முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
முல்லைப்பாட்டு
பாடியவர்:- காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்
பாடப்பட்டவன்:- தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
திணை:- முல்லைத்திணை
பாவகை:- அகவல்பா (ஆசிரியப்பா)
மொத்த அடிகள்:- 103
சங்கத்தமிழ்ச் செயலியைத் தரவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும்
சங்கத்தமிழ்
முல்லைப்பாட்டு
பாடியவர்:- காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்
பாடப்பட்டவன்:- தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
திணை:- முல்லைத்திணை
பாவகை:- அகவல்பா (ஆசிரியப்பா)
மொத்த அடிகள்:- 103
எளிய உரை:- வைதேகி
சங்கத் தமிழ் இலக்கியத்தில் பத்துப்பாட்டு என அழைக்கப்படும் தொகுதியின் ஒரு பகுதியே முல்லைப் பாட்டு. இத் தொகுதியுள் அடங்கியுள்ள நூல்களுள் மிகவும் சிறியது இதுவே. 103 அடிகளைக்கொண்ட ஆசிரியப்பா வகையில் இயற்றப்பட்டது. பாண்டிய அரசனான நெடுஞ்செழியனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு எழுதப் பட்டதாகக் கருதப்படினும், தலைவனுடைய பெயர் பாட்டில் குறிப்பிடப்படவில்லை.
முல்லைப்பாட்டு முல்லைத் திணைக்குரிய நூல், அகப்பொருள் பற்றியது. மழைக்காலத்துக்குமுன் திரும்பிவருவதாகச் சொல்லிப் போருக்குச் சென்ற தலைவன் குறித்த காலத்தில் வரவில்லை. தலைவியோ பிரிவுத் துயரம் தாழாமல் உடல் மெலிந்து வாடுகிறாள். விபரமறியச் சென்று வந்த தோழியரின் உற்சாக வார்த்தைகள் அவள் ஏக்கத்தைக் குறைக்கவில்லை. போரில் வெற்றி பெற்றுத் தலைவன் திரும்பியதும் தான் தலைவி ஆறுதலடைந்து இன்பமுறுகிறாள்.
இந்த நிகழ்ச்சிகளைக் கருவாகக் கொண்டு நப்பூதனார் என்னும் புலவர் கவிநயத்தோடு எழுதியதே முல்லைப்பாட்டு.
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல,
பாடு இமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி, . . . .[5]
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை (1-6)
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப்
பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு
கோடுகொண் டெழுந்த கொடுஞ்செல வெழிலி . . . .[5]
பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை
பொருளுரை:
முகிலானது, அகன்ற இடத்தையுடைய உலகத்தை வளைத்து, சங்கும் சக்கரமும் ஆகிய குறிகளை உடையவனும், திருமகளை அணைத்தனவுமாகிய வலிமையான கையை உடையவனும், மாபலிச் சக்கரவர்த்தி தன் கையிலே நீர் ஊற்றிய பொழுது விண்ணளவு உயர்ந்தவனுமாகிய திருமாலைப் போல், ஒலி முழங்குகின்ற குளிர்ச்சி உடைய கடல் நீரைப் பருகி வலப் பக்கமாக எழுந்து, மலைகளை இடமாகக் கொண்டு, விரைந்து சென்று, பெரிய மழையைப் பெய்த சிறுபொழுதாகிய மாலை நேரம், பிரிவுத் துன்பத்தைத் தருவதாக இருக்கின்றது.
குறிப்பு:
நனந்தலை (1) - அகன்ற இடம், ‘நனவே களனும் அகலமும் செய்யும்’ (தொல்காப்பியம், சொல்லதிகாரம், உரியியல் 78). வலன் (1) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - வலப் பக்கம். முல்லைத் திணைக்குரிய கடவுளான திருமாலும், பெரும்பொழுதாகிய கார்காலமும், சிறுபொழுதாகிய மாலைப் பொழுதும் இவ்வடிகளில் உள்ளன. நீர் செல நிமிர்ந்த மாஅல் போல (3) - வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை - மாவலி ஓர் அசுரன். திருமால் வாமன அவதாரம் எடுத்துச் சென்று ‘மூன்றடி மண் தா’ என்று இரந்து அவன் தாரை வார்த்துக் கொடுக்க, திரிவிக்கிரமனாகி நெடிது வளர்ந்து, பூமியையும் வானுலகையும் இரண்டடியாக அளந்து, மூன்றாவது அடிக்கு அவன் தலையில் காலை வைத்து அவனைத் பாதலத்தில் அழுத்தினான் என்பது புராணகதை. நேமியொடு வலம்புரி பொறித்த (12) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - இச் சங்கு சக்கர குறிகள் உத்தம விலக்கணங்கள் என்ப. இறைவனாகிய திருமாலின் கைகளிடத்தும் கால்களிடத்தும் இக்குறிகள் உள என்பர். நச்சினார்க்கினியர் உரை - ‘நேமியொடு வலம்புரி தாங்கு தடக்கை மா பொறித்த மால்’ எனச் சொற்களைப் பிரித்துக் கூட்டி, ‘சக்கரத்தோடே வலம்புரியைத் தாங்கும் பெரிய கைகளையுடைய மால்’ என்றும், ‘திருமார்பிடத்தே திருமகளை வாய்த்த மால்’ என்னும் உரை கூறுவார் நச்சினார்க்கினியர். வலன் ஏர்பு - அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1. இலக்கணம்: நன - அகலம் என பொருள் குறிக்கும் உரிச்சொல். வளைஇ - வளை என்பது வினையெச்சப் பொருள்பட வளைஇ என்று அளபெடுத்தது. தட - உரிச்சொல், பெருமைப்பண்பு குறித்து நின்றது. தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், சொல்லதிகாரம், உறியியல் 22). மாஅல் - இசைநிறை அளபெடை. பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை - முரண்தொடை. சிறு புன்மாலை (6) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - சிறுபொழுதாகிய மாலை, நச்சினார்க்கினியர் உரை - சிறுபொழுதாகிய வருத்தஞ்செய்கின்ற மாலைக் காலம், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை - சிறுபொழுதாகிய பிரிந்தோர்க்கு வருத்தஞ்செய்கின்ற மாலை. குறுந்தொகை 352 - சிறுபுன் மாலை.
சொற்பொருள்:
நனந்தலை உலகம் - அகன்ற இடத்தையுடைய உலகம், வளைஇ - வளைத்து, நேமியோடு - சக்கரத்துடன், வலம்புரி பொறித்த - வலம்புரிச் சங்கின் குறிகள் பொறிக்கப்பட்ட திருமால் (வலம்புரி - வலப்பக்கமாகச் சுற்றுக்கள் அமைந்த சங்கு), மா - திருமகள், தாங்கு தடக்கை - அணைத்த பெரிய கைகள், நீர் செல நிமிர்ந்த மாஅல் போல - மகாபலி சக்கரவர்த்தி நீரை ஊற்ற ஓரடியால் உலகத்தை அளப்பதற்காக நிமிர்ந்த திருமாலைப் போல, பாடு இமிழ் பனிக்கடல் - ஒலி முழங்குகின்ற குளிர்ச்சி உடைய கடல், பருகி - குடித்து, வலன் ஏர்பு - வலப் பக்கமாக எழுந்து, வலிமையுடன் எழுந்து, கோடு கொண்டு எழுந்த - மலைகளை இடமாகக் கொண்டு, கொடுஞ் செலவு எழிலி - விரைந்து செல்லும் முகில், பெரும் பெயல் பொழிந்த - பெரிய மழையைப் பெய்த, சிறு புன் மாலை - சிறிய புல்லிய மாலை நேரம், பிரிவுத் துன்பத்தைத் தரும் மாலை நேரம்
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு
நாழி கொண்ட நறு வீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது, . . . .[10]
பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்பச், . . . .[7 -11]
யாழிசை யினவண் டார்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறுவீ முல்லை
யரும்பவி ழலரி தூஉய்க் கைதொழுது . . . .[10]
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச்
பொருளுரை:
அரிய காவலுடைய பழைய ஊர் அருகில் போய், யாழ் இசையைப் போன்று வண்டுகள் ஆரவாரிக்க, நாழியில் நெல்லுடன் கொண்ட நறுமணமான மலர்களையுடைய முல்லைக் கொடியின் அரும்புகளில் புதிதாக மலரும் பூக்களைச் சிதறி, கடவுளைக் கையாலே தொழுது, வயதில் முதிர்ந்த பெண்கள் நற்சொல்லுக்காகக் காத்து நின்றனர்.
