரைக் கலந்து உள்ளே வைக்கப்பட்ட, சிங்கத்தை வேட்டையாடும் காட்சியையும், அகன்ற இடத்தையுடைய காட்டில் மலரும் முல்லையுடன் அதைப் போன்ற பல மலர்களையும் வரைந்த போர்வையின் மேல், துணையுடன் இணைந்த அன்னத்தின் தூய மயிருடைய அணையை மேன்மையுண்டாக விரித்து, அதன் மேல் தலையணைகளை இட்டு, கஞ்சியைக் கொண்ட துவைத்த துணியில், மலர் இதழ்களுடன் விரித்த தூய படுக்கை.

குறிப்பு:

வய மான் வேட்டம் பொறித்து (128-129) - நச்சினார்க்கினியர் உரை - சிங்கம் முதலியவற்றை வேட்டையாடுகின்ற தொழில்களைப் பொறித்த தகடுகளை வைத்து.

சொற்பொருள்:

மடை - மூட்டுவாய், மாண் - மாண்பு, நுண் இழை பொலிய - நுண்ணிய நூல் பொலிய, தொடை - தொடுத்தல், மாண்டு - சிறந்து, முத்துடை - முத்துக்களையுடைய, சாலேகம் நாற்றி - பலகணிகள் போன்ற தொடர்மாலைகளைத் தொங்கவிட்டு, குத்துறுத்து - குத்தி, புலிப்பொறி கொண்ட - புலியின் பொறிகளைக் கொண்ட, பூங்கேழ்த் தட்டத்து - அழகிய நிறத்தையுடைய தட்டத்து, தகடு - தகடு, கண் புதைய - இடம் மறைய, கொளீஇ - கோர்த்து (கொளீஇ - சொல்லிசை அளபெடை), துகள் தீர்ந்து - குற்றமற்ற, ஊட்டுறு பன் மயிர் விரைஇ - பல நிறங்களும் ஊட்டப்பட்ட மயிரைக் கலந்து (விரைஇ - சொல்லிசை அளபெடை), வயமான் வேட்டம் பொறித்து - சிங்கம் வேட்டையாடுவதைப் பொறித்து, வியன் கண் கானத்து - அகன்ற இடத்தையுடைய காட்டில், முல்லைப் பல் போது உறழ - முல்லையுடன் பல மலர்களைக் கலந்து, பூ நிரைத்து - மலர்களை நிரம்பப் பொறித்து, மெல்லிதின் விரிந்த சேக்கை - மெல்லிதாக விரித்த போர்வை, மேம்பட - மேலே, மேன்மையுண்டாக, துணை புணர் அன்னத் தூ நிறத் தூவி - துணையுடன் இணைந்த அன்னத்தின் தூய மயிர், இணை அணை - இணைந்த அணை, மேம்பட பாய் - மேன்மையுண்டாக விரித்து, அணையிட்டு - தலையணைகளை இட்டு, காடி கொண்ட - கஞ்சியைக் கொண்ட, கழுவுறு கலிங்கத்து - துவைத்த துணியில், தோடு அமை - மலர் இதழ்களுடன், தூ மடி - தூய மடி, விரித்த சேக்கை - விரித்த படுக்கை

தலைவியின் நிலை (136-147)
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்துப்
பின் அமை நெடு வீழ் தாழத் துணை துறந்து
நல் நுதல் உலறிய சில் மெல் ஓதி,
நெடு நீர் வார் குழை களைந்தென குறுங்கண்
வாயுறை அழுத்திய வறிது வீழ் காதின், . . . .[140]

பொலந்தொடி தின்ற மயிர் வார் முன் கை
வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து,
வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச்
செவ்விரல் கொளீஇய செங்கேழ் விளக்கத்துப்
பூந்துகில் மரீஇய ஏந்து கோட்டு அல்குல் . . . .[145]

அம்மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு
புனையா ஓவியம் கடுப்ப............ . . . .[136 - 147]

பொருளுரை:

