எட்டுத்தொகை
எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பு. இது சங்க இலக்கியம். இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும், பலரால் பல காலகட்டங்களில் எழுதப்பட்டு பின்னர் ஒருசேரத் தொகுக்கப்பட்டது.
பத்துப்பாட்டு
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும்.
பதினெண் கீழ்க்கணக்கு
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல்கள் பதினெண் கீழ்கணக்கு என்னும் பெயர் பெற்றன. இவை மொத்தம் பதினெட்டு நூல்களாகும்.
சங்கத்தமிழ்ச் செயலியைத் தரவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும்
சங்கத்தமிழ்
சங்க இலக்கியத் தொகுப்பில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ் கணக்கு ஆகியன இடம் பெற்றுள்ளன. எட்டுத் தொகை என்பது ஐந்குறுநூறு, நற்றிணை, அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, கலித்தொகை, பரிபாடல், பதிற்றுப்பத்து என்ற எட்டு நூல்களின் தொகுப்பாகும். பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்ற பத்து நூல்கள் உள்ளன. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் அகம், புறம் என்ற இரண்டு திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பதினெண்கீழ்கணக்கில் அறத்தையும் ஒழுக்கத்தையும் வலியுறுத்தும் பதினெட்டு நூல்கள் உள்ளன. அவற்றில் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் குறிப்பிடத்தக்கதாகும்.
"வரலாற்றின் உயிர்நாடி, காலக் கணிப்பாகும். இன்ன ஆண்டில், இன்ன திங்களில், இன்ன நாளில் இன்னது நிகழ்ந்தது என்று கூறுதல் வரலாற்றின் இலக்கணமாகும். பண்டையத் தமிழக வரலாற்றில் பல நிகழ்ச்சிகளுக்குக் காலங்கணித்தல் எளிதாகத் தோன்றவில்லை. மன்னர்களைத் தம் பாடல்களில் குறிப்பிடும் பழந்தமிழ்ப் புலவர்கள் அம்மன்னர்கள் வாழ்ந்திருந்த காலத்தைத் தெரிவிப்பதில்லை. அவர்களுடைய செய்யுள்களில் விளக்கப்படும் சில நிகழ்ச்சிகளைக் காலங்கணிக்கப்பட்ட வேறு நிகழ்ச்சிகளுடன் தொடர்புறுத்தி அவற்றில் காலத்தை ஒருவாறு அறுதியிட வேண்டியதுள்ளது" என வரலாற்றுப் பேராசிரியர் கே.கே.பிள்ளை குறிப்பிடுகின்றார். எனவே, புறச்சான்றுகளைவிட, அகச்சான்றுகளையே அடிப்படையாகக் கொண்டு காலத்தை வரையறுக்க வேண்டியுள்ளது. அகச்சான்றுகள் பெரும்பாலும் இலக்கியங்களாகவே உள்ளன. அவ்விலக்கியங்கள் தரும் சான்றுகளிலிருந்து தமிழகத்தின் வரலாற்றுக்கு உட்பட்ட காலம் சங்ககாலம் என்பது பெறப்படுகிறது. இக்காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் பொற்காலம் என்று கருதப்படுகிறது. இக்காலத்தில் பாண்டியன், சோழன், சேரன் என்ற முப்பெரும் மன்னர் அரசாண்டு வந்தனர். பாண்டியரின் தலைநகரம் மதுரை; சோழர்களின் தலைநகரம் காவிரிப்பூம்பட்டினமும்(புகார்) உறையூரும் ஆகும். சேரனின் தலைநகரம் வஞ்சி.
சங்ககால மன்னர்கள் தமிழ்ப் புலவர்களைப் பாராட்டிப் பரிசில் வழங்கிப் புரந்து வந்தனர். சங்ககால மன்னர்கள் எழுப்பிய எழிலோங்கு அரண்மனைகள், மாளிகைகள், கோயில்கள், அங்காடிகள், துறைமுகங்கள், அவர்கள் ஓட்டிய நாவாய்கள் அனைத்தும் மறைந்துவிட்டன. ஆனால் அவர்கள் காலத்துப் புலவர்கள் பாடிய பாடல்கள் - மன்னர்களது அருமைகளையும், பெருமைகளையும், பண்புகளையும் பறைசாற்றும் பாடல்கள் இப்போதும் எஞ்சி நிற்கின்றன. அந்தப் பாடல்களே சங்ககாலத் தமிழகத்தின் நாகரிகத்தையும், பண்பாட்டையும் உணர்த்துகின்றன. தமிழர்களின் அக, புற வாழ்வு ஒழுக்கங்கள், அரசியல், வீரம், வழிபாடு, விழாக்கள், ஆடல் பாடல்கள், வணிகம், ஓவியம் சிற்பம் கட்டடம் போன்ற கலைகள் ஆகிய எல்லாவற்றையும் சங்கப் பாடல்களே சான்றாக நின்று விளக்குகின்றன.