குறிப்பு:
மேற்கோள்: நெடுநல்வாடை 43 - நெல்லும் மலரும் தூஉய்க்கை தொழுது, முல்லைப்பாட்டு 8-10 - நெல்லொடு நாழி கொண்ட நறு வீ முல்லை அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது, விரிச்சி (11), நன்மொழி (17), வாய்ப்புள் (18) என்பன ஒரு பொருள் சொற்கள். விரிச்சி: நற்றிணை 40 - விரிச்சி நிற்ப, குறுந்தொகை 218 - விரிச்சியும் நில்லாம், புறநானூறு 280 - விரிச்சி ஓர்க்கும், முல்லைப்பாட்டு 11 - விரிச்சி நிற்ப. இலக்கணம்: தூஉய் - இன்னிசை அளபெடை.
சொற்பொருள்:
அருங்கடி - பகைவர் புக முடியாத அரிய காவல், மூதூர் - பழைய ஊர், மருங்கில் - அருகில், போகி - போய், யாழ் இசை - யாழ் இசை, இன வண்டு - வண்டுகளின் கூட்டம், ஆர்ப்ப - ஒலிக்க, நெல்லொடு நாழி கொண்ட - நாழியில் நெல்லுடன் கொண்ட, நறு - நறுமணம், வீ - மலர்கள், முல்லை - முல்லை, அரும்பு அவிழ் அலரி - அரும்புகளிலிருந்து மலரும் மலர்கள், தூஉய்க் கைதொழுது - தூவித் தொழுது, பெரு முது - மிகவும் முதிர்ந்த, பெண்டிர் - பெண்கள், விரிச்சி - நல்ல சொல்லுக்காக, நிற்ப - நிற்க
உறு துயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், “கைய
கொடுங்கோல் கோவலர் பின் நின்று உய்த்தர, . . . .[15]
இன்னே வருகுவர் தாயர்” என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம், அதனால்,
நல்ல நல்லோர் வாய்ப்புள், தெவ்வர்
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து
வருதல் தலைவர் வாய்வது, நீ நின் . . . .[20]
பருவரல் எவ்வம் களை மாயோய், எனக்
காட்டவும் காட்டவும் காணாள், கலுழ் சிறந்து
பூப்போல் உண்கண் புலம்பு முத்து உறைப்பக், . . . .[12 - 23]
னுறுதுய ரலமர னோக்கி யாய்மக
ணடுங்குசுவ லசைத்த கையள் கைய
கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர . . . .[15]
வின்னே வருகுவர் தாய ரென்போள்
நன்னர் நன்மொழி கேட்டன மதனா
னல்ல நல்லோர் வாய்ப்புட் டெவ்வர்
முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து
வருத றலைவர் வாய்வது நீநின் . . . .[20]
பருவர லெவ்வங் களைமா யோயெனக்
காட்டவுங் காட்டவுங் காணாள் கலுழ்சிறந்து
பூப்போ லுண்கண் புலம்புமுத் துறைப்பக்
பொருளுரை:
சிறிய கயிற்றால் கட்டப்பட்ட இளம் கன்றின் வருந்தி சுழல்கின்ற தன்மையைப் பார்த்த ஆயர் பெண், குளிரால் நடுங்கும் தன் தோளின் மேல் கையைக் கட்டி , அங்கு இருக்கும் கன்றுகளிடம் “கோவலர்கள் கொடிய கோலால் பின்னின்று செலுத்த, இப்பொழுதே வருவார்கள் உங்களுடைய தாய்மார்கள்” என்றாள். அதைக் கேட்ட பெண் ஒருத்தி கூறினாள், “மிகவும் நல்ல சொற்களை நாங்கள் கேட்டோம். பகைவர்களின் நிலத்தைக் கவர்ந்துக் கொண்டு, அவர்களின் திறையைப் பெற்று, போர்த்தொழிலை முடித்து வருவான் உன் தலைவன். இது உண்மை. உன் மனத்தடுமாற்றத்தினால் ஏற்பட்ட வருத்தத்தை நீக்குவாயாக, கருமை நிறமுடையவளே!”. இவ்வாறு எடுத்துக் காட்டியும் அரசி ஆறுதல் அடையவில்லை. மிகவும் கலங்கி, தன் பூப்போன்ற மையுண்ட கண்களிலிருந்து முத்துப் போலும் கண்ணீர்த் துளிகளைக் கொட்டினாள்.
குறிப்பு:
கொடுங்கோல் (15) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - அகநானூறு 17, அகநானூறு 74, அகநானூறு 195 - வளைந்த கோல், நெடுநல்வாடை 3, முல்லைப்பாட்டு 15 - கொடிய கோல், வேங்கடசாமி நாட்டார் உரை - அகநானூறு 74, அகநானூறு 195 - வளைந்த கோல், அகநானூறு 17 - கொடிய கோல், நச்சினார்க்கினியர் உரை - முல்லைப்பாட்டு 15 - கொடிய கோல். கொடுங்கோல் - பொ. வே. சோமசுந்தரனார் உரை, நெடுநல்வாடை 3 - ஆ முதலியவற்றை அலைந்து அச்சுறுத்தும் கோலாகலான் கொடுங்கோல். இனி வளைந்த கோல் எனினுமாம். கோவலன் நிரைகட்கு உணவாகிய தழைகளை வளைத்து முறித்தல் பொருட்டு தலை வளைந்த கோல். தாயர் (16) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - தாயர் என்று உயர்திணைப் பலர் பால் விகுதியேற்ற சொல்லிற்கேற்ப வருகுவர் எனப் பலர் பால் வினைமுற்றால் கூறப்பட்டது. தாயர் என்னும் பன்மைக்கு ஏற்பவே கன்றுகளும் பலவென்க. வாய்ப்புள் (18) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - வாய்ப்புள்ளாவது ஒருவன் ஒரு வினைமேற் புறப்படும் பொழுது அயலிலுள்ளார் பிறரொடு பேசும் பேச்சின்கண் தனக்கு நலம் விளைதற்குக் குறிப்பாகவாதல், வெளிப்படையானாதல் கூறினாற் போன்ற பொருளுடைய சொற்றொடர் அமைதல். இலக்கணம்: நன்னர் நன்மொழி - ஒருபொருட் பன்மொழி. ‘நர்’ விகுதிபெற்ற பண்புப்பெயர். அலமரல் - தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (தொல்காப்பியம், சொல் 310). முல்லைத் திணைக்குரிய கருப்பொருளாகிய ஆநிரைகளும், அந்நிலத்தில் வாழும் மக்களாகிய ஆயர், ஆய்ச்சியர், அவர்களுடைய தொழில் ஆகியற்றை இவ்வடிகளில் காணலாம்.