முத்து மாலையைத் தாங்கிய பெரிய முலைகளையுடைய மார்பின் பின்னால் நீண்ட கூந்தல் தொங்கியது. கணவனிடமிருந்து பிரிந்ததால் அவளுடைய அழகிய நெற்றி ஒளியை இழந்தது. நெற்றியில் உலர்ந்த மென்மையான கூந்தல் படர்ந்திருந்தது. மிகுதியான ஒளியையுடைய நீண்ட காதணிகளை நீக்கி தாளுறை என்ற காதணிகளை அணிந்திருந்தாள், வடுவுடைய சிறிது தொங்கும் காதுகளில். பொன் வளையல்கள் தழும்பு உண்டாக்கிய மயிரையுடைய முன் கையில் வலம்புரிச் சங்கினால் செய்த வளையல்களுடன் காப்பு நூலைக் கட்டியிருந்தாள். வாளை மீனின் பகுத்த வாயைப் போலத் தோன்றும் வளைந்த சிவப்பு நிறமுடைய மோதிரத்தைச் செவ்விரலில் அணிந்திருந்தாள். மென்மையான ஆடையை முன்பு இடுப்பில் அணிந்த அவள் இப்பொழுது மாசு உடைய ஒளியுடைய நூல் ஆடையுடன் புனையாத ஓவியத்தைப் போன்று இருந்தாள்.

குறிப்பு:

பின் அமை நெடு வீழ் தாழ (137) - நச்சினார்க்கினியர் உரை - குத்துதல் அமைந்த நெடிய தாலி நாண் வீழ்ந்து கிடத்தல், பின்னுதல் அமைந்த நெடிய மயிர் தொங்க என்பாரும் உளர்.

சொற்பொருள்:

ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து - முத்து மாலையைத் தாங்கிய பெரிய முலைகளையுடைய மார்பில், பின் அமை - பின்னால், நெடு - நெடிய, வீழ் - வீழ்ந்த, தாழ - தொங்க, துணை துறந்து - கணவனிடமிருந்து பிரிந்து, நன் நுதல் - அழகிய நெற்றி, உலறிய - உலர்ந்த, ஒளி இழந்த, சில் மெல் ஓதி - சில மென்மையான கூந்தல், நெடு நீர் வார் குழை - மிகுதியான ஒளியுடைய நீண்ட காதணி, களைந்தென - நீக்கி விட, குறுங்கண் - சிறிய இடம், சிறிய ஓட்டை, வாயுறை - தாளுறை என்ற காதணி, அழுத்திய - அழுத்திய, வறிது வீழ் காதின் - சிறிது தொங்கும் காதுகளில், பொலந்தொடி - பொன் வளையல்கள், தின்ற - தழும்பு உண்டாக்கிய, மயிர் வார் முன் கை - மயிரையுடைய முன் கை, வலம்புரி வளையொடு - வலம்புரிச் சங்கினால் செய்த வளையல்களுடன், கடிகை நூல் யாத்து - காப்பு நூலைக் கட்டி, வாளைப் பகுவாய் - வாளை மீனின் பகுத்த வாய், கடுப்ப - போல, வணக்குறுத்து - வளைத்து, செவ்விரல் - சிவந்த விரல், கொளீஇய - அணிந்து, செங்கேழ் விளக்கத்து - சிவப்பு நிறமுடைய மோதிரத்து, பூந்துகில் மரீஇய - மென்மையான ஆடையை அணிந்த, ஏந்து கோட்டு அல்குல் - உயர்ந்த வளைவினையுடைய இடுப்புக்குக் கீழ் இருக்கும் பகுதி, அம்மாசு ஊர்ந்த - மாசு உடைய, அவிர் நூல் - ஒளியுடைய நூல், கலிங்கமொடு - ஆடையுடன், புனையா ஓவியம் கடுப்ப - புனையாத ஓவியத்தைப் போன்று

தலைவியின் அடியை வருடும் செவிலியர் (147-151)
......................... புனைவு இல்
தளிர் ஏர் மேனித் தாய சுணங்கின்,
அம்பணைத் தடைஇய மென் தோள் முகிழ் முலை
வம்பு விசித்து யாத்த வாங்கு சாய் நுசுப்பின், . . . .[150]

மெல் இயல் மகளிர் நல்அடி வருட . . . .[147 - 151]

பொருளுரை:

ஒப்பனை இல்லாத தளிர் போன்ற மேனியையும், பரந்த தேமலையும், அழகிய மூங்கிலைப் போன்ற திரண்ட மென்மையான தோளினையும், கச்சையினால் இறுக்கமாகக் கட்டிய தாமரை மொட்டினைப் போன்ற முலைகளையும், வளைந்த அசையும் இடையையுமுடைய மென்மையான பெண்கள், அரசியின் நல்ல அடியைத் தடவ,

சொற்பொருள்:

புனைவு இல் - ஒப்பனை இல்லாத, தளிர் ஏர் மேனி - தளிர் போன்ற உடல், தாய சுணங்கின் - பரந்த தேமலையும், அம் பணை - அழகிய மூங்கில், தடைஇய - திரண்ட, வளைந்த, மென் தோள் - மென்மையான தோள், முகிழ் முலை - தாமரை மொட்டினைப் போன்ற முலைகள், வம்பு விசித்து யாத்த - கச்சை இறுக்கமாகக் கட்டிய, வாங்கு சாய் நுசுப்பின் - வளைந்த அசையும் இடையையுடைய, மெல் இயல் மகளிர் - மென்மையான பெண்கள், நல் அடி வருட - நல்ல அடியைத் தடவ

தேற்றும் செவிலியர் (152-156)
நரை விராவுற்ற நறு மென் கூந்தல்
செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇ,
குறியவும் நெடியவும் உரை பல பயிற்றி,
‘இன்னே வருகுவர் இன் துணையோர்’ என . . . .[155]

உகத்தவை மொழியவும்.............. . . . .[152 - 156]

பொருளுரை:

நரை மயிர் கலந்த நறுமணமுடைய மென்மையான கூந்தலை உடைய சிவந்த முகத்தையுடைய செவிலிகள், மிகுதியாகத் திரண்டு, குறைவாகவும் மிகுதியாகவும் சொற்களைப் பல முறை கூறி, “விரைவில் வருவார் உன்னுடைய இனிய கணவர்” என மனதுக்கு இனியவற்றை கூறவும்,

சொற்பொருள்:

நரை விராவுற்ற - நரை மயிர் கலந்த, நறு மென் கூந்தல் - நறுமணமுடைய மென்மையான கூந்தல், செம்முகச் செவிலியர் - சிவந்த முகத்தையுடைய செவிலிகள், கைம்மிகக் குழீஇ - மிகுதியாகத் திரண்டு (குழீஇ - சொல்லிசை அளபெடை), குறியவும் நெடியவும் - குறைவாகவும் மிகுதியாகவும், உரை பயிற்றி - சொற்களைப் பல முறை கூறி, இன்னே வருகுவர் - இன் துணையோர் - விரைவில் வருவார் உன்னுடைய இனிய கணவர், என- என்று, உகத்தவை - மனதுக்கு இனியவற்றை, மகிழ்ச்சி தருவனவற்றை, மொழியவும் - கூறவும்

தேறாத் தலைவி (156-166)
................... ஒல்லாள், மிகக் கலுழ்ந்து,
நுண் சேறு வழித்த நோன் நிலைத் திரள் கால்
ஊறா வறு முலை கொளீஇய கால் திருத்திப்
புதுவது இயன்ற மெழுகு செய் படமிசைத்
திண் நிலை மருப்பின் ஆடு தலையாக, . . . .[160]

விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து
முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி, நெடிது உயிரா,
மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரிப்பனி
செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சில தெறியாப் . . . .[165]

புலம்பொடு வதியும்.................. . . . .[156 - 166]

பொருளுரை:

அவள் ஆறுதல் அடையவில்லை. மிகவும் அழுதாள். அவள் அமர்ந்திருந்த கட்டிலில் நுண்ணிய சாதிலிங்கம் தடவப்பட்டு அதன் வலிமையான திரண்ட கால்களில் குடத்தைப் போன்ற பகுதிகள் பொருத்தப்பட்டிருந்தன. புதிதாக இயற்றிய, மெழுகு தேய்த்த மேல் பகுதியில் வலிமையான கொம்புடன் மேட ராசி (ஆடு) முதலாக விண்ணில் ஊர்ந்து திரியும் ஓவியம் இருந்தது. கதிரவனிடமிருந்து மாறுபாடு மிகுந்த சிறப்புடைய நிலவோடு நிலையாக நின்ற உரோகிணியை நினைத்து, உரோகிணியைப் போல் பிரிவின்றித் தான் இல்லையே என்று வருந்தினாள். பெருமூச்சு விட்டாள். கருமையான இதழ்கள் கொண்ட அவளுடைய கண்களிலிருந்து மிகுந்த மென்மையான கண்ணீர்த் துளிகள் விழுந்தன. தன்னுடைய சிவந்த விரல்களைக் கடைக் கண்ணிடத்தில் சேர்த்து கண்ணீர்த் துளிகளைத் தெறித்தாள். தனிமையில் வசிக்கும்,