தென்னிந்திய வரலாற்றில் சங்க காலம் ஒரு சிறப்பான அத்தியாயம் ஆகும். தமிழ்ப் பழங்கதைகளின் படி பண்டைய தமிழ்நாட்டில் முச்சங்கம் என்றழைக்கப்பட்ட மூன்று தமிழ் சங்கங்கள் இருந்தன. பாண்டிய மன்னர்களின் ஆதரவில் இந்த சங்கங்கள் தழைத்தோங்கின. தென்மதுரையில் இருந்த முதற்சங்கத்தில் கடவுளரும், முனிவர்களும் பங்கேற்றனர் என்று கூறப்பட்டிருந்தாலும், இச்சங்தத்தைச் சேர்ந்த நூல்கள் ஏதும் கிடைக்கவில்லை. இரண்டாவது சங்கம் கபாடபுரத்தில் நடைபெற்றது. தொல்காப்பியம் தவிர ஏனைய இலக்கியங்கள் யாவும் அழிந்து போயின. மூன்றாவது சங்கத்தை மதுரையில் முடத்திருமாறன் என்ற பாண்டிய மன்னன் நிறுவினான். அதிக எண்ணிக்கையிலான புலவர்கள் இதில் பங்கேற்றனர். ஏராளமான இலக்கியங்கள் படைக்கப்பட்டன என்றாலும் ஒருசிலவே எஞ்சியுள்ளன. இந்த இலக்கியங்கள் சங்க கால வரலாற்றை அறிந்து கொள்ள பெரிதும் உதவுகின்றன.
'சங்கம்' என்னும் சொல் (புலவர் கூட்டம் என்ற பொருளில்) சங்க இலக்கியம் ஒன்றிலேனும் இடம் பெறவில்லை. அது தமிழ்ச் சொல்லா, வடமொழிச் சொல்லா என்ற வாதங்களும் உண்டு. சங்கம் என்னும் சொல் பிற்காலத்திய ஒன்றாக இருக்கவேண்டும் என்பதில் ஐயமில்லை. இதற்கு நேரான தமிழ்ச் சொற்கள் கூடல், அவை, மன்றம் போன்றவை ஆகும். அவை முன்பு வழக்கிலிருந்தன. சொற்கள் மறைவதும் மாறுவதும், புதிதாகத் தோன்றுவதும் ஒவ்வொரு மொழியிலும் நிகழக்கூடியது. எனவே தொடக்க காலத்தில் 'சங்கம்' என்ற சொல் கையாளப் படாமையால், சங்கம் என்ற அமைப்பு இருந்திருக்க இயலாது என்பார் கூற்று உண்மைக்குப் புறம்பான ஒன்று. ஆகவே, பண்டைத் தமிழகத்தில் தமிழ்ப் புலவர்கள் கூடித் தலை, இடை, கடை என்று மூன்று சங்கங்கள் அமைத்து, அவற்றின் வாயிலாகத் தமிழ் வளர்த்தார்கள் என்று கூறும் மரபைப் புறக்கணித்துவிட முடியாது.
சங்க இலக்கியங்களைத் தவிர, கிரேக்க எழுத்தாளர்களான பிளினி, டாலமி, மெகஸ்தனிஸ், ஸ்ட்ராபோ ஆகியோர் தென்னிந்தியாவிற்கும் மேலை நாடுகளுக்கும் இடையே நிலவிய வர்த்தகத் தொடர்புகளை குறிப்பிட்டுள்ளனர். மெளரியப் பேரரசுக்கு தெற்கேயிருந்த சேர, சோழ, பாண்டிய ஆட்சியாளர்கள் பற்றி அசோகரது கல்வெட்டுக்கள் கூறுகின்றன. கலிங்கத்துக் காரவேலனின் ஹதிகும்பா கல்வெட்டும் தமிழ்நாட்டு அரசுகளைப் பற்றி குறிப்பிடுகிறது. அரிக்கமேடு, பூம்புகார், கொடுமணல் போன்ற இடங்களில் மேற்கொள்ளபட்ட அகழ்வாய்வுகளும் தமிழர்களின் வாணிப நடவடிக்கைகளை வெளிப்படுத்துகின்றன.
சங்க இலக்கியத்தின் காலவரையறை பற்றி அறிஞர்களுக்கிடையே இன்னும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இலங்கை அரசன் இரண்டாம் கயவாகு, சேர அரசன் செங்குட்டுவன் இருவரும் சமகாலத்தவர் என்ற செய்தி சங்க காலத்தை நிர்ணயிப்பதற்கு அடிப்படையாகத் திகழ்கிறது. இச்செய்தியை சிலப்பதிகாரம், தீபவம்சம், மகாவம்சம் ஆகிய நூல்கள் உறுதிப்படுத்துகின்றன. மேலும், கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமானியப் பேரரசர்கள் வெளியிட்ட ரோமானிய நாணயங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனவே, இலக்கியம், தொல்லியல், நாணயவியல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, சங்க இலக்கியங்களின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை என்ற முடிவுக்கு வரலாம்.
சங்க கால தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய மரபுகள் ஆட்சி புரிந்தனர். இலக்கிய குறிப்புகளிலிருந்து இந்த மரபுகளின் வரலாற்றை ஓரளவு அறிந்து கொள்ளலாம்.