சொற்பொருள்:
சிறு தாம்பு தொடுத்த - சிறிய கயிற்றால் கட்டப்பட்ட, பசலைக் கன்றின் - இளங்கன்றினுடைய (நச்சினார்க்கினியர் உரை - வருத்தத்தையுடைத்தாகிய கன்றினுடைய), உறு துயர் நோக்கி - உற்ற துன்பத்தை நோக்கி, ஆய் மகள் - ஆயர் பெண், நடுங்கு சுவல் - நடுங்கும் தோள், அசைத்த கையள் - கட்டிய கைகளையுடையவள், கைய - கையிலே, கொடுங்கோல் - கொடிய கோல்கள், கையில் வளைந்த கோல்கள், கோவலர் - இடையர்கள், பின் நின்று உய்த்தர - பின்னால் நின்று செலுத்த, இன்னே வருகுவர் தாயர் - இப்பொழுதே வருவார்கள் உங்களுடைய தாய்மார்கள், என்போள் - என்றவள், நன்னர் நன்மொழி - மிகவும் நல்ல சொற்கள், கேட்டனம் - கேட்டோம், அதனால் - அதனால், நல்ல - நல்லது, நல்லோர் - நல்லவர்கள், வாய்ப்புள் - நல்லது நடக்கும் என்ற செய்தி, தெவ்வர் முனை கவர்ந்து - பகைவர்களின் நிலத்தைக் கொண்டு, கொண்ட திறையர் - பெற்றுக் கொண்ட திறையை உடையவராய், வினை முடித்து - போர்த்தொழிலை முடித்து, வருதல் - வருவது, தலைவர் - மன்னர், வாய்வது - உண்மை, நீ நின் பருவரல் எவ்வம் களை மாயோய் - நீ உன் மனத்தடுமாற்றத்தினால் ஏற்பட்ட வருத்தத்தை நீக்குவாயாக கருமை நிறமுடையவளே, என காட்டவும் காட்டவும் காணாள் - இவ்வாறு எடுத்துக் காட்டியும் அவள் ஆறுதல் அடையவில்லை, கலுழ் சிறந்து - மிகவும் கலங்கி, பூப்போல் - பூப்போல், உண்கண் - மையுண்ட கண்கள், புலம்பு முத்து உறைப்ப - தனித்து வீழ்கின்ற முத்துப் போலும் கண்ணீர்த் துளிகள் கொட்ட, முத்துப் போலும் கண்ணீர்த் துளிகளைத் துளிர்ப்ப
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி, . . . .[25]
வேட்டுப்புழை அருப்பம் மாட்டிக் காட்ட
இடுமுள் புரிசை ஏமுற வளைஇப்,
படு நீர்ப் புணரியின் பரந்த பாடி. . . . .[24 - 28]
சேணாறு பிடவமொடு பைம்புத லெருக்கி . . . .[25]
வேட்டுப்புழை யருப்ப மாட்டிக் காட்ட
விடுமுட் புரிசை யேமுற வளைஇப்
படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி
பொருளுரை:
காட்டாறு சூழ்ந்த அகன்ற நெடிய காட்டு இடத்தில் தொலைவில் மணக்கும் மலர்களையுடைய பிடவச் செடியுடன் ஏனைய பசுமையான புதர்களையும் வெட்டி, வேட்டுவரின் சிறிய வாயிலையுடைய அரணை அழித்து, முட்களை இட்டு மதில் கட்டி, திரை ஒலிக்கின்ற கடல் போன்ற அகன்ற பாசறையைக் கட்டினார்கள் மன்னனின் படை மறவர்கள்.
குறிப்பு:
படுநீர் (28) - நச்சினார்க்கினியர் உரை - ஒலிக்கும் நீர், பொ. வே. சோமசுந்தரனார் உரை - உண்டாகின்ற நீர். இலக்கணம்: பைம்புதல் - பண்புத்தொகை. வளைஇ - வளை என்பது வினையெச்சப் பொருள்பட வளைஇ என்று அளபெடுத்தது.
சொற்பொருள்:
கான்யாறு - காட்டு ஆறு, தழீஇய - சூழ்ந்த, அகல் நெடும் புறவில் - அகன்ற நெடிய காட்டில், சேண் நாறு பிடவமொடு - தொலைவில் மணக்கும் மலர்களையுடைய பிடவச் செடியுடன், பைம்புதல் எருக்கி - பசுமையான புதர்களை வெட்டி, வேட்டு புழை அருப்பம் - வேட்டுவரின் சிறிய வாயிலையுடைய அரண், மாட்டி - அழித்து, காட்ட - காட்டில், இடு முள் புரிசை - முட்களை இட்ட மதில், ஏமுற - காவலாக, வளைஇ - சூழ்ந்து, படுநீர் புணரி - திரை ஒலிக்கின்ற கடல், நீர் நிறைந்த கடல், பரந்த - அகன்ற, பாடி - பாசறை, படைவீடு
கவலை முற்றம் காவல் நின்ற . . . .[30]
தேம்படு கவுள சிறு கண் யானை,
ஓங்கு நிலைக் கரும்பொடு கதிர் மிடைந்து யாத்த
வயல் விளை இன்குளகு உண்ணாது, நுதல் துடைத்து,
அயில் நுனை மருப்பின் தம் கையிடைக் கொண்டெனக்,
கவை முள் கருவியின் வடமொழி பயிற்றிக் . . . .[35]
கல்லா இளைஞர் கவளம் கைப்பக், . . . .[29 - 36]
கவலை முற்றங் காவ னின்ற . . . .[30]
தேம்படு கவுள சிறுகண் யானை
யோங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந் தியாத்த
வயல்விளை யின்குள குண்ணாது நுதறுடைத்
தயினுனை மருப்பிற்றங் கையிடைக் கொண்டெனக்
கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றிக் . . . .[35]
கல்லா யிளைஞர் கவளங் கைப்பக்
பொருளுரை:
தழையால் வேயப்பட்ட கூரையுடைய ஒழுங்கான தெருவில், நாற்சந்தியின் முற்றத்தில், காவலாக, மதம் பாய்கின்ற கன்னத்தையுடைய சிறிய கண்ணையுடைய யானை ஒன்று நின்றது. உயர்ந்து வளர்ந்த கரும்பும், அதிமதுரமும், மற்றும் வயலில் விளைந்த நெற்கதிரும் நெருக்கமாகச் சேர்த்து கட்டப்பட்ட இவற்றை உண்ணாமல் அவற்றைத் தன் நெற்றியில் தடவி, தன் தும்பிக்கையைத் தந்தங்களின் மீது வைத்தது. பிளவுபட்ட கூர்மையான கருவியைத் தன் கையில் கொண்ட வட மொழியை கற்காத இளைஞன் யானையிடம் வடமொழிச் சொற்கள் சிலவற்றைக் கூறி உணவுக் கவளங்களைக் கையில் கொடுத்தான்.
குறிப்பு:
கவலை (31) - நச்சினார்க்கினியர் உரை - நாற்சந்தி. வயல் விளை (33) - பொ. வே. சோமசுந்தரனார் - வயல் விளை கதிர் என மாறுக, நச்சினார்க்கினியர் - வயலிலே விளைந்த நெற்கதிர், வடமொழி பயிற்றிக் கல்லா இளைஞர் (35-36) - வடமொழியை அடியிலே கல்லாத இளைஞர் யானைப் பேச்சான வடமொழிகளைக் கற்று பலகாற் சொல்லி. மலைபடுகடாம் - 326-327 - உரவுச் சினம் தணித்து பெரு வெளிற் பிணிமார் விரவு மொழி பயிற்றும் பாகர். இலக்கணம்: கவுள - குறிப்புப் பெயரெச்சம். யாத்த - பலவின்பாற்பெயர், கொண்டென - செய்தன என்னும் வாய்பாட்டு வினையெச்சம். தேம்படு - தேம் தேன் என்றதன் திரிபு.
