மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
மலைபடுகடாம்
பாடியவர்:- இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார்
பாடப்பட்டவன்:- நன்னன் வேண்மான்
திணை:- பாடாண் திணை
துறை:- ஆற்றுப்படை
பாவகை:- அகவல்பா (ஆசிரியப்பா)
மொத்த அடிகள்:- 583
சங்கத்தமிழ்ச் செயலியைத் தரவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும்
சங்கத்தமிழ்
மலைபடுகடாம்
பாடியவர்:- இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார்
பாடப்பட்டவன்:- நன்னன் வேண்மான்
திணை:- பாடாண் திணை
துறை:- ஆற்றுப்படை
பாவகை:- அகவல்பா (ஆசிரியப்பா)
மொத்த அடிகள்:- 583
சங்க இலக்கியத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
- 01. கூத்தர் பலவகை வாத்தியங்களைப் பையிலிட்டு எடுத்துச் செல்லுதல் (1-13)
- 02. அவர்கள் கடந்து வந்த மலை வழி (14-18)
- 03. பேரியாழின் இயல்பு (19-37)
- 04. பாணரும் விறலியரும் சூழ இருந்த கூத்தர் தலைவனை அழைத்தல் (38-50)
- 05. 'நன்னனை அடைந்தால் நல்ல பயன் பெறுவீர்கள்' எனல் (51-65)
- 06. கூத்தன் தான் கூறப் போகும் செய்திகளைத் தொகுத்துக் கூறுதல் (66-94)
- 07. வழியினது நன்மையின் அளவு கூறுதல் (95-144)
- 08. கானவர் குடியின் இயல்பு (145-157)
- 09. வழியிலுள்ள சிற்றூர்களில் நிகழும் விருந்து (158-169)
- 10. நன்னனது மலைநாட்டில் பெறும் பொருள்கள் (170-185)
- 11. மலைநாட்டில் நெடுநாள் தங்காது, நிலநாட்டில் செல்ல வேண்டுதல் (186-192)
- 12. பன்றிப் பொறியுள்ள வழிகளில் பகலில் செல்லவேண்டும்' எனல் (193-196)
- 13. பாம்புகள் உறையும் இடத்தைக் கடந்து செல்லும் வகை (197-202)
- 14. கவண் கற்கள் படாமல் தப்பிச் செல்லவேண்டும் விதம் (203-210)
- 15. காட்டாற்று வழிகளில் வழுக்கும் இடங்களைக் கடத்தல் (211-218)
- 16. பாசி படிந்த குளக் கரைகளைக் கடந்து செல்லுதல் (219-224)
- 17. காரி உண்டிக் கடவுளைத் தொழுதல் (225-232)
- 18. மலைக் காட்சிகளில் ஈடுபடின், வழி தப்பும் என்று அறிவுறுத்தல் (233-241)
- 19. இரவில் குகைகளில் தங்குதல் (242-255)
- 20. விடியற்காலத்தில் செம்மையான பாதையில் செல்லுமாறு கூறுதல் (256-258)
- 21. வழியில் மேற்கொள்ளவேண்டும் முன் எச்சரிக்கைகள் (259-270)
- 22. குறவரும் மயங்கும் குன்றத்தில் செய்யவேண்டுவன (271-277)
- 23. வழி மயங்கினார்க்குக் குறவர்கள் வந்து உதவிபுரிதல் (278-291)
- 24. மலையில் தோன்றும் பலவித ஒலிகளைக் கேட்டல் (292-344)
- 25. நன்னனது மலை வழியில் செல்லும் வகை (345-360)
- 26. குன்றும் குகைகளும் நெருங்கிய மலை வழி (361-375)
- 27. அரண்களும் நடுகற்களும் உள்ள வழிகள் (376-389)
- 28. புதியவர்களுக்கு வழி தெரிய, புல்லை முடிந்து இட்டுச் செல்லுதல் (390-393)
- 29. நன்னனுடைய பகைவர் இருக்கும் அரு நிலங்கள் (394-403)
- 30. கோவலரது குடியிருப்பில் பெறும் உபசாரம் (404-420)
- 31. நாடுகாக்கும் வேடர் திரள்களின் செய்கை (421-425)
- 32. மாலை சூடி, நீர் அருந்தி, குளித்துச் செல்லுதல் (426-433)
- 33. புல் வேய்ந்த குடிசைகளில் புளிங் கூழும் பிறவும் பெறுதல் (434-448)
- 34. நன்னனது தண் பணை நாட்டின் தன்மை (449-453)
- 35. உழவர் செய்யும் உபசாரம் (454-470)
- 36. சேயாற்றின் கரைவழியே செல்லுதல் (471-477)
- 37. நன்னனது மூதூரின் இயல்பு (478-487)
- 38. மூதூர் மக்கள் விருந்து எதிர்கொள்ளுதல் (488-496)
- 39. அரண்மனை வாயிலில் காணும் பொருள் வளம் (497-529)
- 40. முற்றத்தில் நின்று விறலியர் நன்னனைப் போற்றுதல் (530-538)
- 41. கூத்தர்கள் நன்னனைப் போற்றுதல் (539-543)
- 42. நன்னன் கூறும் முகமன் உரை (544-546)
- 43. நாளோலக்கத்திற்கு அழைத்துச் செல்லுதல் (547-549)
- 44. நன்னனது குளிர்ந்த நோக்கம் (550-560)
- 45. நன்னனது கொடைச் சிறப்பு (561-583)
விண் அதிர் இமிழ் இசை கடுப்ப பண் அமைத்து
திண் வார் விசித்த முழவொடு ஆகுளி
நுண் உருக்குற்ற விளங்கு அடர் பாண்டில்
மின் இரும் பீலி அணி தழை கோட்டொடு . . . .[5]
கண் இடை விடுத்த களிற்று உயிர் தூம்பின்
இளி பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு
விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ
நடுவு நின்று இசைக்கும் அரி குரல் தட்டை
கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி . . . .[10]
நொடி தரு பாணிய பதலையும் பிறவும்
கார் கோள் பலவின் காய் துணர் கடுப்ப
நேர் சீர் சுருக்கி காய கலப்பையிர் . . . .[1 - 13]
விண்ணதிர் இமிழிசை கடுப்பப் பண்ணமைத்துத்
திண்வார் விசித்த முழவொ டாகுளி
நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில்
மின்னிரும் பீலி அணித்தழைக் கோட்டொடு . . . .[5]
கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பின்
இளிப்பயிர் இமிரும் குறும்பரந் தூம்பொடு
விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ
நடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டை
கடிகவர் பொலிக்கும் வல்வாய் எல்லரி . . . .[10]
நொடிதரு பாணிய பதலையும் பிறவும்
கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப
நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்
பொருளுரை:
பையில் முழவு முதலான இசைக்கருவிகளை வைத்துக்கொண்டு செல்பவர்களைப் பார்த்து ஆற்றுப்படுத்தும் புலவர் சொல்லத் தொடங்குகிறார். கூத்தர் கூட்டத்தில் பாணன் வைத்திருக்கும் இசைக்கருவிகள் பேரியாழ் (பாடலடி 37) மீட்டும் பாணன் (பாடலடி 40) தன் இசைக் கருவிகளைத் துணிப்பையில் போட்டுத் தோளில் சுமந்துகொண்டு செல்கிறான். கலப்பை - கலம் என்னும் சொல் பொது வகையில் இசைக் கருவிகளையும், சிறப்பு வகையால் யாழையும் குறிக்கும். எனவே இவற்றை வைத்திருக்கும் பை கலப்பை. முழவு - யாழோசை மழை பொழிவது போல எல்லாராலும் விரும்பப்படும் தன்மையதாக இருக்கும். முழவு ஓசை மழை பொழியும்போதே முழங்கும் இடி போல இருக்கும். ஆகுளி - யாழோடும் முழவோடும் சேர்ந்து முழங்குவது ஆகுளி என்னும் சிறுபறை. (கஞ்சரா?) பாண்டில் - வெண்கலத்தை உருக்கிச் செய்த தாளம். உயிர்த்தூம்பு - யானை பிளிறுவது போல உயிர்ப்பொலி தரும் கொம்பு. அதன் வளைவமைதி தன் தலையைப் பின்புறமாகத் திருப்பிப் பார்க்கும் மயிலின் பீலிபோல் அமைந்திருந்தது. குறும்பரந்தூம்பு - மெல்லிய இரங்கல் ஓசை தரும் ஊதுகொம்பு. குழல் - அழைத்திழுக்கும் ஒலிதரும் குழல்.(கண்ணன் குழலோசை ஆடுமாடுகளை அழைத்திருத்தியதை இங்கு நினைவு கூரலாம்.) தட்டை - ஒருபுறம் கோலால் உரசி இழுத்தும் மறுபுறம் கோலால் தட்டியும் இசை எழுப்பும் உருமிமேள வகை. (சப்பளாக் கட்டையுமாம்). எல்லரி - மோத ஒலிக்கும் பெரிய தாளவகை. பதலை - கடம் என்று நாம் கூறும் பானை. மற்றும் பல. இவற்றை யெல்லாம் வேரில் காய்த்துத் தொங்கும் பலாக்காய் போலப் பாணர்கள் சுமந்து சென்றனர்.
படுத்து வைத்து அன்ன பாறை மருங்கின் . . . .[15]
எடுத்து நிறுத்து அன்ன இட்டு அரும் சிறு நெறி
தொடுத்த வாளியர் துணை புணர் கானவர்
இடுக்கண் செய்யாது இயங்குநர் இயக்கும் . . . .[14 - 18]
படுத்துவைத் தன்ன பாறை மருங்கின் . . . .[15]
எடுத்துநிறுத் தன்ன இட்டருஞ் சிறுநெறி
தொடுத்த வாளியர் துணைபுணர் கானவர்
இடுக்கண் செய்யா தியங்குநர் இயக்கும்
பொருளுரை:
நீங்கள் செல்லும் வழியில் வழிப்பறி செய்ய அம்பு தொடுத்துக்கொண்டு காத்திருக்கும் கானவர் உங்களுக்குத் துன்பம் செய்யமாட்டார்கள். துணைபுணர் கானவர், துணைபுரியும் கானவர். கண்ணுக்கு எட்டிய தூரம் நெருங்கித் தழைத்திருக்கும் மரம் அடர்ந்த காட்டில் படுக்க வைத்தது போன்ற பாறைகளும், நிறுத்தி வைத்தது போன்ற பாதை வழிகளும் இருக்கும். வில்லம்பு வைத்திருக்கும் கானவர் அந்த இடங்களில் உங்களுக்குத் துணையாக வருவர். துன்பம் செய்யாமல் வழி காட்டுவர்.
இடி சுர நிவப்பின் இயவு கொண்டு ஒழுகி . . . .[20]
தொடி திரிவு அன்ன தொண்டு படு திவவின்
கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா
குரல் ஓர்த்து தொடுத்த சுகிர் புரி நரம்பின்
அரலை தீர உரீஇ வரகின்
குரல் வார்ந்து அன்ன நுண் துளை இரீஇ . . . .[25]
சிலம்பு அமை பத்தல் பசையொடு சேர்த்தி
இலங்கு துளை செறிய ஆணி முடுக்கி
புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்து
புதுவது போர்த்த பொன் போல் பச்சை
வதுவை நாறும் வண்டு கமழ் ஐம்பால் . . . .[30]
மடந்தை மாண்ட நுடங்கு எழில் ஆகத்து
அடங்கு மயிர் ஒழுகிய அம் வாய் கடுப்ப
அகடு சேர்பு பொருந்தி அளவினில் திரியாது
கவடு பட கவைஇய சென்று வாங்கு உந்தி
நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை . . . .[35]
களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின்
வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர் பேரியாழ் . . . .[19 - 37]
இடிச்சுர நிவப்பின் இயவுக்கொண் டொழுகித் . . . .[20]
தொடித்திரி வன்ன தொண்டுபடு திவவின்
கடிப்பகை யனைத்தும் கேள்வி போகாக்
குரலோர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பின்
அரலை தீர உரீஇ வரகின்
குரல்வார்ந் தன்ன நுண்டுளை இரீஇச் . . . .[25]
சிலம்பமை பத்தல் பசையொடு சேர்த்தி
இலங்குதுளை செறிய ஆணி முடுக்கிப்
புதுவது புனைந்த வெண்கை யாப்பமைத்துப்
புதுவது போர்த்த பொன்போற் பச்சை
வதுவை நாறும் வண்டுகமழ் ஐம்பால் . . . .[30]
மடந்தை மாண்ட நுடங்கெழில் ஆகத்து
அடங்குமயிர் ஒழுகிய அவ்வாய் கடுப்ப
அகடுசேர்பு பொருந்தி அளவினில் திரியாது
கவடுபடக் கவைஇய சென்றுவாங் குந்தி
நுணங்கர நுவறிய நுண்ணீர் மாமைக் . . . .[35]
களங்கனி யன்ன கதழ்ந்துகிளர் உருவின்
வணர்ந்தேந்து மருப்பின் வள்ளுயிர்ப் பேரியாழ்
பொருளுரை:
அருப்பம் என்பது மக்கள் செல்லாத அருகிய இடங்கள். பாண! அருப்பத்தில் நீங்கள் செல்லக் கூடாது. மக்களின் கால்தடம் பதிந்த இயவு வழிகளிலேயே செல்ல வேண்டும். பேரியாழின் உறுப்புக்கள் திவவு - முறுக்கிய வளையல்போல் இருக்கும். கேள்வியாழ் - கடியப்படும் பகை நரம்புகளில் விரல் போகாமல் இசைத்துப் பழக்கப்பட்டது. நரம்பு - செம்மையாக முறுக்கப்பட்டுள்ளதால் குரலின் ஒலிபோல் இனிமையாக ஒலிக்கும். அரலை - அரற்றும் ஒலி தராதது. துளை - நரம்பு கோத்திருக்கும் துளை. இது வரகு அரிசி போல் இருக்கும். பத்தல் - இங்கிருந்துதான் மலையின் எதிரொலி போல் யாழின் மிழலை எதிரொலிக்கும். ஆணி - புதிய வெண்ணரம்புகள் ஆணியில் கட்டித் துளையில் முடுக்கப்பட்டிருக்கும். பச்சை - பத்தலுக்குத் தீட்டப்பட்ட இலை வண்ணம். உந்தி - மணம் கமழும் கூந்தல் இரு பிளவாய் மார்பில் விழும். மடந்தையின் கொப்புளில் அழகுடன் மயிர் ஒழுகியிருப்பது போன்ற வரைவுகளுடன் இரு பிளவாய்க் கிடக்கும் யாழின் வயிறு. மாமை - காதல் பருவத்தில் பெண்கள் மேனியில் தோன்றும் பொன் நிறம். இது பொன்னை அரத்தால் அராவும்போது உதிர்ந்த துகள்போல் அழகு தரும் நீர்மை பட்டுக் கிடக்கும். யாழிலும் இப்படிப்பட்ட அழகமைப்பு தீட்டப்பட்டிருந்தது. உரு - களாப்பழம் போன்ற கருமையால் பளபளக்கும் பாங்கினைக் கொண்டிருந்தது. பெண்ணின் இந்தப் பளபளப்புப் பொலிவை யாழும் கொண்டிருந்தது. அது பேரியாழ். பேரியாழ் வளைந்து நிமிர்ந்த கொம்பு போன்றது. யாழிசை : சீறியாழின் இசை - இன்பத்தில் தோய்த்துக் கேட்போரை மயக்கும். பேரியாழின் உயிர்ப்பிசை எழுச்சியூட்டும்.
இசை பெறு திருவின் வேத்தவை ஏற்ப
துறை பல முற்றிய பை தீர் பாணரொடு . . . .[40]
உயர்ந்து ஓங்கு பெரு மலை ஊறு இன்று ஏறலின்
இசைபெறு திருவின் வேத்தவை ஏற்பத்
துறைபல முற்றிய பைதீர் பாணரொடு . . . .[40]
உயர்ந்தோங்கு பெருமலை ஊறின் றேறலின்
பொருளுரை:
பேரியாழ்ப் பாணரோடு அவர்களின் தலைவன் உயர்ந்தோங்கிய மலையில் ஏறுகிறான். யாழை இசைத்துக்கொண்டே களைப்புத் துன்பம் தெரியாமல் பாணர் கூட்டம் ஏறுகிறது. அவர்களிடம் இசைச் செல்வம் இருந்தது. அதனை அவர்கள் அருள்தரும் பாங்கில் அள்ளி வழங்குவார்கள். அமைந்த விருப்பத்தோடு பண்ணிசைத்து வழங்குவார்கள்.
துளங்கு இயல் மெலிந்த கல் பொரு சீறடி
கணம் கொள் தோகையின் கதுப்பு இகுத்து அசைஇ
விலங்கு மலைத்து அமர்ந்த சே அரி நாட்டத்து . . . .[45]
இலங்கு வளை விறலியர் நின் புறம் சுற்ற
துளங்கியல் மெலிந்த கல்பொரு சீறடிக்
கணங்கொள் தோகையிற் கதுப்பிகுத் தசைஇ
விலங்குமலைத் தமர்ந்த சேயரி நாட்டத்து . . . .[45]
இலங்குவளை விறலியர் நிற்புறஞ் சுற்றக்
பொருளுரை:
கலைக் கண்ணோட்டம் உள்ளவரைக் கண்ணுளர் என்கிறோம். யாழைக் கலம் என்றும் வழங்கினர். இவற்றின் வழியே பாணரைக் கலம்பெறு கண்ணுளர் என்று போற்றுகின்றனர். வெறி பிடிக்காத நாயின் நாக்கைப் போன்று ஈரமும் மென்மையும் கொண்ட காலடிகளை உடையவர்கள் விறலியர். தோகை விரித்தாடும் மயில்போல் அவர்கள் தம் கூந்தலை விரித்துக்கொண்டு ஆடுவர். மான் மருண்டும் மலைத்தும் பார்ப்பது போலத் தம் செவ்வரிக் கண்களின் பார்வையை வீசி ஆடுவார்கள். உள்ளக் கருத்தை உடலசைவால் வெளிப்படுத்தி யாழிசைக்கு ஏற்ப ஆடுபவள் விறலி. இவர்கள் தலைவனின் ஆணைக்காகக் காத்துக்கொண்டு எப்போதும் அவனைச் சுற்றியே சென்று கொண்டிருந்தனர்.
புனல் கால்கழீஇய மணல் வார் புறவில்
புலம்பு விட்டு இருந்த புனிறு இல் காட்சி
கலம் பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ . . . .[38 - 50]
புனல்கால் கழீஇய மணல்வார் புறவில்
புலம்புவிட் டிருந்த புனிறில் காட்சிக்
கலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ . . . .[50]
பொருளுரை:
இவர்கள் நடந்து செல்லும்போது மர நிழலில் தங்கினர். அந்த நிழல் குளத்தில் குளிக்காமலேயே குளத்தில் குளிப்பதுபோல் குளுமையாக இருந்தது. புனிறு என்பது தாய் பிள்ளைப் பேற்றின்போது அடையும் துன்பம். மலை ஏறும்போது உண்டான பிள்ளைப்பேறு போன்ற துன்பம் நிழலில் தங்கும்போது போய்விட்டது.
மீமிசை நல் யாறு கடல் படர்ந்து ஆஅங்கு
யாம் அவணின்றும் வருதும் நீயிரும்
மீமிசை நல்யாறு கடற்படர்ந் தாஅங்கு
யாமவ ணின்றும் வருதும் நீயிரும்
பொருளுரை:
ஆற்றுப்படுத்தும் புலவர் பாணனுக்குச் சொல்கிறார். மீமிசை நல்யாறு - மலையில் உதிர்ந்த மலர்களை ஆற்றுநீர் சுமந்துகொண்டு கடலை நோக்கி வருவதுபோல் நன்னன் அள்ளாமலும் அளக்காமலும் கொட்டிய வளங்களைச் சுமந்துகொண்டு நாங்கள் அவனது செங்கண்மா நகரிலிருந்து எங்களது இருப்பிடம் நோக்கிச் செல்கையில் இங்கு வந்துள்ளோம்.