தற்காலத்திய கேரளப் பகுதியில் சேரர்கள் ஆட்சிபுரிந்தனர். அவர்களது தலைநகரம் வஞ்சி. முக்கிய துறை முகங்கள் தொண்டி மற்றும் முசிறி. பனம்பூ மாலையை அவர்கள் அணிந்தனர். கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகலூர்க் கல்வெட்டு சேர ஆட்சியாளர்களின் மூன்று தலைமுறைகள் பற்றி குறிப்பிடுகிறது. சேர அரசர்களைப் பற்றி பதிற்றுப் பத்தும் கூறுகிறது. பெரும்சோற்று உதியன் சேரலாதன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் ஆகியோர் சேர மரபின் சிறந்த அரசர்களாவர்.
சேரன் செங்குட்டுவன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். அவனது இளவலான இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார். செய்குட்டுவனின் படையெடுப்புகளில் அவன் மேற்கொண்ட இமாலயப் படையெடுப்பு குறிப்பிடத்தக்கதாகும். பல்வேறு வட இந்திய ஆட்சியாளர்களை அவன் முறியடித்தான். தமிழ்நாட்டில் கற்புக்கரசி கண்ணகி அல்லது பத்தினி வழிபாட்டை செங்குட்டுவன் அறிமுகப்படுத்தினான். இமாலயப் படையெடுப்பின்போது பத்தினிசிலை வடிப்பதற்கான கல்லைக்கொண்டு வந்தான். கோயில் குடமுழுக்கு விழாவில் இலங்கை அரசன் இரண்டாம் கயவாகு உள்ளிட்ட பல அரசர்கள் கலந்து கொண்டனர்.
தற்காலத்திய திருச்சி மாவட்டத்திலிருந்து தெற்கு ஆந்திரப் பிரதேசம் வரையிலான பகுதியே சங்க காலத்தில் சோழ நாடு எனப்பட்டது. சோழர்களின் தலைநகரம் முதலில் உறையூரிலும் பின்னர் புகாரிலும் இருந்தது. சங்க காலச் சோழர்களில் சிறப்பு வாய்ந்தவன் கரிகால் சோழன். அவனது இளமைக்காலம், போர் வெற்றிகள் குறித்து பட்டினப்பாலை விவரிக்கிறது. சேரர்கள், பாண்டியர்கள், பதினொரு குறுநில மன்னர்கள் அடங்கிய பெரிய கூட்டிணைவுப் படைகளை கரிகாலன் வெண்ணிப் போரில் முறியடித்தான். இந்த நிகழ்ச்சி சங்கப் பாடல்கள் பலவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவன் மேற்கொண்ட மற்றொரு போர் வாகைப் பறந்தலைப் போராகும். அதில் ஒன்பது குறுநில மன்னர்களை மண்டியிடச் செய்தான். கரிகாலனின் போர் வெற்றிகள் தமிழ்நாடு முழுவதையும் சோழர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தன. அவனது ஆட்சிக் காலத்தில் வாணிகமும் செழித்தோங்கியது. காடுகளைத் திருத்தி விளை நிலமாக்கியவன் கரிகாலன். இதனால் நாட்டின் செல்வச் செழிப்பு பெருகியது. காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையை கரிகாலன் அமைத்தான். வேறு பல நீர்ப்பாசன ஏரிகளையும் அவன் வெட்டுவித்தான்.
தற்காலத்திய தெற்குத் தமிழ்நாட்டில் சங்ககாலப் பாண்டியர்கள் ஆட்சி புரிந்தனர். அவர்களின் தலைநகரம் மதுரை. நெடியோன், பலயாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, முடத்திருமாறன் போன்றோர் முற்காலத்திய பாண்டிய மன்னவர்களாவர். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், கோவன் கொல்லப்படவும், கண்ணகி சினமுற்று மதுரையை எரிக்கவும் காரணமாக இருந்தவர். மற்றொருவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். நக்கீரன் மற்றும் மாங்குடி மருதனார் ஆகிய புலவர்களால் போற்றப்பட்டவர். தற்கால தஞ்சை மாவட்டத்திலிருந்த தலையாலங்கானம் என்ற விடத்தில் நடைபெற்ற போரில் எதிரிகளை வீழ்தியதால் அவருக்கு இப்பெயர் வழங்கலாயிற்று. இவ்வெற்றியின் பயனாக, நெடுஞ்செழியன் தமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். செழிப்பான துறைமுகமான கொற்கை பற்றியும், பாண்டிய நாட்டின் சமூக - பொருளாதார நிலைமைகளை குறித்தும் மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியில் விவரித்துள்ளார். உக்கிரப் பெருவழுதி மற்றொரு சிறப்பு மிக்க பாண்டிய அரசன். களப்பிரர்கள் படையெடுப்பின் விளைவாக சங்க காலப்பாண்டியர்கள் ஆட்சி வீழ்ச்சியடைந்தது.
சங்க காலத்தில் குறுநில மன்னர்கள் முக்கிய பங்காற்றினர். பாரி, காரி, ஓரி, நல்லி, பேகன், ஆய், அதியமான் என்ற கடையெழு வள்ளல்கள் கொடைக்குப் பெயர் பெற்றவர்கள். தமிழ்ப் புலவர்களை ஆதரித்துப் போற்றினர். சேர, சோழ, பாண்டி ஆட்சியாளர்களுக்கு அவர்கள் கீழ்ப்படிந்தவர்கள் என்ற போதிலும் தத்தம் ஆட்சிப் பகுதிகளில் வலிமையும் புகழும் பெற்றுத் திகழ்ந்தனர்.