சொற்பொருள்:
உவலை - சருகு, இலை, கூரை - கூரை, ஒழுகிய தெருவில் - ஒழுங்கான தெருவில், கவலை - பல தெருக்கள் கூடுமிடம், நாற்சந்தி, முற்றம் காவல் நின்ற - முற்றத்தில் காவல் நின்ற, தேம்படு கவுள - மதநீர் ஒழுகும் கன்னத்துடன், சிறு கண் யானை - சிறிய கண்ணையுடைய யானை, ஓங்கு நிலை கரும்பொடு - உயர்ந்து வளர்ந்த கரும்புடன், கதிர் - நெற்கதிர், மிடைந்து யாத்த - நெருக்கமாகக் கட்டியவற்றை, வயல் விளை - வயலில் விளைந்த, இன்குளகு - இனிய அதிமதுரம், உண்ணாது - உண்ணாமல், நுதல் துடைத்து - நெற்றியைத் துடைத்து, அயில் நுனை - கூர்மையான நுனி, மருப்பின் - தந்தத்தில், தம் கையிடைக் கொண்டென - தன்னுடைய தும்பிக்கையை இடையில் வைத்தது, கவை முள் - பிளவுபட்ட கூர்மையான, கருவியின் - கருவியின், வடமொழி - வடமொழி, பயிற்றி - கூறி, கல்லா இளைஞர் - வடமொழியில் கல்வியில்லாத இளைஞர், கவளம் கைப்ப - கவளங்களைக் கையில் கொடுக்க
முக்கோல் அசை நிலை கடுப்ப, நற்போர்
ஓடா வல்வில் தூணி நாற்றிக்,
கூடம் குத்திக் கயிறு வாங்கு இருக்கைப் . . . .[40]
பூந்தலைக் குந்தம் குத்தி கிடுகு நிரைத்து,
வாங்கு வில் அரணம் அரணமாக, . . . .[37 - 42]
முக்கோ லசைநிலை கடுப்ப நற்போ
ரோடா வல்விற் றூணி நாற்றிக்
கூடங் குத்திக் கயிறுவாங் கிருக்கைப் . . . .[40]
பூந்தலைக் குந்தங் குத்திக் கிடுகுநிரைத்து
வாங்குவி லரண மரண மாக
பொருளுரை:
ஆடையைக் காவிக்கல்லில் தோய்த்து உடுத்தும், விரதங்களைச் செய்யும் பார்ப்பான் முக்கோலில் உடையினை தொங்க வைத்ததைப் போல், நல்ல போரில் புறமுதுகு காட்டி ஓடாமைக்கு காரணமான வலிமையான வில்லைக் குத்தி, அவற்றிலே தூணிகளைத் தொங்கவிட்டு, கூடமாகக் தூண்களை நட்டி, கயிற்றை இழுத்துக் கட்டின இடத்தில், பூ வேலைப்பாடு உடைய கை வேல்களை ஊன்றிக் கேடயத்தைப் பிணித்து, இயற்றப்பட்ட வளைந்த வில்லாகிய அரணே காவலாக,
குறிப்பு:
முக்கோல் - வைணவ துறவிகளின் முக்கோல். முக்கோல் பகவர் (திரிதண்டி) - ‘உள்ளம், மெய், நா’ அடக்கியவர்கள். கலித்தொகை 9 - உரை சான்ற முக்கோலும் நெறிப்பட சுவல் அசைஇ, கலித்தொகை 126 - முக்கோல் கொள் அந்தணர். பட்டினப்பாலை 78 - கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி நடுகல்லின் அரண் போல, பட்டினப்பாலை 167 - காழ் ஊன்றிய கவி கிடுகின், முல்லைப்பாட்டு 41 - பூந்தலைக் குந்தம் குத்தி கிடுகு நிரைத்து, பெரும்பாணாற்றுப்படை 119-120 - எஃகம் வடிமணிப் பலகையொடு நிரைஇ.
சொற்பொருள்:
கல் தோய்த்து - துணியைக் காவிக்கல்லில் தோய்த்து, உடுத்த - உடுத்தும், படிவம் - விரதம், பார்ப்பான் - அந்தணன், முக்கோல் - மூன்று கம்புகள் இணைந்து கட்டப்பட்ட கோல், அசைநிலை கடுப்ப - இட்டு வைத்ததைப் போன்று (கடுப்ப - உவம உருபு), நற்போர் ஓடா - நல்ல போரில் ஓடாத, வல் வில் - வலிமையான வில், தூணி - அம்புக்கூடு, அம்புகளைக் கொள்ளும் பெட்டி, நாற்றி - தொங்கவிட்டு, கூடம் - கூடாரம், குத்தி - நட்டி, கயிறு வாங்கு - கயிற்றை இழுத்துக் கட்டின, இருக்கை - இருப்பிடம், பூந்தலை குந்தம் - தலையில் பூத்தொழில் அமைந்த கை வேல், குத்தி - நட்டி, கிடுகு நிரைத்து - கேடயங்களை வரிசையாக வைத்து, வாங்கு வில் - வளைந்த வில், அரணம் அரணமாக - அரணே தங்களுக்குக் காவலாக அமைந்த
நெடுங்காழ்க் கண்டம் கோலி அகம் நேர்பு. . . .[43 - 44]
நெடுங்காழ்க் கண்டங் கோலி யகநேர்பு
பொருளுரை:
அமைந்த வேறு பல பெரும்படைகளுக்கு நடுவில், வேறு நீண்ட குத்துக் கோல்களை நட்டி பல நிறங்களுடைய திரைச் சீலையால் பகுதிகளாகப் பிரித்தனர்.
குறிப்பு:
கண்டம் (44) - வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை - ஆகுபெயரால், பல நிறத்தால் கூறுபட்ட திரையை உணர்த்திற்று, பொ. வே. சோமசுந்தரனார் உரை - கண்டத் திரைக்கு ஆகுபெயர், கண்டம் கூறு என்ற பொருளாகலின் பல கூறுப்பட்ட நிறத்தினையுடைய திரைக்கு ஆகுபெயராய் ஆயிற்று.
சொற்பொருள்:
வேறு பல் பெரும் படை நாப்பண் - வேறு பல பெரும் படைகளின் நடுவில், வேறு ஓர் - வேறு ஓர், நெடுங்காழ்க் கண்டம் கோலி - நீண்ட குத்துக் கோல்களை நட்டி திரைச் சீலையால் பகுதிகளாகப் பிரித்து, அகம் - உள்ளே, நேர்பு - உடன்பட்டு
இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள்
விரவு வரிக் கச்சின் பூண்ட மங்கையர்,
நெய் உமிழ் சுரையர், நெடுந்திரிக் கொளீஇக்,
கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட, . . . .[45 - 49]
திரவுபகற் செய்யுந் திண்பிடி யொள்வாள்
விரவுவரிக் கச்சிற் பூண்ட மங்கையர்
நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇக்
கையமை விளக்க நந்துதொறு மாட்ட
பொருளுரை:
முன் கையில் சிறிய வளையல்களையும், அழகிய சிறிய முதுகில் கூந்தல் அசைந்து கிடப்பதையும் உடைய மகளிர், இரவைப் பகலாக்கும் ஒளியுடைய திண்ணிய கைப்பிடியுடைய வாளினை, கலந்த நிறத்தையுடைய வரிந்து கட்டிய கச்சிலில் அணிந்திருந்தனர். அவர்கள் எண்ணையை ஊற்றுகின்ற திரிக்குழாயை உடையவர்களாக, பாவை விளக்கின் கையில் உள்ள அகலில் உள்ள நீண்ட திரியைக் கொளுத்தி, அவற்றில் தீ அணையும் பொழுதெல்லாம் மீண்டும் கொளுத்தினர்.