துனை பறை நிவக்கும் புள் இனம் மான . . . .[55]
புனை தார் பொலிந்த வண்டு படு மார்பின்
வனை புனை எழில் முலை வாங்கு அமை திரள் தோள்
மலர் போல் மழை கண் மங்கையர் கணவன்
துனைபறை நிவக்கும் புள்ளின மானப் . . . .[55]
புனைதார்ப் பொலிந்த வண்டுபடு மார்பின்
வனைபுனை எழின்முலை வாங்கமைத் திரடோள்
மலர்போல் மழைக்கண் மங்கையர் கணவன்
பொருளுரை:
கனிமழை பொழியும் கானத்தைச் சிறகடிக்கும் பறவைகள் தேடிக்கொண்டு விரைந்து [துனை] பரப்பது போல மாலையில் வண்டு மொய்க்கும் மார்பினை உடையவன் அவன். அவனது மனைவியரின் கண்கள் மலர்போல் பூத்து மழைபோல் குளிர்ந்து அவனது மார்பை மொய்த்துக் கொண்டிருக்கும். அப் பெண்டிரின் தோள் மூங்கில் போல் வளைந்தும், முலை முகிழ்த்தும் கிடக்கும். குறிப்பிட்டுச் சொன்னால் அன்புமழை பொழியும் அழகியரின் கணவன் அவன்.
இசை நுவல் வித்தின் நசை ஏர் உழவர்க்கு . . . .[60]
புது நிறை வந்த புனல் அம் சாயல்
மதி மாறு ஓரா நன்று உணர் சூழ்ச்சி
வில் நவில் தட கை மேவரும் பெரும் பூண்
நன்னன் சேய் நன்னன் படர்ந்த கொள்கையொடு
உள்ளினிர் சேறிர் ஆயின் பொழுது எதிர்ந்த . . . .[51 - 65]
இசைநுவல் வித்தின் நசையே ருழவர்க்குப் . . . .[60]
புதுநிறை வந்த புனலஞ் சாயல்
மதிமா றோரா நன்றுணர் சூழ்ச்சி
வின்னவில் தடக்கை மேவரும் பெரும்பூண்
நன்னன்சேய் நன்னற் படர்ந்த கொள்கையொடு
உள்ளினிர் சேறிர் ஆயிற் பொழுதெதிர்ந்த . . . .[65]
பொருளுரை:
நன்னனை நாடி நசை ஏர் உழவர், அவன் நன்னன் சேய் நன்னன். அவனிடம் செல்வீர் ஆயின், நல்லேர் உழவர் என்றும், சொல்லேர் உழவர் என்றும் வள்ளுவர் குறிப்பிடுவதை அறிவோம். நெல்லும் சொல்லும் விளைய அவர்கள் உழவு செய்பவர்கள். இங்கு ஆசையை ஏராகப் பூட்டி உழும் மறவர் குலம் வருகிறது. இவர்கள் பாராட்டுச் சொல் விளைச்சலைப் பெறுவதற்காக உழவு செய்பவர்கள். புனல் அம் சாயல் - ஆற்றில் ஊற்று நீர் சாய்ந்து வந்து வழங்குவது போல எதிரிகளின் போர்முனையைப் பாழ்படுத்துவதில் தம்மை நெருங்கமுடியாத வலிமை கொண்ட வீரர்களுக்குப் புத்தமுது நறைக்கள்ளை வழங்கும் தன்மை கொண்டவன் நன்னன். நன்னன்சேய்தன்னன் எனக் குறிப்பிடப்பட்டுள்ள இவனது பெயரில் வரும் சேய் என்னும் சொல்லிக்கு மகன் என்றும், முருகன் என்றும் பொருள் காணமுடியும். எனவே நன்னன் மகன் நன்னன் என்று ஒரு விளக்கம் அமையும். முதலில் உள்ள நன்னன் தந்தை பெயர் என்றும் அடுத்து வரும் சேய்நன்னன் இவன் பெயர் என்றும் கொள்ளமுடியும். சேட்சேன்னி நலங்கிள்ளி என்னும் பெயர் இவ்வாறு அமைந்திருத்தலை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். அவன் வில்லுக்குச் சொல்லித்தரும் வலிமை மிக்க கையை உடையவன். அதாவது வில்லாண்மை உடையவன். அதனைக் குறிக்கும் வகையில் கையில் பூண் அணிந்தவன். இதுவா அதுவா, இப்படிப்பட்டவரா அப்படிப்பட்டவரா என்று அறிவு தடுமாறாமல் ஆராந்துகொண்டிருக்காமல் நல்லதைத் தீர்மானிக்கும் திறம் கொண்டவன். இதுதான் அவனது ‘மதி மாறு ஓரா நன்று உணர் சூழ்ச்சி’. நன்று உணர் சூழ்ச்சி ஆளைப் பார்த்து அறிவு மாறுபடும் குணம் அவனுக்கு இல்லை. எல்லாரிடமும் நல்லனவற்றையே காணும் இயல்பினை உடையவன் அவன். வில்லாண்மையில் அவன் வல்லவன். தனக்குக் கிடைக்கும் பெருமையையே அணிகலனாகப் பூண்டவன்.அவனிடம் சென்றால்..........
ஆற்றின் அளவும் அசையும் நல் புலமும்
வீற்று வளம் சுரக்கும் அவன் நாடு படு வல்சியும்
ஆற்றின் அளவும் அசையுநற் புலமும்
வீற்றுவளஞ் சுரக்குஅவ நாடுபடு வல்சியும்
பொருளுரை:
வழியில் அவன் நாடு சுரக்கும் வளங்களையும் பெறலாம். உங்களுக்கு நல்ல நேரம் [புள்ளினிர்] வெயில் பட்டு வாடும் [எல் தாக்குறுதலின்] நீங்கள் இனி வாட வேண்டா. அவன் ஆற்று வளமும், ஓய்வு கொள்ளும் இடமும் உங்களுக்கு ஆறுதல் தரும். அவற்றின் வளத்தால் உணவுப் பொருள்களை வழங்குவதில் பெருமை கொண்டது அவன் நாடு
தொலையா நல் இசை உலகமொடு நிற்ப . . . .[70]
பலர் புறம்கண்டு அவர் அரும் கலம் தரீஇ
புலவோர்க்கு சுரக்கும் அவன் ஈகை மாரியும்
இகழுநர் பிணிக்கும் ஆற்றலும் புகழுநர்க்கு
அரசு முழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு
தூ துளி பொழிந்த பொய்யா வானின் . . . .[75]
வீயாது சுரக்கும் அவன் நாள் மகிழ் இருக்கையும்
தொலையா னல்லிசை உலகமொடு நிற்பப் . . . .[70]
பலர்புறங் கண்டவர் அருங்கலந் தரீஇப்
புலவோர்க்குச் சுரக்கும்அவ நீகை மாரியும்
இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றலும் புகழுநர்க்கு
அரசுமுழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு
தூத்துளி பொழிந்த பொய்யா வானின் . . . .[75]
வீயாது சுரக்குமவ நாள்மகி ழிருக்கையும்
பொருளுரை:
நன்னன் தன் அரசாட்சி முழுவதையும் பிறருக்குக் கொடுத்தாலும் நிறைவடையாமல் மேலும் மழை போல வழங்குவதற்காக நாள்மகிழ் இருக்கையில் காத்திருப்பான். அவனது அரண்மனை விலங்குகள் விரும்பி விளையாடும் மலை, சோலை, கானம் ஆகியவற்றுக்கு இடையே இருந்தது. அரசவை நாளெல்லாம் மக்கள் மகிழும் இருப்பிடமாகத் திகழ்ந்தது. அதனை உலகமெல்லாம் காலமெல்லாம் புகழ்ந்துகொண்டேயிருந்தது. பகைவரை வென்று அவர் தந்த வளங்களை மாரிபோல் அவன் புலவர்களுக்கு வழங்கி வந்தான். (மக்கள் தந்த வரிப்பணத்தை நாட்டு நலனுக்குச் செலவிட்டான்.) அவன் தன்னை இகழ்பவர்களை மாற்றித் தன்வயப்படுத்தி விடுவான். புகழ்பவர்களுக்குத் தன் ஆட்சி உரிமையையே கொடுத்தாலும் அவன் மனம் நிறைவடையாது. இன்னும் கொடுக்க ஏதுமில்லையே என்று ஏங்குவான். இடைவிடாமல் பெய்யும் தூறல் மழைபோல் மற்றவர்களுக்கும் வழங்கிக்கொண்டேயிருப்பான்.
வல்லார் ஆயினும் புறம் மறைத்து சென்றோரை
சொல்லிக்காட்டி சோர்வு இன்றி விளக்கி
நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கமும் . . . .[80]
வல்லா ராயினும் புறமறைத்துச் சென்றோரைச்
சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி
நல்லிதின் இயக்குமவன் சுற்றத் தொழுக்கமும் . . . .[80]
பொருளுரை:
அவன் அவையில் நல்லவர்களே குழுமியிருப்பர். நாட்டை நல்வழிப்படுத்தும் வழிகளை அவர்கள் கூறுவர். அவனது அவைக்குச் சென்றவர் வல்லவரல்லாதவர்கள் ஆயினும் அதனை மறைத்து அவர்களிடமுள்ள திறமைகளை மட்டும் சொல்லிக் காட்டி நன்மை செய்து அனுப்பி வைப்பர்.
பேர் இசை நவிரம் மேஎய் உறையும்
காரி உண்டி கடவுளது இயற்கையும்
பாய் இருள் நீங்க பகல் செய்யா எழுதரும்
ஞாயிறு அன்ன அவன் வசை இல் சிறப்பும் . . . .[85]
இகந்தன ஆயினும் தெவ்வர் தேஎம்
நுகம் பட கடந்து நூழிலாட்டி
புரை தோல் வரைப்பின் வேல் நிழல் புலவோர்க்கு
கொடை கடன் இறுத்த அவன் தொல்லோர் வரவும்
இரை தேர்ந்து இவரும் கொடும் தாள் முதலையொடு . . . .[90]
திரை பட குழிந்த கல் அகழ் கிடங்கின்
வரை புரை நிவப்பின் வான் தோய் இஞ்சி
உரை செல வெறுத்த அவன் மூதூர் மாலையும்
கேள் இனி வேளை நீ முன்னிய திசையே . . . .[66 - 94]
பேரிசை நவிர மேஎ யுறையும்
காரிஉண்டிக் கட வுள தியற்கையும்
பாயிருள் நீங்கப் பகல்செய்யா எழுதரு
ஞாயி றன்னவவன் வசையில் சிறப்பும் . . . .[85]
இகந்தன ஆயினும் தெவ்வர் தேஎம்
நுகம்படக் கடந்து நூழி லாட்டிப்
புரைத்தோல் வரைப்பின் வேனிழற் புலவோர்க்குக்
கொடைக்கடன் இறுத்தவன் தொல்லோர் வரவும்
இரைதேர்ந் திவரும் கொடுந்தாள் முதலையொடு . . . .[90]
திரைபடக் குழிந்த கல்லகழ் கிடங்கின்
வரைபுரை நிவப்பின் வான்றோய் இஞ்சி
உரைசெல வெறுத்தவன் மூதூர் மாலையும்
கேளினி வேளைநீ முன்னிய திசையே
பொருளுரை:
அவன் நாட்டு நவிரமலை முதலானவற்றின் பெருமையினைச் சொல்கிறேன், கேளுங்கள். என்று சொல்லிக்கொண்டு நூலாசிரியர் கூறத் தொடங்குகிறார். வேளை (வேள் நன்னனை) நினைத்து நீங்கள் போய்க்கொண்டிருக்கிறீர்கள். அவன் நாட்டில் நவிரமலை இருந்தது. நஞ்சுண்ட சிவனின் கோயிலும் அங்கு இருந்தது. இதன் ஆற்றலை எண்ணி உலகம் அஞ்சிக் கிடந்த காலம் அது. இருள் நீக்க எழும் இளஞாயிறு போன்ற புகழைக் கொண்டவன் நன்னன். அவனது முன்னோர் பின்பற்றிய நெறி பிறழாது இவனும் பகைவரை நூழிலாட்டி வென்ற தன் வீரர்களுக்குக் கொடை நல்கும் கடப்பாடு உடையவனாய் விளங்கினான். அவனது அரண்மனை மூதூரைச் சுற்றி மதிலும் அகழியும் இருந்தன. அதன் புகழைப் பலரும் புகழக் கேட்டுக் கேட்டு போர் வீரர்களை வள்ளுவர் வில்லேர் உழவர் என்கிறார். இந்நூலாசிரியர் கௌசிகனார் அவர்களை வேல்நிழல் புலவர் என்கிறார். கொடுந்தாள் முதலை - வளைந்த கால்களை உடைய முதலை இரையைத் தேடி வளைந்த காலை உடைய முதலைகள் கல்லில் ஏறும் நீரலை மோதும் ஆய்ந்த அகழி இருக்கும். அடுத்து மலை போல் வானளாவிய மதில் இருக்கும். அவன் மூதூரைப் பலரும் புகழ்கின்றனர். அந்தப்புகழ் அவர்களுக்குச் செல்வக் கிடக்கையாக மாறிவிட்டது. மேலும் அந்தப் புகழ்மாலையைக் கேட்டுக் கேட்டு அவ்வூர் மக்கள் வெறுத்துப்போய்விட்டனர். நன்னனைப் புலவர் ‘வேள்’ என்கிறார். வேள் என்னும் சொல் முருகனைக் குறிக்கும். முருகனைச் சேஎய் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இவன் சேய்நன்னன் எனக் குறிக்கிடப்படுகிறான். இவை இவனது பெயர் பற்றிய விளக்கங்கள்.
புதுவது வந்தன்று இது அதன் பண்பே
வானம் மின்னு வசிவு பொழிய ஆனாது
இட்ட எல்லாம் பெட்டாங்கு விளைய
பெயலொடு வைகிய வியன் கண் இரும் புனத்து
புதுவது வந்தன் றிதுவதன் பண்பே
வானமின்னு வசிவு பொழிய ஆனாது
இட்ட வெல்லாம் பெட்டாங்கு விளையப்
பெயலொடு வைகிய வியன்கண் இரும்புனத்து
பொருளுரை:
அவன் நாட்டில் வளமெல்லாம் பழுத்துக்கிடக்கும். புதுப்புது வருவாய் கிடைத்துக்கொண்டேயிருக்கும். இது அந்த நாட்டுக்குப் புதியது அன்று. அந்த நாட்டுப் பண்பு அப்படி. பருவமழை தவிராது பொழிந்து போட்டதெல்லாம் பொன்னாக விளைந்ததால் வந்தது.
வாலிதின் விரிந்த புன் கொடி முசுண்டை
நீலத்து அன்ன விதை புன மருங்கில்
மகுளி பாயாது மலி துளி தழாலின்
அகளத்து அன்ன நிறை சுனை புறவின்
கௌவை போகிய கரும் காய் பிடி ஏழ் . . . .[105]
நெய் கொள ஒழுகின பல் கவர் ஈர் எள்
பொய் பொரு கயமுனி முயங்கு கை கடுப்ப
கொய் பதம் உற்றன குலவு குரல் ஏனல்
விளை தயிர் பிதிர்வின் வீ உக்கு இருவிதொறும்
குளிர் புரை கொடும் காய் கொண்டன அவரை . . . .[110]
மேதி அன்ன கல் பிறங்கு இயவின்
வாதி கை அன்ன கவை கதிர் இறைஞ்சி
இரும்பு கவர்வுற்றன பெரும் புன வரகே
வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை
நீலத் தன்ன விதைப்புன மருங்கின்
மகுளி பாயாது மலிதுளி தழாலின்
அகளத் தன்ன நிறைசுனைப் புறவிற்
கெளவை போகிய கருங்காய் பிடியேழ் . . . .[105]
நெய்கொள வொழுகின பல்கவ ரீரெண்
பொய்பொரு கயமுனி முயங்குகை கடுப்பக்
கொய்பத முற்றன குலவுக்குரல் ஏனல்
விளைதயிர்ப் பிதிர்வின் வீவுக் கிருவிதொறும்
குளிர்புரை கொடுங்காய் கொண்டன அவரை . . . .[110]
மேதி யன்ன கல்பிறங்கு இயலின்
வாதிகை யன்ன கவைக்கதிர் இறைஞ்சி
இரும்புகவர் வுற்றன பெரும்புன வரகே
பொருளுரை:
முசுண்டை - கறிசமைக்க உதவும் முசுண்டைக் கீரையின்கொடி ஆலமரம் போல வெண்ணிறப் பூக்களோடு விரிந்து கிடந்தது. எள் - வாய் விரிந்து வெடிக்காத எள்ளுக் காய்கள் கைப்பிடி அளவுக்குள் 7 காய்கள் என்னும்படி நெருக்கமாகக் காய்த்திருந்தன. அவை ஈரம் பட்டு எண்ணெய்க் கொழுப்பேறிக் கிடந்தன. காரணம் எள் பயிரிட்ட வயலில் மண்ணின் சத்தை உறிஞ்சி மண்வளத்தைக் கெடுக்கும் மகுளிச்செடி முளைப்பதில்லை. அதற்குக் காரணம் நல்ல மழை. ஆங்காங்கே நிலம் குழிந்து பள்ளம் பட்டுக் கிடக்கும் இடங்களில் நீர் தேங்கிய சுனைகள். தினைக்கதிர்கள் - யானைக்குட்டியின் கை போல வளைந்து காய்த்திருந்தன. அவரை - தினைத்தட்டையில் ஏறி வளைந்திருக்கும் கோளியவரை கொத்துக் கொத்தாகக் காய்த்திருந்தது. அது ‘குளிர்’ என்னும் விளையாட்டுக் கருவி போலக் காணப்பட்டது. வரகு - எருமைகள் போல் ஆங்காங்கே பாறைகள். அடுத்திருந்த வழி மண்ணில் தென்னம் பாளைபோல் விரிந்து வரகு விளைந்திருந்தது.
வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெல் . . . .[115]
வேல் ஈண்டு தொழுதி இரிவுற்று என்ன
கால் உறு துவைப்பின் கவிழ் கனைத்து இறைஞ்சி
குறை அறை வாரா நிவப்பின் அறையுற்று
ஆலைக்கு அலமரும் தீம் கழை கரும்பே
புயல் புனிறு போகிய பூ மலி புறவின் . . . .[120]
அவல் பதம் கொண்டன அம் பொதி தோரை
வாலிதின் விளைந்தன ஐவன வெண்ணெல் . . . .[115]
வேலீண்டு தொழுதி இரிவுற் றென்னக்
காலுறு துவைப்பிற் கவிழ்க்கனைத் திறைஞ்சிக்
குறையறை வாரா நிவப்பி னறையுற்று
ஆலைக் கலமருந் தீங்கழைக் கரும்பே
புயற்புனிறு போகிய பூமலி புறவின் . . . .[120]
அவற்பதங் கொண்டன அம்பொதித் தோரை
பொருளுரை:
ஐவன வெண்ணெல் - இது புழுதியில் விளையும் நெல். பால் பிடித்து விளைந்திருக்கும். காற்றை உள்ளே நுழைய விடுவதால் உதிராது. கரும்பு - வேல் நட்டதுபோல் நிற்கும். எனினும் காற்றால் வளைந்து சாயும் [இறைஞ்சும்]. அது வெட்டிக் கரும்பாலைக்குக் கொண்டுசெல்லும் விளைச்சலைப் பெற்றிருந்தது. துவரை [தோரை] - புயல்காற்று வீசி, [புனிறு போகி] மண் பூத்திருக்கும் முல்லைநிலத்தில் அவல் போலப் பொதிவு கொண்டு, பதமாக விளைந்திருக்கும்.