சங்க காலத்தில் மரபுவழி முடியாட்சி முறையே வழக்கிலிருந்தது. அமைச்சர், அவைப்புலவர், அரசவையோர் போன்றவர்களின் ஆலோசனையை அரசன் கேட்டு நடந்தான். வானவரம்பன், வானவன், குட்டுவன், இரும்பொறை, வில்லவர் போன்ற விருதுப் பெயர்களை சேர மன்னர்கள் சூட்டிக் கொண்டனர். சென்னி, வளவன், கிள்ளி என்பன சோழர்களின் பட்டப் பெயர்களாகும். தென்னவர், மீனவர் என்பவை பாண்டிய மன்னர்களின் விருதுப் பெயர்களாகும். ஒவ்வொரு சங்ககால அரச குலமும் தங்களுக்கேயுரிய அரச சின்னங்களைப் பெற்றிருந்தனர். பாண்டியர்களின் சின்னம் மீன். சோழர்களுக்கு புலி, சேரர்களுக்கு வில், அம்பு. அரசவையில் குறுநிலத் தலைவர்களும் அதிகாரிகளும் வீற்றிருந்தனர். ஆட்சியில் அரசருக்கு உதவியாக பெரும்திரளான அதிகாரிகள் இருந்தனர். அவர்கள் ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தனர் - அமைச்சர்கள், அந்தணர்கள், படைத்தலைவர்கள், தூதுவர்கள், ஒற்றர்கள். சங்க காலத்தில் படை நிர்வாகம் திறம்பட சீரமைக்கப்பட்டிருந்தது. ஒவ்டிவாரு ஆட்சியாளரும் நிரந்தரப் படையையும், தத்தமக்குரிய கொடிமரத்தையும் கொண்டிருந்தனர்.
அரசின் முக்கிய வருவாய் நிலவரி. அயல்நாட்டு வாணிகத்தின் மீது சுங்கமும் வசூலிக்கப்பட்டடது. புகார் துறைமுகத்தில் நியமிக்கப்பட்டிருந்த சுங்க அதிகாரிகள் பற்றி பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. போரின்போது கைப்பற்றப்படும் கொள்ளைப் பொருட்கள் அரசுக் கருவூலத்திற்கு முக்கிய வருவாயகத் திகழ்ந்தது. சாலைகளும் பெருவழிகளும் நன்கு பராமரிக்கப்பட்டுவந்தன. கொள்கை மற்றும் கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்காக இரவும் பகலும் அவை கண்காணிக்கப்பட்டன.
ஐந்து வகை நிலப்பிரிவுகள் பற்றி தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
- குறிஞ்சி ( மலையும், மலைசார்ந்த நிலமும் )
- முல்லை ( காடும், காடு சார்ந்த நிலமும் )
- மருதம் ( வயலும், வயல் சார்ந்த நிலமும் )
- நெய்தல் ( கடலும், கடல் சார்ந்த நிலமும் )
- பாலை ( வறண்ட பூமி )
இந்த நிலங்களில் வாழ்ந்த மக்கள் தத்தம் கடவுளர்களையும் தொழில்களையும் பெற்றிருந்தனர்.
1. குறிஞ்சி - முதன்மைக் கடவுள் முருகன் (தொழில்: வேட்டையாடுதல், தேன் எடுத்தல்)
2. முல்லை - முதன்மைக் கடவுள் மாயோன் (விஷ்ணு) (தொழில்: ஆடு, மாடு வளர்ப்பு, பால் பொருட்கள் உற்பத்தி)
3. மருதம் - முதன்மைக்கடவுள் - இந்திரன் ( தொழில்: வேளாண்மை)
4. நெய்தல் - முதன்மைக்கடவுள் - வருணன் (தொழில்: மீன் பிடித்தல், உப்பு உற்பத்தி)
5. பாலை - முதன்மைக் கடவுள் - கொற்றவை (தொழில்: கொள்ளையடித்தல்)
நான்கு வகை சாதிகள் - அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் - குறித்து தொல்காப்பியம் கூறுகிறது. ஆளும் வர்க்கத்தினர் அரசர் என்றழைக்பட்டனர். சங்க கால அரசியல் மற்றும் சமய வாழ்க்கையில் அந்தணர் முக்கிய பங்கு வகித்தனர். வணிகர்கள் வணிகத் தொழிலில் ஈடுபட்டனர். வேளாளர்கள் பயிர்த் தொழில் செய்தனர். பழங்குடி இனத்தவர்களான பரதவர், பாணர், எயினர், கடம்பர், மறவர், புலையர் போன்றோரும் சங்க கால சமுதாயத்தில் அங்கம் வகித்தனர். பண்டையக்கால தொல்பழங்குடிகளான தோடர்கள், இருளர்கள், நாகர்கள், வேடர்கள் போன்றோரும் இக்காலத்தில் வாழ்ந்தனர்.