குறிப்பு:
விரவு (47) - நச்சினார்க்கினியர் உரை - விரவின நிறத்தையுடைய. நெடுநல்வாடை 101-102 - யவனர் இயற்றிய வினை மாண் பாவை கை ஏந்தும் ஐ அகல் நிறைய நெய் சொரிந்து. இலக்கணம்: கொளீஇ - சொல்லிசை அளபெடை.
சொற்பொருள்:
குறுந்தொடி - சிறிய வளையல்கள், முன் கை - முன் கை, கூந்தல் - கூந்தல், அம் சிறுபுறத்து - அழகிய சிறிய முதுகில், இரவு பகல் செய்யும் - இரவைப் பகலாகச் செய்யும், திண் பிடி - வலிமையான கைப்பிடி, ஒள்வாள் - ஒளியுடைய வாள், விரவு - கலந்த நிறத்தையுடைய, வரி கச்சின் — வரிந்து கட்டிய கச்சிலில், பூண்ட - அணிந்த, மங்கையர் - மகளிர், நெய் உமிழ் சுரையர் - எண்ணையை ஊற்றுகின்ற திரிக்குழாயை உடையவர்கள், நெய்யை ஊற்றுகின்ற திரிக்குழாயை உடையவர்கள், நெடுந்திரி கொளீஇ - நீண்ட திரியைக் கொளுத்தி, கை அமை விளக்கம் - பாவை விளக்கின் கையில் உள்ள அகல், நந்துதொறும் மாட்ட - தீ அணையும் பொழுதெல்லாம் கொளுத்தினர்
அதிரல் பூத்த ஆடு கொடிப் படாஅர்
சிதர் வரல் அசை வளிக்கு அசைவந்தாங்குத்,
துகில் முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்கு நடைப்
பெரு மூதாளர் ஏமம் சூழ, (50 -54)
ளதிரல் பூத்த வாடுகொடிப் படாஅர்
சிதர்வர லசைவளிக் கசைவந் தாங்குத்
துகின்முடித்துப் போர்த்த தூங்க லோங்குநடைப்
பெருமூ தாள ரேமஞ் செய்ய
பொருளுரை:
நீண்ட நாக்கினையுடைய ஒளியுடைய மணிகளின் ஓசை குறைந்த நடு இரவில், மலர்களையுடைய ஆடும் அதிரல் கொடிகளும் புதர்களும் நீர்த் துவலையோடு வீசும் காற்றிற்கு அசைந்தாற்போல், தலைப்பாகைக் கட்டிய, உடம்பைப் போர்த்திய, நல்ல ஒழுக்கத்தையுடைய, காவல் பணியைப் புரியும் மிகுந்த வயதானவர் அசைந்தார்.
குறிப்பு:
நிழத்திய (50) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - ‘நுணுகுதல், பேரொலியாகாமல் சிறிது ஒலிக்க என்றவாறு’. தொல்காப்பியம் - ‘ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்’ (தொல் உரி 32). நச்சினார்க்கினியர் உரை - ‘எறிந்து விட்ட’, பாசறையில் படைஞர் இனித் துயில் கொள்க என்பதன் பொருட்டு மணி ஒலிப்பர் என்பது அவர் கருத்து. இலக்கணம்: படாஅர் - இசை நிறை அளபெடை. ஆங்கு - உவம உருபு. அசைவந்த - பெயரெச்சம்.
சொற்பொருள்:
நெடு நா - நீண்ட நாக்கு, ஒண் மணி - ஒளியுடைய மணி, நிழத்திய - குறைந்த, நடுநாள் - நடு இரவு, அதிரல் - புனலி மலர்கள், காட்டு முல்லை, பூத்த ஆடுகொடி - மலர்ந்த ஆடும் கொடி, படாஅர் - புதர், சிதர்வரல் அசை வளி அசைவந்தாங்கு - நீர்த் துவலையால் அசையும் காற்றிற்கு அசைந்தாற்போல், துகில் முடித்து - தலைப்பாகை கட்டி, போர்த்த - துணியால் உடம்பைப் போர்த்திய, தூங்கல் - அசைதல், ஓங்கு நடை - பெரிய ஒழுக்கம், பெருமூதாளர் - மிகவும் வயதானவர், ஏமம் - காவல், சூழ - சூழ
தொழுது காண்கையர் தோன்ற வாழ்த்தி,
“எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்! நின்
குறு நீர்க் கன்னல் இனைத்து” என்று இசைப்ப, . . . .[55 - 58]
டொழுதுகாண் கையர் தோன்ற வாழ்த்தி
யெறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்நின்
குறுநீர்க் கன்ன லினைத்தென் றிசைப்ப
பொருளுரை:
நாழிகையை அளந்து அறியும் பொய்க்காதவர்கள், மன்னனை வணங்கி, கூப்பிய கையினராகத் தோன்றி, அவனை வாழ்த்தி, “மோதும் அலைகளையுடைய கடலால் சூழ்ந்த உலகத்தை வெல்வதற்கு செல்பவனே! சிறிய அளவில் நீர் உள்ள உன்னுடைய வட்டிலில் இன்ன நேரம்” என்று சொல்ல,
குறிப்பு:
அகநானூறு 43 - குறு நீர்க் கன்னல் எண்ணுநர். காண்கையர் (56) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - காணுதலையுடையோர் எனினுமாம். நச்சினார்க்கினியர் உரை - காட்சியையுடையார். இலக்கணம்: எறிநீர் கடலுக்கு, வினைத்தொகை அன்மொழி.
சொற்பொருள்:
பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள் - நாழிகையை அளந்து அறியும் பொய்க்காத மக்கள், தொழுது - வணங்கி, காண் கையர் - கூப்பிய கையினர் (காண்கையர் - காட்சி உடையவர்கள் - நச்சினார்க்கினியர் உரை), தோன்ற வாழ்த்தி - விளங்க வாழ்த்தி, எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய் - மோதும் அலைகளையுடைய கடலால் சூழ்ந்த உலகத்தை வெல்வதற்கு செல்பவனே, நின் - உன்னுடைய, குறு நீர்க் கன்னல் இனைத்து - சிறிய அளவில் நீர் உள்ள வட்டிலில் இன்ன நேரம், என்று இசைப்ப - என்று சொல்ல
மெய்ப்பை புக்க, வெருவரும் தோற்றத்து, . . . .[60]
வலி புணர் யாக்கை வன்கண் யவனர்
புலித்தொடர் விட்ட, புனை மாண் நல் இல்,
திரு மணி விளக்கம் காட்டி............. . . . .[59 - 63]
மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து . . . .[60]
வலிபுண? ரியாக்கை வன்கண் யவனர்
புலித்தொடர் விட்ட புனைமா ணல்லிற்
றிருமணி விளக்கங் காட்டித்........... . . . .[59 - 63]
பொருளுரை:
குதிரைச் சவுக்கை வளைத்து மடங்கிப் புடைத்து நெருக்கமாகக் கட்டின சட்டையையும், அச்சம் தோன்றுவதற்குக் காரணமான தோற்றத்தையும், வலிமையான உடலையும் உடைய கொடூரமான கிரேக்கர்கள் புலிச் சங்கிலியைத் தொங்கவிட்ட நல்ல இல்லத்தில் அழகான மணியைப் போன்ற விளக்கை எரிய வைத்து,
குறிப்பு:
திரு மணி விளக்கம் (63) - மாணிக்கமாகிய விளக்கு, பொ. வே. சோமசுந்தரனார் உரை - மாணிக்க மணியாகிய விளக்கு, பளிங்கு விளக்கு என்பாருமுளர்.