குறிப்பு:

ஊறா வறுமுலை (158) - நச்சினார்க்கினியர் உரை - குடத்திற்கு வெளிப்படை, முலைபோறலின் முலை என்றார், பொ. வே. சோமசுந்தரனார் உரை - பால் ஊறாத என்பது குடத்தைக் குறிக்கின்றது, குடத்திற்கு வெளிப்படை, குடம் போறலின் முலை என்றார். உயிரா - உயிர்த்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது. தெறியா - தெறித்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

சொற்பொருள்:

ஒல்லாள் - அவள் ஆறுதல் அடையவில்லை, மிகக் கலுழ்ந்து - மிகவும் அழுது, நுண் சேறு வழித்த - நுண்ணிய சாதிலிங்கத்தைத் தடவி, நோன் நிலை திரள் கால் - வலிமையான திரண்ட கால்கள், ஊறா வறுமுலை - குடத்தைப் போன்ற (பொ. வே. சோமசுந்தரனார் உரை - பால் ஊறாத என்பது குடத்தைக் குறிக்கின்றது, குடத்திற்கு வெளிப்படை, குடம் போறலின் முலை என்றார்), கொளீஇய கால் திருத்தி - கால்களுடன் பொருத்தி (கொளீஇய - சொல்லிசை அளபெடை), புதுவது இயன்ற - புதிதாக இயற்றிய, மெழுகு செய் - மெழுகு தேய்த்த, படமிசை - மேலே, திண் நிலை மருப்பின் - வலிமையான கொம்புடன், ஆடு - ஆடு, தலையாக - முதலாக, விண் ஊர்பு - விண்ணில் ஊரும், திரி தரும் - திரியும், வீங்கு செலல் - மேலே செல்லுதல், மண்டிலத்து - கதிரவனின், முரண் மிகு - மாறுபாடு மிகுந்த, சிறப்பின் - சிறப்புடைய, செல்வனொடு - நிலவோடு, நிலைஇய - நிலையாக நின்ற (நிலைஇய - சொல்லிசை அளபெடை), உரோகிணி நினைவனள் - உரோகிணியை நினைத்து, நோக்கி - நோக்கி, நெடிது உயிரா - பெருமூச்சு விட்டு (உயிரா - உயிர்த்து), மா இதழ் - கருமையான இதழ்கள், ஏந்திய - உயர்ந்த, மலிந்து வீழ் அரி பனி - மிகுந்த மென்மையான கண்ணீர்த் துளிகள் (ஐதாகிய கண்ணீர்த் துளி - பொ. வே. சோமசுந்தரனார்), செவ்விரல் கடைக்கண் சேர்த்தி - சிவந்த விரல்களைக் கடைக் கண்ணிடத்தில் சேர்த்து, சில தெறியா - சில துளிகள் தெறித்து (தெறியா - தெறித்து), புலம்பொடு வதியும் - துன்பத்துடன் வசிக்கும், தனிமையில் வசிக்கும்

கொற்றவையை வேண்டல் (166-168)
..................... நலங்கிளர் அரிவைக்கு
இன்னா அரும்படர் தீர விறல் தந்து
இன்னே முடிக தில் அம்ம............... . . . .[166 - 168]

பொருளுரை:

அன்பு மிக்க இளம் பெண்ணிற்கு, தீமையாக இருக்கின்ற பெரும் வேதனை தீர, மன்னன் வெற்றி அடைந்து உடனே வர வேண்டும். இது எங்கள் விருப்பம். எங்கள் வேண்டுகோளைக் கேட்டு அருளுவாயாக கொற்றவையே!

குறிப்பு:

பொ. வே. சோமசுந்தரனார் உரை - இது வெற்றிப் பொருட்டுக் கொற்றவையைப் பரவுவாள் (பாராட்டுவாள்) ஒருத்தியின் கூற்றாகக் கூறப்பட்டது.