சங்க காலத்தின் முதன்மைக் கடவுள் முருகன் அல்லது சேயோன் தமிழ்க்கடவுள் என அவர் போற்றப்பட்டார். முருக வழிபாடு தொன்மை வாய்ந்தது. முருகன் தொடர்பான விழாக்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அறுபடை வீடுகள் அவனுக்கே உரித்தானவை. மாயோன் (விஷ்ணு), வேந்தன் (இந்திரன்), வருணன், கொற்றவை போன்ற கடவுள்களையும் சங்க காலத்தில் வழிபட்டனர். வீரக்கல் அல்லது நடுகல் வழிபாடு சங்க காலத்தில் முக்கியத்துவம் பெற்று விளங்கியது. போர்க்களத்தில் வீரனது ஆற்றலையும் தியாகத்தையும் போற்றும் வகையில் அனவது நினைவாக வீரக்கல் நடப்பட்டடது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மறைந்த வீரர்கள் பற்றிய குறிப்புகள் அடங்கிய வீரக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய நீத்தோர் வழிபாடு மிகவும் தொன்மையானதாகும்.
சங்க காலத்தில் மகளிர் நிலை குறித்து அறிந்து கொள்ள சங்க இலக்கியங்களில் ஏராளமான தகவல்கள் உள்ளன. அவ்வையார், நச்செள்ளையார், காக்கைபாடினியார் போன்ற பெண் புலவர்கள் இக்காலத்தில் வாழ்ந்து தமிழ் இலக்கியத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். மகளிரின் வீரம் குறித்து பல்வேறு பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. கற்பு பெண்களின் தலையாய விழுமியமாகப் போற்றப்பட்டது. காதல் திருமணம் சாதாரணமாக வழக்கத்திலிருந்தது. பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை தெரிவு செய்யும் உரிமையைப் பெற்றிருந்தனர். இருப்பினும், கைம்பெண்களின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. சமுதாயத்தின் மேல்மட்டத்தில் ‘சதி’ என்ற உடன்கட்டையேறும் வழக்கம் பின்பற்றப்பட்டது. அரசர்களும், உயர்குடியினரும் நாட்டிய மகளிரை ஆதரித்துப் போற்றினர்.
கவிதை, இசை, நாட்டியம் போன்ற நுண்கலைகள் சங்ககாலத்தில் புகழ்பெற்று விளங்கின. அரசர்கள், குறுநில மன்னர்கள், உயர்குடியினர் போன்றோர் புலவர்களுக்கு தாராளமாக பரிசுப் பொருட்களை வழங்கி ஆதரித்தனர். பாணர், விறலியர் போன்ற நாடோடிப் பாடகர்கள் அரசவைகளை மொய்த்த வண்ணம் இருந்தனர். நாட்டுப்புற பாடல்களிலும் நாட்டுப்புற நடனங்களிலும் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் சங்க காலத்தில் வாழ்ந்தனர். இசையும் நடனமும் நன்கு வளர்ச்சி பெற்றிருந்தது. சங்க இலங்கியங்களில் பல்வேறு வகையிலான யாழ்களும் முரசுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. கணிகையர் நடனத்தில் சிறந்து விளங்கினர். ‘கூத்து’ மக்களின் சிறந்த பொழுதுபோக்காக திகழ்ந்தது.
வேளாண்மை முக்கியத் தொழில் ஆகும். நெல் முக்கியப் பயிர் கேழ்வரகு, கரும்பு, பருத்தி, மிளகு, இஞ்சி, மஞ்சள், இலவங்கம், பல்வேறு பழவகைகள் போன்றவையும் பயிரிடப்பட்டன. பலா, மிளகு இரண்டுக்கும் சேர நாடு புகழ் பெற்றதாகும். சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் நெல் முக்கிய பயிராகும்.
சங்க காலத்தில் கைத்தொழில்கள் ஏற்றம் பெற்றிருந்தன. நெசவு, உலோகத் தொழில், தச்சுவேலை, கப்பல் கட்டுதல், மணிகள், விலையுயர்ந்த கற்கள், தந்தம் ஆகியவற்றை பயன்படுத்தி ஆபரணங்கள் செய்தல் போன்றவை ஒருசில கைத்தொழில்களாகும். இத்தகைய பொருட்களுக்கு நல்ல தேவைகள் இருந்தன. ஏனென்றால் சங்ககாலத்தில் உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு வாணிகம் சுறுசுறுப்பாக நடைபெற்றது. பருத்தி மற்றும் பட்டு இழைகளைக் கொண்டு நெய்யப்பட்ட துணிகள் உயர்ந்த தரமுடையதாக இருந்தன. நீராவியைவிடவும், பாம்பின் தோலைவிடவும் மெலிதான துணிகள் நெய்யப்பட்டடதாக சங்க இலக்கியப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. உறையூரில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தியாடைகளுக்கு மேலை நாடுகளில் பெரும் தேவை காணப்பட்டடது.
உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு வர்த்தகம் சங்க கால்தில் நன்கு சீரமைக்கப்பட்டிருந்தது. சங்க இலக்கியங்கள், கிரேக்க - ரோமானிய நூல்கள் மற்றும் தொல்லியல் சான்றுகள் இது குறித்த ஏராளமான தகவல்களைத் தருகின்றன. வண்டிகளிலும் விலங்குகள் மேல் ஏற்றப்பட்ட பொதிகளின் மூலமாகவும், வணிகர்கள் பொருட்களை கொண்டுசென்று விற்பனை செய்தனர். உள்நாட்டு வாணிகம் பெரும்பாலும் பண்டமாற்று முறையின் அடிப்படையிலேயே நடைபெற்றது.
தென்னிந்தியாவிற்கும், கிரேக்க அரசுகளுக்கும் இடையே அயல்நாட்டு வர்த்தகம் நடைபெற்றது. ரோமானியப் பேரரசு தோன்றிய பிறகு ரோமாபுரியுடனான வாணிபம் சிறப்படைந்தது. துறைமுகப்பட்டினமான புகார் அயல்நாட்டு வணிகர்களின் வர்த்தகமையமாகத் திகழ்நததது. விலை மதிப்பு மிக்க பொருட்களை ஏற்றிவந்த பெரிய கப்பல்கள் இந்த துறைமுகத்திற்கு வந்து சென்றன. தொண்டி, முசிறி, கொற்கை, அரிக்கமேடு, மரக்காணம் போன்றவை பிற சுறுசுறுப்பான துறைமுகங்களாகும். அயல்நாட்டு வாணிபம் குறித்து ‘பெரிப்புளூஸ்’ நூலின் ஆசிரியர் பல அரிய தகவல்களைக் கூறியுள்ளார். அகஸ்டஸ், டைபீரியஸ், நீரோ போன்ற ரோமானியப் பேரரசர்கள் வெளியிட்ட தங்கம் மற்றும் வெள்ளியாலான நாணயங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமாகக் கிடைக்கின்றன. சங்க காலத்தில் நடைபெற்ற வாணிகத்தின் அளவு மற்றும் தமிழ்நாட்டில் ரோமானிய வணிகர்களின் செயல்பாடுகள் ஆிகயவற்றை இவை வெளிப்படுத்துவதாக உள்ளன. பருத்தியாடைகள், மிளகு, இஞ்சி, ஏலக்காய், இலவங்கம், மஞ்சள் போன்ற நறுமணப் பொருட்கள், தந்தவேலைப்பாடு நிறைந்த பொருட்கள், முத்துக்கள் மற்றும் விலையுயர்ந்த கற்கள் போன்றவை சங்க காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டட பொருட்களாகும். தங்கம், குதிரைகள், இனிப்பான மதுவகைகள் ஆகியன முக்கிய இறக்குமதிகளாகும்.
கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் சங்ககாலம் மெல்ல முடிவுக்கு வரத் தொடங்கியது. சுமார் இரண்டரை நூற்றாண்டுகள் தமிழகத்தை களப்பிரர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். களப்பிரர்கள் ஆட்சிகுறித்து நமக்கு சொற்ப தகவல்களே கிடைக்கின்றன. இக்காலத்தில் புத்த சமயமும், சமண சமயமும் முக்கியத்துவம் பெற்றிருந்தன. பின்னர் களப்பிரர்களை விரட்டிவிட்டு வடக்கு தமிழ்நாட்டில் பல்லவர்களும், தெற்குத் தமிழ்நாட்டில் பாண்டியர்களும் தத்தம் ஆட்சியை நிறுவினர்.
பண்டைய தமிழ்நாட்டில், வேந்தர் என அழைக்கப்பட்ட அரசர்களின் தலைமையின் கீழ் இருந்த மூன்று முடியாட்சி மாநிலங்களும் வேள் அல்லது வேளிர் என்ற பட்டப் பெயர் கொண்டு அழைக்கப்பட்ட பல பழங்குடி இனத் தலைவர்களின் தலைமையில் இருந்த பழங்குடி இனக் குழுக்களும் இருந்தன.இவர்களுக்கும் அடுத்ததாக, உள்ளூர் பகுதிகளின் இனக் குழுக்களின் தலைவர்கள் இருந்தனர், இவர்கள் கிழார் அல்லது மன்னர் என அழைக்கப்பட்டனர்.கி.மு மூன்றாம் நூற்றாண்டின் போது தக்காணப் பீடபூமி மௌரியப் பேரரசின் ஒரு அங்கமாக இருந்தது. கி.மு முதல் நூற்றாண்டின் இடைப்பகுதி முதல் கி.பி இரண்டாம் நூற்றாண்டு வரை இந்த பகுதி சாதவாகனர் வம்சத்தினரால் ஆட்சி செய்யப்பட்டது. வடக்கு பகுதியைச் சேர்ந்த இந்தப் பேரரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்து தமிழ் பகுதி தன்னிச்சையாக இருந்தது. தமிழ் அரசர்கள் மற்றும் குழுத்தலைவர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். பெரும்பாலும் அவர்கள் சண்டையிடுவது இடங்களுக்காகவே. அரசனின் நீதிமன்றங்கள் அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதற்கு பதிலாக சமூக நிகழ்வுகளுக்கான மையங்களாக இருந்தன. அவை வளங்களைப் பகிர்ந்தளிக்கும் மையங்களாக இருந்தன. ஆட்சியாளர்கள் படிப்படியாக வட இந்தியார்களின் ஆதிக்கம் மற்றும் வேதக் கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கினர். இவைகள் ஆட்சியாளரின் நிலையை மேம்படுத்த பலி கொடுக்கும் பழக்கத்தையும் ஊக்குவித்தன.