சொற்பொருள்:
மத்திகை - குதிரைச் சம்மட்டி, குதிரைச் சவுக்கு, வளைஇய - வளைத்து, மறிந்து - மடங்கி, வீங்கு - புடைத்து, செறிவுடை - நெருக்கமாக, மெய்ப் பை - சட்டை, புக்க - அணிந்த, வெருவரும் - அச்சம்தரும், தோற்றத்து - தோற்றத்துடன், வலி புணர் - வலிமையுடைய, யாக்கை - உடல், வன்கண் யவனர் - கொடூரமான கிரேக்கர்கள், புலித்தொடர் விட்ட - புலிச் சங்கிலி தொங்கவிட்ட, புனை மாண் நல் இல் - அலங்கரித்த மாட்சிமைப்பட்ட நல்ல வீடு, திரு மணி விளக்கம் காட்டி - அழகிய மணியைப் போன்ற விளக்கை எரிய வைத்து
எழினி வாங்கிய ஈரறைப் பள்ளியுள்,
உடம்பின் உரைக்கும் உரையா நாவின் . . . .[65]
படம் புகு மிலேச்சர் உழையர் ஆக, . . . .[63 - 66]
ணெழினி வாங்கிய யீரறைப் பள்ளியு
ளுடம்பி னுரைக்கு முரையா நாவிற் . . . .[65]
படம்புகு மிலேச்ச ருழைய ராக
பொருளுரை:
உறுதியான கயிற்றாலே திரைச்சீலையை வளைத்து, இரண்டாக்கிய அறையினுள்ளும் உள் அறையாகிய பள்ளியறையின்கண் சட்டை அணிந்த ஊமை மிலேச்சர் காவலாக அருகில் இருக்க,
குறிப்பு:
மிலேச்சர் (66) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - துருக்கர். இவர் பெலிசித்தானத்தினின்றும் வந்தவர் என்றும் பெலூச்சர் என்பதே மிலேச்சர் எனத் திரிந்து வழங்கிற்று என்றும் கூறுப. இதனால் பண்டைத் தமிழ் மன்னர்கள் யவனர் மிலேச்சர்முதலிய பிற நாட்டினரையும் தம் அரண்மனை அகப்பணி செய்தற்கு அமைத்துக் கொண்டிருந்தமை அறிக.
சொற்பொருள்:
திண் ஞாண் - திண்ணிய கயிறு, எழினி - திரைச்சீலை, வாங்கிய - வளைத்து, ஈரறை - இரண்டு அறை, பள்ளியுள் - படுக்கை அறையுள், உடம்பின் உரைக்கும் - கையாலும் முகத்தாலும் உரைக்கும், உரையா நாவின் - பேசாத நாவுடைய, படம் புகு மிலேச்சர் - சட்டை அணிந்த மிலேச்சர், உழையர் ஆக - அருகில் காவலாக இருக்க
எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண் கூர்ந்து
பிடிக் கணம் மறந்த வேழம், வேழத்துப்
பாம்பு பதைப்பன்ன பரூஉக்கை துமியத், . . . .[70]
தேம்பாய் கண்ணி நல் வலம் திருத்திச்
சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும், தோல் துமிபு
வைந்நுனைப் பகழி மூழ்கலின் செவி சாய்த்து
உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்,
ஒரு கை பள்ளி ஒற்றி, ஒருகை . . . .[75]
முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து, . . . .[67 - 76]
தெடுத்தெறி யெஃகம் பாய்தலிற் புண்கூர்ந்து
பிடிக்கண மறந்த வேழம் வேழத்துப்
பாம்புபதைப் பன்ன பரூஉக்கை துமியத் . . . .[70]
தேம்பாய் கண்ணி நல்வலந் திருத்திச்
சோறுவாய்த் தொழிந்தோ ருள்ளியுந் தோறுமிபு
வைந்நுனைப் பகழி மூழ்கலிற் செவிசாய்த்
துண்ணா துயங்கு மாசிந் தித்து
மொருகை பள்ளி யொற்றி யொருகை . . . .[75]
முடியொடு கடகஞ் சேர்த்தி நெடிதுநினைந்து
பொருளுரை:
மன்னன் போரினை விரும்புவதால், உறக்கம் பெறாமல், பலவற்றை எண்ணினான். பகைவர்கள் எடுத்து எறிந்த வேல் பாய்ந்ததால் பெண் யானைகளை மறந்த தன் ஆண் யானைகளைப்பற்றி எண்ணினான். யானைகளின் பருத்த தும்பிக்கைகள் வெட்டுப்பட்டுப் பாம்பு துடித்தாற்போல் விழுந்த போரில், தேன் பாயும் வஞ்சி மாலைக்கு நல்ல வெற்றியை உண்டாக்கி செஞ்சோற்றுக் கடனுக்காக அழிந்த தன் மறவர்களை எண்ணினான். உடம்புக்குக் காவலாக இட்ட தோல் பரிசையை அறுத்துக் கொண்டு கூரிய நுனியுடைய அம்புகள் துளைத்ததாலே தங்கள் செவியைச் சாய்த்துக் கொண்டு புல் உண்ணாமல் வருந்தும் தன் குதிரைகளைப்பற்றி நினைத்தான். ஒரு கையைப் படுக்கையின் மீது வைத்து, ஒரு கையைத் தலையுடன் கடகம் சேரும்படி வைத்து, நீண்ட நேரம் நினைத்தான்.
குறிப்பு:
கண்ணி நல் வலம் திருத்தி (71) - நச்சினார்க்கினியர் உரை - வஞ்சி மாலைக்கு நன்றாகிய வெற்றியை உண்டாக்கி. பாம்பு பதைப்பன்ன பரூஉக்கை துமிய (70) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - பரூஉக்கை பாம்பு பதைப்பன்ன துமிய என மாறுக. தோல் (72) - வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை - தோலால் இயன்ற பக்கரைக்கு ஆகுபெயர், பொ. வே. சோமசுந்தரனார் உரை - தோல் பரிசை. இலக்கணம்: பெறாஅது - இசை நிறை அளபெடை, பரூஉ - இன்னிசை அளபெடை, தேம்பாய் - தேம் தேன் என்றதன் திரிபு.
சொற்பொருள்:
மண்டு - மிக்க, அமர் - போர், நசையொடு - விருப்பத்துடன், கண்படை பெறாஅது - உறக்கம் பெறாமல், எடுத்து எறி எஃகம் பாய்தலின் - எடுத்து எறிந்த வேல் பாய்ந்ததால், புண் கூர்ந்து - புண் மிகுந்து, பிடி கணம் - மறந்த வேழம் - பெண் யானைகளை மறந்த ஆண் யானைகள், வேழத்து - யானைகளின், பாம்பு பதைப்பு அன்ன - பாம்பு துடித்தாற்போல், பரூஉக் கை - பருத்த தும்பிக்கை, துமிய - வெட்டப்பட, தேம்பாய் கண்ணி நல் வலம் திருத்தி - தேன் பாயும் வஞ்சிமாலைக்கு நல்ல வெற்றியை உண்டாக்கி, சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும் - செஞ்சோற்றுக் கடனுக்காக அழிந்த மறவர்களை எண்ணியும், தோல் துமிபு பைந்நுனைப் பகழி மூழ்கலின் - உடம்புக்கு அல்லது முகத்திற்குக் காவலாக இட்ட தோல் பரிசையை அறுத்துக் கொண்டு கூரிய நுனியுடைய அம்புகள் துளைத்ததாலே, செவி சாய்த்து உண்ணாது மா சிந்தித்தும் - தங்கள் செவியைச் சாய்த்துக் கொண்டு புல் உண்ணாமல் வருந்தும் குதிரைகளை நினைத்தும், ஒருகை பள்ளி ஒற்றி - ஒரு கையைப் படுக்கையின் மீது வைத்து, ஒருகை முடியொடு கடகம் சேர்த்தி - ஒரு கையைத் தலையுடன் கடகம் (கங்கணம்) சேரும்படி வைத்து, நெடிது நினைந்து - நீண்ட நேரம் நினைத்து
நகை தாழ்க் கண்ணி நல் வலம் திருத்தி,
அரசு இருந்த பனிக்கும் முரசு முழங்கு பாசறை
இன் துயில் வதியுநன்.............. . . . .[77 - 80]
னகைதாழ் கண்ணி நல்வலந் திருத்தி
யரசிருந்து பனிக்கு முரசுமுழங்கு பாசறை
யின்றுயில் வதியுநற்............. . . . .[80]
பொருளுரை:
பகைவரைக் குறித்து வாளைக் கொண்ட தன்னுடைய வலிய கையினால் வெட்டி வென்று, ஒளியுடைய வஞ்சி மாலைக்கு நல்ல வெற்றியை உண்டாக்கி, பகை அரசரை நடுங்கச் செய்யும் முரசு முழங்கும் பாசறையில், இனிமையாக உறங்குபவனைக்,
குறிப்பு:
பகைவர் சுட்டிய படைகொள் நோன் விரல் (77) - நச்சினார்க்கினியர் உரை - பகைவரைக் கருதி வைத்த வாளைப் பிடித்த வலியினையுடைய கையாலே வெட்டி வென்று.