ஐயவி அமன்ற வெண் கால் செறுவில்
மை என விரிந்தன நீள் நறு நெய்தல்
செய்யா பாவை வளர்ந்து கவின் முற்றி . . . .[125]
காயம் கொண்டன இஞ்சி மா இருந்து
வயவு பிடி முழந்தாள் கடுப்ப குழிதொறும்
விழுமிதின் வீழ்ந்தன கொழும் கொடி கவலை
காழ் மண்டு எஃகம் களிற்று முகம் பாய்ந்து என
ஊழ் மலர் ஒழி முகை உயர் முகம் தோய . . . .[130]
துறுகல் சுற்றிய சோலை வாழை
ஐயவி யமன்ற வெண்காற் செறுவின்
மையென விரிந்தன நீணறு நெய்தல்
செய்யாப் பாவை வளர்ந்துகவின் முற்றிக் . . . .[125]
காயங் கொண்டன இஞ்சிமா விருந்து
வயவுப்பிடி முழந்தாள் கடுப்பக் குழிதொறும்
விழுமிதின் வீழ்ந்தன கொழுங்கொடிக் கவலை
காழ்மண் டெஃகம் களிற்றுமுகம் பாய்ந்தென
ஊழ்மல ரொழிமுகை உயர்முகந் தோயத் . . . .[130]
துறுகல் சுற்றிய சோலை வாழை
பொருளுரை:
ஐயவி - வெண்சிறு கடுகு கொல்லை நிலத்தில் தொய்வின்றி புழுதி பட்ட தோட்டத்தில் விளைந்திருந்தது. நெய்தல் - வெண்ணிற நீர் தேங்கிய வயலில் நெய்தல் பூத்திருந்தது. இஞ்சி - பாவை என்பது மரப்பாச்சிப் பொம்மை. செய்யாப்பாவை என்பது இஞ்சி. இது கிழங்கு-உடம்பு பெற்று விளைந்திருந்தது. கவலை - வள்ளிக்கிழங்கு யானையின் முழங்காலுக்குக் கீழ் உள்ள பகுதிபோலப் பருத்து நிலத்தடியில் விழுந்திருந்தது. சோலை-வாழை (மலைவாழை) - யானையின் முகத்தில் வேல்கள் பாய்ந்திருப்பது போல் குத்துக் கல்லைச் சுற்றிலும் வளர்ந்திருந்தது.
ஊழுற்று அலமரு உந்தூழ் அகல் அறை
காலம் அன்றியும் மரம் பயன் கொடுத்தலின்
காலின் உதிர்ந்தன கரும் கனி நாவல் . . . .[135]
மாறுகொள ஒழுகின ஊறு நீர் உயவை
நூறொடு குழீஇயின கூவை சேறு சிறந்து
உண்ணுநர் தடுத்தன தேமா புண் அரிந்து
அரலை உக்கன நெடும் தாள் ஆசினி
ஊழுற் றலமரும் உந்தூழ் அகலறைக்
கால மன்றியும் மரம்பயன் கொடுத்தலிற்
காலின் உதிர்ந்தன கருங்கனி நாவல் . . . .[135]
மாறுகொள வொழுகின ஊறுநீ ருயவை
நூறொடு குழீஇயின கூவை சேறுசிறந்து
உண்ணுநர்த் தடுத்தன தேமாப் புண்ணரிந்து
அரலை உக்கன நெடுந்தாள் ஆசினி
பொருளுரை:
இறுகு - இறுங்குச் சோளக் கதிரின் குலை முதிர்ந்திருந்தது.. உந்தூழ் - உழுந்து பயன்தரும் நிலையில் வெடித்து உதிரச் சுழன்றது. நாவல் - பருவமில்லாத காலத்திலும் பயன்தந்து காற்றால் உதிர்ந்தது. உயவை - கருவிளை என்றும், காக்கட்டான் என்றும் சொல்லப்படும் உயவைக் கொடி நீர் ஊறிப் படர்ந்திருந்தது. கூவை - கூவம்பழம் நூற்றுக் கணக்கில் பழுத்திருந்தன. தேமா - சதைப்பிடிப்புள்ள இனிப்பு மாம்பழம் உண்ணும்படி வழிப்போக்கர்களைத் தடுத்து நிறுத்தியது. ஆசினி - சிறுபலாக் காய்கள் அரலைக் கற்கள்போல் புண்பட்டு உதிர்ந்து கிடந்தன.
குடிஞை இரட்டு நெடு மலை அடுக்கத்து
கீழும் மேலும் கார் வாய்த்து எதிரி
சுரம் செல் கோடியர் முழவின் தூங்கி
முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினை பலவே . . . .[95 - 144]
குடிஞை இரட்டு நெடுமலை அடுக்கத்துக்
கீழு மேலுங் கார்வாய்த் தெதிரிக்
கரஞ்செல் கோடியர் முழவிற் றூங்கி
முரஞ்சுகொண் டிறைஞ்சின அலங்குசினைப் பலவே
பொருளுரை:
விரலால் அடிக்கும் ஆகுளிப் பறைபோல் ஆந்தை ஒலிக்கும் உயர்ந்த மலையிலுள்ள பலாமரக் கிளைகளில் காய்களும் பழங்களும் குலுங்கின. தலையிலும் தோளிலும், முழவையும் மற்ற இசைக் கருவிகளையும் பாணர் கூட்டம் சுமப்பது போல அம் மரங்கள் பலாப் பழங்களைத் தாங்க முடியாமல் சுமந்து வணங்கிக்கொண்டு நின்றன.
தூவல் கலித்த புது முகை ஊன் செத்து
அறியாது எடுத்த புன் புற சேவல்
ஊஉன் அன்மையின் உண்ணாது உகுத்தென
நெருப்பின் அன்ன பல் இதழ் தாஅய்
வெறிக்களம் கடுக்கும் வியல் அறைதோறும் . . . .[150]
மண இல் கமழும் மா மலை சாரல்
தூவற் கலித்த புதுமுகை ஊன்செத்து
அறியா தெடுத்த புன்புறச் சேவல்
ஊஉ னன்மையி னுண்ணா துகுத்தென
நெருப்பி னன்ன பல்லிதழ் தாஅய்
வெறிக்களம் கடுக்கும் வியலறை தோறும் . . . .[150]
மணஇல் கமழு மாமலைச் சாரல்
பொருளுரை:
காந்தள் பூ சிவப்பு நிறத்தில் பூத்திருந்தது. அதனைப் புலால்-கறித்துண்டு என்று கருதி எடுத்துச் சென்ற கழுகு உண்ணாமல் உதிர்த்தது. அவை அகன்ற பாறைகளில் விழுந்து நெருப்புப் பிழம்புகள் போலக் கிடந்தன. மணலில் உதிர்ந்தவை மணம் பரப்பிக்கொண்டிருந்தன. முருகனை வேண்டி வெறியாடிய களத்தில் புலவுத் துண்டுகள் ஆங்காங்கே கிடக்கும். அதுபோலக் காந்தள் பூக்கள் பாறைமேல் பூத்துக் கிடந்தன.
சிறு கண் பன்றி பழுதுளி போக்கி
பொருது தொலை யானை கோடு சீர் ஆக
தூவொடு மலிந்த காய கானவர் . . . .[155]
செழும் பல் யாணர் சிறு குடி படினே
இரும் பேர் ஒக்கலொடு பதம் மிக பெறுகுவிர் . . . .[145 - 157]
சிறுகட் பன்றிப் பழுதுளிப் போக்கிப்
பொருதுதொலை யானைக் கோடுசீ ராகத்
தூவொடு மலிந்த காய கானவர் . . . .[155]
செழும்பல் யாணர்ச் சிறுகுடிப் படினே
இரும்பே ரொக்கலொடு பதமிகப் பெறுகுவிர்
பொருளுரை:
கானவர் சிறுகுடியில் தேனும் கிழங்கும் பெறலாம். ஆங்காங்கே கானவர் வாழும் வளம் மிக்க சிறுகுடிகள் இருந்தன. அங்குள்ள கானவர் யானைத் தந்தத்தில் இருபுறமும் உறி கட்டி உணவுப்பண்ட வட்டில்களை (வட்டில் = கூடை) தம் இருப்பிடங்களுக்குச் சுமந்து சென்றனர். தேன், கிழங்கு, புலால் முதலானவை அவர்கள் சுமந்துசென்ற உணவுப் பொருள்கள். காட்டுப் பன்றிக் கறியும் அதில் இருந்தது. அந்த உணவுப் பொருள்களை அங்குச் சென்றவர் தம் சுற்றத்துடன் சேர்ந்து உண்ணும் அளவுக்கு அவர்கள் விருந்தாகப் படைப்பர்.
கன்று எரி ஒள் இணர் கடும்பொடு மலைந்து
சேந்த செயலை செப்பம் போகி . . . .[160]
அலங்கு கழை நரலும் ஆரி படுகர்
சிலம்பு அடைந்து இருந்த பாக்கம் எய்தி
நோனா செருவின் வலம் படு நோன் தாள்
மான விறல் வேள் வயிரியம் எனினே
கன்றெரி யொள்ளிணர் கடும்பொடு மலைந்து
சேந்த செயலைச் செப்பம் போகி . . . .[160]
அலங்குகழை நரலும் ஆரிப் படுகர்ச்
சிலம்படைந் திருந்த பாக்க மெய்தி
நோனாச் செருவின் வலம்படு நோன்றாள்
மான விறல்வேள் வயிரிய மெனினே
பொருளுரை:
கானவர் பாக்கத்தில் அன்று இரவு தங்கியிருந்துவிட்டு மறுநாள் ஆரியப் படுகர் வாழும் பாக்கம் செல்லுங்கள். எரிபோல் தழைத்துச் சிவந்திருக்கும் செயலையந் தளிர்களை மாலையாகத் தொடுத்து சுற்றத்தார் அனைவரும் அணிந்துகொண்டு செல்லுங்கள். மூங்கில் அடர்ந்து அடைந்துகிடக்கும் அப் பாக்கத்துக்குச் சென்றபின், நாங்கள் மான விறல் வேல் நன்னனைப் பார்க்க வந்த பாணர்கள் என்று சொன்னவுடனேயே....
கிழவிர் போல கேளாது கெழீஇ
சேண் புலம்பு அகல இனிய கூறி
பரூஉ குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு
குரூஉ கண் இறடி பொம்மல் பெறுகுவிர் . . . .[158 - 169]
கிழவிர் போலக் கேளாது கெழீஇச்
சேட்புலம் பகல இனிய கூறிப்
பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு
குரூஉக்க ணிறடிப் பொம்மல் பெறுகுவிர்
பொருளுரை:
உங்கள் வீட்டிற்குள் செல்வது போலப் படுகர் வீட்டுக்குள் யாரையும் கேட்காமல் உள்ளே செல்லலாம். உரிமை உள்ளவர் போல வீட்டில் உள்ளவர்களோடு அளவளாவலாம். நெடுந்தொலைவு நடந்துவந்த வருத்தம் போகும்படி அவர்கள் இனிமையாக உரையாடுவர். அத்துடன் ஆட்டுக்கறி [பரூஉக்குறை] போட்டு நெய் ஊற்றிச் சமைத்த தினையரிசிப் பொங்கல் சோறும் உண்ணத் தருவார்கள்.
வேய் பெயல் விளையுள் தேம் கள் தேறல்
குறைவு இன்று பருகி நறவு மகிழ்ந்து வைகறை
பழம் செருக்குற்ற நும் அனந்தல் தீர
அருவி தந்த பழம் சிதை வெண் காழ்
வரு விசை தவிர்த்த கடமான் கொழும் குறை . . . .[175]
முளவுமா தொலைச்சிய பைம் நிண பிளவை
பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ
வெண் புடை கொண்ட துய் தலை பழனின்
இன் புளி கலந்து மா மோர் ஆக
கழை வளர் நெல்லின் அரி உலை ஊழ்த்து . . . .[180]
வழை அமை சாரல் கமழ துழைஇ
நறு மலர் அணிந்த நாறு இரு முச்சி
குறமகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி
அகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ
மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர் . . . .[170 - 185]
வேய்ப்பெயல் விளையுள் தேக்கட் தேறல்
குறைவின்று பருகி நறவுமகிழ்ந்து வைகறைப்
பழஞ்செருக் குற்றநும் அனந்தல் தீர
அருவி தந்த பழஞ்சிதை வெண்காழ்
வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை . . . .[175]
முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை
பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ
வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனின்
இன்புளிக் கலந்து மாமோ ராகக்
கழைவளர் நெல்லின் அரியுலை ஊழ்த்து . . . .[180]
வழையமை சாரல் கமழத் துழைஇ
நறுமலர் அணிந்த நாறிரு முச்சிக்
குறமகள் ஆக்கிய வாலவிழ் வல்சி
அகமலி உவகை ஆர்வமொ டளைஇ
மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர் . . . .[185]
பொருளுரை:
வீடுதோறும் பெறும் உணவு வகைகள். தேன் - மரத்திலும் பாறையிலும் ஏறிப் பெறப்படும் மலைத் தாரம். (தரும் பொருளைத் தாரம் என்பது பழந்தமிழ் வழக்கு) தேறல் - தேனை மூங்கில் குழாய்களில் அடைத்து வைத்துக் கள்ளாக்கிப் பருகத் தருவது தேறல். நறவு - (உண்டார்கண் அல்லது அடுநறா …குறள்) காய்ச்சி வடித்த மணநீர். இது மகிழ்ச்சி தரும் குடிவகை. தேங்காய் - அருவி அடித்துக்கொண்டு வந்த பழம். இதைச் சிதைத்தால் உள்ளே இருப்பது வெள்ளை வித்துப் பொருள். கடம்புமான் கறி - வருவிசை அம்பால் பெற்றது. முள்ளம் பன்றிக் கறி - கொழுப்பை அரிந்து எறிந்துவிட்டுப் பங்கிட்டு வைத்த முளவுக் கறி - பெண்நாய் முடுக்கிப் பிடித்துக் கொண்டுவந்த விலங்குக்கறி பழன் - இது நெருப்புக் கட்டி வெண்மையாகும் வரையில் புடையடுப்பின் மேல் புலாலை வைத்து வாட்டிப் பழுப்பாக்கிய பழன். மாங்காய் போட்ட மோர்க்குழம்பு - (இனிப்பும் புளிப்பும் கலந்த மாங்காய்) நெல்லரிசிச் சோறு - (மூங்கில் போல் வளர்ந்த நெல்) இதனைச் சமைத்த குறமகள் தன் கூந்தலை உச்சிக் கொண்டையாகப் போட்டு முடிந்திருந்தாள். இந்த முச்சியில் மணம் கமழும் பூவைச் சூடியிருந்தாள். அவள் சமையலின் மணம் வழைமரம் மிக்க மலைச்சாரல் எல்லாம் கமழ்ந்தது. சோறு வெள்ளை வெளேரென்று மலர்ந்திருந்தது. தன் மக்களுக்கு இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று தடுத்து வட்டியில் போடுவது போல் படைத்தாள். இவ்வாறு படைப்பதை ஒவ்வொரு மனையிலும் பெறுவீர்கள்.
பரிசில் மறப்ப நீடலும் உரியிர்
அனையது அன்று அவன் மலை மிசை நாடே
பரிசில் மறப்ப நீடலும் உரியிர்
அனைய தன்றவன் மலைமிசை நாடே
பொருளுரை:
நீங்கள் போராற்றல் மிக்க அரசனாகிய நன்னனை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள். அவனிடம் பெறவேண்டிய பரிசிலை மறந்துவிட்டு மலைக்குறவர் விருந்தில் மயங்கி அங்கேயே தங்கி விடுதலும் கூடும். அப்படிப் பட்டது நன்னனின் மலைநாடு.
வரை அரமகளிர் இருக்கை காணினும் . . . .[190]
உயிர் செல வெம்பி பனித்தலும் உரியிர்
பல நாள் நில்லாது நில நாடு படர்மின் . . . .[186 - 192]
வரையர மகளிர் இருக்கை காணினும் . . . .[190]
உயிர்செல வெம்பிப் பனித்தலும் உரியிர்
பலநா ணில்லாது நிலநாடு படர்மின்
பொருளுரை:
நிறைந்த இதழ்களை உடைய குவளை மலர்களின் மணத்தை மிகுதியாக முகர்ந்தாலும், வரையர மகளிர் தங்கி விளையாடும் இடங்களைக் கண்டாலும் உயிர் பதைத்து நடுங்க நேரும். எனவே அம் மலைநாட்டில் பலநாள் தங்காமல் நிலநாட்டை நோக்கிச் செல்லுங்கள்.
புழைதொறும் மாட்டிய இரும் கல் அடாஅர்
அரும் பொறி உடைய ஆறே நள் இருள் . . . .[195]
அலரி விரிந்த விடியல் வைகினிர் கழிமின் . . . .[193 - 196]
புழைதொறு மாட்டிய இருங்கல் அடாடர்
அரும்பொறி உடைய வாறே நள்ளிருள் . . . .[195]
அலரிவிரிந்த விடியல் வைகினிர் கழிமின்
பொருளுரை:
விளைச்சலைப் பாழாக்கும் காட்டுப்பன்றியை அழிப்பதற்காக ஆங்காங்கே கானவர் பொறி வைத்திருப்பர். பெரிய பாறாங்கல்லைத் தூக்கிச் சாய்த்து நிறுத்தி, கவட்டைக் கோலில் குச்சி நிறுத்தி, அந்தக் குச்சியின் ஒரு முனையில் சாய்ந்திருக்கும் கல்லை நிறுத்தி, மற்றொரு முனையில் கயிறு கட்டி, அந்தக் கயிற்றை நிறுத்தி வைத்திருக்கும் கவட்டைக் குச்சியின் அடியில் இரண்டு சுற்று சுற்றி, கயிற்றின் மற்றொரு நுனியை மற்றொரு குச்சியின் ஒரு நுனியில் கட்டி, இந்தக் குச்சியின் மற்றொரு முனையைத் தூக்கி நிறுத்தியுள்ள பாறையில் பொருத்திப் பாறை விழாமல் நிறுத்தியிருப்பர். குச்சியில் காட்டுப்பன்றி விரும்பி உண்ணும் இரையைக் கட்டியிருப்பர். பன்றி இரையை இழுத்ததும் பாறை பன்றியின்மீது விழுந்து பன்றியைக் கொன்றுவிடும். இதற்கு இருங்கல் அடாஅர் என்று பெயர். இரவில் செல்லும்போது அறியாமல் அதில் மோதினால் பொறி வைத்திருக்கும் பாறாங்கல் விழுந்து துன்புற நேரும். எனவே இருள் நீங்கி விடிந்தபின் செல்லுங்கள்.
முரம்பு கண் உடைந்த பரல் அவல் போழ்வில்
கரந்து பாம்பு ஒடுங்கும் பயம்புமார் உளவே
குறி கொண்டு மரம் கொட்டி நோக்கி . . . .[200]
செறி தொடி விறலியர் கைதொழூஉ பழிச்ச
வறிது நெறி ஒரீஇ வலம் செயா கழிமின் . . . .[197 - 202]
முரம்புகண் உடைந்த பரலவற் போழ்வில்
கரந்துபாம் பொடுங்கும் பயம்புமா ருளவே
குறிக்கொண்டு மரங் கொட்டி நோக்கிச் . . . .[200]
செறிதொடி விறலியர் கைதொழூஉப் பழிச்ச
வறிதுநெறி ஓரீஇ வலஞ்செயாக் கழிமின்
பொருளுரை:
மரமடர்ந்த காட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத வழியில் செல்லக் கூடாது. அங்கு வெடிப்பு நிலங்களில் பரல் கற்கள் மூடிய வளைக்குள் பாம்பு இருக்கலாம். பின்னே வருபவர்களுக்கு வழி தெரிவதற்காக மரத்தைக் கல்லால் கொட்டி அடையாளம் செய்து வைத்துவிட்டுச் செல்லுங்கள். அப்படிப்பட்ட இடங்களைக் காணும்போது விறலியர் அதனைச் சுற்றிவந்து வாழ்த்துவர். அவ்வாறு செய்துவிட்டுச் செல்லுங்கள்.