சொற்பொருள்:

நலங்கிளர் அரிவைக்கு - அன்பு மிக்க இளம் பெண்ணிற்கு, இன்னா - தீமை, அரும் படர் தீர - பெரும் வேதனைத் தீர, விறல் தந்து - வெற்றி அடைந்து, இன்னே முடிக - உடனே முடித்து வருக, தில் - ஓர் அசைச்சொல், அம்ம - கேட்பாயாக கொற்றவையே

அரசனின் நிலை (168-188)
..................................... மின் அவிர்
ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை
நீள் திரள் தடக்கை நில மிசைப் புரள, . . . .[170]

களிறு களம் படுத்த பெருஞ்செய் ஆடவர்
ஒளிறு வாள் விழுப்புண் காணிய, புறம் போந்து,
வடந்தைத் தண் வளி எறிதொறும் நுடங்கித்
தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நன் பல
பாண்டில் விளக்கில் பரூஉச்சுடர் அழல, . . . .[175]

வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு
முன்னோன் முறை முறை காட்டப் பின்னர்

பொருளுரை:

ஒளியுடைய முக ஆபரணங்களுடன் பொலிந்த, போர்த்தொழிலைக் கற்ற யானைகளின் நீண்ட திரண்ட பெரிய தும்பிக்கைகள் நிலத்தின் மேல் விழும்படி ஆண் யானைகளைக் கொன்று, பெரிய மறச்செயலை செய்த மறவர்களின் ஒளியுடைய வாளினால் ஏற்பட்ட புண்ணைக் காண வெளியே வந்தான் மன்னன். குளிர்ந்த வாடைக் காற்று வீசும்பொழுதெல்லாம் அசைந்து தெற்கில் உயர்ந்து சாய்ந்து பருத்த சுடருடன் எரியும் நல்ல பல வட்ட விளக்குகள் எரிந்தன. வேப்ப இலைகளை மேலே கட்டிய வலிமையான காம்பையுடைய வேலொடு மன்னனுக்கு முன் நடக்கும் படைத் தலைவன், முறையாக மன்னனுக்கு பாசறையில் உள்ளவற்றைக் காட்ட, அதன் பின்,

குறிப்பு:

பாண்டில் விளக்கில் (175) - நச்சினார்க்கினியர் உரை - பல் கால் விளக்கில். புறநானூறு 19 - யானைத் தூம் புஉடைத் தடக்கை வாயொடு துமிந்து நாஞ்சில் ஒப்ப நில மிசைப் புரள.

சொற்பொருள்:

மின் அவிர் ஒடையொடு - ஒளியுடைய முக ஆபரணங்களுடன், பொலிந்த - பொலிவு பெற்ற, வினை நவில் யானை - போர்த்தொழிலைக் கற்ற யானை, நீள் திரள் தடக்கை - நீண்ட திரண்ட பெரிய தும்பிக்கை, நில மிசைப் புரள - நிலத்தின் மேல் விழ, களிறு களம் படுத்த - ஆண் யானைகளைக் கொன்ற, பெருஞ்செயல் ஆடவர் - பெரிய மறச்செயலைச் செய்த மறவர்கள், ஒளிறு வாள் - ஒளியுடைய வாள், விழுப் புண் காணிய - காயத்தால் ஏற்பட்ட புண்ணைக் காண, புறத்தே போந்து - வெளியே வந்து, வடந்தைத் தண் வளி - குளிர்ந்த வாடைக் காற்று, எறிதொறும் நுடங்கி - வீசும்பொழுதெல்லாம், தெற்கு ஏர்பு - தெற்கில் உயர்ந்து, இறைஞ்சிய - குனிந்த, தலைய - மேல் பகுதியுடன், நன் பல - நல்ல பல, பாண்டில் விளக்கில் - வட்ட விளக்குகளில், பரூஉச்சுடர் அழல - பருத்த சுடர் எரிய (பரூஉ - இன்னிசை அளபெடை), வேம்பு தலை யாத்த - வேப்ப இலைகளை மேலே கட்டிய, நோன் காழ் - வலிமையான காம்பு, எஃகமொடு - வேலொடு, முன்னோன் - மன்னனுக்கு முன் நடக்கும் படைத் தலைவன், முறை முறை காட்ட - முறையாகக் காட்ட, பின்னர் - அதன் பின்

மணி புறத்து இட்ட மாத்தாள் பிடியொடு
பருமம் களையாப் பாய் பரிக் கலி மா
இருஞ்சேற்றுத் தெருவின் எறி துளி விதிர்ப்ப, . . . .[180]

புடை வீழ் அம் துகில் இடவயின் தழீஇ
வாள் தோள் கோத்த வன் கண் காளை
சுவல் மிசை அமைத்த கையன், முகன் அமர்ந்து,
நூல் கால் யாத்த மாலை வெண் குடை
தவ்வென்று அசைஇ தா துளி மறைப்ப, . . . .[185]

நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்,
சிலரொடு திரிதரும் வேந்தன்,
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே, . . . .[177 - 188]

பொருளுரை:

மணிகளைத் தம் மேலே கொண்ட பெரிய கால்களையுடைய பெண் யானைகளோடு இருந்த, பக்கரை களையப்படாத பாயும் செருக்கான குதிரைகள், கரிய சேற்றினையுடைய தெருவில், தங்கள் மேல் விழும் நீர்த்துளிகளை உடம்பை சிலிர்த்துச் சிதற்றின. தோளிலிருந்து வழுக்கி விழுந்த அழகிய ஆடையை இடதுபுறமாகத் தழுவி, வாளைத் தோளில் தொங்கவிட்ட வலிமையான இளைஞனின் தோள் மேல் கையை வைத்திருந்தான் மன்னன். தன்னுடைய மறவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுமாறு முகம் பொருந்தி இருந்தான் அவன். நூலால் தொடுத்த முத்துச் சரங்களையுடைய மன்னனின் குடை ஒலியுடன் அசைந்து மழைத் துளிகளை அவன் மேல் விழாதவாறு மறைத்தது. மிகுந்த இருட்டான நடு இரவிலும் அவன் தூங்கவில்லை. சில மறவர்களுடன் திரிகின்றான், பலரோடு மாறுபட்டுப் போர்த்தொழில் செய்யும் பாண்டிய மன்னன்.

சொற்பொருள்:

மணிப் புறத்து இட்ட - மணிகளை இட்ட, மாத்தாட் பிடியொடு - பெரிய கால்களையுடைய பெண் யானைகளோடு, பருமம் களையா - பக்கரை களையப்படாத, பாய் பரிக் கலிமா - பாயும் செருக்கான குதிரைகள், இருஞ்சேற்று தெருவின் - கரிய சேற்றினையுடைய தெருவில், எறி துளி விதிர்ப்ப - மேல் விழும் நீர்த்துளிகளை உடம்பை சிலிர்த்துச் சிதற, புடை வீழ் அம் துகில் - தோளிலிருந்து விழுந்த அழகிய ஆடை, இடவயின் தழீஇ - இடதுபுறமாகத் தழுவி (தழீஇ - சொல்லிசை அளபெடை), வாள் தோள் கோத்த - வாளைத் தோளில் கோத்த, வன்கண் காளை - வலிமையான இளைஞன், சுவல் மிசை - தோள் மேல், அமைத்த கையன் - கையை வைத்தவன், முகன் அமர்ந்து - முகம் பொருந்தி (முகன் - முகம் என்பதன் போலி), நூல் கால் யாத்த மாலை - நூலால் கட்டிய மாலை, வெண்குடை - வெள்ளைக் குடை, முத்துக்குடை, தவ்வென்று அசைஇ - ஒலியுடன் அசைந்து (அசைஇ - சொல்லிசை அளபெடை), தா துளி மறைப்ப - மழைத் துளிகளை மறைக்க, நள்ளென் யாமத்தும் - மிகுந்த இருட்டான நடு இரவிலும், பள்ளி கொள்ளான் - அவன் தூங்கவில்லை, சிலரொடு - சில மறவர்களுடன், திரிதரும் வேந்தன் - திரியும் மன்னன், பலரோடு முரணிய - பலரோடு மாறுபட்ட (தலையாலங்கானத்துப் போரில் பாண்டியன் சேர சோழ மன்னர்களையும் ஐந்து வேளிர்களையும் தோற்கடித்தான்), பாசறைத் தொழிலே - போர்த்தொழில்

முற்றிற்று
தனிப் பாடல்

பிற்காலத்தில் இந்த நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ள தனிப்பாடல் வெண்பா இரங்கல் பாடலாக அமைந்துள்ளது.

வாடை நலிய, வடிக் கண்ணாள் தோள் நசைஇ,
ஓடை மழ களிற்றான் உள்ளான்கொல்- கோடல்
முகையோடு அலமர, முற்று எரி போல் பொங்கி,
பகையோடு பாசறை உளான்?

பொருளுரை:

வாடைக்காற்று துன்புறுத்திக்கொண்டிருக்கையில், அவள் அவன் தோளை விரும்பிக்கொண்டிருக்கையில், அவன் அவளை நினைக்க மாட்டானோ? கோடல் பூ எரியும் தீ போல் அல்லவா பூத்துக் கிடக்கிறது. பாசறையில் அல்லவா அவன் இருக்கிறான்.