சொற்பொருள்:
பகைவர் சுட்டிய படை கொள் நோன் விரல் - பகைவரைக் குறித்து வாளைக் கொண்ட தன்னுடைய வலிய விரலாலே, நகை தாழ்க் கண்ணி நல் வலம் திருத்தி - ஒளியுடைய வஞ்சிமாலைக்கு நல்ல வெற்றியை உண்டாக்கி, அரசு இருந்து பனிக்கும் - பகை அரசர் நடுங்கும், முரசு முழங்கும் பாசறை - முரசு முழங்கும் பாசறை, இன் துயில் வதியுநன் - இனிமையாக அங்கு உறங்குபவனை
நெஞ்சை ஆற்றுப்படுத்த, நிறைதபு புலம்பொடு,
நீடு நினைந்து, தேற்றியும், ஓடு வளை திருத்தியும்,
மையல் கொண்டும், ஒய்யென உயிர்த்தும்,
ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி, இழை நெகிழ்ந்து,
பாவை விளக்கில் பரூஉச் சுடர் அழல, . . . .[85]
இடம் சிறந்து உயரிய எழு நிலை மாடத்து,
முடங்கு இறைச் சொரிதரும் மாத் திரள் அருவி
இன்பல் இமிழிசை ஓர்ப்பனள் கிடந்தோள்
அஞ்செவி நிறைய ஆலின................ . . . .[80 - 89]
நெஞ்சாற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு
நீடுநினைந்து தேற்றியு மோடுவளை திருத்தியு
மையற்? கொண்டு மொய்யென வுயிர்த்து
மேவுறு மஞ்ஞையி னடுங்கி யிழைநெகிழ்ந்து
பாவை விளக்கிற் பரூஉச்சுட ரழல . . . .[85]
விடஞ்சிறந் துயரிய வெழுநிலை மாடத்து
முடங்கிறைச் சொரிதரு மாத்திர ளருவி
யின்ப லிமிழிசை யோர்ப்பனள் கிடந்தோ
ளஞ்செவி நிறைய வாலின ...................
பொருளுரை:
காணாதவளாய், துன்புற்று, தலைவனிடம் சென்ற தன்னுடைய நெஞ்சை ஆற்றுப்படுத்த, நிறைவு இல்லாத தனிமையுடன் நீண்ட நேரம் நினைத்து, தன்னைத் தேற்றியும் வழுக்கி ஓடும் தன்னுடைய வளையல்களை ஓடாமல் நிறுத்தியும், பெருமூச்சு விட்டும், அம்பினால் குத்தப்பட்ட மயிலைப் போன்று நடுங்கி, அணிகலன் நெகிழ்ந்து, பாவை விளக்கில் பருத்த சுடர் எரிய, சிறப்புப் பெற்று உயர்ந்த ஏழு அடுக்கு மாளிகையில், கூடல்வாய்களில் இருந்து விழும் பலவாக முழங்குகின்ற பெரிய திரண்ட அருவியின் இனிய இசையைக் கேட்டவாறு கிடந்தாள் அரசி. அவளுடைய காதுகள் நிரம்பும்படி இருந்தன ஒலிகள்.
குறிப்பு:
அஞ்செவி (89) - வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை - அழகிய காது, பொ. வே. சோமசுந்தரனார் உரை - அகஞ் செவி, நச்சினார்க்கினியர் உரை - அகஞ் செவி. இலக்கணம்: இலக்கணம்: பரூஉ - இன்னிசை அளபெடை.
சொற்பொருள்:
காணாள் துயர் உழந்து - காணாதவளாக துன்புற்று, நெஞ்சு ஆற்றுப்படுத்த - அவனிடம் சென்ற தன்னுடைய நெஞ்சை தன்னுடைய நெஞ்சை ஆற்றுப்படுத்த, நிறை தபு புலம்பொடு - நிறைவு கெட்ட தனிமையுடன், நீடு நினைந்து - நீண்ட நேரம் நினைத்து, தேற்றியும் ஓடு வளை திருத்தியும் - தன்னைத் தேற்றியும் ஓடும் வளையல்களை ஓடாமல் நிறுத்தியும், மையல் கொண்டும் - கலக்கம் கொண்டும், ஒய்யென உயிர்த்தும் - பெருமூச்சு விட்டும், ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி - அம்பினால் குத்தப்பட்ட மயிலைப் போன்று நடுங்கி, இழை நெகிழ்ந்து - அணிகலன் நெகிழ்ந்து, பாவை விளக்கில் பரூஉச்சுடர் அழல - பாவை விளக்கில் பருத்த சுடர் எரிய, இடம் சிறந்து உயரிய எழு நிலை மாடத்து - சிறப்புப் பெற்று உயர்ந்த ஏழு அடுக்கு மாளிகையில், முடங்கு இறை சொரிதரும் - கூடல்வாய்களில் இருந்து விழும், மாத்திரள் அருவி - பெரிய திரண்ட அருவி, இன் பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள் - பலவாக முழங்குகின்ற இனிய இசையைக் கேட்டவாறு கிடந்தாள், அம் செவி நிறைய ஆலின - அழகிய காதுகள் நிரம்பும்படி ஒலித்தன
வேண்டு புலம் கவர்ந்த ஈண்டு பெருந் தானையொடு, . . . .[90]
விசயம் வெல் கொடி உயரி, வலன் ஏர்பு
வயிரும் வளையும் ஆர்ப்ப ..................... . . . .[89 - 92]
வேண்டுபுலங் கவர்ந்த யீண்டுபெருந் தானையொடு . . . .[90]
விசயம்? வெல்கொடி யுயரி வலனேர்பு
வயிரும் வளையு மார்ப்ப.........................