உயர் நிலை இதணம் ஏறி கை புடையூஉ
அகல் மலை இறும்பில் துவன்றிய யானை . . . .[205]
பகல் நிலை தளர்க்கும் கவண் உமிழ் கடும் கல்
இரு வெதிர் ஈர் கழை தத்தி கல்லென
கரு விரல் ஊகம் பார்ப்போடு இரிய
உயிர் செகு மரபின் கூற்றத்து அன்ன
வரும் விசை தவிராது மரம் மறையா கழிமின் . . . .[203 - 210]
உயர்நிலை இதணம் ஏறிக் கைபுடையூஉ
அகன்மலை யிறும்பில் துவன்றிய யானைப் . . . .[205]
பகனிலை தவிர்க்கும் கவணுமிழ் கடுங்கல்
இருவெதிர் ஈர்ங்கழை தத்திக் கல்லெனக்
கருவிர லூகம் பார்ப்போ டிரிய
உயிர்செகு மரபிற் கூற்றத் தன்ன
வரும்விசை தவிராது மரமறையாக் கழிமின் . . . .[210]
பொருளுரை:
விளைநிலங்களில் குறவர்கள் பரண்மீது ஏறி இருந்துகொண்டு விளைச்சலைத் தின்னவரும் யானைகளை ஓட்டக் கவணால் கல் வீசுவர். அதன் தாக்கத்துக்குப் பயந்து, கருமையான விரல்களை உடைய ஊகக் குரங்குகள் மூங்கிலின்மீது தத்திப் பயந்து பாய்ந்தோடும். அந்த விசைக்கல் உங்கள்மீது பட்டால் கூற்றம்போல் உங்கள் உயிருக்கு உலை வைக்கலாம். எனவே அக் காலத்தில் மரமறைவில் செல்லுங்கள்.
இரவின் அன்ன இருள் தூங்கு வரைப்பின்
குமிழி சுழலும் குண்டு கய முடுக்கர்
அகழ் இழிந்து அன்ன கான்யாற்று நடவை
வழூஉம் மருங்கு உடைய வழாஅல் ஓம்பி . . . .[215]
பரூஉ கொடி வலந்த மதலை பற்றி
துருவின் அன்ன புன் தலை மகாரோடு
ஒருவிர்ஒருவிர் ஓம்பினர் கழிமின் . . . .[211 - 218]
இரவின் அன்ன இருள்தூங்கு வரைப்பின்
குமிழி சுழலும் குண்டுகய முடுக்கர்
அகழ்இழிந் தன்ன கான்யாற்று நடவை
வழூஉமருங் குடைய வழாஅல் ஓம்பிப் . . . .[215]
பரூஉக்கொடி வலந்த மதலை பற்றித்
துருவி னன்ன புன்றலை மகாரோடு
ஒருவிர் ஒருவிர் ஓம்பினிர் கழிமின்
பொருளுரை:
ஆற்று மடுக்களில் முதலைகள் இருக்கும். ஆழமான அந்த மடுக்களில் நீர்ச்சுழிகள் இருக்கும். மலையில் மர அடர்த்தியால் இரவு போன்ற இருள் இருக்கும். ஆற்றின் ஓரமாகச் சென்றாலும் வழுக்கும் இடங்கள் உண்டு. அங்கெல்லாம் பருமனாக உள்ள கொடிகளைப் பற்றிக்கொண்டு செல்ல வேண்டும். குழந்தைகளை நடக்க விடாமல் தூக்கிக் கொண்டு ஒருவர் கடந்தபின் மற்றொருவர் என்று செல்ல வேண்டும்.
விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா . . . .[220]
வழும்பு கண் புதைத்த நுண் நீர் பாசி
அடி நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய
முழு நெறி அணங்கிய நுண் கோல் வேரலோடு
எருவை மென் கோல் கொண்டனிர் கழிமின் . . . .[219 - 224]
விழுந்தோர் மாய்க்குங் குண்டுகயத் தருகா . . . .[220]
வழும்புகண் புதைத்த நுண்ணீர்ப் பாசி
அடிநிலை தளர்க்கும் அருப்பமும் உடைய
முழுநெறி பிணங்கிய நுண்கோல் வேரலோடு
எருவை மென்கோல் கொண்டனிர் கழிமின்
பொருளுரை:
சில இடங்களில் வழுக்கும் இடங்களைப் பாசிகள் படர்ந்து மூடிக் கொண்டிருக்கும். வழுக்கி விழுந்தால் ஆழமான மடுவில் விழுந்து ஏற வழியின்றி உயிர் விட நேரும். ஒரு கையில் மூங்கில் கோலும், மற்றொரு கையில் எருவைக் கோலும் ஊன்றிக் கொண்டு செல்ல வேண்டும். (எருவைக்கோல் = பருந்தைப் போல் பற்றிக்கொள்ளும் கோல் - இக்காலத்தில் கால் எலும்பு மருத்துவத்துக்குப் பின் கால் நன்றாகக் கூடும் வரையில் ஊன்றிக்கொண்டு நடப்பதற்குத் தரும் கோல் போன்றது. இது தரையில் ஊன்றும் பகுதியில் பருந்தின் கால்விரல் போல 4 பிளவுகளைக் கொண்டிருத்தலை எண்ணுக.)
மாரியின் இகுதரு வில் உமிழ் கடும் கணை
தாரொடு பொலிந்த வினை நவில் யானை
சூழியின் பொலிந்த சுடர் பூ இலஞ்சி
ஓர் யாற்று இயவின் மூத்த புரிசை
பராவு அரு மரபின் கடவுள் காணின் . . . .[230]
தொழா நிர் கழியின் அல்லது வறிது
நும் இயம் தொடுதல் ஓம்புமின் மயங்கு துளி . . . .[225 - 232]
மாரியி னிகுதரு வில்லுமிழ் கடுங்கணைத்
தாரொடு பொலிந்த வினைநவில் யானைச்
சூழியிற் பொலிந்த சுடர்ப்பூ விலஞ்சி
ஓரியாற் றியவின் மூத்த புரிசைப்
பராவரு மரபிற் கடவுட் காணிற் . . . .[230]
தொழாஅநிர் கழியின் அல்லது வறிது
நும்மியந் தொடுதல் ஓம்புமின் மயங்குதுளி
பொருளுரை:
ஓங்கி உயர்ந்த பெரிய கற்பாறை. அங்கே யானைச்சிலை [புகர்முகம்]. இது இந்திரன் முருகனுக்கு வழங்கிய ஐராவதம் என்னும் தெய்வயானைத் தெய்வம் போலும். முருகன் குறிஞ்சிக்கடவுள். அதன் கழுத்தில் மாலை. அம்புகளால் தொடுக்கப்பட்ட மாலை. மழை பொழிவது போன்று அம்புகளால் தொடுக்கப்பட்ட மாலை. அந்த யானைக்குப் பக்கத்தில் இலஞ்சி [பொய்கை]. போர்த்திறம் கற்ற யானை முகத்தில் காணப்படும் சூழி என்னும் முகப்படாம் போல சுடரும் பூக்கள் மலர்ந்திருக்கும் பொய்கை. அது தனித்துச் செல்லும் ஆற்று வழி [இயவு]. அந்த யானைக்கோயிலுக்குச் சுற்றுமதில். மூத்த கற்களை அடுக்கி வைக்கப்பட்டுள்ள மதில். அதற்குள்ளே யானைச்சிலைக் கடவுள். மரபு வழியே தொழப்பட்டுவரும் கடவுள். அதனைக் காணும்பொழுது தொழுதுவிட்டுச் செல்லுங்ககள். அங்கெல்லாம் உங்களது இசைக்கருவிகளை வறிதே கொண்டுசெல்வதைத் தவிர்த்து முழக்கித் தெய்வத்தைப் பரவிவிட்டுச் செல்லுங்கள்.
அலகை அன்ன வெள் வேர் பீலி
கலவ மஞ்ஞை கட்சியில் தளரினும் . . . .[235]
கடும் பறை கோடியர் மகாஅர் அன்ன
நெடும் கழை கொம்பர் கடுவன் உகளினும்
நேர் கொள் நெடு வரை நேமியின் தொடுத்த
சூர் புகல் அடுக்கத்து பிரசம் காணினும்
ஞெரேரென நோக்கல் ஓம்புமின் உரித்து அன்று . . . .[240]
நிரை செலல் மெல் அடி நெறி மாறுபடுகுவிர் . . . .[233 - 241]
அலகை யன்ன வெள்வேர்ப் பீலிக்
கலவ மஞ்ஞை கட்சியில் தளரினும் . . . .[235]
கடும்பறைக் கோடியர் மகாஅ ரன்ன
நெடுங்கழைக் கொம்பர்க் கடுவன் உகளினும்
நேர்கொள் நெடுவரை நேமியின் தொடுத்த
சூர்புகல் அடுக்கத்துப் பிரசங் காணினும்
ஞெரேரென நோக்கல் ஓம்புமின் உரித்தன்று . . . .[240]
நிரைசெலல் மெல்லடி நெறிமாறு படுகுவிர்
பொருளுரை:
வளம் மிக்க அவன் மலையில் மழை மிகுதியாகப் பொழியும். அப்போதெல்லாம் மயில் கூட்டம், அலகைப் பேய் போல் ஆடும். பறை முழக்கும் கோடியர்களின் சிறுவர்கள் துள்ளி விளையாடுவது போல மூங்கில் கொம்புகளில் ஆண்குரங்குகள் பாய்ந்து விளையாடும். உயர்ந்தோங்கிய மலையில், அச்சம் தரும் பாறை இடுக்குகளில் வண்டிச்சக்கரம் போலத் தேன் கூடு கட்டியிருக்கும். இவற்றைத் திடீரென உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர்த்துவிடுங்கள். இவற்றைப் பார்த்துக் கொண்டே சென்றால், தடுக்கி விழவும், செல்லும் வழி தடுமாறவும் நேரும். எனவே செல்லும் வழியில் கவனம் வைத்துச் செல்லுங்கள்.
கழுதில் சேணோன் ஏவொடு போகி
இழுதின் அன்ன வால் நிணம் செருக்கி
நிறம் புண் கூர்ந்த நிலம் தின் மருப்பின் . . . .[245]
நெறி கெட கிடந்த இரும் பிணர் எருத்தின்
இருள் துணிந்து அன்ன ஏனம் காணின்
முளி கழை இழைந்த காடு படு தீயின்
நளி புகை கமழாது இறாயினிர் மிசைந்து
துகள் அற துணிந்த மணி மருள் தெள் நீர் . . . .[250]
குவளை அம் பைம் சுனை அசைவு விட பருகி
மிகுத்து பதம் கொண்ட பரூஉ கண் பொதியினிர்
புள் கை போகிய புன் தலை மகாரோடு
அற்கு இடை கழிதல் ஓம்பி ஆற்ற நும்
இல் புக்கு அன்ன கல் அளை வதிமின் . . . .[242 - 255]
கழுதிற் சேணோன் ஏவொடு போகி
இழுதி னன்ன வானிணஞ் செருக்கி
நிறப்புண் கூர்ந்த நிலந்தின் மருப்பின் . . . .[245]
நெறிக்கெடக் கிடந்த இரும்பிணர் எருத்தின்
இருள்துணிந் தன்ன ஏனங் காணின்
முளிகழை இழைந்த காடுபடு தீயின்
நளிபுகை கமழா திறாயினிர் மிசைந்து
துகளறத் துணிந்த மணிமருள் தெண்ணீர் . . . .[250]
குவளையம் பைஞ்சுனை அசைவிடப் பருகி
மிகுத்துப் பதங்கொண்ட பரூஉக்கட் பொதியினிர்
புட்கை போகிய புன்றலை மகாரோடு
அற்கிடை கழிதல் ஓம்பி ஆற்றநும்
இல்புக் கன்ன கல்லளை வதிமின் . . . .[255]
பொருளுரை:
கல்லுக் குகையில் மலைப்பாதை [வரைசேர் வகுந்து] வழியே கானகத்தில் செல்லுங்கள். கானவன் கழுது என்னும் பந்தலின்மேல் இருந்துகொண்டு எய்த அம்பு பட்டுக் காட்டுப்பன்றி விழுந்துகிடக்கும். காய்ந்த மூங்கில் உரசித் தானே பற்றி எரியும் காட்டுத்தீ விழுந்துகிடக்கும் காட்டுப்பன்றியை மணம் கமழாமல் சுட்டு வைத்திருக்கும். அதனைத் தூய்மைப் படுத்தி உண்ணுங்கள். அருகில் குவளை பூத்த சுனையில் இருக்கும் தூய்மையான தெளிந்த நீரைப் பருகுங்கள். மீதமுள்ள கறியைப் பொதியாகக் கட்டி எடுத்துச் செல்லுங்கள். பறவைச் சிறகு போல் பறந்து திரியும் மக்களோடு வழியில் தங்காதீர்கள். கற்குகைகளில் வீட்டில் தங்குவது போலப் பாதுகாப்பாகத் தங்குங்கள்.
வான்கண் விரிந்த விடியல் ஏற்றெழுந்து
கானகம் பட்ட செம் நெறி கொண்மின் . . . .[256 - 258]
வான்கண் விரிந்த விடிய லேற்றெழுந்து
கானகப் பட்ட செந்நெறிக் கொண்மின்
பொருளுரை:
இரவில் நடக்காமல் வெளிச்சம் தெரியும் விடியலில் நல்ல பாதையைப் பார்த்துச் செல்லுங்கள். அல் = இரவு \ எல் = பகல், வான்கண் = வானத்தின் கண்ணாகிய எல்லோன் (சூரியன்)
மைந்து மலி சினத்த களிறு மதன் அழிக்கும் . . . .[260]
துஞ்சு மரம் கடுக்கும் மாசுணம் விலங்கி
இகந்து சேண் கமழும் பூவும் உண்டோர்
மறந்து அமைகல்லா பழனும் ஊழ் இறந்து
பெரும் பயன் கழியினும் மாந்தர் துன்னார்
இரும் கால் வீயும் பெரு மர குழாமும் . . . .[265]
இடனும் வலனும் நினையினிர் நோக்கி
குறி அறிந்து அவையவை குறுகாது கழிமின்
மைந்துமலி சினத்த களிறுமதன் அழிக்கும் . . . .[260]
துஞ்சுமரங் கடுக்கும் மாசுணம் விலங்கி
இகந்துசேட் கமழும் பூவும் உண்டோ ர்
மறந்தமை கல்லாப் பழனும் ஊழிறந்து
பெரும்பயங் கழியினும் மாந்தர் துன்னார்
இருங்கால் வீயும் பெருமரக் குழாமும் . . . .[265]
இடனும் வலனும் நினையினர் நோக்கிக்
குறியறிக் தவையவை குறுகாது கழிமின்
பொருளுரை:
குளம் போன்ற அகன்ற வாயைக் கொண்ட மலைப்பாம்பு யானையின் வலிமையையும் அழிக்க வல்லது. அது தூங்கும் மரம் போலக் கிடக்கும். விலகிச் செல்லுங்கள். கண்ணில் பட்ட பூக்களையெல்லாம் முகராதீர்கள். விழுந்து கிடக்கும் பழங்களையெல்லாம் சாப்பிடாதீர்கள். இடப்புறமும் வலப்புறமும் உள்ள பெரிய மரங்களையும் பூக்களையும் பார்த்துக் கொண்டு வழியைத் தவற விட்டுவிடாதீர்கள்.
கூடு இயத்து அன்ன குரல் புணர் புள்ளின்
நாடு காண் நனம் தலை மென்மெல அகன்மின் . . . .[259 - 270]
கூடியத் தன்ன குரல்புணர் புள்ளின்
நாடுகா ணனந்தலை மென்மெல அகன்மின் . . . .[270]
பொருளுரை:
கூட்டில் வாழ்வது போல் ஆலமரக் கிளைகளில் ஒலிக்கும் பறவைகளின் ஒலியைக் கேட்டுக்கொண்டே செல்லுங்கள்.
ஞாயிறு தெறாஅ மாக நனம் தலை
தேஎம் மருளும் அமையம் ஆயினும்
இறாஅ வன் சிலையர் மா தேர்பு கொட்கும்
குறவரும் மருளும் குன்றத்து படினே . . . .[275]
அகன் கண் பாறை துவன்றி கல்லென
இயங்கல் ஓம்பி நும் இயங்கள் தொடுமின் . . . .[271 - 277]
ஞாயிறு தெறாஅ மாசு நனந்தலைத்
தேஎ மருளும் அமைய மாயினும்
இறாஅவன் சிலையர் மாதேர்பு கொட்கும்
குறவரு மருளுங் குன்றத்துப் படினே . . . .[275]
அகன்கட் பாறை துவன்றிக் கல்லென
இயங்கல் ஓம்பிநும் மியங்கள் தொடுமின்
காடு காத்து உறையும் கானவர் உளரே
நிலை துறை வழீஇய மதன் அழி மாக்கள் . . . .[280]
புனல் படு பூசலின் விரைந்து வல் எய்தி
காடுகாத் துறையுங் கானவர் உளரே
நிலைத்துறை வழீஇய மதனழி மாக்கள் . . . .[280]
புனற்படு பூசலின் விரைந்துவல் லெய்தி
பொருளுரை:
வெயில் படாத மரமடர்ந்த காடாயினும், மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்திலும் மானைத் தேடிக்கொண்டு குறவர்கள் வில்லும் கையுமாக அலைவர். அவர்களே திசை தடுமாறும் ஞாயிறு தெரியாக் கானகம் அது. அக் குன்றங்களுக்குச் சென்றால் பாறைமீது அமர்ந்துகொண்டு உங்களுடைய இசைக்கருவிகளை முழக்குங்கள் காட்டைக் காப்பாற்றிக்கொண்டு வாழும் கானவர்கள் அங்கெல்லாம் இருப்பார்கள். வழி தவறியவர்களுக்கெல்லாம் உதவ ஓடோடி வருவார்கள். தண்ணீரின் ஓசை போல் பாதுகாப்புக் குரல் கொடுத்துக் கொண்டே உங்களிடம் வந்து சேர்வார்கள்.
மலைதற்கு இனிய பூவும் காட்டி
ஊறு நிரம்பிய ஆறு அவர் முந்துற
நும்மின் நெஞ்சத்து அவலம் வீட . . . .[285]
இம்மென் கடும்போடு இனியிர் ஆகுவிர்
மலைதற் கினிய பூவுங் காட்டி
ஊறு நிரம்பிய ஆறவர் முந்துற
நும்மி னெஞ்சத் தவலம் வீட . . . .[285]
இம்மென் கடும்போ டினியிர் ஆகுவிர்
பொருளுரை:
கானவர் நீங்கள் உண்ணுவதற்குச் சுவையான பழங்களைத் தருவார்கள். உங்களை மகிழ்விக்கப் பூ மாலை போடுவார்கள். உங்களுக்கும் உங்கள் சுற்றத்தாருக்கும் நேர்ந்த உடல்துன்பம், உள்ள-உளைச்சல் அகிய அவலத்தைப் போக்குவார்கள். நீங்கள் அவர்களுக்கும் அவர்களது சுற்றத்தா1ர்களுக்கும் இனியவர் ஆகிவிடுவீர்கள்.