அசோகப் பேரரசின் கீழ் இல்லாத பேரரசுகள் மற்றும் இந்தப் பேரரசுடன் நட்பு நிலையில் இருந்த பேரரசுகள் பற்றிய விவரங்கள் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுடன் சேர்ந்து சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் சேரர்களின் வம்சங்கள் (கி.மு 273-232) அசோகத் தூண்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.[நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தமிழ் பேரரசுகளின் கூட்டமைப்பின் கதிகும்பா கல்வெட்டில், சுமார் கி.மு 150 ஆம் ஆண்டு கலிங்கப் பேரரசை ஆட்சி செய்த அரசன் கார்வேலா (Kharavela) பற்றிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
முற்கால சோழர்களில் கரிகாலச் சோழன் மிகப் பிரபலமாக இருந்தார். சங்க இலக்கியங்களின் பல்வேறு செய்யுள்களில் கரிகாலச் சோழன் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.பின்னாளில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் நூலில் வரும் பல்வேறு கதைகளிலும் கரிகாலன் பற்றிய செய்திகள் முக்கிய பொருளாக இருந்தது. மேலும் 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இலக்கிய நூல்கள் மற்றும் கல்வெட்டுகளிலும் கரிகாலன் பற்றிய தகவல்கள் உள்ளன. இமாலயம் வரையிலான இந்தியா முழுவதையும் வென்றவன் எனவும் நிலமானியங்களைக் கொண்டு காவேரி ஆற்றின் வெள்ளத்தை தடுப்பதற்காக கரைகளைக் கட்டியவன் எனவும் இந்த நூல்கள் விளக்குகின்றன. சங்க இலக்கியங்களில் இந்த தகவல்கள் இல்லை என்பதால் இந்த புராணம் பற்றி வெளிப்படையாக தெரிவதில்லை. சோழர்களில் மற்றொரு பிரபலமான மன்னன் கோச்செங்கண்ணன் ஆவான். சங்க கால இலக்கியப் பாடல்கள் பலவற்றில் அவனைப் பற்றி புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. இடைக்காலத்தின் போது சைவத் ஞானியாகவும் கருதப்பட்டார்.
இந்திய தீபகற்பத்தின் தென்கோடிப் பகுதியான கொற்கையிலிருந்து முதலில் ஆட்சி செய்ய தொடங்கிய பாண்டியர்கள் பின்னாளில் மதுரை நகருக்கு மாறினர். சங்க இலக்கியத்திலும் பாண்டியர்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதே காலத்தில் இருந்த கிரேக்க மற்றும் ரோமானிய ஆவணங்களிலும் பாண்டியர்கள் பற்றி உள்ளது. மெகஸ்தனிஸ் (Megasthenes), இந்திகா (Indika) என்ற தனது நூலில் பாண்டியப் பேரரசு பற்றி குறிப்பிட்டுள்ளார். மதுரையின் தற்போதைய மாவட்டங்கள், திருநெல்வேலி மற்றும் தெற்கு கேரளாவின் சில பகுதிகளை பாண்டியர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பாண்டியர்கள் கிரேக்கம் மற்றும் ரோம் ஆகிய நாடுகளுடன் வணிகத் தொடர்பையும் கொண்டிருந்தனர். பாண்டியர்கள் தமிழகத்தின் மற்ற பேரரசுகளுடன் இணைந்து ஈழத்தின் தமிழ் வணிகர்களுடன் வியாபார மற்றும் திருமணத் தொடர்பையும் கொண்டிருந்தனர். சங்க இலக்கியங்களின் பல்வேறு பாடல்களில் பாண்டிய மன்னர்கள் பலர் பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன. இவர்களில் 'தலையாலங்கானம் வென்ற' நெடுஞ்செழியன் மற்றும் தியாகச் செயல்களுக்கான சிறப்பான ஒருவராக குறிப்பிடப்படும் ஆரான் முதுகுடுமி பெருவழுதி என்ற மற்றொரு நெடுஞ்செழியன் ஆகியோர் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளனர். அகநானூறு மற்றும் புறநானூறு போன்ற தமிழ்நூல்களின் தொகுப்புகளில் உள்ள சிறிய பாடல்கள், மதுரைக் காஞ்சி மற்றும் நெடுநல்வாடை போன்ற இரண்டு முக்கிய நூல்களிலும் (பத்துப்பாட்டு தொகுப்புகளில் உள்ளது) சங்க காலத்தில் பாண்டிய பேரரசில் மேற்கொள்ளப்பட்ட சமூக மற்றும் வணிக ரீதியான செயல்கள் பற்றிய செய்திகள் உள்ளன. மூன்றாம் நூற்றாண்டின் முடிவில் களப்பிரர்களின் ஊடுருவல் காரணமாக முற்காலப் பாண்டியர்களின் புகழ் மறைந்து போனது.