பொருளுரை:
வெற்றி அடைந்து, பகை அரசர்கள் விரும்பும் நிலங்களைக் கவர்ந்து, பெரிய படையுடன், வெற்றியால் உயர்த்தப்படும் வெற்றிக் கொடியை ஏற்றி, வெற்றிக்குப் பொருந்த ஊது கொம்பும் சங்கும் முழங்க,
சொற்பொருள்:
வென்று - வெற்றி அடைந்து, பிறர் வேண்டு புலம் கவர்ந்த - பகை அரசர்கள் விரும்பும் நிலங்களைக் கவர்ந்து, ஈண்டு - இங்கு, பெருந்தானையொடு - பெரிய படையுடன், விசயம் வெல் கொடி உயரி - வெற்றியால் உயர்த்தப்படும் வெற்றிக் கொடியை ஏற்றி, வலன் நேர்பு வயிரும் வளையும் ஆர்ப்ப - வெற்றிக்குப் பொருந்த ஊது கொம்பும் (நீண்ட இசைக்கருவி) சங்கும் முழங்க
செறி இலைக் காயா அஞ்சனம் மலர,
முறி இணர்க் கொன்றை நன் பொன் காலக்,
கோடல் குவி முகை அங்கை அவிழ, . . . .[95]
தோடு ஆர் தோன்றி குருதி பூப்ப,
கானம் நந்திய செந்நிலப் பெருவழி
வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின்
திரி மருப்பு இரலையொடு மடமான் உகள,
எதிர் செல் வெண்மழை பொழியும் திங்களில், . . . .[92 - 100]
செறியிலைக் காயா வஞ்சன மலர
முறியிறைக் கொன்றை நன்பொன் காலக்
கோடற் குவிமுகை யங்கை யவிழத் . . . .[95]
தோடார் தோன்றி குருதி பூப்பக்
கான நந்திய செந்நிலப் பெருவழி
வானம் வாய்த்த வாங்குகதிர் வரகிற்
றிரிமருப் பிரலையொடு மடமா னுகள
வெதிர்செல் வெண்மழை பொழியுந் திங்களின் . . . .[100]
பொருளுரை:
நுண் மணலில் நெருங்கின இலையையுடைய காயா மலர்கள் கண்மைப் போல மலர, தளிரையும் கொத்துக்களையுமுடைய சரக்கொன்றை மரங்கள் நல்ல பொன்னைப் போன்ற மலர்களைக் கொட்ட, வெண்காந்தளின் குவிந்த மொட்டுக்கள் அழகிய கைகளைப் போல் அவிழ, இதழ்கள் நிறைந்த செங்காந்தள் குருதி போல மலர, இவ்வாறு காடு செழித்த சிவந்த முல்லை நிலத்தின் பெருவழியில் மழை பெய்ததால் வளைந்த கதிரையுடைய வரகிடத்தே, முறுக்குண்ட கொம்பினையுடைய ஆண் மான்களுடன் மென்மையான பெண் மான்கள் துள்ள, பெய்வதற்காக எதிரே செல்லும், வெண்ணிறமான மேகங்கள் பொழியும் திங்களில்,
குறிப்பு:
முல்லைப்பாட்டு 95 - கோடல் குவி முகை அங்கை அவிழ, குறுந்தொகை 167 - காந்தள் மெல்விரல், பரிபாடல் 19 - கை போல் பூத்த கமழ் குலைக் காந்தள், பொருநராற்றுப்படை 33 - காந்தள் மெல் விரல், புறநானூறு 144 - காந்தள் முகை புரை விரலின்.
சொற்பொருள்:
அயிர - நுண் மணலில், செறி இலை - அடர்ந்த இலை, காயா - காயா மலர்கள், அஞ்சனம் மலர - கண் மை போல மலர, முறி இணர் கொன்றை - தளிரையும் கொத்துக்களையுமுடைய சரக்கொன்றை, நன் பொன் - நல்ல பொன், கால - சொரிய, கோடல் - வெண்காந்தள், குவி முகை - குவிந்த மொட்டுக்கள், அங்கை - அழகிய கைகள், அவிழ -அவிழ, தோடு ஆர் தோன்றி - இதழ்கள் நிறைந்த செங்காந்தள், குருதி பூப்ப - குருதி போல மலர, கானம் நந்திய செந்நிலம் பெரு வழி - காடு செழித்த சிவந்த/செவ்விய முல்லை நிலத்தின் பெருவழி, வானம் வாய்த்த - மழை பெய்யப்பெற்ற, வாங்கு கதிர் வரகின் - வளைந்த கதிரையுடைய வரகிடத்தே, திரி மருப்பு இரலையொடு - முறுக்குண்ட கொம்பினையுடைய ஆண் மான்களுடன், மடமான் உகள - மென்மையான பெண் மான்கள் துள்ள, எதிர் செல் - பெய்வதற்காக எதிரே செல்லும், வெண்மழை பொழியும் திங்களில் - வெண்முகில் பொழியும் மாதத்தில் (ஆவணித் திங்கள்)
துனை பரி துரக்கும் செலவினர்,
வினை விளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே. . . . .[101 - 103]
துனைபரி துரக்குஞ் செலவினர்
வினைவிளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே. . . .[103]
பொருளுரை:
முதிர்ந்த காயையுடைய வள்ளியங்காடு பின்னால் ஒழியும்படி, விரைந்து செல்லும் குதிரையைத் தேரோட்டி மேலும் தூண்டிச் செலுத்த, உயர்ந்த தேரில் பூட்டிய போர்த் தொழிலில் சிறந்த குதிரைகள் வந்தன.
குறிப்பு:
இலக்கணம்: மாவே - ஏகாரம் அசை நிலை. துனை - கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).
சொற்பொருள்:
முதிர் காய் வள்ளியங் காடு - முதிர்ந்த காயையுடைய வள்ளியங்காடு, பிறக்கு ஒழிய - பின்னால் ஒழிய, துனை பரி துரக்கும் செலவினர் - விரைந்து செல்லும் குதிரையை மேலும் தூண்டிச் செலுத்துபவர், வினை விளங்கு - போரில் விளங்கும், நெடுந்தேர் பூண்ட மாவே - உயர்ந்த தேரில் பூட்டிய குதிரைகள்
இந்நூலின் இறுதியில் இரண்டு தனிப்பாடல்கள் உள்ளன. அவை ‘பத்துப்பாட்டு’ என்னும் தலைப்பிட்டுப் பத்து நூல்களைத் தொகுத்தவரால் எழுதிச் சேர்க்கப்பட்டவை. இந்தப் பாடல்கள் வெண்பா யாப்பில் அமைந்துள்ளன. அவை இந்தப் பாட்டுக்கு அமைந்த ஒருவகை விளக்கம்போல் காணப்படுகின்றன.
சென்று அடைந்த நோக்கம் இனிப் பெறுவது - என்றுகொல்
கன்று எடுத்து ஓச்சி, கனி விளவின் காய் உகுத்து,
குன்று எடுத்து நின்ற நிலை?.......................[1]
சென்றடைந்த நோக்க மினிப்பெறுவ- தென்றுகொல்
கன்றெடுத் தோச்சிக் கனிவிளவின் காயுகுத்துக்
குன்றெடுத்து நின்ற நிலை . . . .[1]
பொருளுரை:
கன்றைக் குணிலாக்கிக்கொண்டு எறிந்து விளாங்கனியை உதிர்த்தும், குன்றைக் குடையாக்கிப் பிடித்தும் நின்ற மாயவனே! ஆய்ச்சி விரிச்சி கேட்டுக்கொண்டு நின்றாளே, அவள் கெட்ட விரிச்சிச்சொல் நிறைவேறப்போவது என்றோ? நீயே அறிவாய்.
துனையும் துனைபடைத் துன்னார் - முனையுள்
அடல் முகந்த தானை அவர் வாராமுன்னம்,
கடல் முகந்து வந்தன்று, கார்!........................[2]
துனையுந் துனைபடைத் துன்னார்- முனையுள்
அடன்முகந்த தானை யவர்வாரா முன்னம்
கடன்முகந்து வந்தன்று கார் . . . .[2]
பொருளுரை:
பகைவர் படையை வென்று அவர் படையையும் தன் படையுடன் சேர்த்துக்கொண்டு, தன் தேரில் பூட்டிய பொன்னணிக் குதிரையைத் தூண்டி ஓட்டிக்கொண்டு மீண்டு வருவதற்கு முன்பு கார்காலம் வந்துவிட்டது.