குறியவும் நெடியவும் ஊழ் இழிபு புதுவோர்
நோக்கினும் பனிக்கும் நோய் கூர் அடுக்கத்து
அலர் தாய வரி நிழல் அசையினிர் இருப்பின் . . . .[290]
பல திறம் பெயர்பவை கேட்குவிர் மாதோ . . . .[278 - 291]
குறியவும் நெடியவும் ஊழிழிபு புதுவோர்
நோக்கினும் பனிக்கும் நோய்கூர் அடுக்கத்து
அலர்தாய வரிநிழல் அசையினிர் இருப்பிற் . . . .[290]
பலதிறம் பெயர்பவை கேட்குவிர் மாதோ
பொருளுரை:
திசை காட்டும் அறிஞர்கள் கூறிய வழியில் செல்ல வேண்டும். குறுகிய, நீண்ட வழிகளைக் கடைப்பிடித்துச் செல்ல வேண்டும். புதியவர்களைப் பார்த்தால் அச்சம் வரும். பலவகையான பூக்கள் உதிர்ந்து வரி வரியாகக் கிடக்கும் நிழலில் அசதியைப் போக்க அமர்ந்திருக்கும் போது மலையோசை (மலைபடுகடாம்) பலவற்றைக் கேட்கலாம்.
மலை முழுதும் கமழும் மாதிரம்தோறும்
அருவி நுகரும் வான் அரமகளிர்
வரு விசை தவிராது வாங்குபு குடைதொறும் . . . .[295]
தெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை
மலைமுழுதுங் கமழு மாதிரந் தோறும்
அருவிய நுகரும் வானர மகளிர்
வருவிசை தவிராது வாங்குபு குடைதொறும் . . . .[295]
தெரியிமிழ் கொண்டநும் இயம்போ லின்னிசை
பொருளுரை:
குரங்குகள் பலாப்பழங்களைத் தோண்டுவதால் பலாப்பழத்தின் புண் மலை முழுவதும் மணம் வீசிக் கமழும். கொட்டும் அருவியைத் துய்க்கும் வான்-அரமகளிர் நீர் கொட்டும் விசையையெல்லாம் வா1ங்கிக்கொண்டு நீராடும் ஒலியானது பாணர்கள் தம் இசைக்கருவிகளை முழக்குவது போல் கேட்கும். அரம்பை என்பது வாழைமரம். வாழைமரம் போல் அழகிய தோற்றம் கொண்டவர் அரம்பையர். அரம்பையர் என்போர் அரமகளிர். அரம்பையர் கற்பனைத் தெய்வம். பெண்தெய்வம். இது தமிழ்ச்சொல்.
விலங்கல் மீமிசை பணவை கானவர்
புலம் புக்கு உண்ணும் புரி வளை பூசல்
சேய் அளை பள்ளி எஃகு உறு முள்ளின் . . . .[300]
எய் தெற இழுக்கிய கானவர் அழுகை
கொடுவரி பாய்ந்தென கொழுநர் மார்பில்
நெடு வசி விழுப்புண் தணிமார் காப்பு என
அறல் வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல்
விலங்கல் மீமிசைப் பணவைக் கானவர்
புலம்புக் குண்ணும் புரிவளைப் பூசல்
சேயளைப் பள்ளி எஃகுறு முள்ளின் . . . .[300]
எய்தெற இழுக்கிய கானவர் அழுகை
கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பின்
நெடுவசி விழுப்புண் தணிமார் காப்பென
அறல்வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல்
பொருளுரை:
யானை ஒலி - தன் கூட்டத்திலிருந்து பிரிந்த யானை கானவனின் விளைவயலில் புகுந்து உண்ணும்போது பரண்மீது இருந்துகொண்டு கானவன் ஓட்டுவதைப் பொருட்படுத்தாது தன் இனத்தை அழைக்க எழுப்பும் சங்கூதுவது போன்ற யானையின் ஒலி. கானவன் அழுகை - கானவன் குகையில் படுத்திருந்தான். அவன் பாறைமேல் வைத்திருந்த அம்பு நழுவி அவன்மேல் விழுந்துவிட்டது. அப்போது அவன் அழும் ஒலி கொடிச்சியர் பாடல் - புலி பாய்ந்ததால் தன் கணவன் மார்பில் உண்டான புண்ணை ஊசிநரம்பால் தைக்கும்போது அவனுக்கு வலி தெரியாமல் இருப்பதற்காகக் கொடிச்சியர்கள் பாடும் காப்புப் பாடலின் ஒலி.
மலைமார் இடூஉம் ஏம பூசல்
கன்று அரைப்பட்ட கயம் தலை மட பிடி
வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின்
ஒண் கேழ் வய புலி பாய்ந்தென கிளையொடு
நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல் . . . .[310]
கை கோள் மறந்த கரு விரல் மந்தி
அரு விடர் வீழ்ந்த தன் கல்லா பார்ப்பிற்கு
முறி மேய் யாக்கை கிளையொடு துவன்றி
சிறுமையுற்ற களையா பூசல்
மலைமா ரிடூஉம் ஏமப் பூசல்
கன்றரைப் பட்ட கயந்தலை மடப்பிடி
வலிக்குவரம் பாகிய கணவன் ஓம்பலின்
ஒண்கேழ் வயப்புலி பாய்ந்தெனக் கிளையொடு
நெடுவரை இயம்பும் இடியுமிழ் தழங்குகுரல் . . . .[310]
கைக்கோண் மறந்த கருவிரன் மந்தி
அருவிடர் வீழ்ந்ததன் கல்லாப் பார்ப்பிற்கு
முறிமே யாக்கைக் கிளையொடு துவன்றிச்
சிறுமை யுற்ற களையாப் பூசல்
பொருளுரை:
பூச்சூடும் பாட்டொலி - மலைநில மக்கள் வேங்கைப் பூவை மாலையாகத் தொடுத்து அணிந்து கொள்ளும்போது பாடும் பாட்டொலி. யானையின் தழங்கு குரல் - பெண்யானை தன் கன்றைத் தன் உடல் நிழலில் மறைத்து அழைத்துச் சென்றது. அக் கன்றின் தந்தை தன் வலிமையை யெல்லாம் காட்டி யானைக் குட்டியைத் தாக்க வரும் புலியை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தது. ஆனாலும் புலி யானைக் கன்றைப் பிடித்துவிட்டது. கண்ட யானையின் சுற்றம் முழுமையுமாக ஒன்று சேர்ந்து முழங்கி எழுப்பிய தழங்குகின்ற குரல். மந்தி பூசல் - தாய்க்குரங்கு தன் குட்டியைப் பிடிக்க மறந்து தாவியபோது குட்டி பெரிய பள்ளத்தில் விழுந்து துன்புற்றுக் கத்தியது. மரத்திலிருந்த தளிர்களைப் பிய்த்துத் தின்று கொண்டிருந்த குரங்குகள் அதன் துன்பத்தைப் போக்க முடியாமல் பூசலிடும் ஒலி. கட்டிப்போட்டிருக்கும் ஒன்று எழுப்பும் ஒலி
நிலை பெய்து இட்ட மால்பு நெறி ஆக
பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை
அரும் குறும்பு எறிந்த கானவர் உவகை
திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என
நறவு நாள்செய்த குறவர் தம் பெண்டிரொடு . . . .[320]
மான் தோல் சிறு பறை கறங்க கல்லென
வான் தோய் மீமிசை அயரும் குரவை
நல் எழில் நெடும் தேர் இயவு வந்து அன்ன
கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை
நிலைபெய் திட்ட மால்புநெறி யாகப்
பெரும்பயன் தொகுத்த தேங்கொள் கொள்ளை
அருங்குறும் பெறிந்த கானவர் உவகை
திருந்துவேல் அண்ணற்கு விருந்திறை சான்மென
நறவுநாட் செய்த குறவர்தம் பெண்டிரொடு . . . .[320]
மான்றோற் சிறுபறை கறங்கக் கல்லென
வான்றோய் மீமிசை அயருங் குரவை
நல்லெழி னெடுந்தேர் இயவுவந் தன்ன
கல்யா றொலிக்கும் விடர்முழங் கிரங்கிசை
பொருளுரை:
தேன் எடுக்கும் கொள்ளை ஒலி - ஆண்குரங்கு கூடச் செல்ல முடியாத மலைப்பாறை இடுக்கில் தேனீக்கள் கூடு கட்டி வைத்திருக்கும். கயிற்றின் வழியாக இறங்கி அந்தத் தேனைக் கொள்ளையிடும் கொள்ளையொலி (மால்பு = கயிறு). கானவர் உவகை ஒலி - அரசன் ஆணைப்படி சிற்றூர்களை வென்று அதனைச் சூறையாடும் கானவர்களின் மகிழ்ச்சி ஆரவார ஒலி. குரவரின் குரவை ஒலி - சூரையாடிக் கொண்டுவந்த பொருள்-விருந்து அரசனுக்குப் போதும் என்று கருதி, போருக்கு எழுந்த நாளில் காலையில் நறவுக்கள்ளை ஊற்றித் தந்த குறப்பெண்களுக்கும் அதனை ஊற்றித் தந்து அவர்களோடு சேர்ந்து மான்தோல் பறையை முழக்கிக் கொண்டு கானவர் குரவை ஆடும் ஒலி. கல்லிலே மோதி ஓடும் ஆற்றின் இரங்கல் ஒலி - சிறு பருக்கைக்கல் பாதையில் தேர் செல்லும்போது கேட்கும் ஓசைபோல் ஆற்று வெள்ளம் பிளவுப் பாதைகளில் மோதிக்கொண்டு இறங்கும்போது கேட்கும் இரங்கல் ஒலி.
உரவு சினம் தணித்து பெரு வெளில் பிணிமார்
விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை
ஒலி கழை தட்டை புடையுநர் புனம்தொறும்
கிளி கடி மகளிர் விளி படு பூசல்
இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு . . . .[330]
மலை தலைவந்த மரையான் கதழ் விடை
மாறா மைந்தின் ஊறு பட தாக்கி
கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்து ஆர்ப்ப
வள் இதழ் குளவியும் குறிஞ்சியும் குழைய
நல் ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை . . . .[335]
உரவுச்சினந் தணித்துப் பெருவெளிற் பிணிமார்
விரவுமொழி பயிற்றும் பாக ரோதை
ஒலிகழைத் தட்டை புடையுநர் புனந்தொறும்
கிளிகடி மகளிர் விளிபடு பூசல்
இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு . . . .[330]
மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை
மாறா மைந்தின் ஊறுபடத் தாக்கிக்
கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப
வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய
நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை . . . .[335]
பொருளுரை:
யானை பயிற்றும் ஒலி - யானையை நீண்ட பொய்க்குழிக்குள் விழச்செய்து, அதன் சினத்தைத் தணித்துப் பெரிய கயிற்றுச் சங்கிலியில் பிணித்துக் கட்டுவதற்காகப் பாகர் தமிழோடு கலந்த சில பயிற்று மொழிகளைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருக்கும் மொழியொலி. கிளி கடி பூசல் - மூங்கிலில் பாதியைப் பிளந்து செய்த தட்டையை முழக்கிக் கொண்டு தினைப் புனங்களில் மகளிர் கிளிகளை ஓட்டச் சோ …சோ … என்று பாடும் பூசல் ஒலி. நல் ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை - வரையாட்டுக் கடாய் ஒன்று தன் இனத்திலிருந்து பிரிந்து சென்று மற்றோர் இனத்தை வளைத்துப் போட்டு அந்த இனத்திற்குத் தலைவன் ஆவதற்காக அதன் தலைமைக் கடாவோடு மோதிப் போரிட்டுக்கொண்டிருந்தது. அதனைப் பார்த்த முல்லைநிலக் கோவலர், குறிஞ்சிநிலக் குறவர் ஆகிய இருநில ஆண்களும் ஒன்று கூடி ஆரவாரம் செய்துகொண்டு இரு காளைகளோடும் போரிடும் கம்பலை-ஒலி
வண் கோள் பலவின் சுளை விளை தீம் பழம்
உண்டு படு மிச்சில் காழ் பயன் கொண்மார்
கன்று கடாஅவுறுக்கும் மகாஅர் ஓதை
மழை கண்டு அன்ன ஆலைதொறும் ஞெரேரென . . . .[340]
கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும்
தினை குறு மகளிர் இசை படு வள்ளையும்
சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
பன்றிப்பறையும் குன்றகம் சிலம்பும் . . . .[292 - 344]
வன்கோட் பலவின் சுளைவிளை தீம்பழம்
உண்டுபடு மிச்சிற் காழ்பயன் கொண்மார்
கன்று கடாஅ வுறுக்கு மகாஅ ரோதை
மழைகண் டன்ன ஆலைதொறு ஞெரேரெனக் . . . .[340]
கழைகண் ணுடைக்குங் கரும்பி னேத்தமும்
தினைகுறு மகளிர் இசைபடு வள்ளையும்
சேம்பு மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
பன்றிப் பறையுங் குன்றகச் சிலம்பும்
பொருளுரை:
பிணையல் ஓட்டும் ஓசை - உண்டதுபோக மீதமுள்ள பலாச்சுளைகளில் உள்ள கொட்டைகளை எடுப்பதற்காகக் கன்றுகளைப் பிணையலாகக் கட்டி, அக் கன்றுகளைப் பூத்திருக்கும் காந்தள் கொடிகளால் மெதுவாக அடித்து ஓட்டும்போது சிறுவர்கள் எழுப்பும் ஆரவார ஓசை. கரும்பாலை ஓசை - மழைபோல் கரும்புச்சாறு ஓடும்படிகரும்பாலையில் கரும்பின் கண்ணை உடைக்கும் ஆலை ஓசை. வள்ளைப் பாட்டு - மகளிர் பாடிக்கொண்டு தினை குற்றும் வளையல் தாளப் பாட்டோசை. பன்றிப் பறை - நிலத்தைக் கிண்டி சேம்பினையும், மஞ்சளையும் வீணாக்கும் பன்றியை ஓட்ட அந் நிலம் காப்போர் அடிக்கும் பன்றிப் பறையின் ஓசை. குன்றகச் சிலம்பு - இந்த எல்லா ஓசைகளையும் எதிரொலிக்கும் மலைக்காட்டின் எதிரொலி முழக்கம். இப்படிப் பல கடாம் ஓசைகளைக் கேட்கலாம்.
அவலவும் மிசையவும் துவன்றி பல உடன்
அலகை தவிர்த்த எண் அரும் திறத்த
மலை படு கடாஅம் மாதிரத்து இயம்ப
குரூஉ கண் பிணையல் கோதை மகளிர்
முழவு துயில் அறியா வியலுள் ஆங்கண் . . . .[350]
விழவின் அற்று அவன் வியன் கண் வெற்பே
அவலவு மிசையவுந் துவன்றிப் பலவுடன்
அலகைத் தவிர்த்த எண்ணருந் திறத்த
மலைபடு கடாஅ மாதிரத் தியம்பக்
குரூஉக்கட் பிணையல் கோதை மகளிர்
முழவுத்துயில் அறியா வியலு ளாங்கண் . . . .[350]
விழவின் அற்றவன் வியன்கண் வெற்பே
பொருளுரை:
இப்படி இந்த மலையோசைகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து மலையின் மேல் பகுதியிலிருந்தும், கீழ்ப் பகுதியிலிருந்தும் கேட்டுக்கொண்டிருக்கும். இப்படி அளக்க முடியாத பல ஒலிகளும் கேட்கும். நாலாத் திசைகளிலும் கேட்கும். எந்த ஒலியின் மீது கவனம் செலுத்துகிறார்களோ அந்த ஒலியைப் பல்வேறு ஒலிகளுக்கிடையே கேட்க முடியும். திருவிழாக் காலத்தில் தெருவெல்லாம் முழவோசை கேட்டுக் கொண்டேயிருப்பது போல நன்னன் மலைமீது மலைபடு கடாம் கேட்டுக்கொண்டேயிருக்கும். சிவந்த கண்களோடு பூத் தொடுக்கும் மகளிர் தூங்காமல் இருப்பது போல முழவோசை தெருக்களில் கேட்டுக் கேட்டுக்கொண்டேயிருக்கும். அதுபோல மலைபடு கடாமும் கேட்டுக்கொண்டேயிருக்கும். இந்த ஓசைகள்தாம் மலைபடுகடாம்.
உண்டற்கு இனிய பல பாராட்டியும்
இன்னும் வருவதாக நமக்கு என
தொன் முறை மரபினிர் ஆகி பன் மாண் . . . .[355]
செரு மிக்கு புகலும் திரு ஆர் மார்பன்
உண்டற் கினிய பலபா ராட்டியும்
இன்னும் வருவ தாக நமக்கெனத்
தொன்முறை மரபினி ராகிப் பன்மாண் . . . .[355]
செருமிக்குப் புகலுந் திருவார் மார்பன்
பொருளுரை:
மலையின் காட்சிகளைக் கண் குளிரக் காணலாம். மலை ஒலிகளைக் காது குளிரக் கேட்கலாம். வாய் இனிக்கப் பழம் போன்றவற்றை உண்ணலாம். மற்றவற்றையும் இன்னும் கிடைக்க வேண்டு மென்று மரபு நெறி பிறழாமல் கேட்டுப் பெற்றுப் பாராட்டி மகிழலாம். நன்னன் திரு அமர் மார்பன். போர் என்றால் அவனுக்குக் கொள்ளை ஆசை. அவனைப் பலமுறைப் பாராட்டலாம்.
இறும்பூது கஞலிய இன் குரல் விறலியர்
நறும் கார் அடுக்கத்து குறிஞ்சி பாடி
கைதொழூஉ பரவி பழிச்சினிர் கழிமின் . . . .[345 - 360]
இறும்பூது கஞலிய இன்குரல் விறலியர்
நறுங்கார் அடுக்கத்துக் குறிஞ்சி பாடிக்
கைதொழூஉப் பரவிப் பழிச்சினிர் கழிமின் . . . .[360]
பொருளுரை:
வியப்பூட்டும் இனிய குரலமைந்த விறலியர் மகிழ்ச்சிப் பெருக்கில் இனிய குரலோடு குறிஞ்சிப் பண்பாடுவதைக் கேட்டுக் கொண்டே செல்லுங்கள். இடி முழக்கத்துடன் மேகம் மேயும் மலையின் புதுமைப் பொலிவைப் பாராட்டிக் கொண்டும் மலைத்தெய்வத்தைக் (முருகனைக்) கைகூப்பித் தொழுதுகொண்டும் செல்லுங்கள்.
கை தோய்வு அன்ன கார் மழை தொழுதி
தூஉ அன்ன துவலை துவற்றலின்
தேஎம் தேறா கடும் பரி கடும்பொடு
காஅய் கொண்ட நும் இயம் தொய்படாமல் . . . .[365]
கூவல் அன்ன விடரகம் புகுமின்
கைதோய் வன்ன கார்மழைத் தொழுதி
தூஉ யன்ன துவலை தூற்றலின்
தேஎந் தேறாக் கடும்பரிக் கடும்பொடு
காஅய்க் கொண்டநும் இயந்தொய் படாமற் . . . .[365]
கூவல் அன்ன விடரகம் புகுமின்
பொருளுரை:
பூரித்திருக்கும் பஞ்சைப் போல மேகங்கள் மலைமேல் மேயும். துவலைத் தூறல்கள் கை ஈரம் படத் தூறிக்கொண்டேயிருக்கும். செல்லவேண்டிய இடங்கூடத் தெரியாது. அப்போது நீங்கள் இசைக் கருவிகளில் பண் பாட முடியாது. எனவே கைகளும், கருவிகளும் காய்வதற்காகவும் இசைக்கருவிகள் ஈரம் படாமல் இருப்பதற்காகவும் கூவல் குடிசை போன்ற பாறை வெடிப்புக் குகைக்குச் சென்று தங்குங்கள்.