தென்னிந்தியாவின் மலபார் கடற்கரை அல்லது அதன் மேற்கு பகுதியுடன் இணைந்த, தற்போதைய கேரள மாநிலம் ஆகியவை ஒன்றிணைந்த பகுதியாக சேரர்களின் பேரரசு இருந்தது. கடல் வழியாக ஆப்பிரிக்காவுடன் வாணிகம் செய்வதற்கு ஏற்ற வகையில் அவர்களின் இருப்பிடம் இருந்தது இந்தியாவின் மாநிலமான கேரளாவில் உள்ள இன்றைய மக்கள், பண்டையக் காலத்தில் தங்கள் பகுதியை ஆட்சி செய்த சேரர்கள் பேசிய மொழியே பேசுகின்றனர். மேலும் தமிழ் நாட்டின் பிற பகுதிகளுடனும் இவர்கள் பரவலான தொடர்பு கொண்டிருந்தனர். இது ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டு வரை மட்டுமே வழக்கத்தில் இருந்தது, இதன் பிறகு தமிழ் மொழியில் சமசுகிரதத்தின் தாக்கம் காரணமாக மொழியின் தனிப்பட்ட அங்கீகாரம் மாறி புதிய மொழி ஒன்று பயன்பாட்டிற்கு வந்தது.
பழமையான இலக்கியங்கள் தமிழில் வளர்வதற்கு இந்த முற்கால பேரரசுகள் ஆதரவளித்தன. சங்க இலக்கியம் என்று அறியப்படும் செவ்வியல் இலக்கியம் கி.மு 200 முதல் 300 ஆம் ஆண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்ததாக அறியப்படுகிறது.சங்க இலக்கியத்திலுள்ள பாடல்கள் பெரும்பாலும் உணர்வு மற்றும் பொருள் சார்ந்த தலைப்புகளையே கொண்டுள்ளன. இடைக்காலத்தில் இவைகள் வகைப்படுத்தப்பட்டு பல்வேறு தொகை நூல்களாக திரட்டப்பட்டுள்ளன. செழுமையான நிலம் மற்றும் பல்வேறு தொழில் சார்ந்த மக்கள் குழுக்கள் பற்றியே இந்த சங்கப் பாடல்கள் சித்தரிக்கின்றன. இந்த பகுதிகளை ஆட்சி செய்வது பரம்பரை குடியாட்சி முறையில் இருந்தது. எனினும் இந்த பகுதிகளின் செயல்பாடுகள் மற்றும் ஆட்சி செய்பவரின் அதிகாரம் ஆகியவை முன்பே இயற்றப்பட்ட ஒழுங்குமுறைகளை (தர்மம் ) பின்பற்றியே இருந்தது.மக்கள் தங்களின் அரசரிடம் மிகவும் விசுவாசமாக இருந்தனர். உலகம் சுற்றும் புலவர்களும் இசைக்கலைஞர்களும் நடனக் கலைஞர்களும் தாராள மனமுடைய அரசனின் அவைகளை அலங்கரித்தனர். இசை மற்றும் நடனக் கலைகள் மேம்பட்டு பிரபலமாக இருந்தன. சங்ககாலப் பாடல்களில் பல்வேறு வகையான இசைக் கருவிகள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தன. தெற்கு பகுதி மற்றும் வடக்கு பகுதி நடனங்களை ஒருங்கிணைத்து புதிய வகை நடனம் ஆடுவது இந்த காலத்தில் தான் தொடங்கியது. இந்த வகை நடனங்கள் இதிகாசமான சிலப்பதிகாரத்தில் முழுமையாக வெளிப்பட்டு இருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகம் சிறப்பான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டு இயக்கத்தில் இருந்தது. தொல்லியல் துறை ஆய்வுகள் மற்றும் இலக்கியங்களில் யுவனர்களுடனான (கிரேக்கர்) வெளிநாட்டு வியாபாரம் செழுமையாக இருந்தததைக் கூறுகின்றன. தென்னிந்தாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் இருந்த முசிறி மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதியின் துறைமுக நகரம் பூம்புகார் ஆகிய இரு இடங்களில் ஏராளமான கப்பல்கள் நிறுத்தப்பட்டு வெளிநாட்டுப் பொருள்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து வியாபார மையங்களாக விளங்கின. இந்த வர்த்தகம் இரண்டாம் நூற்றாண்டிற்கு பிறகு வீழ்ச்சியடையத் தொடங்கியது. மேலும் ரோமானிய அரசுக்கும் பண்டைய தமிழ் நாட்டிற்கும் இருந்த நேரடி உறவு அரபியர்கள் மற்றும் கிழக்கு ஆப்ரிக்காவை சேர்ந்த ஆக்சுமைட்களின் நேரடி வணிகத்தால் சிதைவுறத் தொடங்கியது. உள்நாட்டு வணிகம் சிறப்பாக இருந்தது, பொருள்கள் வாங்குவது மற்றும் விற்பது பண்டகமாற்று முறைப்படி நடந்தது. பெரும்பாலான மக்களுக்கும் அதிக நிலங்களைக் கொண்டிருந்த பரம்பரை விவசாயிகளான வெள்ளாளர்களுக்கும் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்தது.