குன்று இடம்பட்ட ஆர் இடர் அழுவத்து
நின்று நோக்கினும் கண் வாள் வௌவும்
மண் கனை முழவின் தலைக்கோல் கொண்டு . . . .[370]
தண்டு கால் ஆக தளர்தல் ஓம்பி
ஊன்றினிர் கழிமின் ஊறு தவ பலவே
குன்றிடம் பட்ட ஆரிடர் அழுவத்து
நின்று நோக்கினும் கண்வாள் வெளவும்
மண்கனை முழவின் தலைக்கோல் கொண்டு . . . .[370]
தண்டுகா லாகத் தளர்தல் ஓம்பி
ஊன்றினிர் கழிமின் ஊறுதவப் பலவே
பொருளுரை:
பெரிய பாறைகள் உடைந்து உருளும் வழியில் [இகுப்பம்] செல்லாதீர்கள். ஆங்காங்கே குன்றுகளுக்கு இடையே துன்பம் தரும் காடுகள் உண்டு. அவற்றை உற்று நோக்கினால் கண் கலங்கும். அங்கெல்லாம் முழவு-முகம் கொண்ட தலைக்கோலை ஊன்றுகோலாகப் பயன்படுத்திக்கொண்டு ஏறிச் செல்லுங்கள். இன்றேல் நேரும் துன்பம் பலப் பல.
வெயில் புறந்தரூஉம் இன்னல் இயக்கத்து
கதிர் சினம் தணிந்த அமயத்து கழிமின் . . . .[361 - 375]
வெயில்புறந் தரூஉம் இன்னல் இயக்கத்துக்
கதிர்சினந் தணிந்த அமயத்துக் கழிமின் . . . .[375]
பொருளுரை:
கூரிய கல்லாகிக் கிடக்கும் பாறைகள் வெயிலைப் பிரதிபலித்துப் புறத்தே தூவிக் கொண்டிருப்பதால் காய்ச்சி வைத்திருக்கும் வேலைப் போல் நடக்கும்போது துன்பம் தரும். எனவே வெயிலின் சினம் தணிந்த பின்னர் நடந்து செல்லுங்கள்.
புரை தவ உயரிய மழை மருள் பல் தோல்
அரசு நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய
பின்னி அன்ன பிணங்கு அரில் நுழைதொறும்
முன்னோன் வாங்கிய கடு விசை கணை கோல் . . . .[380]
இன் இசை நல் யாழ் பத்தரும் விசி பிணி
மண் ஆர் முழவின் கண்ணும் ஓம்பி
கை பிணி விடாஅது பைபய கழிமின்
புரைதவ உயரிய மழைமருள் பஃறோல்
அரசுநிலை தளர்க்கும் அருப்பமும் உடைய
பின்னி யன்ன பிணங்கரி னுழைதொறும்
முன்னோன் வாங்கிய கடுவிசைக் கணைக்கோல் . . . .[380]
இன்னிசை நல்யாழ்ப் பத்தரும் விசிபிணி
மண்ணார் முழவின் கண்ணு மோம்பிக்
கைபிணி விடாஅது பைபயக் கழிமின்
பொருளுரை:
கொடிகள் பின்னிக் கிடக்கும் பிணங்கர் காட்டில் நுழையும்போது ஒருவரோடு ஒருவர் கைகளைப் பிடித்துக் கொண்டு மெல்ல மெல்லச் செல்லுங்கள். அந்த பிணங்கர்க் காடு அரசன் படையில் முன்னே செல்லும் தோல் படையையே நிலைகலங்கச் செய்ய வல்லவை. முன்னே செல்பவன் தன் அம்பால் தன்மேல் மோதும் முள்ளை ஒதுக்கிப் பிடித்துக்கொண்டு செல்வான். தான் கடந்ததும் அதை விட்டுவிடுவான். அது பின்னே வருபவர்மேல் மோதித் தாக்கும். உங்களின் யாழ், பத்தர், முழவு போன்ற இசைக் கருவிகள் மீதும் மோதித் தாக்கும். எனவே அவற்றையும் பாதுகாத்துக் கொண்டு கவனமாகச் செல்லுங்கள். அரசன் நன்னனின் சுற்றம் பலரும் புகழக் கேட்டுக் கேட்டு புகழையே வெறுத்திருந்தது. இங்குச் சுற்றம் என்பது படை. அது அவனை விட்டு அகலாமல் பாதுகாப்பாக இருந்துவந்தது.
தளி பொழி கானம் தலை தவ பலவே . . . .[385]
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்தென
நல் வழி கொடுத்த நாண் உடை மறவர்
செல்லா நல் இசை பெயரொடு நட்ட
கல் ஏசு கவலை எண்ணு மிக பலவே . . . .[376 - 389]
தளிபொழி கானந் தலைதவப் பலவே . . . .[385]
ஒன்னாத் தெவ்வர் உலைவிடத் தார்த்தென
நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்
செல்லா நல்லிசைப் பெயரொடு நட்ட
கல்லேசு கவலை எண்ணுமிகப் பலவே
பொருளுரை:
யானைகள் போரிடுவது போலக் காட்சி தரும் பெரிய பாறைக்கற்கள் இருக்கும். தூவான மழை பொழியும்போது வழுக்கிவிடும் பகுதிகள் பலவற்றை அவை கொண்டிருக்கும். பார்த்துக் கவனமாகச் செல்ல வேண்டும். மறவன் ஒருவன் பகைவர்களைச் சாய்த்தான். மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தான். எனினும் போரில் மாண்டான். அவனுடைய வீரத்தோடு தன் வீரத்தை ஒப்பிட்டுப் பார்த்த பிற மறவர்கள் தம் செயலுக்காக நாணினர். அவனது புகழைப் போற்றினர். பலரும் நடந்து செல்லும் வழி பிரியுமிடங்களில் அவனுக்குக் கல் நட்டனர். அவனத்து பெயரையும் புகழையும் அதில் பொறித்து வைத்தனர். அப்படிப்பட்ட கல்லேசு கவலைகள் பலவற்றைக் கடந்து செல்வீர்கள் அவற்றைத் தொழுது போற்றுங்கள்.
தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்து துனைமின்
பண்டு நற்கு அறியா புலம் பெயர் புதுவிர்
சந்து நீவி புல் முடிந்து இடுமின் . . . .[390 - 393]
தொன்றொழுகு மரபினும் மருப்பிகுத்துத் துனைமின்
பண்டுநற் கறியாப் புலம்பெயர் புதுவிர்
சந்து நீவிப் புன்முடிந் திடுமின்
பொருளுரை:
உங்களுக்கு விருப்பமான யாழை மீட்டிப் பாடிக்கொண்டும், மகிழ்ச்சிப் பெருக்கில் வழக்கம் போல் கொம்புகளை ஊதிக்கொண்டும் செல்லுங்கள். முன்பு நீங்கள் அறியாத புதிய வழியில் செல்லும்போது வழியிலுள்ள முட்புதர்களை வெட்டித் தூய்மைப் படுத்திக்கொண்டு செல்லுங்கள். அடுத்து வருபவர்களுக்கு வழி காட்டுவதற்காகக் கல்லிலே புல்லை முடிந்து ஆங்காங்கே வைத்து அடையாளம் செய்துகொண்டு செல்லுங்கள்.
கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த . . . .[395]
கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை
ஒட்டாது அகன்ற ஒன்னா தெவ்வர்
சுட்டினும் பனிக்கும் சுரம் தவ பலவே
கல்லெறிந் தெழுதிய நல்லரை மராஅத்து . . . .[395]
கடவு ளோங்கிய காடேசு கவலை
ஒட்டா தகன்ற ஒன்னாத் தெவ்வர்
சுட்டினும் பனிக்குஞ் சுரந்தவப் பலவே
பொருளுரை:
இப்பாதை எந்த ஊருக்குச் செல்கிறது என்பதை மரத்தில் கல்லால் கொட்டி எழுதி வைத்திருந்தனர். பாதைகள் பிரியும் சந்தியின் நடுவில் கைகாட்டி மரங்கள் மட்டும் அல்லாமல் பலரும் போற்றிப் புகழும் கடவுளைச் செதுக்கிய காட்டு மரங்களும் இருந்தன. அவற்றின் பெயரைச் சொன்ன மாத்திரத்திலேயே பகைவர்கள் நடுங்குவர். இப்படிப்பட்ட காட்டுப் பாதைகள் பல இருந்தன.
ஓம்பா வள்ளல் படர்ந்திகும் எனினே . . . .[400]
மேம்பட வெறுத்த அவன் தொல் திணை மூதூர்
ஆங்கனம் அற்றே நம்மனோர்க்கே
அசைவுழி அசைஇ அஞ்சாது கழிமின் . . . .[394 - 403]
ஓம்பா வள்ளற் படர்ந்திகும் எனினே . . . .[400]
மேம்பட வெறுத்தவன் தொஃறிணை மூதூர்
ஆங்கன மற்றே நம்ம னோர்க்கே
அசைவுழி யசைஇ அஞ்சாது கழிமின்
பொருளுரை:
நன்னன் தேனொழுகும் பூ மாலையைத் தலையில் அணிந்திருந்தான். நம்மைப் போன்றவர்களுக்கு அவன் தேர்களை வழங்குவான். கவிந்து வழங்கும் அவன் கைகள் தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் வீசும் கொடைத்தன்மை கொண்டவை. அவனது முன்னோர்களும் அத்தகைய கொடையாளிகள். அவன் ஊரும் அப்படிப்பட்டது. விரும்பிய இடத்தில் தங்கி அச்சமின்றிச் செல்லுங்கள்.
கலை நின்று விளிக்கும் கானம் ஊழ் இறந்து . . . .[405]
சிலை ஒலி வெரீஇய செம் கண் மரை விடை
தலை இறும்பு கதழும் நாறு கொடி புறவின்
வேறு புலம் படர்ந்த ஏறு உடை இனத்த
வளை ஆன் தீம் பால் மிளை சூழ் கோவலர்
வளையோர் உவப்ப தருவனர் சொரிதலின் . . . .[410]
பலம் பெறு நசையொடு பதி வயின் தீர்ந்த நும்
புலம்பு சேண் அகல புதுவிர் ஆகுவிர்
கலைநின்று விளிக்குங் கானம் ஊழிறந்து . . . .[405]
சிலையொலி வெரீஇய செங்கண் மரைவிடை
தலையிரும்பு கதழும் நாறுகொடிப் புறவின்
வேறுபுலம் படர்ந்த ஏறுடை இனத்த
வளையான் தீம்பால் மிளைசூழ் கோவலர்
வளையோர் உவப்பத் தருவனர் சொரிதலின் . . . .[410]
பலம்பெறு நசையொடு பதிவயிற் றீர்ந்தநும்
புலம்புசேண் அகலப் புதுவிர் ஆகுவிர்
பொருளுரை:
கானத்தில் கலை - பெண் மானைப் புலி தாக்கிக் கொன்று விட்டது. ஆண்மான் தன் பெண்மானை நினைத்துக் கொண்டே தவித்தது. இது ஒரு புறம். மரைவிடை - கானவன் தன் வில்லில் நாணைத் தெரித்துச் சரிபார்த்துக் கொண்டிருந்தான். அந்த ஒலியைக் கேட்ட காட்டாட்டுக் கடா தன் இனத்தைக் கூட்டிக்கொண்டு வேறு காட்டுக்கு ஓடியது. ஆவின் பால் - கோவலன் தான் வளைத்து வைத்திருக்கும் பசுக்களின் பாலைக் கறந்து கொண்டு வந்து தன் மனைவியின் கலத்தில் ஊற்றுவான். அதனை அவள் உங்களுக்கு விருந்தாக அளிப்பாள். அதனால் தெம்பு பெற்ற நீங்கள் வருத்தம் நீங்கி புத்துணர்வு பெறுவீர்கள்.
தகர் விரவு துருவை வெள்ளையொடு விரைஇ
கல்லென் கடத்திடை கடலின் இரைக்கும் . . . .[415]
பல் யாட்டு இன நிரை எல்லினிர் புகினே
பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர்
தகர்விரவு துருவை வெள்ளையொடு விரைஇக்
கல்லென் கடத்திடைக் கடலின் இரைக்கும் . . . .[415]
பல்யாட் டினநிரை எல்லினிர் புகினே
பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர்
பொருளுரை:
வயலில் இருக்கும் நெல்லுக் கட்டுகளைப் போலக் குரும்பையாடு, செம்மறியாடு, வெள்ளாடு ஆகியவை ஆங்காங்கே கலந்து மேயும் வழியில் சென்றால் கடல் இரைச்சல் போல் அவற்றின் ஒலியைக் கேட்கலாம். பகல் வேளையில் அவ் வழியே சென்றால், அவற்றின் பாலை உலையாக வைத்து மலைமக்கள் பொங்கிய சோற்றை நீங்கள் சமைக்காமலேயே பெறலாம்.
மெய் உரித்து இயற்றிய மிதி அதள் பள்ளி
தீ துணை ஆக சேந்தனிர் கழிமின் . . . .[404 - 420]
மெய்யுரித் தியற்றிய மிதியதட் பள்ளித்
தீத்துணை யாகச் சேந்தனிர் கழிமின் . . . .[420]
பொருளுரை:
அன்னத்தின் தூவி மயிரைத் திணித்துச் செய்த மெத்தை போல இருக்கும், மான் தோலை உரித்து மிதித்துச் செம்மைப்படுத்திய தோல் விரிப்புப் படுக்கையின்மேல், தீப் பந்த வெளிச்சச் சூடு சாயும் படுக்கையின் மீது உறங்கிவிட்டுச் செல்லலாம்.
கொடு வில் கூளியர் கூவை காணின்
படியோர் தேய்த்த பணிவு இல் ஆண்மை
கொடியோள் கணவன் படர்ந்திகும் எனினே
தடியும் கிழங்கும் தண்டினர் தரீஇ . . . .[425]
ஓம்புநர் அல்லது உடற்றுநர் இல்லை
ஆங்கு வியம் கொண்மின் அது அதன் பண்பே . . . .[421 - 425]
கொடுவிற் கூளியர் கூவை காணிற்
படியோர்த் தேய்த்த பணிவில் ஆண்மைக்
கொடியோள் கணவற் படர்ந்திகு மெனினே
தடியுங் கிழங்குந் தண்டினர் தரீஇ . . . .[425]
ஓம்புநர் அல்ல துடற்றுநர் இல்லை
ஆங்குவியங் கொண்மின் அதுவதன் பண்பே
பொருளுரை:
கூளியர் அம்பு விட்டால் கூப்பிடு தூரம் சென்று இலக்கைச் சரியாகத் தாக்கும். அவர்கள் வாழும் கூவைக் குடிசைகளைக் கண்டால், நன்னனைப் பார்க்கச் செல்கிறோம் என்று சொல்லுங்கள். அவர்கள் உங்களுக்குப் பாதுகாப்புத் தருவார்கள். யாரும் உங்களிடம் குறும்பு செய்ய மாட்டார்கள். சமைத்த கிழங்கும், புலால் கறியும் எல்லாருடைய வீட்டிலிருந்தும் வாங்கிவந்து உண்ணத் தருவார்கள். நன்னன் உலகிலுள்ள பகைவர் அனைவரையும் நெருஞ்சி முள்ளைத் தேய்ப்பது போல் காலால் தேய்த்துப் போட்டவன். பணியாத ஆளுமைத் திறம் பெற்றவன். நில மடந்தையின் கணவன்.
உம்பல் அகைத்த ஒண் முறி யாவும்
தளிரொடு மிடைந்த காமரு கண்ணி . . . .[430]
திரங்கு மரல் நாரில் பொலிய சூடி
முரம்பு கண் உடைந்த நடவை தண்ணென
உண்டனிர் ஆடி கொண்டனிர் கழிமின் . . . .[426 - 433]
உம்பல் அகைத்த ஒண்முறி யாவும்
தளிரொடு மிடைந்த காமரு கண்ணி . . . .[430]
திரங்குமர னாரிற் பொலியச் சூடி
முரம்புகண் ணுடைந்த நடவை தண்ணென
உண்டனிர் ஆடிக் கொண்டனிர் கழிமின்
பொருளுரை:
முருகனுக்குச் சூட்டும் வெண்கடம்பப் பூவையும், மேட்டு நிலங்களில் பூத்த பல்வேறு தளிர்களையும் சேர்த்து மரல் நாரில் கட்டித் தலையில் சூடி அழகு படுத்திக் கொள்ளுங்கள். முரம்பு நிலம் கண் உடைந்து அதில் ஊற்றாக வந்து நடந்தோடும் நீரில் விளையாடுங்கள். அது ஊற்றெடுக்கும் பகுதியிலுள்ள நீரைப் பருகுங்கள். தொடர்ந்து செல்லுங்கள்.
வேய் கொள் அரிசி மிதவை சொரிந்த . . . .[435]
சுவல் விளை நெல்லின் அவரை அம் புளிங்கூழ்
அற்கு இடை உழந்த நும் வருத்தம் வீட
அகலுள் ஆங்கண் கழி மிடைந்து இயற்றிய
புல் வேய் குரம்பை குடிதொறும் பெறுகுவிர்
வேய்கொள் அரிசி மிதவை சொரிந்த . . . .[435]
சுவல்விளை நெல்லின் அவரையம் பைங்கூழ்
அற்கிடை உழந்தநும் வருத்தம் வீட
அகலு ளாங்கட் கழிமிடைந் தியற்றிய
புல்வேய் குரம்பைக் குடிதொறும் பெறுகுவிர்
பொருளுரை:
வேங்கைப் பூ சிவப்பாக மலரும். வெந்தால் அதுபோல் மலரக்கூடியது மூங்கில் அரிசிச் சோறும், நன்செய் அல்லாத புன்செய் மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லஞ்சோறும் ஆகும். அந்தச் சோற்றுக்கு அவரைக்காய்ப் புளிக்குழம்பு. தெருக்களில் மூங்கில் கழிகளின்மேல் புல்லால் வேய்ந்த குடிசை. அந்தக் குடிசைகளில் எல்லாம் அந்த அவரைக்காய்ப் புளிக்குழம்புச் சோற்றை நடந்துவந்த களைப்புத் தீரப் பெறலாம்.
வெண் எறிந்து இயற்றிய மா கண் அமலை
தண்ணென் நுண் இழுது உள்ளீடு ஆக
அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர்
வெண்ணெறிந் தியற்றிய மாக்கண் அமலை
தண்ணெ ணுண்ணிழு துள்ளீ டாக
அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர்
பொருளுரை:
அமலை என்பது பொங்கல் சோறு. அது தங்கம் இறைந்து கிடப்பது போன்று காணப்பட்டது. வழுவழுப்பாக உள்ள நுண்ணிய இழுது போன்ற வெண்ணெய் போட்டுச் சமைக்கப் பட்ட நெய்ச்சோறு அது. அசதிக்குத் தங்கும் இடங்களில் எல்லாம் இதனை நீங்கள் பெறலாம்.
உண்ணுநர் தடுத்த நுண் இடி நுவணை . . . .[445]
நொய் மர விறகின் ஞெகிழி மாட்டி
பனி சேண் நீங்க இனிது உடன் துஞ்சி
புலரி விடியல் புள் ஓர்த்து கழிமின் . . . .[434 - 448]
உண்ணுநர்த் தடுத்த நுண்ணிடி நுவணை . . . .[445]
நொய்ம்மர விறகின் ஞெகிழி மாட்டிப்
பனிசேண் நீங்க இனிதுடன் துஞ்சிப்
புலரி விடியற் புள்ளோர்த்துக் கழிமின்
பொருளுரை:
நுவணை என்பது தினை. விசயம் என்பது ‘அல்வா’ப் பண்ணியம் (பலகாரம்). நுண் இடி என்பது தினைமாவு விசயம், நுவணை ஆகியவற்றை உண்ணத் தருவார்கள். தங்கும் இடங்களில் எரியும் கனப்புக்-கட்டையின் [ஞெகிழியின்] வெதுவெதுப்பு மலையின் குளிரைப் போக்கும். அந்த மலைமக்களுடன் சேர்ந்து ஓரிடத்தில் உறங்கலாம். பொழுது புலர்ந்து விடியும்போது பறவைகள் ஒலியெழுப்பும். அதைக் கேட்டு எழுந்து நன்னன் இருப்பிடம் நோக்கிச் செல்லலாம்.
மெல் அவல் இருந்த ஊர்தொறும் நல் யாழ் . . . .[450]
பண்ணு பெயர்த்து அன்ன காவும் பள்ளியும்
பல் நாள் நிற்பினும் சேந்தனிர் செலினும்
நன் பல உடைத்து அவன் தண் பணை நாடே . . . .[449 - 453]
மெல்லவ லிருந்த ஊர்தொறு நல்லியாழ்ப் . . . .[450]
பண்ணுப்பெயர்த் தன்ன காவும் பள்ளியும்
பன்னா ணிற்பினும் சேந்தனிர் செலினும்
நன்பல வுடைத்தவன் தண்பணை நாடே
பொருளுரை:
காவிலும் களத்திலும் யாழிசை மீட்டிக்கொண்டு ஆங்காங்கே பலநாள் தங்கியும் செல்லலாம்.- புல்லைப் போல் வேர் பிரியும் அடிமரத்தைக் கொண்டது காஞ்சிமரம். அதில் ஆற்றுப்புனல் பாய்ந்து பாதி வேரை அரித்து விட்டது. மீதி பாதி வேர் மேட்டுநிலத்தில் பிடித்துக் கொண்டு நின்றது. அது போல் மரம்கொண்ட ஊர்கள் பல. அந்த ஊர்களில் சீரிய யாழ்ப்பண்ணைப் போல் ஒலி தரும் காடுகள் பல. பள்ளிகளிலும் அந்த ஒலி. பல நாள் அங்குத் தங்கினாலும், அந்த ஊருக்குப் போனவுடனேயே சென்று விட்டாலும் நன்னன் வளவயல் நாட்டில் பெறும் நன்மைகள் பலப்பல.
வலையோர் தந்த இரும் சுவல் வாளை . . . .[455]
நிலையோர் இட்ட நெடு நாண் தூண்டில்
பிடி கை அன்ன செம் கண் வராஅல்
துடி கண் அன்ன குறையொடு விரைஇ
பகன்றை கண்ணி பழையர் மகளிர்
ஞெண்டு ஆடு செறுவில் தராய்க்கண் வைத்த . . . .[460]
விலங்கல் அன்ன போர் முதல் தொலைஇ
வளம் செய் வினைஞர் வல்சி நல்க
துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதி தேறல்
இளம் கதிர் ஞாயிற்று களங்கள்தொறும் பெறுகுவிர்
வலையோர் தந்த இருஞ்சுவல் வாளை . . . .[455]
நிலையோர் இட்ட நெடுநாண் தூண்டிற்
பிடிக்கை யன்ன செங்கண் வராஅல்
துடிக்கண் அன்ன குறையொடு விரைஇப்
பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர்
ஞெண்டாடு செறுவிற் றாரஅய்க்கண் வைத்த . . . .[460]
விலங்கல் அன்ன போர்முதற் றொலைஇ
வளஞ்செய் வினைஞர் வல்சி நல்கத்
துளங்குதசும்பு வாக்கிய பசும்பொதித் தேறல்
இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கடொறும் பெறுகுவிர்
பொருளுரை:
பழனம் - பழமையான வளவயல் பகுதிகளிலெல்லாம் மீன் வாடை வீசும். வலையோர் - பழனங்களில் வாளை மீனை வலை போட்டுப் பிடித்து வருவார்கள். நிலையோர் - வரால் மீனைத் தூண்டில் போட்டுப் பிடித்து வருவார்கள். இந்த வரால் மீன் யானையின் துதிக்கை போல உருவம் கொண்டிருக்கும். பழையர் மகளிர் - வாளை மீன்களைத் துடியின் வாய் போல் நறுக்கி, வயலில் பிடித்து வந்த நண்டையும் சேர்த்துச் சமைப்பார்கள். சமைத்த அந்தக் குழம்பைத் ‘தராய்’ என்னும் தூக்குப்பாத்திரத்தில், வைக்கோல் போரின் ஓரத்தில் வைத்துக்கொண்டு வழங்குவார்கள். வளஞ்செய் வினைஞர் (உழவர்) - மலைபோல் குவித்து நெல்லை [வல்சி என்னும் உணவுப்பண்டம்] அடித்துக் கொண்டு வந்து நல்குவார்கள். பசும்பொதித் தேறல் - உழவர் மகளிர் வடித்த பச்சரிசிக் கஞ்சியைப் பதப்படுத்திய தேறலைத் தருவார்கள். இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கள் - வெயில் இளகிய காலையிலும், மாலையிலும் வயலில் உள்ள போர்களங்களில் சொம்பு சொம்பாக [தசும்பு] இவற்றைப் பெறலாம்.
வண்டு பட கமழும் தேம் பாய் கண்ணி
திண் தேர் நன்னற்கும் அயினி சான்ம் என
கண்டோர் மருள கடும்புடன் அருந்தி
எருது எறி களமர் ஓதையொடு நல் யாழ்
மருதம் பண்ணி அசையினிர் கழிமின் . . . .[454 - 470]
வண்டுபடக் கமழுந் தேம்பாய் கண்ணித்
திண்டேர் நன்னற்கும் அயினி சான்மெனக்
கண்டோ ர் மருளக் கடும்புடன் அருந்தி
எருதெறி களமர் ஓதையொடு நல்யாழ்
மருதம் பண்ணி அசையினிர் கழிமின் . . . .[470]
பொருளுரை:
வெள்ளரி வெண்சோறு - முள் என்பது கத்தி. (ஈழத்தமிழர் இதனைச் சூரி என்பதும் இப் பழந்தமிழின் வழிவந்த சொல்லே) வெள்ளரிக் காயைக் கத்தியால் அரிந்து சேர்த்துச் சமைத்த வெண்பொங்கல். நன்னன் - நன்னன் வண்டு மொய்க்கும் புத்தம் புது பூ மாலை அணிந்திருப்பான். அவன் தன் அரசியல் சுற்றத்தோடு உண்ணுவதற்கும் போதுமானது என்று கண்டோர் மருளும்படி உழவர் சமைத்த அந்தச் சோறு மிகுதியாகச் சமைக்கப்பட்டிருந்தது. களமர் ஓதை - அருகிலுள்ள களத்தில் உழவர் போரடிக்கும்போது பிணையல் எருதுகளை ஓட்டும் ஓசை கேட்கும். அதனை வாழ்த்தி நீங்கள் உங்கள் யாழில் மருதப் பண் பாடுங்கள். பின் செல்லுங்கள்.
செம் கண் எருமை இனம் பிரி ஒருத்தல்
கனை செலல் முன்பொடு கதழ்ந்து வரல் போற்றி
வனை கல திகிரியின் குமிழி சுழலும்
துனை செலல் தலைவாய் ஓவு இறந்து வரிக்கும் . . . .[475]
காணுநர் வயாஅம் கட்கு இன் சேயாற்றின்
யாணர் ஒரு கரை கொண்டனிர் கழிமின் . . . .[471 - 477]
செங்கண் எருமை இனம்பிரி ஒருத்தல்
கனைசெலல் முன்பொடு கதழ்ந்துவரல் போற்றி
வனைகலத் திகிரியிற் குமிழி சுழலும்
துனைசெலற் றலைவாய் ஓவிறந் தொலிக்கும் . . . .[475]
காணுநர் வயாஅங் கட்கின் சேயாற்றின்
யாணர் ஒருகரைக் கொண்டனிர் கழிமின்
பொருளுரை:
நெல் அறுக்கும் உழவர்கள் தண்ணுமை முரசை முழக்கிவர். அந்த ஒலியைக் கேட்டு எருமைக் கடா தன் இனத்தை விட்டுவிட்டுப் பிரிந்து ஓடும். கனைத்துக் கொண்டு, தன் வலிமையைக் காட்டும் சினத்தோடு சேயாற்றுக்குள் இறங்கும். அங்கே அந்த எருமைக்கடா நீர்ச் சுழலில் அகப்பட்டுக் கொண்டு சுழலும். குயவன் பானை வனையும்போது சக்கரத்தில் பானை சுழல்வது போலச் சுழலும். வெள்ளம் வேகமாகப் பாயும். அப்போது அது மதகை அடைத்து வைக்கும் ஓப்பலகை இடுக்குகளில் பீரிட்டுக் கொண்டு பீச்சும். இதனைக் கண்டவர்கள் மீண்டும் காண ஆசைப்படும்படி கண்ணுக்கு இனிமையாக இருக்கும். பார்த்துக் கொண்டே சேயாறு ஆற்றங்கரையில் செல்லுங்கள்.
பதி எழல் அறியா பழம் குடி கெழீஇ
வியல் இடம் பெறாஅ விழு பெரு நியமத்து . . . .[480]
யாறு என கிடந்த தெருவின் சாறு என
இகழுநர் வெரூஉம் கவலை மறுகின்
கடல் என கார் என ஒலிக்கும் சும்மையொடு
மலை என மழை என மாடம் ஓங்கி
துனி தீர் காதலின் இனிது அமர்ந்து உறையும் . . . .[485]
பனி வார் காவின் பல் வண்டு இமிரும்
நனி சேய்த்து அன்று அவன் பழ விறல் மூதூர் . . . .[478 - 487]
பதியெழ லறியாப் பழங்குடி கெழீஇ
வியலிடம் பெறாஅ விழுப்பெரு நியமத்து . . . .[480]
யாறெனக் கிடந்த செருவிற் சாறென
இகழுநர் வெரூஉங் கவலை மறுகிற்
கடலெனக் காரென ஒலிக்குஞ் சும்மையொடு
மலையென மழையென மாட மோங்கித்
துனிதீர் காதலின் இனிதமர்ந் துறையும் . . . .[485]
பனிவார் காவிற் பல்வண் டிமிரும்
நனிசேய்த் தன்றவன் பழவிறன் மூதூர்
பொருளுரை:
வரைப்பு என்னும் ஊர் - செங்கண்மா என்பது சேயாற்றின் கரையில் உள்ளதோர் ஊர். அங்குப் பயன்படுத்திய செல்வம் போக மிஞ்சியிருக்கும் செல்வம் கேட்பாரற்றுத் தூங்கிக் கிடக்கும். குடிமக்கள் - குடிமக்கள் அந்த ஊரை விட்டு வெளியூர் செல்லாமல் பழமையான குடிமக்களாகவே வாழ்வர். நியமம் - காலியிடம் இல்லாமல் நெருக்கமாகக் கட்டப்பட்ட வீடுகளுடன் அதன் கடைவீதி அமைந்திருக்கும். தெரு - நீரோடும் ஆறுபோல் மக்கள் நடமாடும் தெருக்கள் அமைந்திருக்கும். அந்த ஊரைக் காண்பதற்கு முன்னர், அதனை இகழ்ந்து பேசியவர்கள் மக்கள் வெள்ளத்தைப் பார்த்து வியப்படைவர். கவலை மறுகு - சந்திகள் உள்ள குறுந்தெருக்களில் மக்களின் ஆரவாரம், கடலொலி போலவும், இடிமுழக்கம் போலவும் கேட்டுக்கொண்டேயிருக்கும். மாடம் - மலைபோல் மழைமேகத்தைத் தொடும் அளவு ஓங்கியிருக்கும். பனிவார்கா - ஊரைச் சுற்றியுள்ள காட்டில் பனி பொழிந்துகொண்டேயிருக்கும். பனித்துளி நீர்மூட்டம் அக் காட்டின்மீது ஊடல் கொண்டு ஒட்டுறவாடுவது போல் இருக்கும். வண்டினங்கள் - பனி பொழியும் அந்தக் காட்டில் பல்வேறு வண்டினங்களின் ஒலி கேட்டுக் கொண்டிருக்கும். நன்னன் அரண்மனை - அந்த இடத்துக்குச் சென்று விட்டால், நன்னன் அரண்மனை அங்கிருந்து அதிக தொலைவில் இல்லை என்று உணர்ந்து கொள்ளுங்கள். அண்மையில் தான் உள்ளது.
பருந்து பட கடக்கு ஒள் வாள் மறவர்
கரும் கடை எஃகம் சாத்திய புதவின் . . . .[490]
அரும் கடி வாயில் அயிராது புகுமின்
பருந்துபடக் கடக்கும் ஒள்வாண் மறவர்
கருங்கடை எஃகஞ் சாத்திய புதவின் . . . .[490]
அருங்கடி வாயில் அயிராது புகுமின்
பொருளுரை:
படைக் கொட்டிலில் வாளும் வேலும் தாறுமாறாகச் சாத்தப் பட்டிருக்கும். அவை நன்னனின் மறவர்கள் பருந்துகள் பின்தொடரப் பகைவர் தலைகளைத் துண்டாக்கியவை. அவற்றைக் கண்டு சோர்ந்து விடாமல் கோட்டை வாயிலைக் கடந்து உள்ளே செல்லுங்கள்.
வெல் போர் சேஎய் பெரு விறல் உள்ளி
வந்தோர் மன்ற அளியர்தாம் என
கண்டோர் எல்லாம் அமர்ந்து இனிதின் நோக்கி . . . .[495]
விருந்து இறை அவரவர் எதிர்கொள குறுகி . . . .[488 - 496]
வெல்போர்ச் சேஎய்ப் பெருவிற லுள்ளி
வந்தோர் மன்ற அளியர் தாமெனக்
கண்டோ ரெல்லாம் அமர்ந்தினிது நோக்கி . . . .[495]
விருந்திறை அவரவர் எதிர்கொளக் குறுகிப்
பொருளுரை:
உங்களைப் பார்ப்பவர்கள் எல்லாம் அரசனுக்கு வரி செலுத்துவது போலக் கடமையாகக் கருதி விருந்துணவைச் சுமந்துகொண்டு வந்து உங்களுக்குத் தருவார்கள். உங்களை விருப்பத்தோடு பார்ப்பார்கள். இவர்கள் பொதுமன்றத்தில் வாழ்பவர்கள். வெற்றிவேல் முருகன் நன்னனின் பெருமையை எண்ணி நெடுந் தொலைவிலிருந்து வருபவர்கள். இரக்கம் காட்டி அளிக்கத் தக்கவர்கள். - என்றெல்லாம் உங்களைப் பற்றிப் பேசிக்கொள்வார்கள். விருந்து தருவார்கள்.
எரி கான்று அன்ன பூ சினை மராஅத்து
தொழுதி போக வலிந்து அகப்பட்ட
மட நடை ஆமான் கயமுனி குழவி . . . .[500]
ஊமை எண்கின் குடா அடி குருளை
மீமிசை கொண்ட கவர் பரி கொடும் தாள்
வரை வாழ் வருடை வன் தலை மா தகர்
அரவு குறும்பு எறிந்த சிறு கண் தீர்வை
அளை செறி உழுவை கோளுற வெறுத்த . . . .[505]
மட கண் மரையான் பெரும் செவி குழவி
எரிகான் றன்ன பூஞ்சினை மராஅத்துத்
தொழுதி போக வலிந்தகப் பட்ட
மடநடை ஆமான் கயமுனிக் குழவி . . . .[500]
ஊமை எண்கின் குடாவடிக் குருளை
மீமிசைக் கொண்ட கவர்பரிக் கொடுந்தாள்
வரைவாழ் வருடை வன்றலை மாத்தகர்
அரவுக்குறும் பெறிந்த சிறுகண் தீர்வை
அளைச்செறி உழுவை கோளுற வெறுத்த . . . .[505]
மடக்கண் மரையான் பெருஞ்செவிக் குழவி
பொருளுரை:
நன்னன் அரண்மனை வாயிலில் அவன் நாட்டு மலைமக்கள் கொண்டு வந்து குவிக்கும் பொருள்கள் பல. அவற்றை நீங்கள் உங்களது வழிநடை வருத்தம் நீங்க வேடிக்கைப் பார்க்கலாம். அவற்றோடு விளையாடித் திளைக்கலாம். ஆமான் - விளக்கு எரிவது போலப் பூத்திருக்கும் மரா மரத்தடியில் கூடி விளையாடிய பசுவைப் போன்ற பெரிய மான்களின் தொகுதி வேறிடம் சென்ற போது திக்குத் தெரியாமல் நின்றுவிட்ட தனிமான். கயமுனி - குட்டி யானை. எண்கின் குருளை - வட்ட அடியையுடைய வாய் பேசாத கரடிக் குட்டி. வருடை - பிளவு பட்ட அடி கொண்ட மலையாட்டின் கடா. தீர்வை - படமெடுத்தாடும் நல்ல பாம்பைப் பிடித்துண்ணும் கருடன். உழுவை - குகையில் வாழும் புலி. மரையான் - புலியிடம் தப்பிய காட்டுப் பசுவின் கன்று.
பரல் தவழ் உடும்பின் கொடும் தாள் ஏற்றை
வரை பொலிந்து இயலும் மட கண் மஞ்ஞை
கானக்கோழி கவர் குரல் சேவல் . . . .[510]
கான பலவின் முழவு மருள் பெரும் பழம்
இடி கலப்பு அன்ன நறு வடி மாவின்
வடி சேறு விளைந்த தீம் பழம் தாரம்
பரற்றவழ் உடும்பின் கொடுந்தாள் ஏற்றை
வரைப்பொலிந் தியலும் மடக்கண் மஞ்ஞை
கானக் கோழிக் கவர்குரற் சேவல் . . . .[510]
கானப் பலவின் முழவுமருள் பெரும்பழம்
இடிக்கலப் பன்ன நறுவடி மாவின்
வடிச்சேறு விளைந்த தீம்பழத் தாரம்
பொருளுரை:
நன்னன் அரண்மனைப் பகுதியில் காணும் உயிரினங்களும், கிடைக்கும் உணவுப் பொருள்களும். உடும்பு - அரக்கு போன்ற செம்மண் பரலில் கொடுக்குப் பிடி பிடித்து மேயும் ஆண் உடும்பு. மஞ்ஞை - மலைக்கே அழகு தந்து நடந்தாடும் மடக்கண் மயில். கானக்கோழிச் சேவல் - விட்டிசை தந்து கூவும் காட்டுக் கோழிச் சேவல். இனி வருவன தின்பண்டம். பலாப்பழம், மாம்பழத்தாரம், இனிப்பு மாம்பழத்தில் பிழிந்தெடுத்து வடித்து விளையச் செய்த மாம்பழச்சாறு (இக்காலத்து மாஸா போன்றது) இது இடித்த மாவு போல் இனிப்பது. இனி மீண்டும் மகிழ் பொருள்.
காஅய் கொண்ட நுகம் மருள் நூறை . . . .[515]
பரூஉ பளிங்கு உதிர்த்த பல உறு திரு மணி
குரூஉ புலி பொருத புண் கூர் யானை
முத்து உடை மருப்பின் முழு வலி மிகு திரள்
வளை உடைந்து அன்ன வள் இதழ் காந்தள்
நாகம் திலகம் நறும் காழ் ஆரம் . . . .[520]
காஅய்க் கொண்ட நுகமரு ணூறை . . . .[515]
பரூஉப்பளிங் குதிர்த்த பலவுறு திருமணி
குரூஉப்புலி பொருத புண்கூர் யானை
முத்துடை மருப்பின் முழுவலி மிகுதிரள்
வளையுடைந் தன்ன வள்ளிதழ்க் காந்தள்
நாகந் திலக நறுங்காழ் ஆரம் . . . .[520]
பொருளுரை:
நன்னன் வாயிலில் கிடந்த செல்வ-வளங்கள். நூறை - தூறலிலேயே செழித்து வளர்ந்து நுகம் போல் கிழங்கு விட்டிருக்கும் வள்ளிக்கிழங்கு. திருமணி - பருத்த பளிங்குகள் போலப் பளிங்குப் பாறைகள் மேல் உதிர்ந்து கிடக்கும் திருமணிகள். யானைத் தந்தம் - வரிப்புலியோடு பொருது புண்பட்ட யானைத் தந்தங்கள். காந்தள் - உடைந்த வளையல்கள் போல் ஊழ்த்தும் உதிர்ந்தும் கிடக்கும் காந்தள் மலர்கள். நாகக்கட்டை, திலகக்கட்டை, வயிரம் பாய்ந்த சந்தனக் கட்டை.
திருந்து அமை விளைந்த தேம் கள் தேறல்
கான் நிலை எருமை கழை பெய் தீம் தயிர்
நீல் நிற ஓரி பாய்ந்தென நெடு வரை
நேமியின் செல்லும் நெய் கண் இறாஅல் . . . .[525]
உடம்புணர்பு தழீஇய ஆசினி அனைத்தும்
குட மலை பிறந்த தண் பெரும் காவிரி
கடல் மண்டு அழுவத்து கயவாய் கடுப்ப
நோனா செருவின் நெடும் கடை துவன்றி . . . .[497 - 529]
திருந்தமை விளைந்த தேக்கள் தேறல்
கானிலை எருமைக் கழைபெய் தீந்தயிர்
நீனிற வோரி பாய்ந்தென நெடுவரை
நேமியிற் செல்லும் நெய்க்கண் இறாஅல் . . . .[525]
உடம்புணர்வு தழீஇய ஆசினி யனைத்தும்
குடமலைப் பிறந்த தண்பெருங் காவிரி
கடன்மண் டழுவத்துக் கயவாய் கடுப்ப
நோனாச் செருவி னெடுங்கடைத் துவன்றி
பொருளுரை:
முற்றத்தில் நிறைந்திருக்கும் பிற. மிளகுக் கொத்து - கருநிறக் கொடியில் காய்த்தது. தேறல் - மூங்கில் குழாயில் விளைய வைத்த கஞ்சிக் கள் (தேன் கள்ளுமாம்). காட்டெருமைத் தயிர் - மூங்கில் குழாயில் பிறை ஊற்றப்பட்டது. தேன் - பாறை இடுக்கில் கட்டிய தேன் கூட்டின் மீது நீல நிற ஓரிக்குரங்கு பாய்ந்து வீழ்த்திய சக்கரம் போன்ற கூட்டுடன் கூடிய தேன்வட்டு. ஆசினி - உடம்புக்குத் தனித் தெம்பைத் தரும் குறும்பலா. இவையும் இவை போன்று குடமலையில் விளைந்த அனைத்துப் பொருள்களும் கொண்டுவந்து குவிக்கப்பட்டிருந்தன. இவை, காவிரியாறு கடலோடு சேருமிடத்தில் (புகார்) கடல் வழியே கொண்டுவரப்பட்ட பண்டங்கள் குவிந்து கிடப்பது போல் குவிந்து கிடந்தன. இவற்றில் எதுவுமே போரில் பெறப்பட்டது அன்று.
தாது எரு ததைந்த முற்றம் முன்னி
தாதெருத் ததைந்த முற்ற முன்னி
பொருளுரை:
இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு வாயில் பகுதியிலேயே நின்றுவிடாதீர்கள். முற்றத்துக்கு வாருங்கள். அங்கே வானம் போல் உயர்ந்ததாய் யானை நிற்கும். அதன் எரு வளம் மலிந்ததாய்க் கிடக்கும்.
கழை வளர் தூம்பின் கண் இடம் இமிர
மருதம் பண்ணிய கரும் கோட்டு சீறியாழ்
நரம்பு மீது இறவாது உடன் புணர்ந்து ஒன்றி . . . .[535]
கடவது அறிந்த இன் குரல் விறலியர்
தொன்று ஒழுகு மரபின் தம் இயல்பு வழாஅது
அரும் திறல் கடவுள் பழிச்சிய பின்றை . . . .[530 - 538]
கழைவளர் தூம்பின் கண்ணிடம் இமிர
மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ்
நரம்புமீ திறவா துடன்புணர்ந் தொன்றிக் . . . .[535]
கடவ தறிந்த இன்குரல் விறலியர்
தொன்றொழுகு மரபிற் றம்மியல்பு வழாஅது
அருந்திறற் கடவுட் பழிச்சிய பின்றை
பொருளுரை:
அம்முற்றத்தில் இருந்துகொண்டு உங்களின் இசைக்கருவிகளை முழக்குங்கள். முழவு இடிபோல் முழங்கட்டும். மூங்கிலில் செய்த கொம்பை ஊதுங்கள். கருங்கோட்டுச் சீறியாழில் மருதப் பண்ணை எழுப்புங்கள். அப்போது யாழ் நரம்பின் பண்ணிசைக்கு ஏற்ப, விறலியர் பாடட்டும். ஆடட்டும். தொன்று தொட்டு இருந்துவரும் மரபுமுறை வழுவாமல் கடவுளை வாழ்த்திய பின்னர் அரசனை வாழ்த்திப் பாடத் தொடங்குங்கள்.
குன்றா நல் இசை சென்றோர் உம்பல் . . . .[540]
இன்று இவண் செல்லாது உலகமொடு நிற்ப
இடை தெரிந்து உணரும் பெரியோர் மாய்ந்தென
கொடை கடன் இறுத்த செம்மலோய் என . . . .[539 - 543]
குன்றா நல்லிசைக் சென்றோர் உம்பல் . . . .[540]
இன்றிவட் செல்லா துலகமொடு நிற்ப
இடைத்தெரிந் துணரும் பெரியோர் மாய்ந்தெனக்
கொடைக்கட னிறுத்த செம்ம லோயென
பொருளுரை:
கொடைக்கடன் தீர்க்கும் செம்மலோய் - என்று பாடும்போது … விருந்திற்பாணி - அரசனை வாழ்த்திப் பாடத் தொடங்குவதற்கு முன் உங்கள் திறமையை வெளிப்படுத்தும் புதிய பண்ணிசைப் பாடல்களைப் பாடுங்கள். பின்னர் நன்னனை வாழ்த்துங்கள். உலகில் அழியாத புகழை நிலைநாட்டி விட்டுச் சென்ற அரசர்கள் பலரின் வழிவந்தவன் நீ என்றாலும், அவர்களுக்குள் நீ யானை போன்றவன். வல்லவர்களிடையே வறுமையில் வாடும் நல்லவர் யார் என்று தெரிந்துணரும் பெரியோர்கள் பலர் இன்று இந்த உலகத்தில் வாழ்வு முடிந்து உலகின் பொது நியதியாகிய இறப்பைத் தழுவி நிற்கிறார்களே என்று எண்ணி கொடைக் கடமையை நீயே எடுத்துக்கொண்டு செம்மாந்து நிற்கும் செம்மலோய் ! என்றெல்லாம் நீங்கள் அவனைப் பாராட்டிக்கொண்டிருக்கும்போதே, ......
சென்றது நொடியவும் விடாஅன் நசை தர . . . .[545]
வந்தது சாலும் வருத்தமும் பெரிது என . . . .[546]
சென்றது நொடியவும் விடாஅன் நசைதர . . . .[545]
வந்தது சாலும் வருத்தமும் பெரிதெனப்
திரு நகர் முற்றம் அணுகல் வேண்டி
கல்லென் ஒக்கல் நல் வலத்து இரீஇ . . . .[547 - 549]
திருநகர் முற்றம் அணுகல் வேண்டி
கல்லென் ஒக்கல் நல்வலத் திரீஇ
பொருளுரை:
வந்ததே போதும் - என்று சொல்லி அழைத்துச் சென்று தன் சுற்றத்தாரோடு அமர்த்திக்கொள்வான். சுற்றத்தாரின் வலப்புறம்- மேலே சொன்னவாறெல்லாம் நன்னனின் வெற்றிப் புகழை அவனது பெருமையோடு சேர்த்துப் பாடுங்கள். நீங்கள் அவனிடம் எதற்காகச் சென்றீர்கள் என்று சொல்வதற்கு முன்னரே அவன் உங்களின் கருத்தை அறிந்தவனாகப் பேசத் தொடங்கி விடுவான். நீங்கள் என்னிடம் வந்ததே போதும். உங்கள் வருத்தம் பெரிது என நான் அறிவேன். - என்பான். போரிட வந்த எதிரிகளை எதிர்கொள்ளப் போர்வீரர்களோடு சென்ற அவன் தன் அரண்மனை முற்றத்தில் தங்கச் செய்வதற்காகத் தன் சுற்றத்தாரை அழைத்து அவர்களிடம் உங்களை ஒப்படைப்பான். உங்களை அவர்களுக்கு வலப்புறம் இருக்கச் செய்வான்.
அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து
இலம் என மலர்ந்த கையர் ஆகி
தம் பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்
நெடு வரை இழிதரு நீத்தம் சால் அருவி
கடு வரல் கலுழி கட்கு இன் சேயாற்று . . . .[555]
வடு வாழ் எக்கர் மணலினும் பலரே
அகன்ற தாயத் தஃகிய நுட்பத்து
இலமென மலர்ந்த கைய ராகித்
தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்
நெடுவரை இழிதரு நீத்தஞ்சால் அருவிக்
கடுவரற் கலுழிக் கட்கின் சேயாற்று . . . .[555]
வடுவாழ் எக்கர் மணலினும் பலரே
பொருளுரை:
தம் பெயரைத் தம்மோடு கொண்டுசென்ற மக்கள் சேயாற்று மணலைக்காட்டிலும் பலர். நன்னன் சேயாற்று வெள்ளம் போலப் பயன்படுபவன். பல அரசர்கள் உயர்ந்த அரியணையில் வீற்றிருப்பர். தம்மோடு உருமுதல் இல்லாத உரிமைச் சுற்றத்தோடு வீற்றிருப்பர். மிக விரிவான ஆட்சிப் பரப்பைக் கொண்டிருப்பர். ஆனால் அவர்களது அறிவு நுட்பம் சுருங்கியதாக இருக்கும். இல்லை இல்லை என்று சொல்லி எப்போதும் கையேந்திக் கொண்டும், இருப்பதைக் கூடத் தராமல் கையை விரித்துக் கொண்டும் வாழ்வார்கள். இப்படிப்பட்டவர்கள் நன்னன் நாட்டில் ஓடும் சேயாற்று மணலின் எண்ணிக்கையைவிட மிகுதியானவர்கள். சேயாற்று வெள்ளம் உயர்ந்த மலைகளிலிருந்து இறங்கி வரும். வயல்களில் பாய்ந்து கலங்கலாகி மீண்டும் ஆற்றில் விழும். இப்படி கண்ணுக்கு இனிமையாக இருக்கும். (நன்னன் சேயாற்று வெள்ளம் போன்றவன் - என்பது கருத்து.)
பரந்து இடம் கொடுக்கும் விசும்பு தோய் உள்ளமொடு
நயந்தனிர் சென்ற நும்மினும் தான் பெரிது
உவந்த உள்ளமோடு அமர்ந்து இனிது நோக்கி . . . .[550 - 560]
பரந்திடங் கொடுக்கும் விசும்புதோய் உள்ளமொடு
நயந்தனிர் சென்ற நும்மினுந் தான்பெரிது
உவந்த உள்ளமோ டமர்ந்தினிது நோக்கி . . . .[560]
பொருளுரை:
நன்னன் ஆற்று மணலைப்போல் மாய விரும்பாதவன். ஆற்று வெள்ளம் போல் வாழ விரும்புபவன். தனக்கென்று வரையறுக்கப்பட்ட நாள்கள் புகழோடு கழியட்டும் என்று விரும்புபவன். அதுதான் பரந்து கிடக்கும் வானம் போன்று விரிந்து கிடக்கும் உள்ளம். நீங்கள் அவனை நயந்து செல்கிறீர்கள். அவனோ உங்களைக் காட்டிலும் உவந்த உள்ளம் கொண்டவனாய் ஆசையோடு உங்களைப் பார்த்து வரவேற்பான். அதுதான் விசும்பு தோய் உள்ளம்.
எள் அறு சிறப்பின் வெள் அரை கொளீஇ
முடுவல் தந்த பைம் நிணம் தடியொடு
நெடு வெண்ணெல்லின் அரிசி முட்டாது
தலை நாள் அன்ன புகலொடு வழி சிறந்து . . . .[565]
பல நாள் நிற்பினும் பெறுகுவிர் நில்லாது
செல்வேம் தில்ல எம் தொல் பதி பெயர்ந்து என
மெல்லென கூறி விடுப்பின் நும்முள்
எள்ளறு சிறப்பின் வெள்ளரைக் கொளீஇ
முடுவல் தந்த பைந்நிணத் தடியொடு
நெடுவெ ணெல்லின் அரிசிமுட் டாது
தலைநாள் அன்ன புகலொடு வழிச்சிறந்து . . . .[565]
பலநாள் நிற்பினும் பெறுகுவிர் நில்லாது
செல்வேந் தில்லவெந் தொல்பதிப் பெயர்ந்தென
மெல்லெனக் கூறி விடுப்பின் நும்முள்
பொருளுரை:
உடுக்க ஆடை, உண்ணக் கறிச்சோறு பலநாள் தங்கினும் தருவான். இப்படித்தான் நன்னன் விருந்து இருக்கும். புத்தாடை - இழை தெரியாத மெல்லிய நூலால் உடல் தெரியாத அளவுக்கு நெருக்கமாக நெய்யப்பட்ட , பழிக்க முடியாத அளவுக்கு மிகவும் சிறப்பினைக் கொண்ட புத்தாடையை முதலில் அணிந்துகொள்ளச் செய்வான். (வெள் அரை = அரைகுறையாக ஆடை உடுத்திக் கொண்டிருந்த இடை) விருந்து - முடுவல் என்னும் வேட்டை நாய் முடுக்கித் தான் கொண்டுவந்த விலங்கினக் கறியோடு நீண்ட அரிசியைக் கொண்ட நெல்லஞ் சோற்றை விருந்தாகப் படைப்பான். பலநாள் தங்கினாலும் முதல் நாளில் காட்டிய அதே விருப்பத்தோடு வழங்குவான். செல்வேம் தில்ல - நாங்கள் எங்கள் பழைய ஊருக்குச் செல்ல விரும்புகிறோம் - என்று மெல்ல, செய்தி சொல்லி அனுப்பினால் போதும். அவன் முந்திக் கொள்வான்.
சீர் கெழு சிறப்பின் விளங்கு இழை அணிய . . . .[570]
நீர் இயக்கு அன்ன நிரை செலல் நெடும் தேர்
வாரி கொள்ளா வரை மருள் வேழம்
கறங்கு மணி துவைக்கும் ஏறு உடை பெரு நிரை
பொலம் படை பொலிந்த கொய் சுவல் புரவி
நிலம் தின கிடந்த நிதியமோடு அனைத்தும் . . . .[575]
சீர்கெழு சிறப்பின் விளங்கிழை அணிய . . . .[570]
நீரியக் கன்ன நிரைசெலல் நெடுந்தேர்
வாரிக் கொள்ளா வரைமருள் வேழம்
கறங்குமணி துவைக்கும் ஏறுடைப் பெருநிரை
பொலம்படைப் பொலிந்த கொய்சுவற் புரவி
நிலந்தினக் கிடந்த நிதியமொ டனைத்தும் . . . .[575]
பொருளுரை:
தாமரை - தலைவன் தலையில் அணியத் தாமரை என்னும் அணிகல-முடி இழை - விறலியர் மார்பில் அணிய ஒளிவீசும் அணிகலன்கள் தேர் - தண்ணீர் பாய்வது போல் நிறைவுடன் குளுமையாகச் செல்லும் தேர் வேழம் - ஆற்றுவாரி கொள்ளாத அளவுள்ள குன்று போன்ற யானை ஆனிரை - காளைகளுடன் கழுத்தில் மணி கட்டிய மாட்டு மந்தை புரவி - காலில் லாடம் கட்டிய குதிரைகள். நிதியம் - ஏற்றிச் செல்ல முடியாமல் நிலம் தின்னட்டும் என்று எறிந்துவிட்டுச் செல்லக் கூடிய அளவில் பேரளவு நிதியம்
கலம் பெய கவிழ்ந்த கழல் தொடி தட கையின்
வளம் பிழைப்பு அறியாது வாய் வளம் பழுநி
கழை வளர் நவிரத்து மீமிசை ஞெரேரென
மழை சுரந்து அன்ன ஈகை நல்கி . . . .[580]
தலை நாள் விடுவிக்கும் பரிசில் மலை நீர்
வென்று எழு கொடியின் தோன்றும்
குன்று சூழ் இருக்கை நாடு கிழவோனே . . . .[561 - 583]
கலம்பெயக் கவிழ்ந்த கழறொடித் தடக்கையின்
வளம்பிழைப் பறியாது வாய்வளம் பழுநிக்
கழைவளர் நவிரத்து மீமிசை ஞெரேரென
மழைசுரந் தன்ன ஈகை நல்கித் . . . .[580]
தலைநாள் விடுக்கும் பரிசின் மலைநீர்
வென்றெழு கொடியிற் றோன்றும்
குன்றுசூழ் இருக்கை நாடுகிழ வோனே
பொருளுரை:
மூங்கிலடர்ந்த நவிரமலையில் பொழியும் மழை போல வழங்குவான். தலைநாள் போல் வழங்குவான். வழங்கும் கை - வறுமையால் வாடிக் கையேந்தும் புலவர்களுக்குக் கைநிறையத் தருவான். வாய்வளம் - பொருள் வளத்தை வாய்வளம் பழுக்க இனிய கூறித் தருவான். நவிரம் - அவனது நவிர மலைமேல் திடீர் திடீரென்று மழை கொட்டுவது போல் கொடைப் பொருள்களைக் கொட்டுவான். தலைநாள் - வாழ்நாளிலேயே தமக்கு வாய்த்த தலைமையான நாள் என்று எண்ணிக்கொண்டு, ஏற்போர் அவர்களது வாழ்நாளில் தலைமையான நாள் என்று கருதும்படிப் பரிசில் வழங்குவான். அருவி - நவிர மலையில் இறங்கிவரும் அருவியானது நன்னன் தன் பகைவர்களை வென்று மீளும்போது பிடித்துக்கொண்டு வரும் கொடிபோல் தோன்றும். குன்று சூழ் இருக்கை - நன்னனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு பல குன்றுகளைத் தன்னகத்தே கொண்டதாக விளங்கிற்று. இந்த நாட்டின் கிழவன் அவன். இந்த நாட்டை ஆளும் உரிமை பூண்டவன் இந்த நன்னன்.
பிற்காலத்தில் இந்த நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ள தனிப்பாடல் வெண்பா இரங்கல் பாடலாக அமைந்துள்ளது.
பாஅய்ப் பகல் செய்வான் பாம்பின்வாய்ப் பட்டான்கொல்?
மாஅ மிசையான் கோன் நன்னன் நறு நுதலார்
மாஅமை எல்லாம் பசப்பு!
பாஅஅய்ப் பகைல்செய்வான் பாம்பின்வாய்ப் பட்டான்கொல்
மாஅ மிசையான் னன்ன னறுநுதலார்
மாஅமை யெல்லாம் பசப்பு.
பொருளுரை:
நன்னன் ஏதோ ஒரு போரில் மாண்டது போன்ற மாய எண்ணத்தைச் சூரியன் பாம்பின் வாய்ப் பட்டானோ என்று பாடலில் பயின்று வரும் பிறிது மொழிதல் அணி தோற்றுவிக்கிறது. (இராகு என்னும் பாம்பு சூரியனை விழுங்கி உமிழும்போது சூரிய கிரகணம் தோன்றுகிறது என்பது அக்காலத்துக் கற்பனை) சூரியன் தெரியவில்லை. ஏன்? (அவனது அரண்மனையில், வந்தவர்களுக்கெல்லாம் விருந்து படைக்க) உணவு மிகப் பேரளவில் சமைக்கும்போது எழும் புகை வானத்தைப் போர்த்திச் சூரியனை மறைத்துள்ளதோ? சூரியனைப் பாம்பு விழுங்கி விட்டதோ? அன்ன நடையும் அழகிய முகமும் கொண்ட மகளிரின் மாந்தளிர் போன்ற நிறம் பசுமை பூத்துக் கிடக்கிறதே! காரணம் என்ன? நன்னன் வானுலகம் சென்றுவிட்டானோ? அவன் இல்லாததால் மகளிர் மேனியில் பசலை பூத்துக் கிடக்கிறதோ? இப்படிப் பார்க்கும்போது இது அகப்பொருள் பற்றிய பாடல்.